Tuesday, January 11, 2011

ஒரு கவிதையின் கதை

என்னைப் பொறுத்தவரை நீண்ட கவிதைகளை வாசிக்கும் போது மனம் சோர்ந்து விடுகிறது. காரணம் என்னவென்று இதுநாள் வரை விளங்கவில்லை.
நல்ல கவிதைகளை நச்சென்று நான்கு வரியில் முடித்து விடுவது உத்தமம். இன்றைக்கும் திருக்குறளில் நான் வியப்பதே அதன் சுருக்க வரிகளுக்குள்
புதைந்துள்ள எண்ணற்ற விளக்கங்கள் தான். மாறாக கீழே கொடுத்துள்ள நீண்ட கவிதை சமிபத்தில் நான் படித்து இரு இரவுகள் மனம் தூங்காமல்
அந்த வார்த்தைகளில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. வாசிப்பின் எல்லாவித அணுபவங்களையும் இது போன்ற கவிதைகள் நிகழ்த்தி விடுகின்றன.

காலமுள் கடிகாரம்
------------------------------------

ஆறே ஆறு வாரங்களில்
சிவப்பழகுக்கு ஆசைப்பட்டு
வருடக்கணக்கில் வாங்கிய
பேஸ்ட்டியூப் ஏராளம்.
ஐஸ்வர்யா ராயைப்
பார்த்ததில் இருந்து
பியூட்டி பார்லர்
மாதங்களுக்குள் அடைபட்டது
ஹை ஹீல்ஸூம்
லிபர்டி கட் சுடிதாரும்
வெள்ளிக்கிழமை சிறப்பு.
பாடி டியோடரண்ட்டும்
டாண்ட்ரஃப் ஷாம்பும்
அன்றாட பட்ஜெட்.
பிரதிமாத ஹலோ டீயூன்களுக்கு
ஹாரிஷ் ஜெயராஜூம்
யுவன்சங்கர் ராஜாவும்.
எச்சிலூறும் எஸ்.எம்.எஸ்
வரப் பெறாதவர்கள்
நட்பு தேவையில்லை.
கலாசார நாட்களுக்கென்றே
கனகாம்பரமும்
மயில்கலர் பட்டுத் தாவனியும்.
தலயும் மேடியும்
தூங்க விடாத
மின்சாரக் கனவுக் கண்ணன்கள்.
நினைத்தும் பார்க்கவில்லை
அப்போது
இடுங்கிய கண்களும்
ஒடுங்கிய கன்னமும்
துருத்தியிருந்த நெஞ்செலும்பாய்
துருப்பிடித்த சைக்கிள்
வரனைத்தான்
அப்பாவின் பொருளாதாரத்துக்குள்
அடக்க முடியும் என்று.
மூன்றே வருடங்களில்
இரண்டுக்கு தாயாகி
35 முதுமை காட்டி
முதுகு வளைத்தது வறுமை.
பலசரக்கு கடைக்காரன்
கடுகு கட்டிய காகிதத்தில்
வீட்டிலேயே பியூட்டி டிப்ஸ்...
உருளைக் கிழங்கையும்
தக்காளியையும் மசிய அரைத்து
தயிர் கலந்து
இரவு படுக்கும் முன்
முகத்தில்.....
அது சரி....
அதை மூஞ்சில அப்பிக்கிட்டா
வெந்த சோத்துக்கு
வெந்நீர் ஊத்தியா திங்கறது????

-பாலநாயகர்...

மேற்கண்ட கவிதையில் ஒவ்வொரு வரியிலும் நவின உலகின் படிமங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இறந்த காலம், நிகழ் காலம்,
எதிர் காலம் என மூன்று காலங்களிலும் தன் இயலாமையை, வறுமையின் பக்கங்களை பெண்ணின் பார்வையிலிருந்து கவிதையின் வரிகள்
சொல்லிச் செல்கிறது. இது போன்ற ஆழமான, அர்த்தமுள்ள கவிதைகள் நம் தினசரி வாழ்வின் ஓட்டத்தில் மிதிபட்டு, சிதைந்து
உயிரற்றுப் போய்விடும் பரிதாபம் என்று நிற்குமோ??? தெரியவில்லை......

No comments: