Sunday, February 27, 2011

அர்த்தமற்றுப்போன அரசியல்

தமிழகத்தில் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என்பதை எல்லோரும் ஓரளவிற்கு ஊகித்து விட்டனர். மொத்தத்தில் யார் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தாலும் ஊழலும், கொலைகளும், கொள்ளைகளும் நிற்கப் போவதில்லை. விதியென யாருக்காவது ஓட்டுப் போடும் வாக்காளர்களே அதிகம். இதற்கு காரணம் நாட்டு நலனில் உண்மையான அக்கறை கொண்ட ஒரு நபரால் இன்றைய தேர்தலில் போட்டியிடுவதற்கான சூழ்நிலையோ, அறுகதையோ இல்லை.
பலமான சாதிப் பிண்ணனியும், பணபலமும் இருப்பவர்களுக்கான களமாகவே ஒட்டுமொத்த இந்திய அரசியலின் தேர்தல் தகுதிகளாக ஆக்கப்பட்டு விட்டன.
தேர்தலில் நிற்கக் களமிறங்கும் ஒவ்வொரு வேட்பாளரும் தத்தம் தொகுதிகளுக்கு குறைந்தது ஐந்து கோடியாவது செலவு செய்யத் தயாராக தங்கள் கட்சியின் தலைமை அலுவலகங்களில் காத்துக் கிடக்கின்றனர். அது தவிர ரவுடிசமும், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவனையும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களாக உருவாக்கி விட்டுள்ளனர். இப்படிப்பட்ட வேட்பாளர்களை நாம் பதவி நாற்காலியில் அமர வைத்து விட்டு, அவர்களிடம் சமதர்மம், அறநெறி ஒழுக்கத்தை எல்லாம் எதிர்பார்த்தால் நமக்கு எப்படி கிடைக்கும். இதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை.
கடந்த இருபது ஆண்டுகளில் நம் நாட்டு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கையாண்ட முக்கிய ஊழல்கள் பட்டியல்:
1. அர்சத்மேத்தா ரூ.4000/- கோடி
2. கேத்தன்பரேக் ரூ.2000/- கோடி
3. ஐ.பி.எல். லலித்மோடி ரூ.12000/- கோடி
4. ஹவாலா மோசடி ரூ.600/- கோடி
5. லாலு கால்நடை ஊழல் ரூ.900/- கோடி
6. சத்தியம் ஊழல் ரூ.14000/- கோடி
7. டெல்லி முத்திரைத் தாள் ஊழல்கள் ரூ.12000 கோடி
8. காமன்வெல்த் போட்டி சுரேஸ்கல்மாடி ஊழல் ரூ.70000/- கோடி
9. ரோசய்யா நிலஒதுக்கீடு ஊழல் ஊழல் ரூ.200/- கோடி
10. ஸ்பெக்ட்ரம் ஊழல் ரூ.1,76,400/- கோடி
அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அவரவர் சக்திக்கும், திறமைக்கும் ஏற்ப எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கும் சுரண்டிச் சுரண்டி நம் தேசத்தை சீர்குலைத்து விட்டிருக்கின்றனர். மக்களின் வரிப் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை வாரியிறைத்ததும், கடன்களை தள்ளுபடி செய்ததும் நாட்டின் வளர்ச்சிக்குப் மிகப் பெரிய பின்னடைவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.
இவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை பறிமுதல் செய்தாலே நாட்டின் வறுமைக் கோட்டிற்கு கீழே யாரும் இருக்க மாட்டார்கள்.
இவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு செலவையும், பிரத்யேக சலுகைகளையும் கணக்கிட்டால் அந்தத் தொகையில் எல்லோருக்கும் இலவச கல்வியை அளிக்கலாம். இவர்களின் ஒட்டு மொத்த ஊழல் பணத்தைக் கணக்கிட்டால் உலகின் பெரிய பணக்கார நாடாக இந்தியா இருக்கும்.
இது போன்ற தீய சக்திகளினால் தான் விலையேற்றம்,
பொருளாதார நெருக்கடி என மக்களை கசக்கி பிழியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
1950-ல் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டங்கள் எல்லாம் தற்போது காணாமலே போய் விட்டன. இப்போது நமது உடனடித் தேவையே இந்த நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும் அக்கறையோடும், உண்மையாக செயல்படவும் ஒரு மாற்று சக்தி அவசியம் உருவாக வேண்டும். ஒரு எகிப்தைப் போலவும், ஒரு லிபியாவைப் போலவும் நம் நாட்டிலும் புரட்சி வெடிக்கும் காலம் வெகுதூரம் இல்லை.

Wednesday, February 23, 2011

உறங்க மறுப்பவனின் இரவு


உன் நிராகரிப்பில் தொடங்குகிறது
நான் தவிக்கும் நிமிடங்கள்,
உன் இதயக் கதவுகளை தட்டும்
கைகளின் உணர்வுகளை நசுக்குகிறாய்,
தாகத்திற்கு பருகிக் கொண்டிருக்கிறேன்
வற்றாது சுரக்கும் என் கண்ணீரை,
உன் அன்பினுள் நுழைந்து என் ஆயுளை
இரட்சிக்க நினைக்கிறேன்,
உன் மௌனங்களால்
இந்தக் கவிதைக்கும், என் வாழ்விற்கும்
முற்றுப் புள்ளி வைத்து விடாதே,
உன் சவக்குழியிலிருந்து எழுந்து
நடமாடும் பிணமான எனக்கு
உன் அற்புத வாழ்வினை அளித்து விடு.

Sunday, February 20, 2011

மழையோடு பேசும் கவிதைகள்...

நேற்று "இவளுக்கு இவள் என்றும் பேர்" என்கிற கார்த்திகாவின் கவிதைத் தொகுப்பை படித்தேன். இவரின் இந்த முதல் கவிதைத் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. கார்த்திகாவின் சொந்த ஊர் திருநெல்வேலி. தமிழில் முதுகலைப் பட்டமும், M.Phil பட்டமும் பெற்றவர். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.
அந்தத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...

தீராத மழை
-------------------------
ஜன்னல் கம்பிகள்
செலவழிக்கின்றன
சற்றுமுன் சேமித்த மழையை

என தொகுப்பு முழுக்க பெய்யும் மழையில் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறார். மழையைப் பற்றிய அவரின் சிறுசிறு சிந்தனைகளும் கவிதையெனும்
பெருவெள்ளமாய் பெறுக்கெடுத்து ஓடுகின்றன.

சிறுமிகள் நிறைந்த என் தெரு
-------------------------------------------
விடுமுறை நாளொன்றில்
தெருவெங்கும் தூறல் போல் இலையுதிர்க்கும்
கீழை வீடுகளின் மரங்களின் உச்சியில்
வெயில் வீசும் நேரத்தில்,
வாசலில் அமர்ந்து - புத்தகம் ஒன்றை
வாசிக்கும் பாவனையில் கவனித்தேன்
சிறுமிகளால் நிறைந்து
களை கட்டும் என் தெருவை.
குட்டி மிதி வண்டி ஓட்டிச் செல்லும் ஒரு சிறுமி,
நெட்டிலிங்க மரத்தருகே கயிறாடும் ஒரு சிறுமி,
முற்றத்தில் கயிற்று ஊஞ்சல் ஆடுகிற ஒருத்தி,
எட்டி நின்று ஆட்டி விட அவள் பின்னே இன்னொருத்தி,
ரிங்கா ரிங்கா ரோசெஸ் ஆடுகிற மூவர்,
சுற்றி நின்று ரசிக்க அங்கு பல நேயர்,
தாயின் கை பற்றித் தத்திச் செல்லும் இங்கொருத்தி,
மாடியில் நின்று கொண்டு பட்டம் விடும் அங்கொருத்தி,
வாசிக்கும் பாவனையில்
கவனிக்கும் போது தோன்றியது
விடுமுறை நாளில் என் தெருவில்
வேறு யாருமே இல்லை சிறுமிகளன்றி.
கவிஞர் யாரேனும்
கடந்து சென்றால் என் தெருவைக்
கவிதையில் பதிவு செய்யக்கூடும்
சிறுமிகளால் நிறைந்திருக்கும் தெரு என்று.
எனது கவலை எல்லாம் ஒன்று தான்,
புத்தகம் வாசிக்கும் சிறுமியாக
பதிவு செய்யப்படலாம்
என் பெயரும் தவறாக என்று தான்.
ஒரு விடுமுறை நாளொன்றில் தான் கண்ட அனுபங்களை இயல்பாய் இருக்கும் வார்த்தைகளின் மூலம் கவிதையின் மொழியை சுலபமாக்குகிறார்.

ஈரம் உலராத கதைகள்
--------------------------------
ஒவ்வொரு முறையும்
உலராத ஈரத்துடன்
புதுப்புதுக் கதைகளைச்
சலிக்காமல் சொல்கிறது
சுவாரஸ்யமாகவும்- இந்த
வேலையற்ற மழை.

தூஉம்
--------------
இன்றும் நாம்
உணவாய் அருந்தினோம்
என்றோ பெய்த மழையைத்தான்.

தனது முதல் கவிதைத் தொகுப்பிலேயே இத்தனை பெரிய உயரத்தை எட்டி இருக்கும் கவிஞர் கார்த்திகாவை இந்த வலைப்பதிவின் மூலம் வாழ்த்துகிறேன்.

Thursday, February 17, 2011

சில கனவுகள்...

சமிபத்தில் இன்செப்ஷன் (INCEPTION) என்கிற பிரபலமான ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். ஒருவரின் உள்ளுணர்வுகள் மூலம் அவரின் கனவிற்குள் நுழைந்து நாம் செயல்படுத்த நினைக்கும் எண்ணங்களை அவரின் கனவாக விதைப்பது தான் படத்தின் மையக்கரு. இந்தப் படத்தின் பாதிப்பினால் நம் அரசியல் தலைவர்களின் கனவிற்குள் நுழைந்து நான் சில கனவுகளை விதைப்பது போல் கனவு கண்டேன்.

சோனியா காந்தியின் கனவில்:
மீனவர்கள் மீது அவருக்கு உள்ள வெறுப்பின் உள்ளுணர்வை கலைத்து விட்டு அவர்களும் நம்மைப் போல சுதந்திரமாக வாழ்வது போன்ற
கனவையும், 50-களின் தொடக்கத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமையும், பலமும் இப்போதுள்ள கட்சிக்கு இரட்டிப்பாக கிடைப்பது போன்ற கனவையும் விதைக்கிறேன்.
மன்மோகன் சிங்கின் கனவில்:
கட்சியில் உள்ள தலைவர்களுக்கு தலையாட்டும் பொம்மையாய் இருக்காமல் தனது சுய அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்தி புதிய
பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து, ஊழலை ஒழித்து இந்தியாவை மிகப் பெரிய வல்லரசு நாடாக ஆக்குவது போன்ற கனவை விதைக்கிறேன்.
அ.ராசாவின் கனவில்:
விடிந்தால் மரண தண்டனை என்கிற மரண பயத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடந்த ஊழல்களை உள்ளது உள்ளபடி ஒரு நீண்ட அறிக்கையை வெளியிடுவது போன்ற கனவை விதைக்கிறேன்.
கலைஞரின் கனவில்:
கழக உடன் பிறப்புகளே, தமிழக மக்களே, இது நாள் வரை என் வளர்ச்சிக்கும், என் குடும்ப வளர்ச்சிக்கும் மட்டுமே என் அதிகாரத்தையும், ஆற்றலையும் பயன்படுத்தி வந்ததையும், கழகத்தின் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் எனக்கு தகுந்தாற் போல் தளர்த்திக் கொண்டதையும் அனைவரும் அறிவீர் என்பதை நான் நன்கு அறிவேன். இருந்தும் இன்னமும் என்னை தி.மு.க எனும் பேரியக்கத்தின் தலைவராகவும், மாநில முதல்வராகவும் தொடர்ந்து என் குடும்பத்திற்கு மட்டுமே பணியாற்ற ஆதரவளித்து வரும் நல்உள்ளங்களை நினைத்து நெகிழ்வு கொள்கிறேன் என முரசொலியில் தலையங்கம் எழுதுவது போன்ற கனவை விதைக்கிறேன்.
ஜெயலலிதாவின் கனவில்:
ஆடம்பரம், ஆணவம், திமிர், சுயநலம், இன்னபிற தீங்கான உள்ளுணர்வுகளை அழித்து விட்டு கொடநாடு ஓய்வு ரகசியம், சசிகலாவோடு
பிரிக்க முடியாத நட்பின் ரகசியம், சட்டத்துக்கு புறம்பான சொத்துக்கள் விபரம், செய்த குற்றங்களின் விபரம் போன்ற ரகசியங்களை கனவின் மூலம் திருடிக் கொண்டாலே போதும். புதுக் கனவுகளை விதைக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த இன்செப்ஷன் ப்ராஜக்ட் வெற்றி பெற்றால் இந்தியா எப்படிப்பட்ட நாடாக இருக்கும் என்பதை அவரவர் சிந்தனைக்கேற்ப கற்பனை செய்து கொள்ளும்
சுதந்திரத்தை சுயமனதோடு அளிக்கிறேன்...

Monday, February 14, 2011

கை நிறைய காதல்...

காதல்... பூமிப் பந்தின் ஒவ்வொரு உயிருக்கும் அடிப்படையான அடையாளமே காதல் தான். வாழ்வின் சில போராட்டமான தருணங்களிலும், ஏமாற்றங்களிலும்,
வெறுப்புகளிலும் உயிர் உருகும் போது உண்மையான காதலாலும், அன்பினாலும் மட்டுமே நம்மை பலப்படுத்திக் கொள்ள முடிகிறது. சரிவை நோக்கி நம் பயணங்கள் இருக்கும் போதெல்லாம் கைகொடுத்து தூக்கி விடும் கரமாக காதல் இருக்கிறது. காதலைப் பெறாத, கடந்து செல்லாத உயிரிங்களே கிடையாது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு இதயங்களிலும் பெய்யெனப் பெய்யும் மழை தினம் தான் காதலர் தினம்.
அதிகாலை கண் விழித்தவுடனேயே, இன்று முழுதும் காதலைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். வேறு வேலையோ, ஏன் சாப்பிடக் கூட கூடாது என்கிற தீவிர முனைப்புடன் தியானத்தில் அமர்ந்தேன். என் அறையைச் சுற்றிலும் பெரும் சப்தம். அந்த நிமிடம் தான் எவ்வளவு சப்தங்களுக்கு நடுவில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே புரிந்தது. அந்தச் சப்தங்களையும் மீறி காதலின் பால் ஈர்ப்பு கொண்டு காதலையே ஜெபித்துக் கொண்டிருந்தேன். மணித்துளிகள் கரைந்து கொண்டிருந்த அந்த கணத்தில் என் அறையெங்கும் உன் வாசம். சிறுஒலியாய் எழுந்த உன் கொலுசொலி பெருஒலியாய் என் தியானத்தைக் கெடுத்தது. கண்களைத் திறந்தேன், "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" உன்னைப் பார்த்ததும் எனக்குள்ளும் பெய்ய ஆரம்பித்தது. "இன்னிக்கு முழுநாளும் நான் காதலைப் பற்றி மட்டும் தான் நினைக்கப் போகிறேன். அதனால என்ன தொந்தரவு பண்ணாத" என்றேன். சற்று மௌனமாக இருந்து விட்டு பிறகு, "சரி, நான் கிளம்பட்டா" என்றாய். நான் மூடிய கண்களோடு "ம்" என்றேன்.
அறையிலிருந்து நீ வெளியேறும் சப்தம் கேட்டது. சிறிது நேரத்திற்கு பின்பு மீண்டும் என் அறைக்குள் ஓடி வந்தாய் "இவ்வளவு நேரம் என்ன நெனச்சிக்கிட்டு, காதலை நினைக்கிறேன்னு நீ சும்மா சொல்ற" என்றாய். நான் கண்களைத் திறந்து ஆச்சரியத்துடன் "அதெப்படி கரெக்டா சொல்ற" என்றேன். "மறந்துட்டியா,
ஒரு நாள் நீ சொன்னையே உன்ன நான் நெனைக்கிறப்போ வானிலிருந்து ஒரு நட்சத்திரம் வண்ணத்துப் பூச்சியாக மாறி விடுவதாக. இதோ வண்ணத்துப் பூச்சி" என்று பறந்து சென்ற வண்ணத்துப் பூச்சியைக் காட்டி குதுகலித்தாய். "எப்போதும் உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் நிறைய விஷயங்களை மறந்து விடுகிறேன்" என்று நான் கூறியவுடன் வெட்கப்பட்டாய். பிறகு "வா, அப்பாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ளலாம்" என்றாய். நான் சற்று யோசித்து விட்டு "கடவுளைப் படைத்தவரை நான் என்னவென்று சொல்லி அழைப்பது" என்றேன். நீ சிணுங்கிக் கொண்டே என்னை அறையிலிருந்து இழுத்துச் சென்றாய். வரும் வழியில் "எத்தனையோ கோவில்கள் இருக்கும் போது காதலர்கள் வழிபட காதலுக்கு ஒரு கோவில் இல்லையே" என்று வருத்தப்பட்ட உன்னிடம் "அது சரி, காதலுக்கு என்று கோவில் கட்டி விட்டு அதில் உன்னைப் போன்ற காதலிகள் தெய்வங்களாக குடியேறி விட்டால் எங்கள் இதயங்கள் காலியாகி விடும். எங்களைப் போன்ற காதலர்களுக்கு காதலிகளின் வீடே கோவில்,
காதலியே தெய்வம்" என்று உன்னை சமாதானப் படுத்தினேன்.
வீட்டில் உன் அப்பாவும், அம்மாவும் வெளியே சென்றிருந்தார்கள். உன் தம்பி மட்டும் இருந்தான். "தீக்குள் விரலை விட்டால் உனை தீண்டும் இன்பம் தோன்றுதடி" பாரதியின் கவிதையை படித்துக் கொண்டிருந்தான். "என்னைப் போல உனக்கும் ஒரு காதலி கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று நான் கூறியதும் நீ என்னை சுட்டெரிப்பது போல் பார்த்தாய். "பார் பாரதியே பார், இப்படித்தான் காதலியின் பார்வையால் என் போன்ற காதலர்கள் இங்கு தினம் தினம்
தீக்குளித்துக் கொண்டிருக்கிறோம்" என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். "சரி என்ன சாப்பிடற" என்றாய். "உன் கையால் ஒரு டம்ளர் தண்ணிர் கொடு. அது தான் என் உயிர் தீர்த்தம்" என்றேன். "அப்பப்பா, வரவர உன் குசும்பு அதிகமாயிடுச்சி" என்றவாறே தண்ணிர் கொடுத்தாய். உன் இதயத்தை நீ கொடுத்த தண்ணிரால் நனைத்தேன். உன் அறைக்கு என்னை அழைத்துச் சென்றாய். உன் அறையில் நான் கால் வைத்த போது நிலவில் காலடி எடுத்து வைத்தது போல் இருந்தது. நான் உனக்கு எழுதிய காதல் கவிதைகளை எல்லாம் அங்கங்கு சுவரில் ஒட்டி வைத்திருந்தாய். சிறிய வெட்கத்தோடு என்னைப் பார்த்துக் கொண்டிருந்த உன்னிடம் "என்ன இது, நம்ம காதலை இப்படி விளம்பரப்படுத்தற" என்றேன். " என்ன, அப்படி சொல்லிட்ட இத படிக்கற எல்லோரும் என்ன நீ ஆசிர்வதிக்கப்பட்ட தேவதைனு சொல்றாங்க தெரியுமா" என உன் கண்கள் விரிய என்னிடம் உன் காதல் மொழி பேசினாய். பிறகு என் கைகளைப் பற்றிக் கொண்டே " இதெல்லாம் கல்யாணம் ஆகுற வரைக்கும் தான், அதுக்கப்புறம் நீ என் புருசனாகிட்டா இந்த மாதிரி கவிதையெல்லாம் எழுதவாப் போற" என்றாய். நான் சற்றும் யோசிக்காமல் "ஆமாம், முடியாது." என்றேன்.
நீ பெரும் அதிர்ச்சியுடனும், சற்று கண்கள் கலங்கியும் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தாய்.
உன் தோலில் என் கைகளை தாங்கிக் கொண்டே "ஆமாம் காதலியே, ஒரு பல்கழைக் கழகத்தில் நாம் சென்று பாடம் படிக்கலாம். ஆனால், பல்கழைக் கழகத்திற்கு நாம் பாடம் நடத்த முடியாது. என் பல்கழைக்கழகம் நீ" என்றேன். உன் கண்ணீர் துளி என் கைகளில் படர என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாய். அந்நேரம் என் இதயத்தில் "டொக் டொக்"கென்று சப்தம், கதவைத் திறந்தால் காதல். "நான் உள்ளே வரட்டுமா?" என்றது. நாமிருவரும் பலமாக சிரித்தோம். நம் இருவரையும் நம் காதல் தன் கைக்குட்டையில் ஒளித்து வைத்துக் கொண்டு காதல் உலகினுள் பயணம் செய்தது.

இன்று ரசித்த காதலர் தின குறுஞ்செய்தி :
காதல் என்பது என்ன???
காதல் என்பது, நடு இரவில் என் தாய் என் தோல் பற்றி கூறுகிறாள் : தூங்குடா, மீதிய காலைல எழுந்து படிச்சிக்கோ...
காதல் என்பது, சிறப்பு வகுப்பு முடிந்து தாமதமாக வரும் என்னிடம் என் தந்தை கூறுகிறார் : என்னப் பா, லேட் ஆகும்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா?
காதல் என்பது, என் அண்ணி கூறுகிறாள் : ஒயே...ஹீரோ.. ஃபிகர் ஏதாவது செட் பண்ணிட்டயா என்ன?
காதல் என்பது, என் தங்கை கூறுகிறாள் : கல்யாணத்துக்கு அப்புறம் யாருடா அண்ணா என் கூட சண்டை போடுவா?
காதல் என்பது, நான் ஏக்கமாக இருக்கும் போது என் அண்ணண் கூறுகிறார் : வாடா வெளிய போய் ஊர் சுத்திட்டு வருவோம்...
காதல் என்பது, என் பிரியமான நண்பன் அலைபேசியில் கூறுகிறான் : என்ன மச்சி உயிரோட தான் இருக்கியா???
ஆகவே ஒவ்வொரு நாளும் நமக்கு காதலர் தினம் தான். உங்கள் சிறகுகளை காதல் வானில் பறக்க விடுங்கள்...

Friday, February 11, 2011

தொடரும் அற்புதங்கள்...

நம் உயிரோடும், உணர்வோடும் உறவாடிக் கொண்டிருக்கும் செல்போனைப் பற்றிய சில தகவல்கள் :
புஷ் இமெயில், வீடியோ சாட், கான்ஃபரன்ஸ், ஃபைல் டிரான்ஷ்பர் என அனைத்து வசதிகளும் கையளவு உள்ள சாதனத்தில் கைகூடியது
மிகப் பெரிய அறிவியல் புரட்சி என்றே கூறலாம். ஒரு சராசரி குடும்பத்தில் குறைந்தது மூன்று செல்போன்களாவது இருப்பதே இந்த சாதனத்தின் மிகப் பெரிய வெற்றி.
இந்த ஆண்டு செல்போனை வைத்துக் கொண்டு இரண்டு பெரிய திட்டங்களை வழிவகுத்து அதில் முனைப்பாக ஈடுபட்டுள்ளனர். செல்போன்கள் இயங்க அடிப்படைக் காரணமே செல்போன் டவர்கள் தான். இதுநாள் வரை இந்த டவர்களின் மூலம் சிக்னல்களை பெற்று அதன் மூலமே செல்போன்கள் இயங்கி வருகின்றன. தற்போது பிளெண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேசகுழு ஒரு சாஃப்ட்வேரை உருவாக்கியுள்ளது. இந்த சாஃப்ட்வேர் சிக்னல்களை ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு லிங்க் செய்ய உதவுகிறது. இதனால் டவர்கள் இல்லாமலேயே செல்போன் இயங்கும். ஒரே ஒரு ஆப்பரேடிங் டவர்
மட்டுமே இருக்கும். அதோடு எல்லா செல்போன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் சிக்னல் பிரச்சனை தவிர்க்கப்படும்.
இரண்டாவது, விண்வெளி ஆராய்ச்சியில் செல்போனை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். அதிக வசதியுடைய "ஸ்மார்ட் போனை" விண்வெளிப் பாதையில் சுற்ற விட்டு, அதன் மூலம் செயற்கைக் கோள்களைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளனர். சுர்ரே செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவனத்தைச்(எஸ்.எஸ்.டி.எல்) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
குழு, சவால்கள் நிறைந்த விண்வெளிச் சூழலில் செல்போனை இயங்க வைக்கும் சிக்கலான வேலையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. எஸ்.எஸ்.டி.எல் நிறுவனத்தின் திட்ட மேலாளர் ஷாயுன் கெரி, "கூகுளின் ஆன்ராய்டு ஆபரேடிங் சிஸ்டம் மூலம் இயங்கும் செல்போன் சுமார் 30செ.மீ தொலைவில் உள்ள செயற்கைக் கோளைக் கட்டுப்படுத்தும். அத்துடன் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிக்கு ஏற்ப பூமியைப் படம் எடுக்கும். முதலில் விண்வெளியில் ஸ்மார்ட்போன் எப்படி இயங்குகிறது? என்று பார்ப்போம். பின்னர் அதை வைத்து செயற்கைக் கோளை கட்டுப்படுத்தலாம்" என்கிறார்.

செல்போன் பற்றிய இரண்டு கவிதைகள் :

'செல்'வாக்கு?
----------------------
இறுகக் கை
பற்றி அழவும்
அழுத்தி ஒரு
முத்தமிடவும்
டெலிபோனைப் போல
ஏற்றதல்ல
செல்போன்...
-க.சீ.சிவக்குமார்.
விகடன்-11.04.04.

எங்கும் ஒலிக்கிறது!
-----------------------------
உயிர் பிதுங்கும்
உச்ச வ்லியில்
அலறித் தவிக்கும்
தலைப் பிரசவக்காரியின்
கைப்பையினுள்

வழிபாட்டின் நடுவே
பிரார்த்தனைகளைக்
கிழித்தெறியும்
ஓசையென

பயணத்தின்
சக பயணிகளை
சஞ்சலமுறவைக்கும்
ரகசியங்களின்
பெட்டகமாக

அரவமற்ற
சாலையொன்றின்
விபத்தில்
இறந்துகிடப்பவனின் அருகில்

இப்படியாக
எங்கெங்கும்
ஒலித்த வண்ணமிருக்கின்றன
எடுக்கப்படாத
கைபேசிகள்

இன்னமும்...
இன்னமும்...

Tuesday, February 8, 2011

நினைவிலேயே நிற்கும் பிம்பம்...

சமிபத்தில் சாருவின் "தப்புத் தாளங்கள்" தொகுப்பில் ஹோஸே மரியா என்கிற எழுத்தாளரின் "pongoவின் கனவு" எனும் சிறுகதையை "அடிமையின் கனவு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். pongo என்றால் மனிதக் குரங்கு என்று பொருள். அந்த சிறுகதையை நான் மிகவும் ரசித்தேன். இனி அந்தக் கதை...

அடிமையின் கனவு
---------------------------------------
போங்கோ என்பது அவன் பெயர். நிஜப் பெயர் யாருக்கும் தெரியாது. குள்ளமாகவும், நோஞ்சானாகவும் இருந்த போங்கோ ஒரு அடிமை. அவனுடைய எஜமானருக்கு போங்கோவைப் பார்க்கும் போதெல்லாம் அவனை ஏதாவது சீண்ட வேண்டும் என்று தோன்றும். மற்ற அடிமைகளுக்கு எதிரில் அவர் அவனிடம் கேட்பார். 'டேய் போங்கோ நீ மனிதனா, குரங்கா?'
போங்கோ பதில் ஏதும் சொல்ல மாட்டான். தலையைக் குனிந்து கொள்வதோடு சரி. பயத்தில் அவன் உடம்பு நடுங்கும்.
யார் என்ன வேலை சொன்னாலும் அதைத் தட்டாமல் செய்வான் போங்கோ. ஆனால் அவன் முகத்தில் மட்டும் ஒரு மிரட்சி இருந்து கொண்டே இருக்கும். போங்கோ யாரிடமும் பேசுவதில்லை. 'yes, papacito, yes, mamacito' என்று பணிவுடன் கூறியபடி மற்றவர்கள் இடும் வேலைகளைச் செய்வதே அவன் வழக்கம்.
போங்கோவை தினமும் ஏதாவது சித்திரவதை செய்வார் எஜமானர். அடிமைகளெல்லாம் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு மாலை நேரத்தில் அன்னை மேரியைத் துதிக்க ஆயத்தமாகும் போது தான் எஜமானருக்கு அதிக உற்சாகம் பிறக்கும். வெட்டிய கறித்துண்டைத் தூக்கியெறிவதைப் போல் போங்கோவின் பிடரியைப் பிடித்துத் தள்ளிவிட்டு முழங்காலிட்டு உட்காரச் சொல்வார் எஜமானர். அவன் அப்படி அமர்ந்ததும் முகத்தில் ஒரு குத்து விட்டு 'நீ ஒரு நாய் என்று நினைக்கிறேன். எங்கே குலை பார்க்கலாம்' என்பார்.
போங்கோவுக்கு குலைக்க வராது.
'யானைக்கால் போடு!'
எஜமானரிடமிருந்து அடுத்த உத்தரவு பிறக்கும்.
போங்கோ யானைக்கால் போட்டுத் தவழ ஆரம்பிப்பான்.
'டேய், நாயைப் போல் நட.'
நாயைப் போல் நடப்பதற்குக் கற்றுக் கொண்டிருந்தான் போங்கோ. அந்தப் பெரிய ஹால் முழுதும் நான்கு கால்களால் நாயைப் போல வேகவேகமாய் நடந்து வருவான் போங்கோ.
அதைப் பார்த்து உடல் குலுங்கச் சிரிப்பார் எஜமானர்.
'சரி நாய் போதும். முயலைப் போல் காதுகளை விடைத்துக் கொண்டு உட்கார்.'
உள்ளங்கை இரண்டையும் தரையில் வைத்து முயலைப் போல் உட்காருவான் போங்கோ. குன்றுகளின் மீது ஏதோ பிரார்த்தனை செய்வது போல் எந்தச் சலனமும் இன்றி முயல்கள் உட்கார்ந்திருப்பதை அவன் பார்த்திருக்கிறான். ஆனாலும், தாயின் கர்ப்பத்திலிருக்கும் போதே இப்படி முயலைப் போல் அமரும் வித்தையைக் கற்றுக் கொண்டவனைப் போல் அமர்ந்திருப்பான் போங்கோ. ஆனால் ஒரே ஒரு விஷயம் தான் கைகூடாதிருந்தது. அது- முயலைப் போல் காதுகளை விடைப்பது. சில அடிமைகள் இந்தக் காட்சியைக் கண்டு சிரிப்பதுண்டு. அப்போது எஜமானர் பூட்ஸ் காலால் போங்கோவை எட்டி உதைப்பார். பிறகு "எங்கள் பிதாவே" என்று பிரார்த்தனையை ஆரம்பிப்பார்.
மெதுவாக எழுந்து நின்று கூட்டத்தில் தன் இடத்தை தேடுவான் போங்கோ. அந்த இடம் அப்போது அவனுக்குக் கிடைக்காது. அப்போது, "ஏய் கழிசடையே... என் முன்னே நிற்காதே. ஓடிப் போ" என்பார் எஜமானர்.
இப்படியே ஒவ்வோரு நாளும் எஜமானரின் விளையாட்டுக்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நாள் போங்கோ அழச் சொல்வார். மற்றொரு நாள் சிரிக்கச் சொல்வார். சமயங்களில் அவனை மற்ற அடிமைகளிடம் கொடுத்து விடுவார்.
நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்கும் போது ஒரு நாள் மதியம் பிரார்த்தனை நேரத்தில்- எல்லா அடிமைகளும் அங்கே கூடியிருந்தனர். போங்கோவை மிக வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் எஜமானர். அப்போது தெளிவான குரலில் பேச ஆரம்பித்தான் போங்கோ. அவன் முகத்தில் கலவரம் படிந்திருந்தது.
"எங்கள் தந்தையே... நான் பேசுவதற்கு சற்று அனுமதி தாருங்கள். நான் உங்கள் சமூகத்தில் பேச விரும்புகிறேன் தந்தையே!"
எஜமானருக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. "என்ன, இப்போது பேசியது நீயா, அல்லது வேறு யாருமா?"
"நான் உங்களிடம் பேச வேண்டும் தந்தையே... அதற்கு தங்களின் அனுமதி வேண்டும்!"
"சரி, உன்னால் பேச முடிந்தால் பேசு."
"எங்கள் தந்தையே, எங்கள் எஜமானரே, எங்கள் இதயமே! நாம் இரண்டு பேரும் ஒன்றாகச் செத்துப் போவதாக நேற்று இரவு ஒரு கனாக் கண்டேன் தந்தையே!"
"என்னது? நீ என்னுடன் செத்துப் போகிறாயா? ஏன் இந்திய அடிமையே? கனவை முழுதாகச் சொல்."
"நாம் செத்துப் போனவர்கள் என்பதால் நமது பிதாவுக்கு முன்னே நாம் இரண்டு பேரும் நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறோம். பிதா நம்மை எடை போடுவதைப் போல் அவரது ஊடுருவும் கண்களால் பார்க்கிறார். நாம் எப்படிப்பட்டவர்கள், எப்படி வாழ்ந்தோம், எப்படி வாழ்கிறோம் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் பார்வை அது.
நீங்கள் ஒரு பிரபுவைப் போல் வலிமை மிகுந்த அப்பார்வையை எதிர்கொள்கிறீர்கள் தந்தையே..."
"நீ?"
"நான் எப்படி எதிர்கொண்டேன் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை தந்தையே. எனக்கு என்னைப் பற்றி ஏதும் தெரியவில்லை."
"நல்லது. அப்புறம்?"
"பிறகு நம் பிதா கூறினார்: மிக அழகிய தேவதை ஒன்றை இங்கே வருமாறு ஆணையிடுகிறேன். அதைவிடக் குறைந்த அழகுள்ள மற்றோரு தேவதை ஒரு தங்கக் கோப்பையில் வெகு அற்புத சுவையுள்ள தேனை எடுத்து வரட்டும்."
"ம்... அப்புறம்?"
அடிமைகளும் வெகு ஆர்வமாக போங்கோவின் கனவைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு பயமாகவும் இருக்கிறது.
"சூரிய ஒளியைப் போல் ஜொலித்தபடி ஒரு தேவதை வந்தது. அதன் பின்னே கையில் தங்கக் கோப்பையுடன் மற்றொரு தேவதை."
"பிறகு?"
"பிதா கூறினார்: தேவதையே... இந்த மானுடனின் (உங்களைக் காட்டி) தேகத்தில் உன் தங்கக் கோப்பையிலுள்ள தேனைத் தடவு, தடவும் போது உன் விரல்கள் இறகுகளைப் போல் மிருதுவாக இருக்க வேண்டும்."
"மிகவும் சரி. அப்படித்தான் நடக்க வேண்டும். உன் விஷயம் என்னவாயிற்று?"
"உங்கள் தேகம் சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்த போது, 'நம் சொர்க்கத்தில் இருப்பதிலேயே ஆக மட்டமான ஒரு தேவதையை அனுப்பி வையுங்கள். அது ஒரு தகர டப்பாவில் மனித மலத்தை எடுத்து வரட்டும் என்றார் பிதா."
"பிறகு?"
"ஒரு கிழட்டு தேவதை வந்தது. அதன் றெக்கைகளைக் கூட அதனால் தூக்க முடியவில்லை. அதன் கையில் ஒரு பெரிய தகர டப்பா இருந்தது. அப்போது நம் பிதா கூறினார்: 'இந்த நோஞ்சான் மனிதனின் உடம்பில் ஒரு இடம் கூட விடாமல் இந்த மனித மலத்தை அப்பி விடும்... சீக்கிரம் ஆகட்டும்.' உடனே அந்தக் கிழட்டு தேவதை தன் டப்பாவிலிருந்த அத்தனை மலத்தையும் குடிசைச் சுவரின் மீது சேற்றை அப்புவது போல் என் உடம்பின் மீது அப்பி விட்டது."
"மிகவும் சரி. அப்படித்தான் நடக்க வேண்டும். ம்... மீதியையும் சொல். அல்லது கதை முடிந்து விட்டதா?"
"இல்லை தந்தையே... இன்னும் முடியவில்லை. இப்போது நாம் இருவரும் நம் பிதாவின் முன்னே நிற்கிறோம். பிதா நம்மைப் பார்க்கிறார். ஏழேழு உலகங்களையும் ஊடுருவக்கூடிய அந்தப் பார்வையால் உங்களையும், என்னையும் நீண்ட நேரம் பார்க்கிறார் பிறகு அவர் கூறினார்: தேவதைகளின் வேலை முடிந்து விட்டது.
இனி உங்களுடைய வேலை ஆரம்பமாகட்டும். நீங்கள் இருவரும் ஒருவர் தேகத்தை ஒருவர் நக்குங்கள். முடிவேயில்லாமல் மிக மெதுவாக நக்கிக் கொண்
டேயிருக்க வேண்டும்."
அந்த நேரத்தில் அந்தக் கிழட்டு தேவதை இளம் தேவதையாக மாறியது...
-----------------------------------------------------------------
இந்தக் கதையை மேலோட்டமாக படிக்கும் போது சராசரி வாசகனுக்கு அறுவறுப்பாகவும், குரூரமாகவும் தோன்றுவது இயல்பு. எனக்கு கதையை படித்து முடித்த பின்பு "போங்கோ" என்கிற அந்த மனிதக் குரங்கு அடிமைப் பாத்திர பிம்பம் இன்னும் என் நினைவிலிருந்து அகல மறுக்கிறது. காரணம், நாமும் ஏதோவொரு விதத்தில் அந்த போங்கோவைப் போல் இந்தச் சமுதாயத்தில் மறைமுக அடிமைகளாகத் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற உண்மை சுடுகிறது. இதில் எந்தக் கதாப்பாத்திரத்திலும்
நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பொருத்திக் கொள்ளக் கூடிய சுதந்திரத்தை அளிப்பதே இந்தக் கதைக்கான வெற்றியாகக் கருதுகிறேன்.

Sunday, February 6, 2011

யுத்தம் செய் - நூற்றாண்டின் முதல் மழை


பொதுவாக சினிமா என்பது காட்சிகளால் நிரப்பப்படுவது. பார்வையாளளின் மனதில் தேங்கும் உள்ளுணர்வுகளை ஒரு படைப்பாளி தன் படைப்பின் மூலம்
வெளிப்படுத்தி விட்டால் அது சிறந்த சினிமாவாக அங்கிகரிக்கப்படுகிறது. தற்போது நிலவி வரும் தமிழ் சினிமா படைப்புகள் அத்தகைய மரபில் கவனம் கொள்ளாமல் நாயகனுக்கு கதை, குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள் என மீண்டு எழ முடியாத சூழலில் சிக்கிக் கொண்டுள்ளன. வருடத்தில் ஒன்றிரண்டு படங்கள் இந்த நியதியில் இருந்து விடுபட்டு படைப்பாளியின் தீவிரமான அணுகுமுறையால் இந்திய அளவில் கவனத்தை பெறுகின்றன. அந்த வரிசையில் சமிபத்தில் வெளியான "யுத்தம் செய்" படத்தை குறிப்பிடலாம். பழிக்குப் பழி அரதப் பழசான கதைக் கரு தான் இந்த படத்தின் கருவும். ஆனால் இயல்பான கதை மாந்தர்கள், நிஜத்திற்கு பொருத்தமான நடிப்பு, கதையோடு பேசும் வசனங்கள், நிதானமான தெள்ளிய திரைக்கதையின் மூலம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை லாவகமாக மிகவும் சாமர்த்தியமாக கையாண்டு தன் இயக்கத்தின் இருப்பை ஆரவாரமில்லாமல் நிருபித்துள்ளார் மிஷ்கின்.
சென்னையின் அந்த குறிப்பிட்ட சரகத்தில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் தொடர்ந்து வெட்டப்பட்ட மனிதக் கைகள் அட்டைப் பெட்டியில் போடப்பட்டிருக்க,
கை சுத்தம் (லஞ்சம் வாங்காத) காரணமாக காவல் துறையிலிருந்து புலனாய்வுத் துறைக்கு விருப்ப பணி மாற்றலாகி வரும் ஜே.கே. எனும் சிபிசிஐடி ஆபிசர் சேரனிடம் இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது. வெட்டப்பட்ட கைகளை வைத்துக் கொண்டு விசாரணையை ஆரம்பிக்க, ஏற்கனவே காணாமல் போன தன் தங்கையின் கேஸை மீண்டும் ஓப்பன் செய்து விசாரிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இறுதியில் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள்? கொலை செய்யப்படும் ஆட்களின்
பிண்ணனி என மிக விவரமாக, குழப்பமில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தங்கை தொலைந்த சோகமும், விசாரணை நேரங்களில் வெளிப்படும் இறுக்க முகமும் என சேரனின் திறமைக்கு இத்திரைப்படம் ஒரு மைல்கல். பிணவறையில் முகத்தை கோட் போட்டு மூடிக் கொண்டு படுத்திருக்கும் டாக்டர் ஜூடாஸின் அறிமுகக் காட்சிகள் தமிழ் சினிமா உலகிற்கு புதிது. சேரனின் உதவியாளராய் வரும் தீப்திஷா, டி.எஸ்.பி. நரேன், அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் திரிசங்கு, ஒய்.ஜி.மகேந்திரன், அவர் மனைவி லஷ்மி, அவர்கள் பையன் என ஒவ்வொரு கதாப்பாத்திரமும் செதுக்கிய சிற்பங்களாக திரையில் வெளிப்படுகின்றன. சவக்கிடங்கு காட்சிகளும், உறைந்த நிர்வாண
பிணங்களும் இவ்வளவு நுணுக்கமாக எந்தத் திரைப்படங்களிலும் பதிவு செய்யப் படவில்லை. படத்தின் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு காட்சியும் மிகத் தீவிரமான பரிசீலனைக்கும், திட்டமிடலுக்கும் பிறகே படமாக்கப்பட்டிருப்பதை படம் பார்க்கும் போது உணர முடிகிறது. வழக்கமான திரில்லர் படங்களில் படபடவென ஓடும் திரைக்கதையும், பார்வையாளனின் இமைகள் வலிக்க அலைபாயும் காமிரா கோணங்களும், குலைநடுங்க அதிர வைக்கும் இசையும், அலறல் ஒலிகளும் தான் பிரதானமாக இருக்கும். மாறாக இந்தப் படத்தில் காமிரா மெல்ல, நிதானித்து நம் ஆர்வத்தை அதிகமாக்கி கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. பலமான திரைக்கதைக்கு பக்கபலமாய் இருப்பது எடிட்டர் கெகின். பல இடங்களில் அந்த சூழ்நிலையின் சப்தங்களையே பின்னணி இசையாய் ஒலிக்க விட்டிருப்பதும், மௌனமாக நகரும் உன்னத காட்சிகளின் மூலமும் தனது தனித்தன்மையை இசையமைப்பாளர் கே சப்தம் போட்டு உணர்த்துகிறார். "கன்னித்தீவு பெண்ணா" பாடல் நதியில் துள்ளி விளையாடும் மீனைப் போல்
அமைதியான கதைக்கு ஆர்பாட்டமான பொழுதுபோக்கான நிமிடங்களாக அமைகிறது. புலனாய்வு இலாக்காவின் நிஜ விசாரனை எப்படி இருக்குமோ அப்படியே துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதது அதன் மையக்கரு தான். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை படமாக்கப்பட்ட காட்சி அமைப்புகள் வன்முறையை பிரதானப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒய்.ஜி.மகேந்திரன், மனைவி லஷ்மி, அவர்கள் பையன் என எல்லோரும் மொட்டை போட்டுக் கொண்டு பௌத்த துறவிகளை போல் எல்லாவற்றையும் துறந்து விட்டு கொலை வெறியோடு புறப்படுவது அதிகபட்ச வன்முறையை தூண்டுவதாகப் படுகிறது. டாக்டர் ஜூடாஸின் மரண வாக்குமூலமாக அமையும் அவரின் இறுதி வசனங்கள் வெளிப்படையான வன்முறைக்கு ஒரு வேண்டுகோளாக படமாக்கப்பட்டிருக்கிறது. இறுதிக் காட்சிகளில் சேரன் மௌனம் காப்பதும் அதீத வன்முறையின் குறியீடாகவே படுகிறது.
"யுத்தம் செய்" மிகப் பெரிய வெற்றிப் படமாக இடம் பிடிக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் வளரும் கலைஞர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம் என்பதில் சந்தேகமில்லை. அசலான நாம் ஒதுக்கி முடியாத மிகச் சிறந்த திரைப்படமாக இதனை என் வலைப்பதிவின் மூலம் உறுதி செய்கிறேன்....

Thursday, February 3, 2011

"ஆட்டிசம்" என்றொரு ஆபத்து...


தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் பழகும் திறன் குறைவாக இருப்பதும், அதிகமான கவனக் குறைவு போன்ற குறைபாடுகளை "ஆட்டிசம்" (AUTISM)என்கின்றனர்.
பெரும்பாலும் இந்த நோய் நான்கு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. பிறந்ததிலிருந்து பள்ளி செல்லும் வரை அம்மாவின் பராமரிப்பிலேயே வளரும் குழந்தைகளுக்கு நவின உலகின் மனிதர்களும், அவர்களைச் சார்ந்த பேரியக்கங்களும் சற்று அதிர்ச்சியைத் தரும். அவர்களுக்கு இந்த அவசரகதி உலகம் புரிபடாமல் அம்மாவின் உலகிலேயே சார்ந்து வாழும் எண்ணம் வலுக்கிறது. அதில் சில குழந்தைகள் தடுமாறி ஆட்டிசத்திற்கு ஆளாகின்றன. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் உடல் மெலிந்து , மனம் சிதறுண்டு உயிருக்கே ஆபத்தான நிலைக்கு சென்று விடும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டிசத்திற்கு ஒரு "ஸ்டெல்த் வைரஸ்" இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் இதயத்திலிருந்து வயிற்றுக்கு வந்து மூளையை பாதிக்கிறதாம்.
சமிபத்தில் கலிபோர்னியாவில் சுமார் 5லட்சம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு "ஆட்டிசம்" பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முதல் குழந்தை பிறந்து, குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிச பாதிப்பு அதிகம் இருப்பதாக நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர் பீட்டர் பியர்மான் கூறுகிறார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வகை குழந்தைகளுக்காக "தோஸ்த்" என்ற காப்பகம் சென்னை கெல்லிஸில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் காப்பகம் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறதா??? தெரியவில்லை.

--------------------------------------------------------------------------------------------


சமீபத்தில் நான் ரசித்த குறுஞ்செய்தி :
கருணாநிதி அந்தப் பள்ளிக்கு பார்வையிடுவதற்காக செல்கிறார்.
முதல்வர் :
மாணவர்களே, என்னிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்.
லிட்டில் கபீர்:
ஐயா, எனக்கு உங்களிடம் கேட்க இரண்டு கேள்விகள் இருக்கிறது.
1) ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களுக்கான பங்கு எவ்வளவு?
2) அந்தப் பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது?
முதல்வர் :
புத்திசாலி மாணவன். (சற்று யோசித்து விட்டு)
நாம் சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்போம்.
இடைவேளைக்குப் பின்பு...
முதல்வர் : சரி மாணவர்களே, நாம் எந்த இடத்தில் நிறுத்தினோம்?
ஆங்... மாணவர்களே என்னிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்.
லிட்டில் ஜானி:
ஐயா, எனக்கு உங்களிடம் கேட்க மூன்று கேள்விகள் இருக்கிறது.
1) ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களுக்கான பங்கு எவ்வளவு?
2) அந்தப் பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது?
3) எங்கே என் நண்பன் கபீர்?

Tuesday, February 1, 2011

மனுஷ்யபுத்திரன் கவிதை...

நாம் அதிகம் கவனித்திராத வாழ்வின் மென்சோகங்களையும், பகிர்ந்திட முடியாத கணங்களையும் கவிதைகளாக பதிவு செய்யும் அசாத்திய திறமை தமிழில் ஒரு சிலருக்கே வாய்க்கிறது. அதில் முதன்மையானவராக கவிஞர் மனுஷ்யபுத்திரனைக் குறிப்பிடலாம். கவிதையின் ஒவ்வொரு படிமங்களிலும் வாசிப்பவனின் இதயத்தில்
உணர்வடுக்குகளை அடுக்கிக் கொண்டே சென்று, கவிதையின் இறுதி வரிகளில் அதனை முற்றிலும் கலைத்து விட்டு வாசிப்பின் அனுபவத்தை நம் மனதில் நிரப்பி விடுகிறார். உங்களின் மனதையும் சலனப்படுத்துகிறதா ??? படித்துப் பாருங்கள்...

நல்வாழ்த்துக்கள்
------------------------------------

நல்வாழ்த்துக்கள்
கடற்கரையில்
யாரோ கைவிட்ட நாயை
வீட்டுக்கு அழைத்து வரும்
யாரோ ஒருவனுக்கு

அழகு சாதன விற்பனை நிலையத்தில்
ஒரு ஒப்பனைப் பொருளை
ஒரு இளம்பெண்ணிடம்
'இது உங்களுக்கு தேவையில்லை' என
புன்னகையுடன் மறுக்கும் கடைப்பெண்ணுக்கு

பராமரிக்க முடியாத அன்னையை
மனநோய் விடுதியில் விட்டுவிட்டு
அந்தக் கட்டிடத்தை ஒரு கணம்
திரும்பிப் பார்க்கும் மகனுக்கு

இறுதிச் சடங்கில்
இறந்தவர்களின் காலைத்
தொட்டு வணங்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
நிராதரவான சாலையில்
யாரோ ஒருவரின் கையசைப்பிற்கு
வாகனத்தை நிறுத்தும்
யாரோ ஒருவனுக்கு

ஒரு உடைந்த பொம்மைக் காரின்
சக்கரத்தைப் பொருத்த
நீண்ட நேரமாகப் போராடும்
சின்னஞ்சிறு குழந்தைக்கு

ஏதேனும் ஒரு வரிசையில்
எப்போதும்
நின்று கொண்டிருக்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாருமற்ற வீட்டிற்குத்
தனியே திரும்பி வரும்
யாரோ ஒருவருக்கு

உத்தரத்தில் மாட்டிய புடவையை
நன்றாக இழுத்துப் பார்த்துவிட்டு
ஒரு கணம் தயங்கி யோசிப்பவருக்கு

வீடு திரும்பும் வழியை மறந்துவிட்ட
குடிகாரர்கள் ஒவ்வொருவருக்கும்

பழைய காதலரைத் தேடிச் செல்லும்
பழைய காதலர்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவரிடம்
தன்னை நிரபராதி என நிரூபிக்க முற்படும்
யாரோ ஒருவருக்கு

எதற்காவது பயன்படும் என்று
எதற்கும் பயன்படாதவற்றையும்
பாதுகாத்து வைப்பவருக்கு

ஒழுங்குபடுத்தவே முடியாத ஒன்றை
எப்படியும் ஒழுங்குபடுத்தி விடலாம்
என்று நம்பும் ஒவ்வொருவருக்கும்

கைமறந்து வைத்த பொருளைத்
தேடிக்கொண்டிருக்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவனின் ஆடையை
வேறு வழியில்லாமல்
அணியவேண்டியிருக்கும்
யாரோ ஒருவருக்கு

எப்படியும் இந்த நாள்
முடிந்துவிடும் என்று
வெறுமனே காத்திருக்கும் ஒருவருக்கு

ஏதோ ஒரு அவமானத்திற்காக
எப்போதும் ஆயத்தமாக இருக்கும்
ஒவ்வொருவருக்கும்

மருத்துவமனையில்
பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவர் அளிக்கும் விருந்தில்
சம்பந்தமில்லாமல் அமர்ந்திருக்கும்
யாரோ ஒருவருக்கு

எதிர்பாராத சந்தர்ப்பத்தில்
தன்னை இழக்க நேரும் ஒருவருக்கு

மகளின் அந்தரங்கக் கடிதங்களைப்
பிரித்துப் படிக்காத தந்தையர்
ஒவ்வொருவருக்கும்

எதற்கும் சரியாகக்
கணக்கு வைத்துக்கொள்ளத் தெரியாத
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவரின் வரிகளைக்
கண்ணீர் மல்க வாசிக்கும்
யாரோ ஒருவருக்கு

வேசியை முத்தமிடும்போது
அவளது பெயரைக் கேட்காத ஒருவருக்கு

முதன் முதலாக
இன்னொரு உடலைத் துய்க்கும்
ஒவ்வொருவருக்கும்

விசாரணைக்காக
அழைத்துச் செல்லப்படும் எவருக்கும்

நல்வாத்துக்கள்
சவக்கிடங்கினில்
யாரோ ஒருவரைத் தேடும்
யாரோ ஒருவருக்கு

தன்னுடைய ஒன்றை
தன்னுடையதல்ல என்று
மறுத்துவிடும் ஒருவருக்கு

விடுமுறை நாட்களுக்காகக்
காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும்

அப்போதுதான் பிறந்து
கண் விழிக்கும் சிசுக்கள்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவரிடம்
நான் அழகாக இருக்கிறேனா என்று கேட்கும்
யாரோ ஒருவருக்கு

பாதி வழியில்
முடிவை மாற்றிக்கொண்டு
வீடு திரும்பிவிடும் ஒருவருக்கு

நாற்பது வயதுக்கு மேல்
ஒவ்வொரு பிறந்த நாளையும்
கண்டு அஞ்சும்
ஒவ்வொருவருக்கும்

எல்லாவற்றையும்
இன்னொரு முறை புதிதாகத் தொடங்கலாம்
என நம்பும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவரை
மன்னிக்கும் வாய்ப்புக் கிடைத்த
யாரோ ஒருவருக்கு

வாதையைத் தாங்கிக்கொள்ள
புதுப் புது வழிகள் கண்டுபிடிக்கும் ஒருவருக்கு

பசியைப் பொறுக்க முடியாது
என கூச்சலிடும்
ஒவ்வொருவருக்கும்


இந்தக் கவிதைக்கு
வெளியே இருக்கும்
எவருக்கும்.