Wednesday, January 5, 2011

2011- சில ஆருடங்கள்.....

இந்த ஆண்டில் நாட்டின் பெரிய பிரச்சனைகளும், அரசியலும், அறிவியலும், திரைத்துறையும் எப்படி இருக்கும் என்கிற அனுமானமே இந்த கட்டுரை.
இது என்னளவிற்கான தகவல்கள் மட்டுமே. புறஉலகை தினமும் கவனித்துக் கொண்டிருக்கும் எவனாலும் வருங்காலம் இப்படி இருக்கும் என்பதை ஓரளவிற்கு
கணிக்க முடியும்.
எதிர்கால வினையை பற்றி, குருட்டடியாக பத்து விஷயங்கள் கூறி அதில் இரண்டு விஷயங்கள் நடந்தால் அவனை கடவுளாக்கி பூஜிக்கும் அசட்டுதன அறிவாளிகள் நம் தமிழகத்தில் அதிகம். அந்த அறிவாளிகளுக்கு இந்த கட்டுரையை சமர்பிக்கிறேன்.
வரும் தேர்தலுக்கு பிறகு மஞ்சள் நிறம் வீற்றிருந்த இடங்களில் பச்சை நிறம் காட்சியளிக்கும். சட்டசபையில் வழக்கமான துதிபாடல் பெண்பாலுக்குரியதாக மாறியிருக்கும்.
நித்யானந்தா மற்றும் இதர சாமியார்கள், ஸ்பெக்ட்ரம் வழக்குகள் எல்லாம் மேல் முறையீட்டிலேயே இருக்கும்.
சென்ற ஆண்டு நீரா ராடியா(ஸ்பெக்ட்ரம் தரகர்) ஜுலியன் அசாஞ்சே(விக்கி லீக்ஸ்) போல் இந்த ஆண்டும் சில தவறான முகங்கள் பிரபலமடையும். தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அடுத்த ஆறு மாதத்திற்கு பேசப்படுவார், பிறகு மறந்து போவார்கள்.
சில பிரிவுகளில் உள்ள அரசு இலாக்கா அதிகாரிகள் பாதிக்கப்படுவர். அரசியல், விளையாட்டு, பொருளாதாரம் என எல்லா துறையிலும் இளைஞர்கள் மற்றும்
பெண்கள் ஆதிக்கம் அதிகரிக்கும். 20-20 இன்னும் பிரபலமடையும். டெண்டுல்கர் முக்கிய போட்டிகளில் மட்டும் பங்கேற்பார். சாய்னா, சான்யா மோகம்
குறைந்து வேறு நபர்களின் மேல் வெளிச்சமிருக்கும்.
தேர்தலுக்கு பிறகு பஸ் கட்டணம் உயரும். இந்திய ரூபாயின் குறியீட்டை உருவாக்கிய உதயகுமார்(32) போல் ஐ.டி துறையிலும், ஆராய்ச்சி துறையிலும் தமிழக
இளைஞர்கள் ஒரு சிலர் முகம் உலகளவில் அறியப்படும். விளையாட்டு சாதனைகள் எதுவும் பெரிதாக நிகழாது.
கொலை மற்றும் சமூக விரோத குற்றங்கள் குறையும். அணைக்கட்டு, நதிநீர் பங்கீட்டு பிரச்சனைகள் இழுபறியிலேயே இருக்கும். ஐரோப்பிய சினிமாவின்
தாக்கம் பெருமளவு இந்தி, தமிழ் சினிமாக்களில் ஏற்படுத்தும். தாமரையும், புதுக்கவிஞர்கள் சிலரும் பேசப்படுவர். சன் பிக்சர்ஸ் ஹாலிவுட் சினிமா தயாரிக்கும்.
ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன் மற்ற மொழி படங்களை தயாரிக்கும். டிஜிட்டல் தியேட்டர்கள் அதிகரிக்கும். இரண்டு, மூன்று தேசிய விருதுகள் தமிழ் பட
இயக்குனர்களுக்கு கிடைக்கும்.
ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும். ஆண்டு இறுதிக்குள் தங்கம் கிராம் 2,500, பெட்ரோல் லிட்டர் 100, கேஸ்சிலிண்டர் 500 ரூபாயாக இருக்கும். கட்டுமான பொருட்களின் விலையும், அத்தியாவசிய பொருட்களின் விலையும் 30 சதவிகிதம் அதிகரித்து இருக்கும்.
சர்ச்சைகளும், பிரச்சனைகளும், ஏமாற்றங்களும், வெயிலும் நிறைந்த ஆண்டாகவே 2011 இருக்கும்.
பூமிப்பந்தில் இந்த ஆண்டு நிரந்தரமான ஒரு ஒளியை காலம் நிச்சயம் வெளிப்படுத்த இருக்கிறது.
அந்த ஒளி நமக்கெல்லாம் நல்லொளியாக இருக்க வேண்டிக் கொள்வோம்

No comments: