Tuesday, February 8, 2011

நினைவிலேயே நிற்கும் பிம்பம்...

சமிபத்தில் சாருவின் "தப்புத் தாளங்கள்" தொகுப்பில் ஹோஸே மரியா என்கிற எழுத்தாளரின் "pongoவின் கனவு" எனும் சிறுகதையை "அடிமையின் கனவு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். pongo என்றால் மனிதக் குரங்கு என்று பொருள். அந்த சிறுகதையை நான் மிகவும் ரசித்தேன். இனி அந்தக் கதை...

அடிமையின் கனவு
---------------------------------------
போங்கோ என்பது அவன் பெயர். நிஜப் பெயர் யாருக்கும் தெரியாது. குள்ளமாகவும், நோஞ்சானாகவும் இருந்த போங்கோ ஒரு அடிமை. அவனுடைய எஜமானருக்கு போங்கோவைப் பார்க்கும் போதெல்லாம் அவனை ஏதாவது சீண்ட வேண்டும் என்று தோன்றும். மற்ற அடிமைகளுக்கு எதிரில் அவர் அவனிடம் கேட்பார். 'டேய் போங்கோ நீ மனிதனா, குரங்கா?'
போங்கோ பதில் ஏதும் சொல்ல மாட்டான். தலையைக் குனிந்து கொள்வதோடு சரி. பயத்தில் அவன் உடம்பு நடுங்கும்.
யார் என்ன வேலை சொன்னாலும் அதைத் தட்டாமல் செய்வான் போங்கோ. ஆனால் அவன் முகத்தில் மட்டும் ஒரு மிரட்சி இருந்து கொண்டே இருக்கும். போங்கோ யாரிடமும் பேசுவதில்லை. 'yes, papacito, yes, mamacito' என்று பணிவுடன் கூறியபடி மற்றவர்கள் இடும் வேலைகளைச் செய்வதே அவன் வழக்கம்.
போங்கோவை தினமும் ஏதாவது சித்திரவதை செய்வார் எஜமானர். அடிமைகளெல்லாம் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு மாலை நேரத்தில் அன்னை மேரியைத் துதிக்க ஆயத்தமாகும் போது தான் எஜமானருக்கு அதிக உற்சாகம் பிறக்கும். வெட்டிய கறித்துண்டைத் தூக்கியெறிவதைப் போல் போங்கோவின் பிடரியைப் பிடித்துத் தள்ளிவிட்டு முழங்காலிட்டு உட்காரச் சொல்வார் எஜமானர். அவன் அப்படி அமர்ந்ததும் முகத்தில் ஒரு குத்து விட்டு 'நீ ஒரு நாய் என்று நினைக்கிறேன். எங்கே குலை பார்க்கலாம்' என்பார்.
போங்கோவுக்கு குலைக்க வராது.
'யானைக்கால் போடு!'
எஜமானரிடமிருந்து அடுத்த உத்தரவு பிறக்கும்.
போங்கோ யானைக்கால் போட்டுத் தவழ ஆரம்பிப்பான்.
'டேய், நாயைப் போல் நட.'
நாயைப் போல் நடப்பதற்குக் கற்றுக் கொண்டிருந்தான் போங்கோ. அந்தப் பெரிய ஹால் முழுதும் நான்கு கால்களால் நாயைப் போல வேகவேகமாய் நடந்து வருவான் போங்கோ.
அதைப் பார்த்து உடல் குலுங்கச் சிரிப்பார் எஜமானர்.
'சரி நாய் போதும். முயலைப் போல் காதுகளை விடைத்துக் கொண்டு உட்கார்.'
உள்ளங்கை இரண்டையும் தரையில் வைத்து முயலைப் போல் உட்காருவான் போங்கோ. குன்றுகளின் மீது ஏதோ பிரார்த்தனை செய்வது போல் எந்தச் சலனமும் இன்றி முயல்கள் உட்கார்ந்திருப்பதை அவன் பார்த்திருக்கிறான். ஆனாலும், தாயின் கர்ப்பத்திலிருக்கும் போதே இப்படி முயலைப் போல் அமரும் வித்தையைக் கற்றுக் கொண்டவனைப் போல் அமர்ந்திருப்பான் போங்கோ. ஆனால் ஒரே ஒரு விஷயம் தான் கைகூடாதிருந்தது. அது- முயலைப் போல் காதுகளை விடைப்பது. சில அடிமைகள் இந்தக் காட்சியைக் கண்டு சிரிப்பதுண்டு. அப்போது எஜமானர் பூட்ஸ் காலால் போங்கோவை எட்டி உதைப்பார். பிறகு "எங்கள் பிதாவே" என்று பிரார்த்தனையை ஆரம்பிப்பார்.
மெதுவாக எழுந்து நின்று கூட்டத்தில் தன் இடத்தை தேடுவான் போங்கோ. அந்த இடம் அப்போது அவனுக்குக் கிடைக்காது. அப்போது, "ஏய் கழிசடையே... என் முன்னே நிற்காதே. ஓடிப் போ" என்பார் எஜமானர்.
இப்படியே ஒவ்வோரு நாளும் எஜமானரின் விளையாட்டுக்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நாள் போங்கோ அழச் சொல்வார். மற்றொரு நாள் சிரிக்கச் சொல்வார். சமயங்களில் அவனை மற்ற அடிமைகளிடம் கொடுத்து விடுவார்.
நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்கும் போது ஒரு நாள் மதியம் பிரார்த்தனை நேரத்தில்- எல்லா அடிமைகளும் அங்கே கூடியிருந்தனர். போங்கோவை மிக வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் எஜமானர். அப்போது தெளிவான குரலில் பேச ஆரம்பித்தான் போங்கோ. அவன் முகத்தில் கலவரம் படிந்திருந்தது.
"எங்கள் தந்தையே... நான் பேசுவதற்கு சற்று அனுமதி தாருங்கள். நான் உங்கள் சமூகத்தில் பேச விரும்புகிறேன் தந்தையே!"
எஜமானருக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. "என்ன, இப்போது பேசியது நீயா, அல்லது வேறு யாருமா?"
"நான் உங்களிடம் பேச வேண்டும் தந்தையே... அதற்கு தங்களின் அனுமதி வேண்டும்!"
"சரி, உன்னால் பேச முடிந்தால் பேசு."
"எங்கள் தந்தையே, எங்கள் எஜமானரே, எங்கள் இதயமே! நாம் இரண்டு பேரும் ஒன்றாகச் செத்துப் போவதாக நேற்று இரவு ஒரு கனாக் கண்டேன் தந்தையே!"
"என்னது? நீ என்னுடன் செத்துப் போகிறாயா? ஏன் இந்திய அடிமையே? கனவை முழுதாகச் சொல்."
"நாம் செத்துப் போனவர்கள் என்பதால் நமது பிதாவுக்கு முன்னே நாம் இரண்டு பேரும் நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறோம். பிதா நம்மை எடை போடுவதைப் போல் அவரது ஊடுருவும் கண்களால் பார்க்கிறார். நாம் எப்படிப்பட்டவர்கள், எப்படி வாழ்ந்தோம், எப்படி வாழ்கிறோம் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் பார்வை அது.
நீங்கள் ஒரு பிரபுவைப் போல் வலிமை மிகுந்த அப்பார்வையை எதிர்கொள்கிறீர்கள் தந்தையே..."
"நீ?"
"நான் எப்படி எதிர்கொண்டேன் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை தந்தையே. எனக்கு என்னைப் பற்றி ஏதும் தெரியவில்லை."
"நல்லது. அப்புறம்?"
"பிறகு நம் பிதா கூறினார்: மிக அழகிய தேவதை ஒன்றை இங்கே வருமாறு ஆணையிடுகிறேன். அதைவிடக் குறைந்த அழகுள்ள மற்றோரு தேவதை ஒரு தங்கக் கோப்பையில் வெகு அற்புத சுவையுள்ள தேனை எடுத்து வரட்டும்."
"ம்... அப்புறம்?"
அடிமைகளும் வெகு ஆர்வமாக போங்கோவின் கனவைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு பயமாகவும் இருக்கிறது.
"சூரிய ஒளியைப் போல் ஜொலித்தபடி ஒரு தேவதை வந்தது. அதன் பின்னே கையில் தங்கக் கோப்பையுடன் மற்றொரு தேவதை."
"பிறகு?"
"பிதா கூறினார்: தேவதையே... இந்த மானுடனின் (உங்களைக் காட்டி) தேகத்தில் உன் தங்கக் கோப்பையிலுள்ள தேனைத் தடவு, தடவும் போது உன் விரல்கள் இறகுகளைப் போல் மிருதுவாக இருக்க வேண்டும்."
"மிகவும் சரி. அப்படித்தான் நடக்க வேண்டும். உன் விஷயம் என்னவாயிற்று?"
"உங்கள் தேகம் சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்த போது, 'நம் சொர்க்கத்தில் இருப்பதிலேயே ஆக மட்டமான ஒரு தேவதையை அனுப்பி வையுங்கள். அது ஒரு தகர டப்பாவில் மனித மலத்தை எடுத்து வரட்டும் என்றார் பிதா."
"பிறகு?"
"ஒரு கிழட்டு தேவதை வந்தது. அதன் றெக்கைகளைக் கூட அதனால் தூக்க முடியவில்லை. அதன் கையில் ஒரு பெரிய தகர டப்பா இருந்தது. அப்போது நம் பிதா கூறினார்: 'இந்த நோஞ்சான் மனிதனின் உடம்பில் ஒரு இடம் கூட விடாமல் இந்த மனித மலத்தை அப்பி விடும்... சீக்கிரம் ஆகட்டும்.' உடனே அந்தக் கிழட்டு தேவதை தன் டப்பாவிலிருந்த அத்தனை மலத்தையும் குடிசைச் சுவரின் மீது சேற்றை அப்புவது போல் என் உடம்பின் மீது அப்பி விட்டது."
"மிகவும் சரி. அப்படித்தான் நடக்க வேண்டும். ம்... மீதியையும் சொல். அல்லது கதை முடிந்து விட்டதா?"
"இல்லை தந்தையே... இன்னும் முடியவில்லை. இப்போது நாம் இருவரும் நம் பிதாவின் முன்னே நிற்கிறோம். பிதா நம்மைப் பார்க்கிறார். ஏழேழு உலகங்களையும் ஊடுருவக்கூடிய அந்தப் பார்வையால் உங்களையும், என்னையும் நீண்ட நேரம் பார்க்கிறார் பிறகு அவர் கூறினார்: தேவதைகளின் வேலை முடிந்து விட்டது.
இனி உங்களுடைய வேலை ஆரம்பமாகட்டும். நீங்கள் இருவரும் ஒருவர் தேகத்தை ஒருவர் நக்குங்கள். முடிவேயில்லாமல் மிக மெதுவாக நக்கிக் கொண்
டேயிருக்க வேண்டும்."
அந்த நேரத்தில் அந்தக் கிழட்டு தேவதை இளம் தேவதையாக மாறியது...
-----------------------------------------------------------------
இந்தக் கதையை மேலோட்டமாக படிக்கும் போது சராசரி வாசகனுக்கு அறுவறுப்பாகவும், குரூரமாகவும் தோன்றுவது இயல்பு. எனக்கு கதையை படித்து முடித்த பின்பு "போங்கோ" என்கிற அந்த மனிதக் குரங்கு அடிமைப் பாத்திர பிம்பம் இன்னும் என் நினைவிலிருந்து அகல மறுக்கிறது. காரணம், நாமும் ஏதோவொரு விதத்தில் அந்த போங்கோவைப் போல் இந்தச் சமுதாயத்தில் மறைமுக அடிமைகளாகத் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற உண்மை சுடுகிறது. இதில் எந்தக் கதாப்பாத்திரத்திலும்
நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பொருத்திக் கொள்ளக் கூடிய சுதந்திரத்தை அளிப்பதே இந்தக் கதைக்கான வெற்றியாகக் கருதுகிறேன்.

No comments: