Sunday, January 30, 2011

என் ஜன்னலுக்கு வெளியே...

உயிர்மை- தமிழ் இலக்கிய மாத இதழ். தமிழ் இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கும், ஓரளவிற்கு இலக்கிய வாசிப்பு அனுபவம்
இருப்பவர்களுக்கும் இந்த இதழைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. ஆனால் மற்றவர்களுக்கு...
இதில் மற்றவர்கள் என்றால் பல வருடங்களாக விகடன், குமுதம் என வார இதழ்களை வாசிக்கும் எத்தனை பேருக்கு இந்த இதழைப் பற்றி தெரியும்?
நான் வசிக்கும் பேரூராட்சி (ஊத்தங்கரை) பகுதி மக்கள் தொகை சுமார் இரண்டு லட்சம். இந்த பேரூராட்சி பகுதியை ஒட்டியே ஒரு நகராட்சி (திருப்பத்தூர்).
அதன் மக்கள் தொகை சுமார் ஆறுலட்சம். இவ்விரு இடங்களிலும் உள்ள எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்றரை லட்சம். ஆனால் இங்குள்ள எந்த புத்தகக் கடைகளிலும் உயிர்மை இதழ் விற்பனையில் இல்லை. ஒரே ஒரு கடையில் மட்டுமே கிடைக்கிறது. இதழுக்கு ஏதும் தட்டுப்பாடு இல்லை, வாசிக்க ஆள் இல்லாததால் எங்கும் விற்பனையில் இல்லை.
கிடைக்கும் ஓரே ஒரு புத்தகக் கடையிலும் மாதம் இரண்டு புத்தகம் மட்டுமே விற்பதாகவும், நானும் வேறொருவர் மட்டுமே வாங்குவதாகவும் அந்த கடைக்காரர் தெரிவித்தார். (என் பகுதியில் இருப்பவர்கள் சந்தா கட்டியும், இணையத்திலும் நிச்சயம் படிக்க மாட்டார்கள் என்பது தெரியும்) ஆனால் வெகுஜன பத்திரிக்கை எல்லாம் ஐம்பதாயிரத்திற்கும் குறைவில்லாமல் விற்பதாகவும் கூறினார். ஏறக்குறைய எட்டு வருடமாக இயங்கி வரும் ஒரு தரமான இலக்கிய இதழ் என்னைச் சுற்றி உள்ளவர்களால் இன்னும் அறியப்படாமலே இருக்கிறது. இத்தனைக்கும் சமகால தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகளான எஸ்.ரா, சாரு நிவேதிதா, மனுஷ்ய புத்திரன்,
ஜெயமோகன் போன்ற பலரின் படைப்புகளை தாங்கி வரும் இதழே இங்கு கவனிக்கப்படாமல் இருக்கிறது. ஒரு சினிமா நடிகனின் கிசுகிசுவிற்கு அளிக்கும் மதிப்பீடும்,
விமர்சனங்களும் கூட தரமான தமிழ் இலக்கிய படைப்பிற்கு இங்கே அளிக்கப்படுவதில்லை. ஒரு மருத்துவர் மருத்துவத் துறையின் மூலம் தனது வாழ்வை மேம்படுத்திக் கொள்கிறார், ஒரு சினிமா நடிகன் சினிமாத் துறையின் மூலம் தனது வாழ்வை மேம்படுத்திக் கொள்கிறார், ஒரு கூலிக்காரன் கூலி வேலையின் மூலம் தனது வாழ்வை மேம்படுத்திக் கொள்கிறார், ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளனால் எழுத்துத் துறையின் மூலம் தனது வாழ்வை நடத்துவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. இப்போது இருக்கும் உலக மொழிக் கலைஞர்கள் யாருக்கும் இப்படி ஒரு அவமதிப்பு நடந்து கொண்டிருக்காது. ஆனால் தமிழ் இலக்கியவாதிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் இங்கு நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இத்தனை தடைகளும், ஏமாற்றங்களும் இருந்தும் தமிழ் படைப்பாளிகள் தங்களின் ஆழமான படைப்புகளை இன்றளவும் வேகம் குறையாமல் படைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் என்பதற்கு கீழே உள்ள கவிதை சாட்சி. இந்த கவிதையை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏக்கம், உலகளவில் கொண்டாடப்பட வேண்டிய மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் உயிர்மை பத்திரிக்கையில் மட்டுமே இடம்பெற்று உறங்கிக் கொண்டிருக்கிறதே
என்பது தான். பல நூறு வருடங்கள் அடைபட்டுக் கிடந்த பறவை விடுவிக்கப்பட்டால் எப்படி பறந்து திரியுமோ அப்படியான வார்த்தைகள் இந்த மகத்தான கலைஞனிடம் இருந்து வெளிப்படுகின்றன. தமிழகத்தின் எங்கோ ஒரு சிறுபுள்ளியாய் போராட்டத்திற்குரிய வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் மனுஷ்யபுத்திரன் எனும் மாபெரும் அதிசயத்தை நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நம் தாய் மொழிக்கும், ஆன்மாவிற்கும் செய்யும் பச்சைத் துரோகம்.மன்னிப்பு என்பது
-----------------------------------

மன்னிப்பு கேட்கும்படி
அப்புவுக்கு நான் கற்பித்த நாளில்
மன்னிப்பு என்றால்
என்னவென்று கேட்கிறான்

ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா

மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று

அது வலிமையுள்ளவர்கள்
வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
அதிகாரம் என்று

வலிமையற்றவர்கள்
தமது இயலாமைக்குத்
தாமே வழங்கிக் கொள்ளும்
சமாதானமென்று

கடவுள்களின் ஓய்வு நேரப்
பொழுது போக்கு என்று

பந்தயத்தில் தோற்ற குதிரையை
உயிரோடுவிடுவது என்று

மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
தூக்கு மேடையில் வழங்கப்படும்
கருணை என்று

ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்று

எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
சமூக உடன்படிக்கை என்று

கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
மறுகன்னத்தைக் காட்டுவது என்று

படுக்கையறையில்
மண்டியிடுதல் என்று

ஒரு இந்தியன் கண்டுபிடித்த
வினோத தத்துவம் என்று

பிரார்த்தனைகளின்
மையப் பொருள் என்று

ஒரு புரட்சியாளனால்
உதாசீனப்படுத்தப்படுவது என்று

இன்னொரு சந்தர்ப்பம்
அளிக்கும் முயற்சி என்று

இன்னொரு பக்கத்தைப்
புரிந்துகொள்வது என்று

தண்டனையை
ஒத்தி வைப்பது என்று

நண்பர்களுக்குத் தரும்
சிறந்த பரிசு என்று

ஒரு துரோகத்தை
அறியாததுபோல் நடிப்பது என்று

எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
கேட்கப்படுவது என்று

பெரும்பாலான சமயங்களில்
மறுக்கப்படுவது என்று

ஒருவரை அச்சத்திலிருந்து
விடுவிப்பது என்று

ஒருவரை நிரந்தரமாக
அடிமைப்படுத்துவது என்று

மறதியின்
இன்னொரு பெயர் என்று

அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு அர்த்தமற்ற சொல் என்று

மிகவும் எளிய
ஒரு தந்திரமென்று

ஒரு போதைப்பொருள்
என்று

மன்னிக்கவே முடியாத ஒன்றை
மன்னிப்பது போல் பாவனை செய்வது என்று

ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா

மன்னிப்பு என்பது
இறுதியில்
ஒரு கண்ணீர்த்துளி
மட்டுமே என்று....

அடுத்த பதிவில் ஜனவரி இதழில் இவர் எழுதிய நல்வாழ்த்துக்கள் கவிதை இடம்பெறும்.

3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

உங்கள் ஆதங்கம் நியாயமானதே.. விகடன், குமுதம் மட்டுமே நல்லா சேல்ஸ் ஆகுது.. மற்ற பத்திரிக்கைகள் கவுரவத்துக்காக நடத்தறாங்க..என்ன பண்றது? வாசிக்கற பழக்கம் குறைஞ்சிடுச்சு...

சி.பி.செந்தில்குமார் said...

இமேஜ் ரொம்ப பெரிசா இஎஉக்கு.. அதை எடிட் பண்ணீ சின்னதாக்குங்க.. வோர்டு வெரிஃபிகேஷனை எடுத்துடுங்க..

sathya said...

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. இணையம் எனக்கு புதிது, நீங்கள் கூறிய தவறுகளை திருத்திக் கொள்கிறேன்.
உங்கள் நட்பு என்றென்றும் தொடர விரும்புகிறேன்....