Tuesday, May 17, 2011

முடிவுரையில் ஒரு முன்னுரை


வலுவிழந்த தலைமை, கட்டுப்பாடில்லாத கூட்டணிக் கட்சிகள், ஈழப் பிரச்சனை, விலைவாசி ஏற்றம், ஸ்பெக்ட்ரம் விவகாரம், குடும்ப நபர்களின் பிரச்சனைகளும்,
தமிழகம் முழுவதும் அவர்களின் அடாவடி ஆதிக்கங்களும் என தி.மு.க -வின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அவர்களுக்கு தேவையற்ற இலவசங்களையும், தள்ளுபடிகளையும் அளித்து இந்தியாவிலேயே இது போன்ற திட்டங்களும், இலவசங்களும் வேறெந்த மாநிலத்திற்கும் கிடைக்கவில்லையென வெற்றுக் கூச்சலிட்டு தம்பட்டம் அடித்தவர்களின் பின்தலையில் ஒரு போடுபோட்டு தமிழக மக்கள் ஆட்சியை அ.தி.மு.க -விடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்ற முறை போல் இந்த முறையும் கருணாநிதி மட்டும் சென்னைக்குட்பட்ட ஏதாவது தொகுதியில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் அவரும் தோற்றிருப்பார்.
அவசியமில்லாத நலத்திட்டங்களும், செயற்திட்டங்களும் மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியையே பாதித்தது. தி.மு.க அரசின் தெளிவற்ற அரசியல் நிலைப்பாடுகளும், தேர்தல் தந்திரங்களும் அ.தி.மு.க வின் வெற்றிக்கே வழிவகுத்தது. அ.தி.மு.க போட்டியிட்ட 160 தொகுதிகளில் 146 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் தி.மு.க ஆட்சிக்கு எதிரான ஒட்டு மொத்த மனநிலை தான்.
இந்த முறை அ.தி.மு.க ஜெயிக்காவிட்டால் கட்சியே அழிந்து விடும் அபாயத்தில் தான் இருந்தது. இந்த தேர்தலில் ஜெயித்ததன் மூலம் முடிவுரையிலிருந்து தன் ஆட்சியின் முன்னுரையை எழுத ஜெயலலிதா தயாராகி விட்டார்.

அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும், சில யோசனைகளும்....
1) நேற்று பதவிப் பிரமாணம் செய்யும் போது முதல்வரிடம் இருந்த வேகமும், மகிழ்ச்சியும் மக்கள் பணியாற்றும் போதும் எதிர்பார்க்கிறேன்.
2) முன்பு உங்கள் ஆட்சியில் நடந்த அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அடிக்கடி மாற்றும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.
3) "முதல்வரின் காலில் விழுந்தால் குற்ற நடவடிக்கை" என சட்டமாக்கினால் சந்தோசப்படுவேன்.
4) இலவசங்களையும், நலத்திட்டங்களையும் கொடுத்து விட்டு ஸ்பெக்ட்ரம் போல் உள்குத்து வேலைகளில் இறங்காமலிருக்க வேண்டுகிறேன்.
5) குடிநீர், சாலை, மின்சார வசிதி, உள்கட்டமைப்பை பலப்படுத்துவது, நீர்வள மேம்பாட்டை அதிகப்படுத்துவது, பாசன வசதியை ஏற்படுத்தி விவசாயத்தை ஊக்கப்படுத்துவது போன்ற எண்ணற்ற சவால்கள் உங்கள் முன்பு குவிந்து கிடக்கின்றன. ஆகவே உங்கள் கவனம் முழுதும் இதன் மீதே இருக்க வேண்டும்.
6) சினிமா நடிகர்களின் பாராட்டுக் கூட்டங்களை, உங்கள் புராணம் பாடும் நிகழ்ச்சிகளை அறவே தவிர்த்து விடுங்கள்.
7) ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளையும், பிற மாநிலங்களிடையே இருக்கும் பிரச்சனைகளையும் தீர்க்க முழுமனதாய் முனைப்பு காட்டுங்கள்.
8) சசிகலாவை நீங்கள் நண்பராக மட்டும் வழிநடத்துங்கள். உங்கள் அரசியலில் அவர் கலந்தால் அது குழம்பிய குட்டையாகவே ஆகிவிடுகிறது.

இதையெல்லாம் நான் எதற்கு கூறுகிறேன் என்றால் நம் மாநிலத்திற்கு ஏதாவது நல்லது நடக்காதா? என்கிற ஏக்கத்தோடும், எதிர்பார்ப்போடும் உங்கள் சின்னத்திற்கு வாக்களித்த அப்பாவி வாக்காளர்களில் நானும் ஒருவன்.

பின் குறிப்பு: நேற்றிரவு அத்துணை புத்துணர்சியோடு தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம்
ஜெயலலியதா விவாதித்துக் கொண்டிருந்தது, அவரின் அரசியல் ஈடுபாட்டின் மனமாற்றத்தைக் காட்டியது. மற்றபடி அவரின் மூளை நீயுரான்களின்
செயல்பாடுகளில் அடங்கியிருக்கிறது தமிழகத்தின் தலைவிதி.

No comments: