Sunday, May 1, 2011

மரணக் குறிப்பு

மனிதர்களே, எப்படி இருக்கிறீர்கள்? நலம் தானே... ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயிரமாயிரம் பிரச்சனைகளும், போரட்டங்களும் நிரம்பிய வாழ்வாக இருந்தாலும் அந்த வாழ்வைத் தானே நாமெல்லோரும் விரும்புகிறோம்.

நேற்று வரை நானும் உங்களைப் போலத்தான் ஒரு சராசரி மனிதனுக்குரிய உடற்தகுதியோடும், சிறுசிறு ஆசைகளோடும், கனவுகளோடும் வாழ்ந்து கொண்டிருந்த ஜீவன்.
ஆனால் இப்போது என் நிலை என்ன தெரியுமா?
உதிரம் வழிய நோண்டி எடுக்கப்பட்ட இடது கண்ணோடும், பிய்த்து எறியப்பட்ட குரல் வலையோடும், முறித்து உடைக்கப்பட்ட கை, கால்களோடும், தசை கிழிய பிடுங்கப்பட்ட விரல் நகங்களோடும், உருவி வீசப்பட்ட விலா எலும்புகளோடும் இந்த ஆந்திர மாநிலத்தில், இந்த அடர்ந்த காட்டில், இந்த அழுக்கடைந்த ஏரியில் காட்டு ஈக்களும், பெயர் தெரியாத பூச்சிகளும் மொய்க்க அழுகிய நிலையில் உயிரற்ற சக்கையாக மிதந்து கொண்டிருக்கிறேன்.

காற்றில் அடித்துக் கொண்டு நிழல் தேடி ஒதுங்கிய ஒரு விதை எப்படி மண்ணில் புதைந்து மரமாக வளர்கிறதோ அப்படித்தான் நானும் அறிமுகமற்ற அன்பு முகங்களின் அன்போடும், அரவணைப்போடும் வளர்ந்து ஆளானேன். எனக்கென்று ஒரு குடும்ப அமைப்போ, நட்பு வட்டமோ ஏதுமில்லை. படிப்போ, பகுத்தறிவோ எதுவும் கிடையாது.
விவரம் தெரிந்தது முதல் இந்த உடற்கூடு வளர்ந்ததெல்லாம் தமிழ்நாடு தான். நன்றாக நினைவிருக்கிறது, வழக்கமாக நான் ஓட்டிச் செல்லும் பள்ளிப் பேருந்தில் அன்றும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு செல்கிறேன். தெளிவான மனநிலையோடும், குழப்பமில்லாத யோசனைகளோடும் சரியாய் அவர்கள் சொன்ன இடத்திற்கு மாணவர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் வந்தடைந்தேன். ரொக்கமாய் ஐந்து லட்ச ரூபாய் முகம் தெரியாத ஒருவனிடம் இருந்து பெற்றுக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஆந்திரா வந்தடைந்தேன். ஒருவார காலம் பயமும், அலைச்சலும் துரத்த முடிவில் ஒரு அரிசி மில்லில் வேலைக்கு சேர்ந்தேன். கடத்திய நபர்கள் பேருந்தில் இருந்த பள்ளி ஆசிரியை
ஒருவரை கற்பழித்துக் கொன்று விட்டதாகவும், பணயப் பணம் முழுதும் பெற்றுக் கொண்டு குழந்தைகளை விடுவித்ததாகவும் செய்திகள் மூலம் அறிந்தேன்.

நாட்கள் செல்லச் செல்ல பழைய நினைவுகள் என்னுள் மெல்ல மறைந்து போயிருந்தன. நேற்றிரவு வேலையை முடித்து விட்டு வீடு திரும்புகையில் தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. படபடவென நான்கைந்து பேர் என்னை சுற்றி வளைத்தனர். "இவன் தாண்டா அந்த டிரைவர்" என்று ஒருவன் கூறியது தான், என் பின் கழுத்தில் ஒருவன் கோடாரி போன்ற ஆயுதத்தால் ஒரே வெட்டு ரத்தம் பீறீட்டு எழ மண்ணில் சாய்ந்து பாதி உயிரிழந்தேன். கருவானில் அவர்கள் முகம் மங்கலாக தெரிந்தது. இன்னொருவனின் கூர்மையான கத்தி என் இருதயத்தில் சரியாய் குத்தி இறங்கியது. அவ்வளவு தான் டாக்டர் ஊசி போடும் வலியைப் போலத்தான் சுருக் சுருக்கென்று குத்தியது. மெல்ல என் உயிர் கரைந்து அடங்கியது. நான் பிணமான பின்பும் மாறி மாறி அவர்கள் ஆக்ரோஷமாக தங்களிடம் இருந்த ஆயுதங்களால் என் உடலை குத்திக் கிழித்துக்
கொண்டே இருந்தனர். வானில் நிலா புன்சிரிப்போடு வெளிச்சமிட்டபடி இருந்தது.

No comments: