Friday, April 8, 2011

காதல் - UPDATE THIS LATEST VERSION

ஆதி மனிதனில் தொடங்கி இன்றைய ஹை-டெக் காலம் வரை பிடித்தமானதும், புதுமையானதும் இருக்கும் விஷயங்களில் முதன்மையானதாக இருப்பது காதல் மட்டும் தான். தண்ணீருக்கு ஏங்கி தவிக்கும் கோடைகால பறவைகள் போல உண்மையான காதலுக்கு ஏங்கி தவிக்கும் உயிர்கள் பல. "ஆதலினால் காதல் செய்வோம்" என அன்றே என் பாரதி மூட்டிய தீ இன்றும் இளநெஞ்சங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இழப்பு, வறுமை, துரோகம் என துயரங்களின் பக்கங்கள் வாழ்வில் நிரம்பி வழிந்தாலும் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் வாழ்வைத் தொடங்க முன்னோடியாக இருப்பது காதல் தான்.
இன்றைய யுகத்தில் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஜாதியோ, பெற்றோர்களோ, உறவினர்களோ அல்ல, தத்தம் காதலுக்கு எதிரி காதலர்களே தான். ஆம் ஒரு பெண்ணைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமலேயே வெறும் நிறக் கவர்ச்சிக்காகவும், அங்க அசைவுகளுக்காகவும் சரிந்து விழும் ஆண்கள் பற்றி எழுவது காதல் எனும் கரத்தை தான். தன் அன்பிற்கான அடைக்கலம் தேடி அலைந்து கொண்டிருக்கும் பெண்ணின் மனம் அவசரமாய் புரிதல் இல்லாத இந்தக் காதலை ஏற்றுக் கொள்கிறது.
இந்த வினைகளுக்கு முக்கிய காரணம் நம் சமுதாயமும், புதுப்பிக்கப்படாத நம் கலாச்சார சூழலும் தான். பெண் என்பவள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் என்பதை ஆண்களும், ஆண் என்பவன் தன் இருப்பிற்கான அடையாளம் என்பதை பெண்களும் உணர வேண்டும். உலகின் ஒவ்வொரு மூலையின் இருட்டுப் பிரதேசங்களிலும் அருவருப்பான, சகிக்க முடியாத சமுகத் துரோகங்களும், அவலங்களும் காதலின் பெயரால் அரங்கேறி வருகின்றன. பேரன்பிலும், பெருநேசத்திலும் கொண்டாடப்பட வேண்டிய காதல் காமத்தின் பற்களில் சிக்கி வெறும் சக்கையாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சீர்குழைவிலிருந்து நம்மையும் நம் காதலையும் மீட்டெடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
இப்போதுள்ள பெண்களிடம் தன் காதலனிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என விதவிதமான பட்டியலே இருக்கிறது. இலக்கியம், இசை, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பேச்சுத் திறன் என எல்லாத் துறைகளிலும் அடிப்படை நுணுக்கங்களாவது ஆண்களுக்கு அவசியம் என்பது பல பெண்களின் முதன்மைக் கருத்தாக இருக்கிறது. தவிர மொழி அறிவு, குடும்பப் பின்னணி, மன தைரியம்
போன்றவற்றையும் அலசுகின்றனர். அதே போலத்தான் ஆணும் மற்ற காதலர்களுக்கு தானும், தன் காதலியும் ஒரு ரோல்மாடலாக இருக்க வேண்டும் என கருதுகிறான். உறவுச் சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள், எதிர்காலத் திட்டம் போன்ற பல விஷயங்களை தன் காதலியிடம் காதலோடு பகிர்ந்து கொள்கிறான்.
இருபாலருக்கும் பொதுவான அடிப்படை விஷயமாக இருப்பது விட்டுக் கொடுப்பதும், சகிப்புத் தன்மையும் தான்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளுக்கு தயார்படுத்திக் கொண்டு
உங்கள் இதயக் கதவினை திறந்து வையுங்கள். நீங்கள் எதிர்பாராத அசந்தர்பத்தில் வினாடியில் சட்டென காதல் உங்கள் இதயத்தில் இடம்பிடித்து விடும்.

"அவள் அழகை
என்னால்
வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாது
ஒரு வயலின் தாருங்கள்
வாசித்துக் காட்டுகிறேன்!"
- கலீல் ஜூப்ரான்

விவரிக்க முடியாத சில நுட்பமான காதல் உணர்வுகள் பதிவு செய்யப்படும் இது போன்ற காதல் கவிதைகளால் பல காதல்கள் உயிர் பெற்று உன்னதமாகின்றன.


பதிலைத் தேடுவதில் உடன்பாடில்லை

மலையின் மீது ஏற்றப்பட்ட தீபத்தை
எப்படி பார்வையிலிருந்து
மறைக்க முடியாதோ

மொட்டு விரிந்து பூக்களான
தருணத்தை எப்படி
கணிக்க முடியாதோ
அப்படி

விளக்கின் குணம் வெளிச்சம்
இலைகளின் இயல்பு உதிர்தல்
நிலவின் தன்மை குளுமை

கரையவுமில்லை
கலக்கவுமில்லை
தடுக்கவுமில்லை

நேசிக்கிறேன்
அவ்வளவு தான்.

இது போன்ற மென்மையான அஹிம்சை தத்துவம் இலையோடும் கவிதை வரிகளின் காதலும் உன்னதமாகின்றன.

1 comment:

தமிழ்வாசி - Prakash said...

உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: புதன் படைப்புகளின் சரமாக