Sunday, January 30, 2011

என் ஜன்னலுக்கு வெளியே...

உயிர்மை- தமிழ் இலக்கிய மாத இதழ். தமிழ் இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கும், ஓரளவிற்கு இலக்கிய வாசிப்பு அனுபவம்
இருப்பவர்களுக்கும் இந்த இதழைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. ஆனால் மற்றவர்களுக்கு...
இதில் மற்றவர்கள் என்றால் பல வருடங்களாக விகடன், குமுதம் என வார இதழ்களை வாசிக்கும் எத்தனை பேருக்கு இந்த இதழைப் பற்றி தெரியும்?
நான் வசிக்கும் பேரூராட்சி (ஊத்தங்கரை) பகுதி மக்கள் தொகை சுமார் இரண்டு லட்சம். இந்த பேரூராட்சி பகுதியை ஒட்டியே ஒரு நகராட்சி (திருப்பத்தூர்).
அதன் மக்கள் தொகை சுமார் ஆறுலட்சம். இவ்விரு இடங்களிலும் உள்ள எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்றரை லட்சம். ஆனால் இங்குள்ள எந்த புத்தகக் கடைகளிலும் உயிர்மை இதழ் விற்பனையில் இல்லை. ஒரே ஒரு கடையில் மட்டுமே கிடைக்கிறது. இதழுக்கு ஏதும் தட்டுப்பாடு இல்லை, வாசிக்க ஆள் இல்லாததால் எங்கும் விற்பனையில் இல்லை.
கிடைக்கும் ஓரே ஒரு புத்தகக் கடையிலும் மாதம் இரண்டு புத்தகம் மட்டுமே விற்பதாகவும், நானும் வேறொருவர் மட்டுமே வாங்குவதாகவும் அந்த கடைக்காரர் தெரிவித்தார். (என் பகுதியில் இருப்பவர்கள் சந்தா கட்டியும், இணையத்திலும் நிச்சயம் படிக்க மாட்டார்கள் என்பது தெரியும்) ஆனால் வெகுஜன பத்திரிக்கை எல்லாம் ஐம்பதாயிரத்திற்கும் குறைவில்லாமல் விற்பதாகவும் கூறினார். ஏறக்குறைய எட்டு வருடமாக இயங்கி வரும் ஒரு தரமான இலக்கிய இதழ் என்னைச் சுற்றி உள்ளவர்களால் இன்னும் அறியப்படாமலே இருக்கிறது. இத்தனைக்கும் சமகால தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகளான எஸ்.ரா, சாரு நிவேதிதா, மனுஷ்ய புத்திரன்,
ஜெயமோகன் போன்ற பலரின் படைப்புகளை தாங்கி வரும் இதழே இங்கு கவனிக்கப்படாமல் இருக்கிறது. ஒரு சினிமா நடிகனின் கிசுகிசுவிற்கு அளிக்கும் மதிப்பீடும்,
விமர்சனங்களும் கூட தரமான தமிழ் இலக்கிய படைப்பிற்கு இங்கே அளிக்கப்படுவதில்லை. ஒரு மருத்துவர் மருத்துவத் துறையின் மூலம் தனது வாழ்வை மேம்படுத்திக் கொள்கிறார், ஒரு சினிமா நடிகன் சினிமாத் துறையின் மூலம் தனது வாழ்வை மேம்படுத்திக் கொள்கிறார், ஒரு கூலிக்காரன் கூலி வேலையின் மூலம் தனது வாழ்வை மேம்படுத்திக் கொள்கிறார், ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளனால் எழுத்துத் துறையின் மூலம் தனது வாழ்வை நடத்துவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. இப்போது இருக்கும் உலக மொழிக் கலைஞர்கள் யாருக்கும் இப்படி ஒரு அவமதிப்பு நடந்து கொண்டிருக்காது. ஆனால் தமிழ் இலக்கியவாதிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் இங்கு நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இத்தனை தடைகளும், ஏமாற்றங்களும் இருந்தும் தமிழ் படைப்பாளிகள் தங்களின் ஆழமான படைப்புகளை இன்றளவும் வேகம் குறையாமல் படைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் என்பதற்கு கீழே உள்ள கவிதை சாட்சி. இந்த கவிதையை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏக்கம், உலகளவில் கொண்டாடப்பட வேண்டிய மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் உயிர்மை பத்திரிக்கையில் மட்டுமே இடம்பெற்று உறங்கிக் கொண்டிருக்கிறதே
என்பது தான். பல நூறு வருடங்கள் அடைபட்டுக் கிடந்த பறவை விடுவிக்கப்பட்டால் எப்படி பறந்து திரியுமோ அப்படியான வார்த்தைகள் இந்த மகத்தான கலைஞனிடம் இருந்து வெளிப்படுகின்றன. தமிழகத்தின் எங்கோ ஒரு சிறுபுள்ளியாய் போராட்டத்திற்குரிய வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் மனுஷ்யபுத்திரன் எனும் மாபெரும் அதிசயத்தை நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நம் தாய் மொழிக்கும், ஆன்மாவிற்கும் செய்யும் பச்சைத் துரோகம்.மன்னிப்பு என்பது
-----------------------------------

மன்னிப்பு கேட்கும்படி
அப்புவுக்கு நான் கற்பித்த நாளில்
மன்னிப்பு என்றால்
என்னவென்று கேட்கிறான்

ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா

மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று

அது வலிமையுள்ளவர்கள்
வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
அதிகாரம் என்று

வலிமையற்றவர்கள்
தமது இயலாமைக்குத்
தாமே வழங்கிக் கொள்ளும்
சமாதானமென்று

கடவுள்களின் ஓய்வு நேரப்
பொழுது போக்கு என்று

பந்தயத்தில் தோற்ற குதிரையை
உயிரோடுவிடுவது என்று

மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
தூக்கு மேடையில் வழங்கப்படும்
கருணை என்று

ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்று

எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
சமூக உடன்படிக்கை என்று

கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
மறுகன்னத்தைக் காட்டுவது என்று

படுக்கையறையில்
மண்டியிடுதல் என்று

ஒரு இந்தியன் கண்டுபிடித்த
வினோத தத்துவம் என்று

பிரார்த்தனைகளின்
மையப் பொருள் என்று

ஒரு புரட்சியாளனால்
உதாசீனப்படுத்தப்படுவது என்று

இன்னொரு சந்தர்ப்பம்
அளிக்கும் முயற்சி என்று

இன்னொரு பக்கத்தைப்
புரிந்துகொள்வது என்று

தண்டனையை
ஒத்தி வைப்பது என்று

நண்பர்களுக்குத் தரும்
சிறந்த பரிசு என்று

ஒரு துரோகத்தை
அறியாததுபோல் நடிப்பது என்று

எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
கேட்கப்படுவது என்று

பெரும்பாலான சமயங்களில்
மறுக்கப்படுவது என்று

ஒருவரை அச்சத்திலிருந்து
விடுவிப்பது என்று

ஒருவரை நிரந்தரமாக
அடிமைப்படுத்துவது என்று

மறதியின்
இன்னொரு பெயர் என்று

அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு அர்த்தமற்ற சொல் என்று

மிகவும் எளிய
ஒரு தந்திரமென்று

ஒரு போதைப்பொருள்
என்று

மன்னிக்கவே முடியாத ஒன்றை
மன்னிப்பது போல் பாவனை செய்வது என்று

ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா

மன்னிப்பு என்பது
இறுதியில்
ஒரு கண்ணீர்த்துளி
மட்டுமே என்று....

அடுத்த பதிவில் ஜனவரி இதழில் இவர் எழுதிய நல்வாழ்த்துக்கள் கவிதை இடம்பெறும்.

Thursday, January 27, 2011

இழந்ததும், இருப்பதும்...

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்பாக நான் எழுதிய "விடைகளை தேடும் கேள்விகள்" பதிவிற்கு அடுத்த சில தினங்களிலேயே இலங்கை கடற்படையினரால் வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இப்போது போராட்டங்களும், எதிர்ப்புக் குரல்களும் சற்று அதிகமாக கேட்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் போராட்டமோ, எதிர்ப்புக் குரலோ அந்த பிரச்சனையின் தீர்வு நோக்கி இருக்க வேண்டுமே ஒழிய வெறும் கூக்குரலாக இருக்க கூடாது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வே கச்சத்தீவை மீட்பதும், 1974 மற்றும் 2008-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதும் தான்.
இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு வரை கச்சத்தீவு நம் நாட்டிற்கு சொந்தமாகத் தான் இருந்தது.
முதலில் 1974-ல் இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கிடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தான் கச்சத்தீவை இலங்கை அரசு
கைப்பற்றிக் கொண்டு நம் மீனவர்களை இன்று வரை படுகொலை செய்து வருகின்றனர். இந்த கச்சத்தீவு ராமநாத மகாராஜாவிற்கு சொந்தமானது என்பதற்கான அரசு ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ஒப்பந்தப்படி கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்து விட்டு, தமழக மீனவர்களுக்கு என சில உரிமைகள் மட்டும் அளிக்கப்பட்டன. மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தங்களது வலைகளை அங்கு உலர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கச்சத்தீவு அந்தோணியர் கோவிலில் வருடம் ஒரு முறை நடக்கும் திருவிழாவிற்கு சென்று வர உரிமை அளிக்கப்பட்டது. இதன் பிறகு 34 ஆண்டுகளாக பெரிய பிரச்சனைகள் எதுவும் வராமல் காலம்
கடந்தது.
2008-ல் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், இலங்கை அரசும் ஒரு மறைமுக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன. அப்போது விடுதலைப் புலிகளை முற்றிலும் அழிக்க இலங்கை அரசு தீவிரமாக இருந்த சமயம். அந்த ஒப்பந்தப்படி இந்திய கடல் எல்லையில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் நம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக் கூடாது என இலங்கை தரப்பு அரசு அதிகாரிகளால் வரையறை செய்யப்பட்டு, மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து இயற்றப்பட்ட ஒப்பந்தத்தில் நம் அரசு கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தது. இன்று இந்திய கடற்படையோ, ரோந்து படையினரோ தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறுவதின் முக்கிய காரணமே இந்த ஒப்பந்தம் தான். அந்த ஒப்பந்தம் புலிகளை அழிக்க போடப்பட்டதாக நம் அரசாங்கம் தெரிவித்தது, இன்று தான் புலிகளை இலங்கை அரசு அழித்து விட்டதே இனியும் எதற்கு அந்த ஒப்பந்தம்??? இந்த கேள்வியும், தமிழக மீனவர்களின் அழுகுரல்களும் நம் அரசின் காதுகளில் விழுமா???

Tuesday, January 25, 2011
குடியரசு தின வாழ்த்துக்கள்....

எனது இந்தியா....

ஜனவரி-26, குடியரசு தினம்- அரசு விடுமுறை. நம் குழந்தைகளுக்கும், நம்மில் பலருக்கும் குடியரசு தினம் என்பது, இதுபோன்ற ஒற்றை வரித் தகவலாக மட்டுமே இருக்கிறது. நிறைய பேருக்கு சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களே தெரியவில்லை.
சுருக்கமாக கூறினால் ஆங்கிலேயரின் அரசியல் சட்டதிட்டங்களை அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தும் தேசிய காங்கிரஸின் மற்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து CONSTRITUTION OF INDIA-வை GOVERNMENT OF ACT 1935-ஐ இன்றைய தினத்திலிருந்து தான் நடைமுறைப்படுத்தினர். அதாவது ஒட்டு மொத்த நாட்டிற்கான இந்திய அரசியலமைப்பு சாசனமும், சட்டதிட்டங்களும் 1935-ம் ஆண்டு வரையறுக்கப் பட்டது. அதனை ஜனவரி 26- 1950-ல் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்
தான் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
தில்லி செங்கோட்டையில் நடக்கும் நிகழ்ச்சியில் கடற்படை, விமானப்படை, தரைப்படை என முப்படைகளின் அணிவகுப்பும், நம் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், மனித உரிமை, சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வண்ணம் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வரும் சிறுவர்களும், கலை ஆர்வலர்களும் தத்தம் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். ஜனவரி மாதம் காலைக் குளிரில் தொடங்கி அரைநாள் நடக்கும் மேற்கண்ட நிகழ்சிகளுக்கு "பீட்டிங் தி ரீட்ரீட்" என்று பெயர்.
இப்போது நடைபெறும் குடியரசுதினம் செயற்கையாகி விட்டது. 31மாநிலங்கள், 1618மொழிகள், 6400சாதிப் பிரிவினர், 29 பண்டிகைகள், 1 நாடு அது இந்தியா... இந்த சொர்க்க பூமியில் தற்போது சட்டம் ஒழுங்கு, கருத்து சுதந்திரம், மனிதாபமானம், பெண் விடுதலை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை குழிதோண்டி புதைத்து செம்மண் பரப்பி செங்கோட்டையில் விழா எடுக்கிறோம். ஜனாதிபதியும், அரசியல் தலைவர்களும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு விடைபெறுவதும், சிறுவர்களும், சிறுமியர்களும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும் என குடியரசுதினம் வெறும் சடங்காகி விட்டது.
ஒருமித்த ஜனநாயகத்தை மெல்ல மெல்ல நாம் இழந்து வருகிறோம் என்பதையும், தொலைநோக்கு பார்வை எனும் விஷயத்தில் இன்னும் நாம் குருடர்களாகவே இருந்து வருகிறோம் என்பதையும் 61-வது குடியரசு தினம் கொண்டாடும் நாம் சற்று நினைவில் கொள்வோம்....

Sunday, January 23, 2011

விடைகளை தேடும் கேள்விகள்....

உலக நாடுகள் இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழகத்தை பரந்துபட்ட ஜனநாயகம், மனிதநேயம், பாதுகாப்பு பூமி என்பார்கள். கடந்த வாரம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பாண்டியன் என்பவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றதன் மூலம் மேற்கண்ட வார்த்தைகள் தமிழகத்திற்கு தகுதியற்ற வார்த்தைகளாகி விட்டது.
பாண்டியன் இறந்ததும் அவன் உடனிருந்த மீனவர்களும், உறவினர்களும் ஒப்பாரி வைத்தனர். பிறகு தமிழக முதல்வரை சந்தித்து விட்டு பாசாங்கு தனமான ஒரு பேட்டியை தமிழக கடற்படைத் தளபதி அளித்தார். ஒரு சிறந்த நாடகத்தை நம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அரங்கேற்ற அதனை இலங்கை அரசியல்வாதிகளும், கடற்படை அதிகாரிகளும் கண்டு ரசித்தனர். ஒரு தமிழனின் மரணம் அத்தோடு முடிந்தது.
மூன்று புறம் கடல், ஒரு புறம் மலைக்காடு என இயற்கையின் பாதுகாப்பும், வளமும் வேறெந்த மாநிலத்திற்கும் இல்லை. ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகியவற்றை தெற்கு கடற்கரை மாவட்டங்கள் என்றும், சென்னை, வேலூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகியவற்றை வடக்கு கடற்கரை மாவட்டங்கள் என்றும் மொத்தமாக 1,125 கி.மீ கடற்பரப்பு நமக்கு இருக்கிறது. இதில் சுமார் 10 லட்சம் மீனவர்கள் கடல் சார்ந்த வாழ்க்கை வாழ்கின்றனர். 80-களின் தொடக்கத்தில் இருந்து தான் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு தொல்லை தொடங்கியது. புலிகளின் அசூர வளர்ச்சிக்கு
ஆதார காரணம் தமிழக மீனவர்களின் உதவிகள் தான் என இலங்கை அரசு நினைத்தது. 1980 முதல் 1995 வரை இலங்கை கடற்படையினர் 236 முறை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 3000 படகுகளை தாக்கியும், 70 படகுகளையும், 50-க்கும் மேற்பட்ட மீனவர்களையும் அழித்தும் உள்ளனர். 186 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இது 1995 வரை மட்டுமே அளிக்கப்பட்ட ஆய்வறிக்கை. அதற்குப் பிறகு முழுமையான ஆய்வறிக்கை அரசு தரப்பிலிருந்து இதுவரை வெளியிடவில்லை.
மகிந்தா ராஜபக்ஸேவின் அரசியல் நிலையும், தமிழர்களின் மீதான அவரின் அடக்குமுறையும் சர்வாதிகாரி ஹிட்லரை ஞாபகப் படுத்துகின்றன.
இந்திய கடல் எல்லைக்குள் தாய்லாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டு மீனவர்கள் உள்ளே நுழைந்தால், நம் அரசாங்கங்கள் முதலில் அவர்களை கைது செய்கிறது. பிறகு அந்த நாட்டுக்கு தகவல் கொடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுதலை செய்கிறது. ஆனால் இலங்கை கடற்படை என்ன செய்கிறது. தமிழக மீனவர்களை அடித்து விரட்டுவதும், தூரத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்துவதும், கைது செய்து சித்ரவதை செய்வதும், அவர்கள் எல்லைக்குள் தவறி நுழைந்து விட்டால் அவனை சுட்டு வீழ்த்துவதும் தான் இதுவரை நடந்தேறி வருகின்றன.
இதற்கு நிரந்தரமான ஒரே தீர்வு நாம் நம் கச்சத்தீவை மீட்பது தான். 2007-ம் ஆண்டு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போது "கச்சத்தீவை மீட்க வேண்டிய நேரம்
நெருங்கி விட்டது" என்று கருணாநிதி கூறினார். அதற்கான இறுதி நேரம் இப்போது நெருங்கி விட்டது. தேர்தலுக்குள்ளாவது கருணாநிதி இதனை நிறைவேற்றினால்
இதனை தேர்தல் சாதனையாக தி.மு.க அரசு நிச்சயம் கூறிக் கொள்ளளாம்.

Friday, January 21, 2011

என் கவிதைகள்...

எழுத்தறிவித்தவள்
------------------------------------- அவளின் மௌனங்கள் அனைத்தும்
கேள்விகளாய் இருக்கின்றன
நான் படிக்கும் காதல் பாடத்தில்.

சிறுமுயற்சி
------------------------
மறந்தும் உன்னை
மறக்காமல் இருக்க
மறப்பதையே மறந்தேன்.

இழப்பு
---------------
நீ இல்லாத பண்டிகை
நாட்களின் பலகாரங்கள்
இனிப்பதேயில்லை.

வருத்தம்
-------------------
எட்டி பிடிக்க முடியாத உயரத்தில்
நிலா மட்டுமல்ல...
உன் நினைவுகளும் தான்.

யாசிப்பு
----------------
என் படுக்கை மெத்தை
தினமும் என்னிடம் கேட்கின்றன
உனது உறக்கத்தை.

உபச்சாரம்
---------------------
மடித்து வைக்கப்பட்ட மனைவிக்கான
உணவில் இயல்பாய் இருக்கிறது
அவனின் தீராத காதல்.

Wednesday, January 19, 2011

சாரு - அரைநூற்றாண்டு அற்புதம்சாருநிவேதிதா.... இவரை உயிரோடிருக்கும் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் முதன்மையானவர் என்பதை எந்த சந்தேகமும், யோசனையும் இல்லாமல் கூறுவேன்.
எழுத்தை மட்டுமே தன் உயிர்மூச்சாக கொண்டு வாழும் வெறியன். அந்த வெறித்தனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம் அறிவுஜீவிகளான தமிழர்களுக்கு இல்லாததால்
தான், தமிழகத்தின் கடைக்கோடி மனிதர்களில் ஒருவராக இண்டர்நெட் பிச்சைக்காரன் என்றும் செக்ஸ் எழுத்தாளன் என்றும் முத்திரை குத்தப்பட்டு முச்சந்தியில் இருந்து கொண்டு தன் கர்வத்தை இழக்காமல் வாழும் கலைஞன்.
அரசியல் நுணுக்கங்களின் அறிவுப் பெட்டகமாக ஆஸாதி...ஆஸாதி...ஆஸாதி, மூடு பனிச்சாலை மற்றும் இதர எழுத்துக்களில் தன் ஆழமான விமர்சனத்தின் மூலம் அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை உலகுக்கு உணர்த்தியவன்.
பின்நவினத்துவ இலக்கிய பரப்பில் தன் நாவல்களான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சிபனியனும், ஜிரோ டிகிரி, ராஸலீலா, காமரூப கதைகள், சமிபத்தில் தேகம் என தன் அனுபவ எழுத்துக்களின் மூலம் யாரும் தொடமுடியாத உயரத்திற்கு சென்றவன்.
வழக்கமான சினிமா விமர்சனங்களை உடைத்தெறிந்து தன் மனசாட்சியின் குரலாய் சினிமா சினிமா, அலைந்து திரிபவனின் அழகியல், நரகத்திலிருந்து ஒரு குரல் என்ற உன்னத படைப்புகளின் மூலம் குறைகுடங்களாய் இருந்த (கமல்ஹாசன், மணிரத்னம், இளையராஜா, ஷங்கர், ஜேசுதாஸ்) தமிழ்க் கலைஞர்களின் தவறுகளை நேர்மையான தன் எழுத்துக்களின் மூலம் சுட்டிக்காட்டி இன்றைக்கும் பலரது விரோதங்களை சம்பாதித்துக் கொண்டிருப்பவன்.
தூங்கும் போதும் கனவில் வரும் கனவுகளை சிறுகதையாக மொழிபெயர்த்து மதுமிதா சொன்ன பாம்பு கதைகள், ஊரின் மிக அழகான பெண், நேநோ முதலிய படைப்புகளின் மூலம் வாசகர்களின் குறிப்பாக என் தூக்கத்தை கெடுத்த புன்னியவான்.
வாழ்வின் எதிர்மறைகளை, இன்னல்களை, சந்தோஷங்களை, காழ்ப்புணர்ச்சிகளை என எல்லாவற்றையும் கொட்டித் தீர்க்கும் கட்டுரைத் தொகுதிகளாக வாழ்வது எப்படி?, எனக்கு குழந்தைகளை பிடிக்காது, கடவுளும் நானும், வரம்பு மீறிய பிரதிகள், திசை அறியும் பறவைகள், கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் என தன் வாழ்வின் வடிவத்தை எழுத்தால் தந்தவன்.
நீ கேள், நான் கூறுகிறேன் என்று இன்றளவும் தன் மனசாட்சியின் அரசாட்சியை வாசகனின் ஜனநாயகத்தில் ஒப்படைத்ததின் சான்றாக அருகில் வராதே என்கிற
நூலைக் கூறலாம்.
நாம் கொண்டாடும் இசைக்கு எதிரான நியாயமான கோரிக்கையை முன் வைத்து எழுதப்பட்ட இசைவிமர்சன கட்டுரையான கலகம் காதல் இசை என்ற தொகுப்பை எந்த இசை அமைப்பாளர்களோ, இசை விமர்சகர்களோ தட்டிக் கழித்து விட முடியாது. ஒவ்வொரு வார்த்தைகளும் கடலின் அடிஆழத்தை தொட்டுவிட்டு வந்தவை.
இவரை மனிதன் என்று கூறினால் உண்மையாக எனக்கு நம்புவது சற்று சிரமமாகத் தான் இருக்கிறது. மேற்கண்ட நூலின் பட்டியல் எல்லாம் நான் படித்தது மட்டுமே.
இன்னும் எண்ணிலடங்கா நூலும், அவரின் கனவோடு கரைந்த கையெழுத்து பிரதிகளும் அதிகம். அவரின் படைப்புகளை நான் FAST READING முறையில் படித்து விட்டேன். இந்த நிலையில் எனக்கு சில அடிப்படை கேள்விகள் எழுகின்றன, அதை அவருக்கு எழுதினால் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது வலைப்பதிவில் கேள்வி-பதில் பகுதியில் ஒரு வாசகரை ஓடஓட விரட்டியிருந்தார் அந்த நிலை தான் எனக்கும் ஏற்படும் என்கிற பயம். நவின இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவராக கருதப்படும் ஜெயமோகனையே நார்நாறாய் கிழித்து தோரணம் கட்டி தொங்கவிடும் போது நானெல்லாம் எம்மாத்திரம்...???
தமிழகத்தில் சாருவிற்கு பிரியமானவர்கள் என்று இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் மனுஷ்ய புத்திரன் இன்னொருவர் எஸ்.ராமகிருஷ்ணன்.
இவரின் மெட்டாஃபிக்சன் தொகுப்பான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சிபனியனும் நாவலை பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா குறிப்பிட்டது,
"இலக்கியம் என்பது கங்கை நதி போல; அதில் எல்லா சங்கதிகளும் மிதந்து போகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த நாவலும் பழுப்பாக மிதந்து செல்லும்ஒன்று"
இன்றும் நம் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களும், வாசகர்களும் இந்த மனநிலையிலேயே தான் இருக்கிறார்கள்.தமிழ் இலக்கிய உலகில் இன்றுவரை யாரும் தொடாத போர்னோ எழுத்துக்களை படைத்து (சாருவைக் கேட்டால் நான் போர்னோவை இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை என்பார்) சக படைப்பாளிகளின் முன்னோடியாக
இருப்பவர். சாருவின் இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழியில் அல்லாது வேற்று மொழியில் இடம்பெற்றிருந்தால் இன்று உலகின் தலைசிறந்த எழுத்தாளராகவும்,
மில்லினியர்களின் சொந்தக்காரராகவும் இருந்திருப்பார்.
ராஸலீலா, காமரூப கதைகள் இரண்டின் நாவல்களிலும் ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றியும் விரிவான மதிப்பீட்டை முன்வைக்க முடியும். அதற்கு சமகால இலக்கியவாதிகளான மனுஷ்ய புத்திரன், எஸ்.ரா, ஜெயமோகன், லா.சா.ரா, கி.ரா, எம்.யுவன், கலாப்பிரியா, தேவதச்சன், முகுந்த் நாகராஜன், யமுனா ராஜேந்திரன், ரவிக்குமார், விக்ரமாதித்யன், பழமழய் இன்னும் பல எழுத்தாளர்களின் படைப்புகளை எல்லாம் முழுமையாக படித்தால் தான் சமகால இலக்கிய போக்கின் பாதை பிடிபடும். அப்போது தான் சாருவின் எழுத்துப் பிரவேசத்தை ஓரளவிற்கு நான் உணர முடியும். இது நிறைவேறும் போது அவர் யோசிக்கும் படியான கேள்விகளை கேட்க என்னை தயார் செய்து கொண்டு நிச்சயம் அவரை ஒரு நாள் சந்திப்பேன், அவரது வலைத்தளத்தில்....

Sunday, January 16, 2011

காவலன்- ஏமாற்றத்தின் விலாசம்

காவலன் திரைவிமர்சனத்தை எழுதும் தகுதியை நான் இழந்து விட்டேன். ஆம் உண்மையை கூறி விடுகிறேன், நான் முதல் அறுபது நிமிடங்கள் மட்டுமே படத்தை பார்த்தேன். அதற்கு மேல் அந்த அபத்தத்தின் குவியலுக்குள் என்னால் உட்கார்ந்து கொண்டிருக்க முடியவில்லை. முதல் இருபது நிமிடத்தில் வந்த கதாப்பாத்திரங்களின் உடைத்தேர்வும், கலைநுணுக்கமும், வசனங்களும், திரைக்கதையும் இன்ன பிறவும் தமிழ் சினிமாவில் இதுவரை கண்டதில்லை. சீரியலில் கூட மேற்கண்டவைகள் ஓரளவிற்கு பார்வையாளளின் தகுதியை பெறுகின்றன. பல்லாண்டு கால திரைஅனுபவம் பெற்ற ஒரு இயக்குனருக்கு இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். டாடா(அசின்) தன் வீட்டிற்கு பாடிகார்டாய்(விஜய்) வருபவன் மேல் தன் இதயத்தை பறி கொடுக்கும் காட்சிகள், தமிழ் சினிமா ரசிகர்கள் குச்சிமிட்டாய் சப்பிக் கொண்டு படத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் என சித்திக் நினைத்துக் கொண்டு படத்தை இயக்கியிருப்பார் போலும். அதே போல் படம் பெயர் மட்டும் தான் காவலன்.
படத்தில் விஜய்யின் கதாப்பாத்திர பெயரே பாடிகார்ட் தான். முதல்வர் அவர்கள் தமிழ் கதாபாத்திர பெயர்களுக்கும், வசனங்களுக்கும் வரிச்சலுகை அளிக்காததால் வந்த வினை இது. நகைச்சுவை என்கிற பெயரில் வடிவேலுவும், விஜய்யும் செய்யும் அலும்பல்களால் நெழிந்து நெழிந்து என் முதுகெலும்பு வலி கண்டது தான் நான் காவலன் படம் பார்த்து பெற்ற அனுபவம்.
படத்தின் டைட்டில் கார்டில் இருந்தே பிரச்சனை தான். முதலில் காவல்காரன். காவல் காதல் என்று என்னென்னவோ பெயர் சூட்டி இறுதியில் காவலன் என படப்பெயர் முடிவானது. பிறகு சில அரசியல் கட்சிகளின் தலையீட்டால் படத்திற்கு இடையூறும், வெளியிட தியேட்டர் கிடைக்காமல் தாமதமும் ஆனது. அப்படியே பெட்டிக்குள்ளேயே முடங்கி விட்டிருந்தாலும் விஜய்யின் இமேஜ் கூடியிருக்குமோ???? என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. ஒளிப்பதிவாளர்-N.K.ஏகாம்பரம், எடிட்டிங்-கௌரிசங்கர், இசை-வித்யாசாகர் என எல்லோரும் தத்தம் பங்கிற்கு படத்தை மிக ஆழமான சரிவிற்கு கொண்டு சென்றதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
நான் பார்த்த அறுபது நிமிடநேர படத்தில் நான் ரசித்ததே தியேட்டரில் விஜய் ரசிகர்களின் உற்சாகம் குறையாத ஆரவாரமும், கொண்டாட்டமும் தான். பின்ன இருக்காதா சுறா-வையே ரசித்தவர்களுக்கு இது கொண்டாட்டமான படமென்று நிச்சயம் விஜய் ரசிகர்கள் சொல்லிக் கொள்ளலாம். தன் 51-வது படத்தில் மிகப் பெரிய கரும்புள்ளி தெரிந்தோ, தெரியாமலோ தன் மீது பட்டுவிட்டதை இளையதளபதி எப்படி அகற்றுவார் என்பதே விஜய்யின் தொலைநோக்கு பார்வை கொண்ட ரசிகர்களின் எண்ணமாக இருக்கும். அதானே... நானும் கேட்கிறேன் எப்படி சரி செய்யப் போகிறீர்கள் விஜய்..???

Friday, January 14, 2011

பொங்காத பொங்கல்...


Wish u all a happy tamil newyear,
Happy pongal n sankranti suba kankshala....

என் அலைபேசியில் வந்த வாழ்த்துக் குறுஞ்செய்தி இது. காலை எழுந்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து கொண்டு வசதியாய் தொலைக்காட்சியில்
சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டே நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்தக் குறுஞ்செய்தியை Forward செய்து எனக்கான பொங்கலை கொண்டாடிக்
கொண்டிருக்கிறேன். சராசரி மனிதனான எனக்கு போதிய பொருளாதார பாதுகாப்பும், நான் செய்யும் தொழிலாலும் என்னால் ஒவ்வொரு பண்டிகையையும்
என்னளவிற்கு கொண்டாட முடிகிறது. நான் மட்டுமல்ல தொழிலதிபர்கள் முதற்கொண்டு கூலிவேலை செய்பவர்கள் வரை அனைவரும் தத்தம் தகுதிகளுக்கு
ஏற்ப கொண்டாடுகின்றனர். அரசு நிறுவனங்களிலும், தனியார் துறைகளில் வேலை பார்ப்பவர்களும் விடுப்பு மற்றும் போனஸ் தொகை பெற்று கொண்டாடுகின்றனர்.

பொய்க்காமல் பெய்யும் பருவமழையில் சேற்றில் தன் கரங்களால் முதல் விளைநெல்லை விதைத்து, பாதுகாத்து அறுவடை செய்து தானியமெனும் சிசுவை
பெற்றெடுக்கும் உழவனுக்கும், அவன் மாடு, கன்றுகுட்டிகளுக்கும் நன்றி செலுத்தத்தான் பொங்கல் பண்டிகை.
ஆனால் பொங்கல் என்கிற பண்டிகை நமக்கான கொண்டாட்டத்திற்கு மட்டுமே பயன்படுகிறது. உழவனின் நிலை....
வருடம் முழுவதும் வயலிலும், வாய்காட்டிலும், மழையிலும், வெயிலிலும் நடந்து ரணமாகிப் போன அவன் பாதங்களைப் போல வறுமையே வாழ்க்கையாகிப்
போன உழவனுக்கு இந்த பொங்கலுக்கு கிடைத்தது ஏமாற்றமும், கடன் தொல்லையும், பட்டினி சாவும் தான். புத்தாடைக்கும், புதுப் பானைக்கும் அரசிடம் கையேந்தி
நிற்கிற அவலம்.
நாமெல்லாம் நன்றாக சம்பாதித்து விடுமுறையில் ஊர் சுற்ற தத்தம் கிராமங்களுக்கு செல்கிறோம், அப்போது நம்மில் எத்தனை பேர் அங்கிருக்கும் உழவனின்
நிலையை பார்த்து பறிதாபப்பட்டிருப்போம்??? எல்லா துறையிலும் அக்கறை செலுத்தும் நாமும் நம் அரசாங்கமும் ஏன் நமக்கு உணவளிக்கும் விவசாயத்தை
மட்டும் கேவலமாக, கீழ்த்தரமாக கருதுகிறோம்??? விவசாயமே உயிராக கருதும் உழவன் அரசின் இலவச பொருட்களையும், கடன் தள்ளுபடியையும் யாசித்து
நிற்கும் பிச்சைக்காரனாய் நடுத்தெருவில் வாழும் ஈனப் பிழைப்பு.
விவசாயத்தை மட்டுமே நம்பியவனுக்கு உயிர்வாழ தகுதியில்லாத சமுகமாக நாம் மாற்றி இருக்கிறோம். அதைப்பற்றி யாருக்கும் எந்தக் கவலையும்
இல்லாமல் நாம் சந்தோசமாய் பகிர்ந்து கொள்ளும் "HAPPY PONGAL" குற்ற உணர்ச்சியையே தருகிறது. உழவனின் உழைப்பு தான் நமக்கான உணவு
என்பதனை மறந்து வெகுகாலமாகி விட்டது வருத்தத்தையே தருகிறது.

Tuesday, January 11, 2011

ஒரு கவிதையின் கதை

என்னைப் பொறுத்தவரை நீண்ட கவிதைகளை வாசிக்கும் போது மனம் சோர்ந்து விடுகிறது. காரணம் என்னவென்று இதுநாள் வரை விளங்கவில்லை.
நல்ல கவிதைகளை நச்சென்று நான்கு வரியில் முடித்து விடுவது உத்தமம். இன்றைக்கும் திருக்குறளில் நான் வியப்பதே அதன் சுருக்க வரிகளுக்குள்
புதைந்துள்ள எண்ணற்ற விளக்கங்கள் தான். மாறாக கீழே கொடுத்துள்ள நீண்ட கவிதை சமிபத்தில் நான் படித்து இரு இரவுகள் மனம் தூங்காமல்
அந்த வார்த்தைகளில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. வாசிப்பின் எல்லாவித அணுபவங்களையும் இது போன்ற கவிதைகள் நிகழ்த்தி விடுகின்றன.

காலமுள் கடிகாரம்
------------------------------------

ஆறே ஆறு வாரங்களில்
சிவப்பழகுக்கு ஆசைப்பட்டு
வருடக்கணக்கில் வாங்கிய
பேஸ்ட்டியூப் ஏராளம்.
ஐஸ்வர்யா ராயைப்
பார்த்ததில் இருந்து
பியூட்டி பார்லர்
மாதங்களுக்குள் அடைபட்டது
ஹை ஹீல்ஸூம்
லிபர்டி கட் சுடிதாரும்
வெள்ளிக்கிழமை சிறப்பு.
பாடி டியோடரண்ட்டும்
டாண்ட்ரஃப் ஷாம்பும்
அன்றாட பட்ஜெட்.
பிரதிமாத ஹலோ டீயூன்களுக்கு
ஹாரிஷ் ஜெயராஜூம்
யுவன்சங்கர் ராஜாவும்.
எச்சிலூறும் எஸ்.எம்.எஸ்
வரப் பெறாதவர்கள்
நட்பு தேவையில்லை.
கலாசார நாட்களுக்கென்றே
கனகாம்பரமும்
மயில்கலர் பட்டுத் தாவனியும்.
தலயும் மேடியும்
தூங்க விடாத
மின்சாரக் கனவுக் கண்ணன்கள்.
நினைத்தும் பார்க்கவில்லை
அப்போது
இடுங்கிய கண்களும்
ஒடுங்கிய கன்னமும்
துருத்தியிருந்த நெஞ்செலும்பாய்
துருப்பிடித்த சைக்கிள்
வரனைத்தான்
அப்பாவின் பொருளாதாரத்துக்குள்
அடக்க முடியும் என்று.
மூன்றே வருடங்களில்
இரண்டுக்கு தாயாகி
35 முதுமை காட்டி
முதுகு வளைத்தது வறுமை.
பலசரக்கு கடைக்காரன்
கடுகு கட்டிய காகிதத்தில்
வீட்டிலேயே பியூட்டி டிப்ஸ்...
உருளைக் கிழங்கையும்
தக்காளியையும் மசிய அரைத்து
தயிர் கலந்து
இரவு படுக்கும் முன்
முகத்தில்.....
அது சரி....
அதை மூஞ்சில அப்பிக்கிட்டா
வெந்த சோத்துக்கு
வெந்நீர் ஊத்தியா திங்கறது????

-பாலநாயகர்...

மேற்கண்ட கவிதையில் ஒவ்வொரு வரியிலும் நவின உலகின் படிமங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இறந்த காலம், நிகழ் காலம்,
எதிர் காலம் என மூன்று காலங்களிலும் தன் இயலாமையை, வறுமையின் பக்கங்களை பெண்ணின் பார்வையிலிருந்து கவிதையின் வரிகள்
சொல்லிச் செல்கிறது. இது போன்ற ஆழமான, அர்த்தமுள்ள கவிதைகள் நம் தினசரி வாழ்வின் ஓட்டத்தில் மிதிபட்டு, சிதைந்து
உயிரற்றுப் போய்விடும் பரிதாபம் என்று நிற்குமோ??? தெரியவில்லை......

Monday, January 10, 2011

தமிழ் மொழி - எந்த தேசத்தின் தாய்மொழி

தன் திரில்லர் எழுத்தின் மூலம் வாசகனை தன் வசியப்படுத்தும் எழுத்தாளர் கென்ஃபோல்ட். தன் புதிய புத்தகமான "FALL OF GIANTS"-ஐ அறிமுகப்படுத்த
சென்னை வந்திருந்தார். உங்கள் பார்வையில் இந்தியாவும், தமிழகமும் எப்படி? என்கிற கேள்விக்கு அவரது பதில்...
சுமார் 89 கோடி மக்களுக்கு ஆங்கிலம் என்பது முதல் மொழியாக இருக்கிறது. இது ஒரு வகையில் இங்கிலாந்து நாட்டை விட பெரிய அளவு.
அதனாலேயே என்னைப் போன்ற ஆங்கில எழுத்தாளர்களுக்கு நல்ல மார்க்கெட், சமயங்களில் இந்திய ஆங்கில எழுத்தாளர்களை விடவும்.
நான் எழுதும் கதைகளில் வரும் சம்பவங்கள் போன்ற அனுபவங்கள் ஏதும் இல்லாத வாசகர்களும் என்னை விரும்பி படிப்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.
நிற்க.....
அவரின் மேற்கண்ட வார்தைகளில் சில உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் ஆங்கில மொழி என்பது தவிர்க்க
முடியாத ஒரு மொழியாகி விட்டது உண்மை தான். சீனா, ஜப்பான், ஐரோப்பா போன்ற நம்மை விட வளர்ந்த நாடுகள் எல்லாவற்றிலும் அவர்களின்
தாய்மொழிக்கு அடுத்த மொழி தான் ஆங்கிலம். கொரிய நாட்டில் ஆங்கிலம் தெரியவில்லை என்றால் அது சாதாரணம், ஆனால் கொரிய மொழி தெரியவில்லை
என்றால் அது தேசத்துரோகம்.
இப்போது நம் மாநிலத்திற்கு (பெயர் மட்டும் தான் தமிழ்நாடு) வருவோம். இது சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம். என் நண்பரின் மகள்(4ம் வகுப்பு), அவரிடம்
தினமும் 5 ரூபாய் வாங்கிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறாள். நான் அவரிடம் "எதுக்குப்பா இந்த வயசுல பாக்கெட் மணி கொடுத்து பழக்கப்படுத்தற" என்றேன்.
அதற்கு அவர் கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும் அளித்தது. "அட நீ வேற அது பாக்கெட் மணியில்ல, ஸ்கூல்ல ஃபைன் கட்றா".
எதுக்குனு கேட்டா அவர் சொல்றாரு... காலையில 8 மணியில இருந்து இரவு 8 மணி வரை பள்ளி நடக்கும் சமயம் தமிழில் ஒரு வார்த்தை தவறி
பேசி விட்டால் கூட அந்த மாணவருக்கு அபராதம்.
இது தான் தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்திய நம் மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தாய்நாட்டில் தாய்மொழியில் பேசினால் அபராதம் விதிக்கும்
அவலம் இங்கு மட்டுமே எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. இப்படி இருந்தால் ஆங்கில எழுத்தாளன் அல்ல அரேபிய எழுத்தாளனையும் தமிழக மக்கள்
வாழவைத்துக் கொண்டு தான் இருப்பார்கள். தமிழ் எழுத்தாளன் பட்டினியால் செத்துக் கொண்டு தான் இருப்பான். பழமையான, வயதான தமிழ் மொழியை
நாம் எல்லோரும் நசுக்கிக் கொண்டிருந்தாலும் அது இன்னமும் உயிரோடு இருப்பது தான் செம்மொழியின் பலம்.....

Saturday, January 8, 2011

என் கவிதைகள்....

S.M.S என்பது.....
--------------------------------
யாரும் அறியா வண்ணம்
என் sms மூலம் என்னை
அணைத்துக் கொள்கிறாய்...
டெலிவரி ரிப்போர்ட்ஸ் பெறும்
வரை நின்று துடிக்கும் என்
இதய கூட்டிற்குள் நீ பத்திரமாய்...
உன் ரிப்ளை மூலம் எனக்கான
ஆக்ஸிஜனை அனுப்புகிறாய்...
உன் SMS-களை
"1 HEART RECEIVED' என்றே பெறுகிறேன்...
சிறு முயற்சி
------------------------------
உலக வரைபடத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்
உன்னையும், உன் காதலையும்....
ரகசியம்
---------------------------
நீயும் நானும் கலந்த கணத்தில்
நீ வானில் தூக்கி வீசிய
வெட்கப் பந்து நிலா...
உனக்கானது
-------------------------
ஈரமில்லா உன் இதயத்தில்
எப்போதும் பெய்யும் மழை
என் காதல்...
நிதர்சனம்
------------------------
அந்த கைரேகை ஜோசியனுக்கு தெரியாது
இன்று மாலை தான் இறந்து விடுவோமென்பது...