Wednesday, October 12, 2011

அன்பின் அடையாளம்.

18-09-2011 ஞாயிறு அன்று என் வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நம் யாவருக்கும் மணவாழ்வு என்பது மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. அந்த நாளில் தான் நம் சொந்தங்களும், நண்பர்களும் நம்மை கடவுளை போல பாவித்து நம்மை அலங்கரித்து, நம்மை உபசரித்து ஒரு கோலாகலமான திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
அதுபோன்றதொரு அற்புதமான நேரத்தில் தான் முகமறியாத அந்த முகங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத சந்தோசத்தையும், அனுபவத்தையும் எனக்களித்தனர். அவர்கள் என் ட்விட்டுலக நண்பர்கள் கார்க்கி, பரிசல், வேதாளம், கேசவன், குள்ளபுஜ்ஜி. நேரில் சென்று அழைப்பு கொடுத்து வரவேற்கும் சராசரி உபசரிப்பைக் கூட அவர்களுக்கு நான் அளிக்கவில்லை. போனில் தொடர்பு கொண்டது மட்டும் தான். பரிசல் திருப்பூரில் இருந்து வந்திருந்தார். மற்ற நண்பர்கள் சென்னையிலிருந்து வந்திருந்தனர். என் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்களைப் பார்த்த வினாடி எனக்கு பதற்றமே தொற்றிக் கொண்டது. கூட்ட நெரிசலில் அவர்கள் மெதுவாக மேடைக்கு
என்னை வந்தடைந்த சில வினாடிகளிலேயே எங்கள் சந்திப்பு முடிந்து விட்டது. எனக்காக அவர்களின் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு நாள் முழுவதும் பயணம் செய்து என்னை சந்தித்தவர்களிடம் தனியாக இரண்டு நிமிடம் பேசக்கூட அவகாசம் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் இப்போதும் என்னை வருத்திக் கொண்டிருக்கிறது. இவர்கள் இப்போது எனக்கு ஏதோ உறவினர்கள் நெருக்கமான நண்பர்களாகி விட்ட உணர்வே ஏற்படுகிறது.
நேற்று கூட பரிசல் அண்ணனிடம் உரிமையோடு எனக்கான உதவிகளை தயங்காமல் கேட்டுப் பெற்றுக் கொண்டது இந்த உறவு முறையால் தான். நன்றி என்ற ஒற்றை சொல்லில் இவர்களின் நட்பை நான் ஈடுகட்டி விட முடியுமா என்ன???

இடமிருந்து வலம் : கார்க்கி, பரிசல், வேதாளம்@அர்ஜூன், கேசவன், குள்ளபுஜ்ஜி.


மணப்பெண்ணும், நானும்.



மணப்பெண்ணின் அம்மா, அப்பாவுடன்....


என் அம்மா, அப்பாவுடன்...


திரு. கே.ஈ. கிருஷ்ணமூர்த்தி, M.L.A. அவர்கள் (பருகூர் தொகுதி)


திரு. கே.பி. அன்பழகன் M.L.A. அவர்கள் (பாலக்கோடு தொகுதி)


திருமதி. மனோரஞ்சிதம் நாகராஜ், M.L.A அவர்கள் (ஊத்தங்கரை தொகுதி)

Tuesday, September 6, 2011

அன்புடன் அழைக்கிறேன்...

ஏறக்குறைய 15 வருடமாக வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்து தான் இணைய எழுத்தின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. ஆயிரக்கணக்கான பதிவர்களும், ட்விட்டர்களும் மலை போல குவிந்திருக்க அதில் நானும் ஒரு எறும்பாக ஊர்ந்து கொண்டிருப்பதை பெருமையாகவே கருதுகிறேன்.
ஒரு வாசகனாக நான் இருக்கும் போது தினம்தினம் அனுபவத்தின் வெவ்வேறு விதமான வாசல்களை படைப்பாளியின் படைப்புகள் எனக்காக திறந்து கொண்டேயிருக்கின்றன. தீவிரமாக இயங்கும் ஒரு படைப்பாளி தான் அடையும் அவன் அடையும் கனவுகளை, ஆசைகளை, விருப்பு வெறுப்புகளை என யாவற்றையும் எழுத்தின் மூலமே கடக்க முயல்கிறான். தன் சுகதுக்கங்களை சுமந்தலையும் படைப்பை தாங்கிக் கொள்ள அவனுக்கு வாசகன் முக்கிய தேவையாக இருக்கிறான்.
ஆக குடும்ப அமைப்பு, உறவு முறைகளை விட தனித்துவமானதொரு பிணைப்பு கொண்டது தான் எழுத்தாளன் - வாசகன் எனும் உறவுமுறை. என்னைப் பொறுத்தவரை படைப்பதை விட படிப்பதில் தான் அலாதி சுகம். அதற்கு காரணங்கள் பல. இந்த உறவுமுறை தனித்துவமானது. அது பொன்னையோ, பொருளையோ எதிர்பார்க்காதது. வெறும் பகிர்தலை மட்டுமே கொண்டது. இந்த உறவு முறையில் மட்டுமே நமக்கு ஏமாற்றமற்ற வாழ்பனுபவம் கிடைக்கிறது. அந்த உறவு முறையை வலுவாக்கவும், புதுப்பிக்கவும் எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஆம் வருகிற 18-09-2011 அன்று எனக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. (அழைப்பிதழ் பதிவின் கடைசியில்) முகமறியா உங்களின் எல்லோரின் அறிமுகங்களையும், ஆசிகளையும் எதிபார்க்கிறேன். இந்த அழைப்பை பதிவுக் கூட்டத்திலோ அல்லது ட்விட்டப்பிலோ முறைப்படி கொடுப்பதற்கான கால அவகாசம் இல்லாத காரணத்தால் பதிவிட்டு உங்களை அழைக்க வேண்டிய சூழ்நிலை. இந்த அழைப்பை நேரில் வைத்த அழைப்பாக ஏற்றுக் கொண்டு
தங்களின் வருகையையும், ஆசியையும் வேண்டுகிறேன். பயணம் குறித்த விபரங்களுக்கு எந்த நேரமும் என் அலைபேசி எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம்.

Shree Venkatachalapthi Namah
Devarajan & Kousalya Devarajan
( Sathish Medicals, Kalpana Complex – Uthangarai )


Request the pleasure of the company of
at the Wedding Reception of their beloved Son
D. Sathish Babu B.B.A., D.Pharm.,
( Sathish Medicals, Uthangarai )
to
E. Nithya M.C.A.,
Daughter of Sri. Elangovan & Kamatchi Elangovan


To be held on Sunday, 18th September 2011
between 11.30 AM and 2.30 PM
at
SVT Kalyana Mahal,
Uthangarai – 635 207
Krishnagiri Dist

Thursday, July 14, 2011

மந்திரக்காரன்...
















"சுஜாதா" இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை பாரதிக்குப் பிறகு என்னை பாதித்த எழுத்தாளர்களில் முதன்மையானவர் அமரர் சுஜாதா. அவரை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறந்ததைப் போலவே உணர்கிறேன். அந்த எழுத்து நடையும், அதன் வசிகரமும் என் மனதிற்குள் எப்போதும் பெய்யும் மழைச்சாரல் தான். நாம் ஒரு நாவலுக்கோ, சிறுகதைக்கோ அல்லது ஒரு கவிதைக்கோ கூட அடிமையாகி விடக்கூடிய அபாயம் இருக்கிறது. அது போன்ற படைப்புகளும், படைப்பாளிகளும் நம் எண்ண அலைகளில் நிரந்தரமாக தங்கி விடுவார்கள். அதற்கான சாத்தியங்கள் நாவலுக்கும், சிறுகதைக்கும், கவிதைக்கும் உண்டு. மாறாக சுஜாதா தனது 'சுஜாதா பதில்கள்" எனும் கேள்வி-பதில் தொகுதியில் அதற்கான சாத்தியங்களை நமக்கு தருகிறார். நான் வாசித்த பல கேள்வி-பதில் தொகுதிகளில் கிடைக்காத பரவசம் இந்தத் தொகுதியில் கிடைத்தது. வாசிப்பனுக்கு அதிகபட்ச அனுபவத்தையும், வாசிப்பின் சுகத்தையும் தன் மாய வார்த்தைகளால் நமக்கு தருகிறார்.
உயிர்மை பதிப்பக வெளியீட்டில் மனுஷ்ய புத்திரனின் இதயம் கனக்கும் பதிப்புரையோடு தொடங்கும் தொகுதியில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மீகம், பொழுதுபோக்கு என அத்தனை துறைகளிலும் அவர் பெற்றிருக்கும் அறிவுஞானம் தனிவொரு மனிதனுக்கு சத்தியமாக சாத்தியமில்லை. இவர் அளித்திருக்கும் பதில்கள் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அந்தக் கேள்விக்கான மாற்று பதிலை முன்வைக்க முடியாது. இனி.............................

பதிப்புரை
-----------------------

சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதிகளில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும், கூர்மையும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. மருத்துவமனையில் தனது இறுதி தினங்களில் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த சந்தர்பத்தில் கூட தன் பதில்களை அனுப்பி வைத்தார். எந்த நிலையிலும் எழுத்தை மட்டுமே பற்றி நின்ற நம்முடைய காலத்தின் மாபெரும் கலைஞனின் ஆளுமையின் இயல்பு அது.
அவர் எழுதிய புத்தகத்தை அவருடைய முன்னுரையில்லாமல் கொண்டு வருவதை விட இதயத்தைக் கனக்கச் செய்வது வேறெதுவும் இல்லை. தன்னுடைய நூல்களை பதிப்பிப்பது தொடர்பாக எத்தனையோ இனிய நினைவுகளை தந்த சுஜாதா தான் எனக்கு இத்தகைய சந்தர்ப்பத்தையும் கொடுத்திருக்கிறார்.

மனுஷ்ய புத்திரன்
28-12-2009

உங்கள் எழுத்துக்களுக்கு ஆதர்சமாய் யாரைச் சொல்லலாம்?
எனக்கு முன் எழுதிய அனைவரையும்!

என் செல்போன் கேமரா 3.3 மெகா பிக்ஸெல்; என் கண்கள் எத்தனை மெகா பிக்ஸெல்?
மெகா என்பது பத்து லட்சம்; பிக்ஸெல் என்பது "பிக்சர் எலிமெண்ட்" என்பதின் சுருக்கம். இந்த பிக்ஸெல் ஸ்கேலை வைத்து கண்னை அளந்து 81 மெகா பிக்ஸெல்
என்று கணக்கு போட்டிருக்கிறார்கள். ஆனால், டிஜிட்டல் கேமரா போன்ற சாதனங்களோடு ஒப்பிடும் போது கண்களுக்கு பரந்த பகுதிகளை பார்க்கும் துல்லியம்
இல்லை. கேமரா வியூ ஃபைண்டரில் பார்ப்பதை விட கண்கள் அதிக பரப்பை பார்க்கிற மாதிரி தெரியும். அது, மூளை செய்கிற மாயா ஜாலம்.
சந்தேகமிருந்தால் சத்யாவின் இந்தப் பதிவில் (நானே போட்டுக்கிட்டது) ஒரு ஏரியாவை நோக்கி சுண்டுவிரலைக் காட்டி, விரலில் உங்கள் கண்களைப் பதித்தபடி ஒரு வரியாவது படிக்க முயன்று பாருங்கள்....
அம்பேல்!

"ஜெனரேஷன் கேப்" என்றால் என்னங்க?
ஒரு வயதானவரும், இளைஞனும் பஸ் பிடிக்க ஓடுவதைக் கவனியுங்கள். புரியும்.

இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் என்ன ஆகிறது?
போர்டு மெம்பர்கள் லண்டன் போய் ஷாப்பிங் செய்வதற்குப் பயன்படுகிறது. எப்போதாவது கிரிக்கெட் எனும் விளையாட்டின் மேம்பாட்டுக்குக் கொஞ்சம் தரப்படுகிறது.

பள்ளிகளில் செக்ஸ் கல்வி நடத்தும் பக்குவத்தை நாம் அடைந்து விட்டோமா?
சில பணக்காரப் பள்ளிகளில், அடைந்திருக்கிறோம். மற்றப் பள்ளிகளுக்கு தமிழ்த் திரைப்படங்கள் இருக்கவே இருக்கின்றன.

நிலா, வானம், அருவி, தென்றல், கடல்- இவை இடம்பெறாத காதல் கவிதை படித்ததுண்டா?
உண்டே... பாக்கியம் சங்கரின் இந்தக் கவிதையைப் படியுங்கள்.
பேருந்துப் பயணத்தின்
கசங்கிய வியர்வையுடன்
உன் மல்லிகை வாசம்
சசியை மறக்கடித்தது
உன்னில் மூழ்குகிறேன்
நசுங்கிய டப்பாவைப் போல
கிடக்கிறது காதலெனும் சொல்.

இன்னமும் தங்கள் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த திரைப்படம் எது? ஏன்?
சத்யஜித் ராயின் பதேர்பாஞ்சாலி தான். வினோத மொழியில் ஆங்கில சப்டைட்டில்களுடன் ஓடிக் கொண்டிருந்தது. எழுந்து வந்துவிட இருந்தேன். ஒரு நிமிஷத்தில் என்னைக் கட்டிப் போட்டு உட்கார வைத்த மறக்க முடியாத சித்திரம்.

கடவுள், அறிவியல் - வித்தியாசப்படுத்துங்கள்...
கடவுள், அறிவியலின் கடைசிக் கேள்வியில் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

எந்த வட்டாரத்து பேச்சுத் தமிழ் தங்களைக் கவர்ந்திருக்கிறது?
திருநெல்வேலித் தமிழ் தான். "என்னடே" என்பதே மரியாதைச் சொல். புலியை அங்க வச்சுப் பார்த்தேன்" போன்ற வசிகரமான பிரயோகங்கள். எளிய ஜனங்களின் எளிய மனங்களின் வெளிப்பாடு.

நீங்கள் சமிபத்தில் ரசித்த சைவ ஜோக்?
"குற்றாலத்தில் குளிக்கச் சென்ற போது என்ன ஆச்சு தெரியுமோ? வேஷ்டி அவிழ்ந்து விட்டது."
"அய்யய்யோ! அப்புறம்?"
"நல்லவேளை, உள்ள டிராயர் போட்டிருந்தேன்"- சைவமாக ஜோக் சொல்ல வேண்டுமென்றால் இந்த மாதிரிதான் மொக்கையாக இருக்கும்.

தமிழகத்தின் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க நீங்கள் கூறும் யோசனைகள் என்ன?
1. காற்றையும், கடலையும் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது.
2. மின்சாரம் கடத்துவதில் இழப்பைக் (Transmission loss) குறைப்பது.
3. Captive power சொந்த செலவில் சிறிய மின்சார உற்பத்தியை ஆதரிப்பது.
4. அறையில் யாரும் இல்லை என்றால் தானாக மின்சாரம் அணைவது.

Thursday, June 2, 2011

கனவுகளின் வரைபடம்

ஒரு வழியாக ஒரளவிற்கு என் அறையின் கலை வேலைப்பாடுகள் முடிவடைந்து விட்டன. ஒரு பறவை எப்படி தனக்கென பாதுகாப்பான கூட்டை ஏற்படுத்திக் கொண்டு உயிர் வாழுமோ, அப்படித்தான் நானும் என் அறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அங்கு நான் மட்டுமல்ல, என் கனவுகளும், ஆசைகளும் உடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. யாவருக்கும் பிடித்த முதன்மையான நண்பன் அவர்களது அறையாகத் தானிருக்கும். காரணம், அங்கு தான் நாம் தினம் தினம் வெளிப்படுத்திடாத நம் உணர்வுகள் பாதுகாப்பாய் தேங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொருவரின் அறையும் நம் விருப்பங்களை பிரதிபலன் பாராது நிறைவேற்றிக் கொடுக்க வல்லது. எனது அறையும் எனக்கு அப்படித்தான். தெய்வீக சந்நிதியிலும் கிடைக்காத பல பரவசமிக்க அனுபவங்களும், புதிய புதிய எண்ணங்களும் அது தினம் தினம் தந்தபடியே இருக்கின்றன.
நகர்புறங்களில் வசிப்பவர்கள் இந்த வேலைப்பாடுகளை சுலபமாக பெற முடியும். ஆனால் என்னைப் போன்று ஏதேனும் ஒரு ஒன்றியத்தில் ஒன்றிக்
கொண்டிருப்பவர்களுக்கு சாத்தியப்படுவது கடினம். இங்குள்ள என் ஓவிய நண்பன் சிவா என்பவரை மட்டும் வைத்துக் கொண்டு பதினைந்து நாட்களில் முடிக்கப்பட்ட வேலை இது. எனது கூடு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்று பார்த்து விட்டு கருத்துக்களை பதிவிடுங்கள் அல்லது மெயிலுங்கள்.










நானும், எனது புத்தகங்களும்...

Monday, February 7, 2011

யுத்தம் செய் - நூற்றாண்டின் முதல் மழை


பொதுவாக சினிமா என்பது காட்சிகளால் நிரப்பப்படுவது. பார்வையாளளின் மனதில் தேங்கும் உள்ளுணர்வுகளை ஒரு படைப்பாளி தன் படைப்பின் மூலம்
வெளிப்படுத்தி விட்டால் அது சிறந்த சினிமாவாக அங்கிகரிக்கப்படுகிறது. தற்போது நிலவி வரும் தமிழ் சினிமா படைப்புகள் அத்தகைய மரபில் கவனம் கொள்ளாமல் நாயகனுக்கு கதை, குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள் என மீண்டு எழ முடியாத சூழலில் சிக்கிக் கொண்டுள்ளன. வருடத்தில் ஒன்றிரண்டு படங்கள் இந்த நியதியில் இருந்து விடுபட்டு படைப்பாளியின் தீவிரமான அணுகுமுறையால் இந்திய அளவில் கவனத்தை பெறுகின்றன. அந்த வரிசையில் சமிபத்தில் வெளியான "யுத்தம் செய்" படத்தை குறிப்பிடலாம். பழிக்குப் பழி அரதப் பழசான கதைக் கரு தான் இந்த படத்தின் கருவும். ஆனால் இயல்பான கதை மாந்தர்கள், நிஜத்திற்கு பொருத்தமான நடிப்பு, கதையோடு பேசும் வசனங்கள், நிதானமான தெள்ளிய திரைக்கதையின் மூலம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை லாவகமாக மிகவும் சாமர்த்தியமாக கையாண்டு தன் இயக்கத்தின் இருப்பை ஆரவாரமில்லாமல் நிருபித்துள்ளார் மிஷ்கின்.
சென்னையின் அந்த குறிப்பிட்ட சரகத்தில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் தொடர்ந்து வெட்டப்பட்ட மனிதக் கைகள் அட்டைப் பெட்டியில் போடப்பட்டிருக்க,
கை சுத்தம் (லஞ்சம் வாங்காத) காரணமாக காவல் துறையிலிருந்து புலனாய்வுத் துறைக்கு விருப்ப பணி மாற்றலாகி வரும் ஜே.கே. எனும் சிபிசிஐடி ஆபிசர் சேரனிடம் இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது. வெட்டப்பட்ட கைகளை வைத்துக் கொண்டு விசாரணையை ஆரம்பிக்க, ஏற்கனவே காணாமல் போன தன் தங்கையின் கேஸை மீண்டும் ஓப்பன் செய்து விசாரிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இறுதியில் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள்? கொலை செய்யப்படும் ஆட்களின்
பிண்ணனி என மிக விவரமாக, குழப்பமில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தங்கை தொலைந்த சோகமும், விசாரணை நேரங்களில் வெளிப்படும் இறுக்க முகமும் என சேரனின் திறமைக்கு இத்திரைப்படம் ஒரு மைல்கல். பிணவறையில் முகத்தை கோட் போட்டு மூடிக் கொண்டு படுத்திருக்கும் டாக்டர் ஜூடாஸின் அறிமுகக் காட்சிகள் தமிழ் சினிமா உலகிற்கு புதிது. சேரனின் உதவியாளராய் வரும் தீப்திஷா, டி.எஸ்.பி. நரேன், அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் திரிசங்கு, ஒய்.ஜி.மகேந்திரன், அவர் மனைவி லஷ்மி, அவர்கள் பையன் என ஒவ்வொரு கதாப்பாத்திரமும் செதுக்கிய சிற்பங்களாக திரையில் வெளிப்படுகின்றன. சவக்கிடங்கு காட்சிகளும், உறைந்த நிர்வாண
பிணங்களும் இவ்வளவு நுணுக்கமாக எந்தத் திரைப்படங்களிலும் பதிவு செய்யப் படவில்லை. படத்தின் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு காட்சியும் மிகத் தீவிரமான பரிசீலனைக்கும், திட்டமிடலுக்கும் பிறகே படமாக்கப்பட்டிருப்பதை படம் பார்க்கும் போது உணர முடிகிறது. வழக்கமான திரில்லர் படங்களில் படபடவென ஓடும் திரைக்கதையும், பார்வையாளனின் இமைகள் வலிக்க அலைபாயும் காமிரா கோணங்களும், குலைநடுங்க அதிர வைக்கும் இசையும், அலறல் ஒலிகளும் தான் பிரதானமாக இருக்கும். மாறாக இந்தப் படத்தில் காமிரா மெல்ல, நிதானித்து நம் ஆர்வத்தை அதிகமாக்கி கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. பலமான திரைக்கதைக்கு பக்கபலமாய் இருப்பது எடிட்டர் கெகின். பல இடங்களில் அந்த சூழ்நிலையின் சப்தங்களையே பின்னணி இசையாய் ஒலிக்க விட்டிருப்பதும், மௌனமாக நகரும் உன்னத காட்சிகளின் மூலமும் தனது தனித்தன்மையை இசையமைப்பாளர் கே சப்தம் போட்டு உணர்த்துகிறார். "கன்னித்தீவு பெண்ணா" பாடல் நதியில் துள்ளி விளையாடும் மீனைப் போல்
அமைதியான கதைக்கு ஆர்பாட்டமான பொழுதுபோக்கான நிமிடங்களாக அமைகிறது. புலனாய்வு இலாக்காவின் நிஜ விசாரனை எப்படி இருக்குமோ அப்படியே துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதது அதன் மையக்கரு தான். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை படமாக்கப்பட்ட காட்சி அமைப்புகள் வன்முறையை பிரதானப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒய்.ஜி.மகேந்திரன், மனைவி லஷ்மி, அவர்கள் பையன் என எல்லோரும் மொட்டை போட்டுக் கொண்டு பௌத்த துறவிகளை போல் எல்லாவற்றையும் துறந்து விட்டு கொலை வெறியோடு புறப்படுவது அதிகபட்ச வன்முறையை தூண்டுவதாகப் படுகிறது. டாக்டர் ஜூடாஸின் மரண வாக்குமூலமாக அமையும் அவரின் இறுதி வசனங்கள் வெளிப்படையான வன்முறைக்கு ஒரு வேண்டுகோளாக படமாக்கப்பட்டிருக்கிறது. இறுதிக் காட்சிகளில் சேரன் மௌனம் காப்பதும் அதீத வன்முறையின் குறியீடாகவே படுகிறது.
"யுத்தம் செய்" மிகப் பெரிய வெற்றிப் படமாக இடம் பிடிக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் வளரும் கலைஞர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம் என்பதில் சந்தேகமில்லை. அசலான நாம் ஒதுக்கி முடியாத மிகச் சிறந்த திரைப்படமாக இதனை என் வலைப்பதிவின் மூலம் உறுதி செய்கிறேன்....

Thursday, February 3, 2011

"ஆட்டிசம்" என்றொரு ஆபத்து...


தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் பழகும் திறன் குறைவாக இருப்பதும், அதிகமான கவனக் குறைவு போன்ற குறைபாடுகளை "ஆட்டிசம்" (AUTISM)என்கின்றனர்.
பெரும்பாலும் இந்த நோய் நான்கு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. பிறந்ததிலிருந்து பள்ளி செல்லும் வரை அம்மாவின் பராமரிப்பிலேயே வளரும் குழந்தைகளுக்கு நவின உலகின் மனிதர்களும், அவர்களைச் சார்ந்த பேரியக்கங்களும் சற்று அதிர்ச்சியைத் தரும். அவர்களுக்கு இந்த அவசரகதி உலகம் புரிபடாமல் அம்மாவின் உலகிலேயே சார்ந்து வாழும் எண்ணம் வலுக்கிறது. அதில் சில குழந்தைகள் தடுமாறி ஆட்டிசத்திற்கு ஆளாகின்றன. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் உடல் மெலிந்து , மனம் சிதறுண்டு உயிருக்கே ஆபத்தான நிலைக்கு சென்று விடும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டிசத்திற்கு ஒரு "ஸ்டெல்த் வைரஸ்" இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் இதயத்திலிருந்து வயிற்றுக்கு வந்து மூளையை பாதிக்கிறதாம்.
சமிபத்தில் கலிபோர்னியாவில் சுமார் 5லட்சம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு "ஆட்டிசம்" பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முதல் குழந்தை பிறந்து, குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிச பாதிப்பு அதிகம் இருப்பதாக நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர் பீட்டர் பியர்மான் கூறுகிறார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வகை குழந்தைகளுக்காக "தோஸ்த்" என்ற காப்பகம் சென்னை கெல்லிஸில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் காப்பகம் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறதா??? தெரியவில்லை.

--------------------------------------------------------------------------------------------


சமீபத்தில் நான் ரசித்த குறுஞ்செய்தி :
கருணாநிதி அந்தப் பள்ளிக்கு பார்வையிடுவதற்காக செல்கிறார்.
முதல்வர் :
மாணவர்களே, என்னிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்.
லிட்டில் கபீர்:
ஐயா, எனக்கு உங்களிடம் கேட்க இரண்டு கேள்விகள் இருக்கிறது.
1) ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களுக்கான பங்கு எவ்வளவு?
2) அந்தப் பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது?
முதல்வர் :
புத்திசாலி மாணவன். (சற்று யோசித்து விட்டு)
நாம் சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்போம்.
இடைவேளைக்குப் பின்பு...
முதல்வர் : சரி மாணவர்களே, நாம் எந்த இடத்தில் நிறுத்தினோம்?
ஆங்... மாணவர்களே என்னிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்.
லிட்டில் ஜானி:
ஐயா, எனக்கு உங்களிடம் கேட்க மூன்று கேள்விகள் இருக்கிறது.
1) ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களுக்கான பங்கு எவ்வளவு?
2) அந்தப் பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது?
3) எங்கே என் நண்பன் கபீர்?

Tuesday, February 1, 2011

மனுஷ்யபுத்திரன் கவிதை...

நாம் அதிகம் கவனித்திராத வாழ்வின் மென்சோகங்களையும், பகிர்ந்திட முடியாத கணங்களையும் கவிதைகளாக பதிவு செய்யும் அசாத்திய திறமை தமிழில் ஒரு சிலருக்கே வாய்க்கிறது. அதில் முதன்மையானவராக கவிஞர் மனுஷ்யபுத்திரனைக் குறிப்பிடலாம். கவிதையின் ஒவ்வொரு படிமங்களிலும் வாசிப்பவனின் இதயத்தில்
உணர்வடுக்குகளை அடுக்கிக் கொண்டே சென்று, கவிதையின் இறுதி வரிகளில் அதனை முற்றிலும் கலைத்து விட்டு வாசிப்பின் அனுபவத்தை நம் மனதில் நிரப்பி விடுகிறார். உங்களின் மனதையும் சலனப்படுத்துகிறதா ??? படித்துப் பாருங்கள்...

நல்வாழ்த்துக்கள்
------------------------------------

நல்வாழ்த்துக்கள்
கடற்கரையில்
யாரோ கைவிட்ட நாயை
வீட்டுக்கு அழைத்து வரும்
யாரோ ஒருவனுக்கு

அழகு சாதன விற்பனை நிலையத்தில்
ஒரு ஒப்பனைப் பொருளை
ஒரு இளம்பெண்ணிடம்
'இது உங்களுக்கு தேவையில்லை' என
புன்னகையுடன் மறுக்கும் கடைப்பெண்ணுக்கு

பராமரிக்க முடியாத அன்னையை
மனநோய் விடுதியில் விட்டுவிட்டு
அந்தக் கட்டிடத்தை ஒரு கணம்
திரும்பிப் பார்க்கும் மகனுக்கு

இறுதிச் சடங்கில்
இறந்தவர்களின் காலைத்
தொட்டு வணங்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
நிராதரவான சாலையில்
யாரோ ஒருவரின் கையசைப்பிற்கு
வாகனத்தை நிறுத்தும்
யாரோ ஒருவனுக்கு

ஒரு உடைந்த பொம்மைக் காரின்
சக்கரத்தைப் பொருத்த
நீண்ட நேரமாகப் போராடும்
சின்னஞ்சிறு குழந்தைக்கு

ஏதேனும் ஒரு வரிசையில்
எப்போதும்
நின்று கொண்டிருக்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாருமற்ற வீட்டிற்குத்
தனியே திரும்பி வரும்
யாரோ ஒருவருக்கு

உத்தரத்தில் மாட்டிய புடவையை
நன்றாக இழுத்துப் பார்த்துவிட்டு
ஒரு கணம் தயங்கி யோசிப்பவருக்கு

வீடு திரும்பும் வழியை மறந்துவிட்ட
குடிகாரர்கள் ஒவ்வொருவருக்கும்

பழைய காதலரைத் தேடிச் செல்லும்
பழைய காதலர்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவரிடம்
தன்னை நிரபராதி என நிரூபிக்க முற்படும்
யாரோ ஒருவருக்கு

எதற்காவது பயன்படும் என்று
எதற்கும் பயன்படாதவற்றையும்
பாதுகாத்து வைப்பவருக்கு

ஒழுங்குபடுத்தவே முடியாத ஒன்றை
எப்படியும் ஒழுங்குபடுத்தி விடலாம்
என்று நம்பும் ஒவ்வொருவருக்கும்

கைமறந்து வைத்த பொருளைத்
தேடிக்கொண்டிருக்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவனின் ஆடையை
வேறு வழியில்லாமல்
அணியவேண்டியிருக்கும்
யாரோ ஒருவருக்கு

எப்படியும் இந்த நாள்
முடிந்துவிடும் என்று
வெறுமனே காத்திருக்கும் ஒருவருக்கு

ஏதோ ஒரு அவமானத்திற்காக
எப்போதும் ஆயத்தமாக இருக்கும்
ஒவ்வொருவருக்கும்

மருத்துவமனையில்
பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவர் அளிக்கும் விருந்தில்
சம்பந்தமில்லாமல் அமர்ந்திருக்கும்
யாரோ ஒருவருக்கு

எதிர்பாராத சந்தர்ப்பத்தில்
தன்னை இழக்க நேரும் ஒருவருக்கு

மகளின் அந்தரங்கக் கடிதங்களைப்
பிரித்துப் படிக்காத தந்தையர்
ஒவ்வொருவருக்கும்

எதற்கும் சரியாகக்
கணக்கு வைத்துக்கொள்ளத் தெரியாத
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவரின் வரிகளைக்
கண்ணீர் மல்க வாசிக்கும்
யாரோ ஒருவருக்கு

வேசியை முத்தமிடும்போது
அவளது பெயரைக் கேட்காத ஒருவருக்கு

முதன் முதலாக
இன்னொரு உடலைத் துய்க்கும்
ஒவ்வொருவருக்கும்

விசாரணைக்காக
அழைத்துச் செல்லப்படும் எவருக்கும்

நல்வாத்துக்கள்
சவக்கிடங்கினில்
யாரோ ஒருவரைத் தேடும்
யாரோ ஒருவருக்கு

தன்னுடைய ஒன்றை
தன்னுடையதல்ல என்று
மறுத்துவிடும் ஒருவருக்கு

விடுமுறை நாட்களுக்காகக்
காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும்

அப்போதுதான் பிறந்து
கண் விழிக்கும் சிசுக்கள்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவரிடம்
நான் அழகாக இருக்கிறேனா என்று கேட்கும்
யாரோ ஒருவருக்கு

பாதி வழியில்
முடிவை மாற்றிக்கொண்டு
வீடு திரும்பிவிடும் ஒருவருக்கு

நாற்பது வயதுக்கு மேல்
ஒவ்வொரு பிறந்த நாளையும்
கண்டு அஞ்சும்
ஒவ்வொருவருக்கும்

எல்லாவற்றையும்
இன்னொரு முறை புதிதாகத் தொடங்கலாம்
என நம்பும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவரை
மன்னிக்கும் வாய்ப்புக் கிடைத்த
யாரோ ஒருவருக்கு

வாதையைத் தாங்கிக்கொள்ள
புதுப் புது வழிகள் கண்டுபிடிக்கும் ஒருவருக்கு

பசியைப் பொறுக்க முடியாது
என கூச்சலிடும்
ஒவ்வொருவருக்கும்


இந்தக் கவிதைக்கு
வெளியே இருக்கும்
எவருக்கும்.

Thursday, January 20, 2011

சாரு - அரைநூற்றாண்டு அற்புதம்



சாருநிவேதிதா.... இவரை உயிரோடிருக்கும் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் முதன்மையானவர் என்பதை எந்த சந்தேகமும், யோசனையும் இல்லாமல் கூறுவேன்.
எழுத்தை மட்டுமே தன் உயிர்மூச்சாக கொண்டு வாழும் வெறியன். அந்த வெறித்தனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம் அறிவுஜீவிகளான தமிழர்களுக்கு இல்லாததால்
தான், தமிழகத்தின் கடைக்கோடி மனிதர்களில் ஒருவராக இண்டர்நெட் பிச்சைக்காரன் என்றும் செக்ஸ் எழுத்தாளன் என்றும் முத்திரை குத்தப்பட்டு முச்சந்தியில் இருந்து கொண்டு தன் கர்வத்தை இழக்காமல் வாழும் கலைஞன்.
அரசியல் நுணுக்கங்களின் அறிவுப் பெட்டகமாக ஆஸாதி...ஆஸாதி...ஆஸாதி, மூடு பனிச்சாலை மற்றும் இதர எழுத்துக்களில் தன் ஆழமான விமர்சனத்தின் மூலம் அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை உலகுக்கு உணர்த்தியவன்.
பின்நவினத்துவ இலக்கிய பரப்பில் தன் நாவல்களான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சிபனியனும், ஜிரோ டிகிரி, ராஸலீலா, காமரூப கதைகள், சமிபத்தில் தேகம் என தன் அனுபவ எழுத்துக்களின் மூலம் யாரும் தொடமுடியாத உயரத்திற்கு சென்றவன்.
வழக்கமான சினிமா விமர்சனங்களை உடைத்தெறிந்து தன் மனசாட்சியின் குரலாய் சினிமா சினிமா, அலைந்து திரிபவனின் அழகியல், நரகத்திலிருந்து ஒரு குரல் என்ற உன்னத படைப்புகளின் மூலம் குறைகுடங்களாய் இருந்த (கமல்ஹாசன், மணிரத்னம், இளையராஜா, ஷங்கர், ஜேசுதாஸ்) தமிழ்க் கலைஞர்களின் தவறுகளை நேர்மையான தன் எழுத்துக்களின் மூலம் சுட்டிக்காட்டி இன்றைக்கும் பலரது விரோதங்களை சம்பாதித்துக் கொண்டிருப்பவன்.
தூங்கும் போதும் கனவில் வரும் கனவுகளை சிறுகதையாக மொழிபெயர்த்து மதுமிதா சொன்ன பாம்பு கதைகள், ஊரின் மிக அழகான பெண், நேநோ முதலிய படைப்புகளின் மூலம் வாசகர்களின் குறிப்பாக என் தூக்கத்தை கெடுத்த புன்னியவான்.
வாழ்வின் எதிர்மறைகளை, இன்னல்களை, சந்தோஷங்களை, காழ்ப்புணர்ச்சிகளை என எல்லாவற்றையும் கொட்டித் தீர்க்கும் கட்டுரைத் தொகுதிகளாக வாழ்வது எப்படி?, எனக்கு குழந்தைகளை பிடிக்காது, கடவுளும் நானும், வரம்பு மீறிய பிரதிகள், திசை அறியும் பறவைகள், கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் என தன் வாழ்வின் வடிவத்தை எழுத்தால் தந்தவன்.
நீ கேள், நான் கூறுகிறேன் என்று இன்றளவும் தன் மனசாட்சியின் அரசாட்சியை வாசகனின் ஜனநாயகத்தில் ஒப்படைத்ததின் சான்றாக அருகில் வராதே என்கிற
நூலைக் கூறலாம்.
நாம் கொண்டாடும் இசைக்கு எதிரான நியாயமான கோரிக்கையை முன் வைத்து எழுதப்பட்ட இசைவிமர்சன கட்டுரையான கலகம் காதல் இசை என்ற தொகுப்பை எந்த இசை அமைப்பாளர்களோ, இசை விமர்சகர்களோ தட்டிக் கழித்து விட முடியாது. ஒவ்வொரு வார்த்தைகளும் கடலின் அடிஆழத்தை தொட்டுவிட்டு வந்தவை.
இவரை மனிதன் என்று கூறினால் உண்மையாக எனக்கு நம்புவது சற்று சிரமமாகத் தான் இருக்கிறது. மேற்கண்ட நூலின் பட்டியல் எல்லாம் நான் படித்தது மட்டுமே.
இன்னும் எண்ணிலடங்கா நூலும், அவரின் கனவோடு கரைந்த கையெழுத்து பிரதிகளும் அதிகம். அவரின் படைப்புகளை நான் FAST READING முறையில் படித்து விட்டேன். இந்த நிலையில் எனக்கு சில அடிப்படை கேள்விகள் எழுகின்றன, அதை அவருக்கு எழுதினால் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது வலைப்பதிவில் கேள்வி-பதில் பகுதியில் ஒரு வாசகரை ஓடஓட விரட்டியிருந்தார் அந்த நிலை தான் எனக்கும் ஏற்படும் என்கிற பயம். நவின இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவராக கருதப்படும் ஜெயமோகனையே நார்நாறாய் கிழித்து தோரணம் கட்டி தொங்கவிடும் போது நானெல்லாம் எம்மாத்திரம்...???
தமிழகத்தில் சாருவிற்கு பிரியமானவர்கள் என்று இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் மனுஷ்ய புத்திரன் இன்னொருவர் எஸ்.ராமகிருஷ்ணன்.
இவரின் மெட்டாஃபிக்சன் தொகுப்பான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சிபனியனும் நாவலை பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா குறிப்பிட்டது,
"இலக்கியம் என்பது கங்கை நதி போல; அதில் எல்லா சங்கதிகளும் மிதந்து போகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த நாவலும் பழுப்பாக மிதந்து செல்லும்ஒன்று"
இன்றும் நம் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களும், வாசகர்களும் இந்த மனநிலையிலேயே தான் இருக்கிறார்கள்.தமிழ் இலக்கிய உலகில் இன்றுவரை யாரும் தொடாத போர்னோ எழுத்துக்களை படைத்து (சாருவைக் கேட்டால் நான் போர்னோவை இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை என்பார்) சக படைப்பாளிகளின் முன்னோடியாக
இருப்பவர். சாருவின் இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழியில் அல்லாது வேற்று மொழியில் இடம்பெற்றிருந்தால் இன்று உலகின் தலைசிறந்த எழுத்தாளராகவும்,
மில்லினியர்களின் சொந்தக்காரராகவும் இருந்திருப்பார்.
ராஸலீலா, காமரூப கதைகள் இரண்டின் நாவல்களிலும் ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றியும் விரிவான மதிப்பீட்டை முன்வைக்க முடியும். அதற்கு சமகால இலக்கியவாதிகளான மனுஷ்ய புத்திரன், எஸ்.ரா, ஜெயமோகன், லா.சா.ரா, கி.ரா, எம்.யுவன், கலாப்பிரியா, தேவதச்சன், முகுந்த் நாகராஜன், யமுனா ராஜேந்திரன், ரவிக்குமார், விக்ரமாதித்யன், பழமழய் இன்னும் பல எழுத்தாளர்களின் படைப்புகளை எல்லாம் முழுமையாக படித்தால் தான் சமகால இலக்கிய போக்கின் பாதை பிடிபடும். அப்போது தான் சாருவின் எழுத்துப் பிரவேசத்தை ஓரளவிற்கு நான் உணர முடியும். இது நிறைவேறும் போது அவர் யோசிக்கும் படியான கேள்விகளை கேட்க என்னை தயார் செய்து கொண்டு நிச்சயம் அவரை ஒரு நாள் சந்திப்பேன், அவரது வலைத்தளத்தில்....