Friday, May 13, 2011

என் ஜன்னலுக்கு வெளியே...

19- ஜனவரி என் வலைதளத்தில் "சாரு- அரை நூற்றாண்டு அற்புதம்" என்கிற தலைப்பில் எழுத்தாளர் சாருநிவேதிதாவைப் பற்றி ஒரு கட்டுரையை பதிவிட்டிருந்தேன்.
அதற்கு 13- மே அன்று அவரது வலைதளத்தில் http://charuonline.com/blog/?p=2114 இப்படி குறிப்பிட்டிருந்தார்.

"விழித்துப் பார்த்தால் இப்படி ஒரு கனவு" - இந்த வார்த்தையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏறக்குறைய 50 ஆண்டுகாலமாக தமிழ் இலக்கிய மற்றும் வெகுஜனப் பரப்பில் தீவிரமாக இயங்கி வரும் ஒரு படைப்பாளிக்கு தன் வாசகனின் எல்லையற்ற உணர்வுகளையும், ஆசைகளையும் வெறும் கனவாக மட்டும் தான் பார்க்க முடியுமா?
அப்படியென்றால் உங்களின் உன்னத படைப்புகளை இந்தத் தமிழ்ச் சமுகம் என்றுமே போற்றிப் பாதுகாக்காதா?
ஏன் வள்ளுவனில் தொடங்கி இன்று வரை
தமிழ்ச் சமுகம் எழுத்தாளர்களை பயன்படுத்திக் கொள்ளத் தவறிக் கொண்டே இருக்கிறது?
தமிழ் எழுத்தாளன் சாகும் வரை தன் படைப்புகளையும், திறமைகளையும்
சுமந்து கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியது தானா?
அவன் படைப்பிற்கு மதிப்பீடும், மரியாதையும் எப்போது தான் கிட்டும்?

ஆனால் மற்ற துறைகளில் உள்ளவர்களுக்கு இந்த அவலநிலை இல்லையே. தமிழகத்தின் போக்கை நிர்ணயிக்கக் கூடிய பழம்பெரும் திராவிடக் கட்சிக்குக் கூட நேற்று வந்த காமெடி நடிகனை முன்னிலைப் படுத்தி முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சில வருடங்களே தங்கள் துறைகளில் முக்கியத்துவம் பெறும் விளையாட்டு வீரர்களையும், சினிமா நடிகர்களையும் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த தமிழ் சமூகம் எழுத்தாளனை மட்டும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவனை மனிதனாகக் கூட பார்க்காமல்
பைத்தியக்காரனாகவும், பிச்சைக்காரனாகவும் மட்டுமே பார்க்கும் கேவல நிலையில் இன்றைய தமிழ் படைப்பாளி இருக்கின்றான்.
ச்சீய்.... அருவருப்பாக இருக்கிறது.

இந்தப் பதிவின் மூலம் என் பிரியத்திற்கு உரிய சாருவிற்கு ஒரு வேண்டுகோள். ஏதாவது செய்யுங்கள்........
உலக இலக்கியங்களுக்கு இணையான இலக்கியங்கள் நம் தமிழ்
இலக்கியத்தில் கொட்டிக் கிடக்கின்றன. எதுவுமே வெளிச்சத்திற்கு வராமலேயே இருக்கின்றன. நம் இளைஞர்களின் பார்வை இந்த இலக்கிய படைப்புகளின் மீது பட வேண்டும்.
தமிழ் இலக்கிய படைப்பாளிகளுக்கும், அவர்களின் படைப்புகளுக்கும் தகுந்த முக்கியத்தும் அளிக்கப்பட வேண்டும். ஒரு தமிழ் எழுத்தாளன் தன் படைப்புகளின் மூலம் மட்டும் வாழ்வில் தன்நிறைவு அடைய வேண்டும். அந்த நிலைக்கு கொண்டு வர உங்களை போன்ற படைப்பாளிகாளால் நிச்சயம் முடியும்.

நண்பர்களிடமும், உறவினர்களிடமும் உங்களையும், மற்ற சிறந்த தமிழ் ஆளுமைகளையும் பற்றி சிலாகிக்கிறேன். ஆனால் எந்தவித பாதிப்பும் அவர்களிடத்தில் இல்லை. (ஒரு சில காதல் கவிதைகளை தவிர்த்து) வருத்தமாக இருக்கிறது.
ஒரு சிறந்த சிறுகதையை உருவாக்க எவ்வளவு சிரமப்ப வேண்டி இருக்கிறது. வலைப்பதிவுகளிலும், நூலகங்களிலும் கணக்கற்ற படைப்பாளிகளின் அனுபவங்கள் படைப்புகளாக உறங்கிக் கொண்டிருக்கின்றன.

எங்கள் ஊரில் உள்ள கணிணீ நூலகத்தில் உங்களின் (சாருவின்) உயிர்மை பதிப்பகத்தின் மூலம் வெளியான அத்தனை பிரதிகளையும் வைத்துள்ளேன். (யாராவது கவனித்து படிப்பார்களா? தெரியவில்லை) அது தவிர மேலும் சில என் மனம் கவர்ந்த படைப்பாளிகளின் புத்தகங்களையும் வைத்துள்ளேன். போதுமான அனுபவமும், பரிட்சயமும் இல்லாததால் உங்களைப் போன்ற மகத்துவமான கலைஞர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவி இதுதான்.

உங்களின் அசுரத்தனமான படைப்புகளும், பரந்து பட்ட பார்வையும், அனுபவமும், நீங்கள் வணங்கும் பாபாவும் உங்களை நிச்சயம் ஒரு நாள் உலகம் போற்றும் உயரத்திற்கு உயர்த்துவார்கள் எனும் அசராத நம்பிக்கையில் காத்திருக்கும் உங்கள் அன்பு வாசகன்...

No comments: