Sunday, March 27, 2011

நரகமாகி விட்ட நகரம்...

நகரம் என்றாவது உறங்கி நாம் பார்த்திருக்கிறோமா? அது விதை தேடி அலையும் பறவையைப் போல பரந்த வானில் தன் சிறகுகளை விரித்துப் பறந்தபடியே
இருக்கிறது. வரைபடத்தின் கோடுகளால் வடிவம் கொடுக்க முடியுமே தவிர நகரத்திற்கென்று உருவம் என்பது அதனை சுற்றியுள்ள மனிதர்களின் அந்தரங்கங்கள் சார்ந்தே கட்டமைக்கப்படுகின்றன. உழைப்பவனுக்கான அட்சயப் பாத்திரமாக இருக்க நகரம் என்றும் தயங்கியதே இல்லை. நம் எல்லையற்ற கற்பனைகளையும், கனவுகளையும் பயிரிட ஏற்ற விளைநிலம் தான் நகரம். ஒரு தேர்ந்த ஆசானைப் போல் நமக்கு தினம் தினம் புதுப்புது அனுபவங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு தெளிந்த குளமாய் இருந்த நகரை நாம் நமது பொருளாதார வசதிக்காக இன்று பயனற்ற சாக்கடையாய் மாற்றி விட்டோம்.
குழந்தைக்கு கூட ஐஸ்கிரிம் வாங்கிக் கொடுத்தால் தான் அது நம்மைப் பார்த்து சிரிக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை பணம் தான் நம் வாழ்விற்கும், கலாச்சாரத்திற்கும் முதன்மையாகப் படுகிறது.
சென்னை நகரில் தற்போது நிலவி வரும் கலாச்சார சூழ்நிலை இதுதான்,
இரயில் நிலையத்தில் இறங்கும் போதே வெளியூர் முகம் அறிந்து ஆட்டோக்காரர்கள் ஈயைப் போல மொய்த்துக் கொள்கின்றனர். எல்லோரும் ஆங்கிலம் கலந்த தமிழிலேயே பேசுகின்றனர். படித்தவனுக்கும், பாமரனுக்கும் வித்தியாசமே தெரியவில்லை. ப்ளுடூத் ஹெட்செட் மாட்டிக் கொண்டு காதல் கதைக்கின்றனர். இரண்டு குழந்தைகளை பெற்று பெருத்து விட்ட அம்மாக்கள் ஞாயிறு மாலையில் கணவனுடன் பிம்பாம் சப்பிக் கொண்டிருக்கும் தங்கள் குழந்தைகளை தூக்கிப் போட்டுக் கொண்டு மாயாஜாலுக்கோ, தீம்பார்க்குக்கோ தங்களை அடைத்துக் கொள்கின்றனர். அரசு சம்மந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் மஞ்சள் சால்வை அணிந்து கருணாநிதி சிரித்தபடி இருக்கிறார். போஸ்டர்களிலும், வினைல் பேனர்களிலும் இடம் பிடித்திருக்கும் ரெட்ஜெயண்ட், கிளவுட்நைன் பிம்மங்கள் திரைத்துறையின் ஆளும் சக்திகளாக தங்களை முன்னிறுத்திக் கொண்டுள்ளனர். இரண்டு ரூபாய் கொடுத்து மெரினாவில் சுண்டலும் வாங்குகிறார்கள், இருபது லட்சம் கொடுத்து தனிஷ்கில் பிளாட்டின
மோதிரமும் வாங்குகிறார்கள். சோஷியலிசத்தின் எதிர்மறையான நகர பொருளாதாரத்தை உணர முடிகிறது. இளைஞர்கள் நிறைய பேசுகிறார்கள், ஊர் சுற்றுகிறார்கள். தமிழை அவசர கதியிலும் ஆங்கிலத்தை நிதானமாகவும் பேசுகிறார்கள். இலக்கியம், அறிவுரை என்றால் முகம் சுளிக்கிறார்கள். சிக்னல் இருக்கும் எல்லா இடங்களிலும் சிறுவர்களும், ஊனமுற்றவர்களும் மிரட்டும் தொனியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இங்கே கொஞ்சம் வேகமாக ஓடிவிட்டு மூச்சிரைக்கவும் பணம் தேவைப்படுகிறது.
மதியம் தயிர்சாதம் சாப்பிட்டு விட்டு சற்று நேரம் கயிற்றுக் கட்டிலில் தலைசாயும் ஜீவன்களுக்கு நகரம் நிச்சயம் நரகம் தான்.

கவிஞர் எம்.யுவனின் நகரம் பற்றிய கவிதை...

நகருக்குள் வந்த மான்போல
பராக்குப் பார்க்கிறாள்
கிட்டத்தட்ட பொருந்தும்
முகமொன்று கிடைக்கும் தறுவாயில்
வந்து
நின்று
கவர்ந்து செல்கிறது
பேருந்து.

No comments: