Sunday, January 16, 2011

காவலன்- ஏமாற்றத்தின் விலாசம்

காவலன் திரைவிமர்சனத்தை எழுதும் தகுதியை நான் இழந்து விட்டேன். ஆம் உண்மையை கூறி விடுகிறேன், நான் முதல் அறுபது நிமிடங்கள் மட்டுமே படத்தை பார்த்தேன். அதற்கு மேல் அந்த அபத்தத்தின் குவியலுக்குள் என்னால் உட்கார்ந்து கொண்டிருக்க முடியவில்லை. முதல் இருபது நிமிடத்தில் வந்த கதாப்பாத்திரங்களின் உடைத்தேர்வும், கலைநுணுக்கமும், வசனங்களும், திரைக்கதையும் இன்ன பிறவும் தமிழ் சினிமாவில் இதுவரை கண்டதில்லை. சீரியலில் கூட மேற்கண்டவைகள் ஓரளவிற்கு பார்வையாளளின் தகுதியை பெறுகின்றன. பல்லாண்டு கால திரைஅனுபவம் பெற்ற ஒரு இயக்குனருக்கு இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். டாடா(அசின்) தன் வீட்டிற்கு பாடிகார்டாய்(விஜய்) வருபவன் மேல் தன் இதயத்தை பறி கொடுக்கும் காட்சிகள், தமிழ் சினிமா ரசிகர்கள் குச்சிமிட்டாய் சப்பிக் கொண்டு படத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் என சித்திக் நினைத்துக் கொண்டு படத்தை இயக்கியிருப்பார் போலும். அதே போல் படம் பெயர் மட்டும் தான் காவலன்.
படத்தில் விஜய்யின் கதாப்பாத்திர பெயரே பாடிகார்ட் தான். முதல்வர் அவர்கள் தமிழ் கதாபாத்திர பெயர்களுக்கும், வசனங்களுக்கும் வரிச்சலுகை அளிக்காததால் வந்த வினை இது. நகைச்சுவை என்கிற பெயரில் வடிவேலுவும், விஜய்யும் செய்யும் அலும்பல்களால் நெழிந்து நெழிந்து என் முதுகெலும்பு வலி கண்டது தான் நான் காவலன் படம் பார்த்து பெற்ற அனுபவம்.
படத்தின் டைட்டில் கார்டில் இருந்தே பிரச்சனை தான். முதலில் காவல்காரன். காவல் காதல் என்று என்னென்னவோ பெயர் சூட்டி இறுதியில் காவலன் என படப்பெயர் முடிவானது. பிறகு சில அரசியல் கட்சிகளின் தலையீட்டால் படத்திற்கு இடையூறும், வெளியிட தியேட்டர் கிடைக்காமல் தாமதமும் ஆனது. அப்படியே பெட்டிக்குள்ளேயே முடங்கி விட்டிருந்தாலும் விஜய்யின் இமேஜ் கூடியிருக்குமோ???? என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. ஒளிப்பதிவாளர்-N.K.ஏகாம்பரம், எடிட்டிங்-கௌரிசங்கர், இசை-வித்யாசாகர் என எல்லோரும் தத்தம் பங்கிற்கு படத்தை மிக ஆழமான சரிவிற்கு கொண்டு சென்றதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
நான் பார்த்த அறுபது நிமிடநேர படத்தில் நான் ரசித்ததே தியேட்டரில் விஜய் ரசிகர்களின் உற்சாகம் குறையாத ஆரவாரமும், கொண்டாட்டமும் தான். பின்ன இருக்காதா சுறா-வையே ரசித்தவர்களுக்கு இது கொண்டாட்டமான படமென்று நிச்சயம் விஜய் ரசிகர்கள் சொல்லிக் கொள்ளலாம். தன் 51-வது படத்தில் மிகப் பெரிய கரும்புள்ளி தெரிந்தோ, தெரியாமலோ தன் மீது பட்டுவிட்டதை இளையதளபதி எப்படி அகற்றுவார் என்பதே விஜய்யின் தொலைநோக்கு பார்வை கொண்ட ரசிகர்களின் எண்ணமாக இருக்கும். அதானே... நானும் கேட்கிறேன் எப்படி சரி செய்யப் போகிறீர்கள் விஜய்..???

No comments: