Tuesday, April 26, 2011

பாபா... சத்ய சாய் பாபா...???

"நாயகன் படத்துல வர்ற போலிஸ்காரனோட பைத்தியக்கார மகன் அடிக்கடி சொல்வானே "பாபா மர்கயா, பாபா மர்கயா"- அந்த வசனம் இப்போது என் மனதில் ஒலித்தபடி இருக்கிறது. ஏதாவது கெட்ட சகுனமா?" சனிக்கிழமை இரவு 11 மணிக்கு டிவிட்டரில் ஒரு நண்பர் குறிப்பிட்டதை படிக்கிறேன். ஞாயிறு காலை 9மணிக்கு அதே டிவிட்டரில் "சத்ய சாய் பாபா காலமானார்" என்கிற செய்தியை படிக்கிறேன்.
மராட்டிய மாநிலம் ஷீரடியில் வாழ்ந்த சாய்பாபாவின் மறு அவதாரம் என்று தன்னைப் பற்றி அறிவித்துக் கொண்டு சத்ய நாராயணன் ராஜி என்கிற தன் இயற்பெயரை துறந்து சாய் பாபாவாக மாறியவர் தான் இவர். 1950-ல் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி கிராமத்தில் பிரசாந்தி நிலையம் என்ற ஆன்மீக மையத்தை உருவாக்கினார். வெறும் கையால் விபூதி, லிங்கம் போன்ற பொருட்களை வரவழைத்து வித்தை காட்டி பக்தர்களின் கவனத்தை தன் பால் ஈர்த்த சாய்பாபா, படிப்படியாக பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டினார். படிப்படியாயக அவரின் ஆன்மீக மையம் வளர்ச்சி அடைந்ததால் உலகத் தரத்திற்கு இணையான கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும், கலையரங்கங்கள், கோலரங்கங்கள், ரெயில் நிலையம், விமான நிலையம் என அனைத்து வசதிகளையும் புட்டபர்த்தியில் உருவாக்கினார். இந்தியாவில் மட்டுமன்றி 178 நாடுகளில் 100 கோடிக்கும் அதிகமான பேர் இன்று இவருக்கு பக்தர்களாக இருக்கின்றனர். 85 வயதான சாய்பாபாவின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 3 லட்சம் கோடி.
இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் ஆன்மீக வியாபாரி சாய்பாபா தான்.
எந்தவொரு பொருளாதார பின்புலமும் இல்லாமல் ஒரு தனி மனிதனால் இப்படி பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரனாக இருப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் இரண்டு துறைகளில் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியப்படும். ஒன்று ஆன்மீகம். மற்றொன்று அரசியல். இறந்த ஒருவரைப் பற்றி பொதுப்படையான விமர்சனத்தை முன்வைக்க எனக்கு விருப்பமில்லை. இவரின் ஆனந்த தாண்டவத்தை நம் பார்வைக்கு வைக்க விக்கீலீக்ஸ், தெஹல்கா போல யாராவது ஒருவர் உருவாகாமலா போய் விடுவார்கள்?.

தன் பிறந்த தினத்தில் பாபா இறந்து விட்டதால் பிறந்த தின கொண்டாட்டத்தையும், காலை உணவையும் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் தவிர்த்து விட்டது, பலருக்கு பாபா இறப்பை விட பெரிய இழப்பாகவே இருந்தது. அதனை தொடர்ந்து பாபா கிடத்தப்பட்டிருந்த பூத உடலுக்கு முன்பு சச்சினும், அவரது மனைவியும் தேம்பி அழுத காட்சியைப் பார்த்த எனக்கு சில கேள்விகள் எழுந்தது.

"சாய் பாபா யார்?" ஒரு முழு நேர ஆன்மீகவாதி, கடவுளல்ல. நீ எப்படி முழுநேர கிரிக்கெட் வீரனோ, உனக்கு எப்படி கிரிக்கெட் விளையாட்டோ அதை போலத்தான் அவருக்கு ஆன்மீகமும். ஒரு சராசரி மனிதனை கடவுளாக்கி வழிபடும் உங்களையெல்லாம் எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை. உங்களைப் போன்ற பிரபலங்களின் வழியிலேயே தான் பாமரன் முதல் பட்டதாரி வரை பலர் கண்மூடிக் கொண்டு பயணம் செய்கின்றனர். ஒரு மணி நேரம் கண்கலங்க அழுது கொண்டிருந்தாரே சச்சின், அவர் துறை சம்பந்தப்பட்ட வீரருக்கோ அல்லது அவர்களின் குடும்ப நபருக்கோ இப்படி ஏற்பட்டால் அவர் இப்படி மனம் நொந்து போவாரா?
அவ்வளவு ஏன், கிரிக்கெட் உலகின் பிதாமகன் பிராட்மேனின் இறுதிச் சடங்கில் பங்கு கொண்டாரா, இல்லையே... இறுதியாய் அவரின் உடலைக் கூட பார்க்க வரவில்லையே.
அப்படி இருக்க பாபாவிடம் இருந்து மட்டும் அப்படி என்ன சக்தியை சச்சின் கண்டெடுத்து விட்டார்?
பதில்கள் இறந்த பாபாவிற்கும், சச்சினுக்கும் மட்டுமே தெரியும்.

No comments: