Saturday, May 21, 2011

அழகர் சாமியின் குதிரை

தலைப்பைப் பார்த்தவுடன் இந்தப் பதிவு திரைவிமர்சனம் என்று நினைத்து விடாதீர்கள். "அழகர் சாமியின் குதிரை" படத்தைப் பார்த்தவர்கள் இந்த சற்றே பெரிய சிறுகதையை படித்துப் பார்த்தால் ஒரு திரைப்படத்திற்கும், சிறுகதைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள முடியும். நீளமான சிறுகதை என்பதால் இன்று பாதி, நாளை மீதி.கிராமத்தின் லட்சணங்கள் எண்பதாம் வருடத்திலிருந்து மாறத் தொடங்கி இருப்பதாக,
அதே ஊரில் வேலை பார்க்கும் காளமேக வாத்தியார் முப்பது வருடங்களாகச் சொல்லி
வருகிறார். ஆனால் அவர் மட்டும் மாறுவதாக இல்லை!

வேட்டி நுனியை இடக்கையால் தூக்கிப் பிடித்தபடி மூக்குப்பொடியும், ஹவாய்
செருப்புமாக ஊருக்குள் திரிகிறார். காலம் அவர் தலைமுடியை மாற்றும் முயற்சியில்
இறங்கிவிட்டது. காளமேகம் அதை ஒப்புக்கொள்ளவில்லை. தன் பெயருக்கேற்ப தலையும்
கருமேகம் போல் இருக்க வேண்டுமென்று மாதம் பிறந்தால் பக்கத்து டவுனுக்கு
மொபெட்டில் போய் முடிவெட்டி, டை அடித்துத் திரும்பி வருகிறார்.

தாமரைக்குளம் மட்டுமில்லை, தமிழ்நாட்டின் தொண்ணூற்று ஒன்பது சதவிகித கிராமங்கள்
காளமேக வாத்தியாரின் மண்டை மாதிரிதான், தங்கள் ஒரிஜினல் நிறத்தை இழந்து
வெளிறிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை இயல்புப்படி மாறவிடாமல், முடிந்தவரை சாயம்
பூசிப் பூசிப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், மாற்றமோ அவ்வப்போது
வெளிவந்து கண்ணாமூச்சி காட்டுகிறது.

தாமரைக்குளத்தின் மையம் ஆலமரத்தடிதான். அழகர்சாமி கோயிலை அடுத்து வளர்ந்திருந்த
ஆலமரத்தை அணைத்தாற்போல் ஒரு மண்டபம் கட்டி, பிள்ளையாரைக் காவலுக்கு
வைத்திருந்தார்கள். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட மண்டபம். தாங்கி நிற்கிற கல்தூண்கள்,
சிவப்புக் காவி பரவிய ஜில்லிடும் தரை.

அதில் நிரந்தரமாக கிடந்த கோலம், சாய்ந்த கோலம், கவிழ்ந்த கோலம் என ஆறேழு
கோலங்களில் ஏழெட்டுப் பேர் அலங்கோலமாகக் கிடப்பார்கள். பெரும்பாலும் ஐம்பதைத்
தாண்டிய கிராமத்தின் சீனியர் சிட்டிசன்கள். ஊரு தலைப்பிரட்டுப் பயல்களுக்கு
பெருசுகள். மரியாதையாகச் சொல்வதானால் வயசாளிகள். அனுபவஸ்தர்கள்.

பிள்ளையார்தான் பாவம்… இந்த வயசாளிகளின் புலம்பல்களையும், வெற்றிலை எச்சில்
துப்பல்களையும், புகையிலைப் பெருமூச்சையும், விவஸ்தையின்றி அவர்கள் பேசும்
கெட்ட வார்த்தைகளையும் பெரிய காதுகளால் கேட்டபடி நொந்து போயிருக்கிறார்.

பிள்ளையாருக்குப் பக்கத்து வீட்டுக்காரர் போல அழகர்சாமி. அவருக்குச் சின்னதாகக்
கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். பிள்ளையார் மாதிரி முடங்கிக் கிடக்கிற
அவசியம் அவருக்கு இல்லை. அவர் ஐம்பொன்னால் ஆனவர். எனவே ஊர்ப் பெரியகுடியின்
வீட்டு சாமி ரூமில் இருக்கிறார்.

அவரது வாகனமான குதிரை, ஐந்தாறு கிலோமீட்டர் தாண்டி, மலையடிவார மண்டபம் ஒன்றில்
ஏகாந்தமாக இருக்கிறது. சித்திரை மாதத் திருவிழாவுக்கு அழகர்சாமி ஊர்வலமாக
மலையடிவாரம் போய் தனது வாகனத்தில் ஏறி, மலையடிவாரம் தாண்டிய ஒரு காட்டாற்று
மணலில் இறங்கி அருள்வார்.

பிறகு ஊர்வலமாக வந்து, கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மூன்று நாட்கள் கோலாகலத் திருவிழா. முதல் நாள் கரகாட்டம், மறுநாள் சமூக -
சரித்திர நாடகம், மூன்றாம் நாள் பாட்டுக் கச்சேரி.

கேளிக்கைகள் குறைவாக இருந்த கிராமங்களில் திருவிழாக்கள் முக்கியத்துவம்
வாய்ந்தவை. கடவுளருக்கு மகிழ்வு தந்து மக்களுக்கு மழை தருபவை.

ஆலமரத்தடி மண்டபத்தில் காளமேக வாத்தியாரது மொபெட் வந்து நின்றபோது, வரப்போகும்
திருவிழா பற்றி மூன்று பேர் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

“என்ன பேசிட்டு இருக்கீங்க?”

“திருனா நெருங்குதில்ல வாத்யாரே.. இந்த வருசம் எந்த நாடகம் போடறதுன்னுதான்!”

வாத்தியார் சுவாரஸ்யமின்றி, “என்னமோ அம்பது நாடகம் கைல இருக்கிற மாதிரிதான்.
வள்ளித்திருமணம், வீரபாண்டியக் கட்ட பொம்மன், கதம்ப காமிக்… இந்த மூணைத்தான்
திரும்பத் திரும்பப் போடறோம். அழகர்சாமிக்கே ‘போர்’ அடிச்சுப் போயிருக்கும்!”

பேசிக்கொண்டு இருந்த மூவரில் ஒருவர் காரை வீட்டுப் பெருமாள். மற்றவர்,
சின்னச்சாமி. இன்னொருவர் கோவிந்தசாமி. மூவரும் வாத்தியாரை எரிச்சலுடன்
பார்த்தார்கள்.

“ஏன் வாத்யாரே! நீயும் வருசா வருசம் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச்
சொல்லித் தாற! நீ சம்பளம் வாங்கலையா? ஏன்யா இப்படிக் கூறு கெட்டவன் மாதிரி
பேசற…? நீ எல்லாஞ் சொல்லிக் குத்து, இந்தூர்ப் புள்ளைக கரை சேரவா?” என்றார்
கோவிந்தசாமி.

“நான் கிளம்பறேன்!” என்றார் வாத்தியார்.

“அட என்னய்யா… வந்த கையோட போறேங்கறே? கோவிச்சுக்கிட்டியா?”

”அதில்ல.. வேலை கிடக்கு!”

“அடேயப்பா.. எங்களுக்குத் தெரியாம, உனக்கு அப்படி என்னய்யா வேலை? ஊர்லயே
ராசாகணக்கா இருக்கிறது நீதான்யா! மாசமானா கவுர்மென்டு சம்பளம். நிழல்ல
உக்கார்ந்திருந்து வாழ்ற! இதுல, வருசத்துல முக்காவாசி நாளு லீவு!”

அடிக்கடி இவ்வாறான பொறாமைக் குரலை கோவிந்தசாமி வெளிப்படுத்துவார். அவருக்கு
வாத்தியார் மீது லேசானதொரு விரோதம் உண்டு. அவர் வாத்தியார் வேலைக்குப் படிக்கப்
போய், அது பிடிக்காமல் ஓடிவந்து, ஊரில் விவசாயம் பார்த்தவராம். தான் இழந்த
வாய்ப்பைக் கண் முன்னே அனுபவிக்கிற ஜீவனான காளமேகத்தை சமயம்
கிடைக்கும்போதெல்லாம் இடித்துப் பார்ப்பார்.

வாத்தியார், இந்தப் பாமரர்களை ஒரு பார்வை பார்த்தார். அறிவாயுதம் கொண்டு
அவர்களை வீழ்த்த எண்ணி, “வீட்டுக்குப் போனா நாலஞ்சு புக்ஸைப் படிக்கலாம்.
பசங்களுக்குச் சொல்லித் தர்றதுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். இங்க உக்காந்து
வெட்டிக் கதை பேசறதுல என்ன பிரயோஜனம்?”

“வாத்தியார் பேச்சைப் பார்த்தியா? வருசம் பூரா இங்கன உக்காந்து, எங்ககூட
வெட்டுப் புலி, தாயம் ஆடிட்டு, இப்ப திடுதிப்புன்னு மாத்திப் பேசறியே
வாத்தியாரே… புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கற ஆளு.. பேச்சு சுத்தம்
வாணாமா?”

இன்றைக்குத் தனக்கு நேரம் சரியில்லை என்ற முடிவுக்கு காளமேகம்
வரவேண்டியதாயிற்று. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமர்ந்தார்.

”ம்…! சம்சாரிக எல்லாம் இன்னிக்கு ஒரு விதமாகத்தான் பேசறீங்க. படிப்பு
சொல்லிக் குடுக்கறவன் சாமி மாதிரி! அவனை மதிச்சுப் பழகணும். நீங்க பேசறதே இந்த
லட்சணத்துல இருந்தா, நாலைக்கு உங்க புள்ளைங்க வாத்யாரை மதிக்குமா? கலிகாலம்
வந்துருச்சு. மழை பெய்ய மாட்டேங்குதுன்னா, ஏன்? அம்புட்டுப் பேரும் இப்படிக்
குணங்கெட்டு அலையிறதாலதான்!”

மூவரும் வாயடைத்தனர். என்ன இருந்தாலும் படித்தவனின் திறமையே திறமை என்று
காளமேகம் தன்னை மெச்சிக் கொண்டார்.

அவர்களை அவர்களது ரூட்டிலேயே மடக்கியாயிற்று. (மூன்று பேரும் கலி முத்திப்போனது
பற்றியும் மழை பொய்ப்பது பற்றியுமே தினமும் பேசிக்கொண்டு இருப்பார்கள்.)

“சரியாச் சொன்னீங்க வாத்யாரே!” அவர் முகத்தில் வருத்தம்.

இரண்டு வருடங்களாக ஊரில் மழை சரியில்லை. இயற்கைக்கு வஞ்சகம், சூது எல்லாம்
இத்தனை வருசமாகக் கிடையாது. அது அப்பாவியாக இருந்தது. இப்போது அதுவும் மனுசனைப்
போல் மாறிவிட்டதோ?

பெருமாளின் நெடிய அனுபவத்தில், ஆடி மாதமானால் மழை தேடிவரும். ஓடைகளில் தண்ணீர்
கரை தொட்டுப் போகும். ஊரைச் சுற்றியிருக்கும் எட்டுக் கண்மாய்களிலும் நீர்
நிறையும். பருத்தியும், நெல்லும், கரும்பும் மோட்டார் வைத்து ஒருபுறம் விவசாயம்
செய்யும் அதே நேரம், காட்டு வெள்ளாமையாக சோளமும், மொச்சையும், எள்ளும்,
கடலையும், தட்டாம்பயிறுமாக.. ஊரில் யாரும் எதற்கு ஏமாந்து நின்றது கிடையாது.
தாகம் எடுத்தால், எந்த வீட்டு வாசலிலும் நின்று மோர் கேட்டு வாங்கிக்
குடிக்கலாம். அது ஒரு காலம். இப்போது அப்படியா இருக்கிறது?

ஊரில் எல்லார் வீட்டிலும், பாலை சொஸைட்டிக்காரனுக்கு விற்கிறார்கள். காலை
நேரத்தில் சைக்கிளில் வந்து, கேன்களில் பீய்ச்சிக்கொண்டு போய்விடுகிறான்.

’மனுசப்பய சனம் எல்லாத்தையும் காசை வெட்டுக் கணக்குப் பண்ண ஆரம்பிச்சிடுச்சு!’
என்று தனக்குள் எண்ணிக்கொண்ட பெருமாள், அழகர்சாமியின் கோயிலைப் பார்த்து
வணங்கினார். அவருக்கும் வயது அறுபதாச்சு. ஒவ்வொரு சித்திரை பவுர்ணமியிலும்
அழகர் ஆற்றில் இறங்குவதும், அந்த மூன்று நாட்களுக்குள் மழை பெய்வதும் தப்பாமல்
நடந்து வருகிறது. போன வருசம் அப்படி நடக்கவில்லை. சாமி கோயிலில் இருந்த போதும்
கூட மழை பெய்யவில்லை. கோயில் மறுநுழைவு எல்லாம் முடிந்து, சாமி திரும்பிப் போன
பிறகுதான் கொஞ்சம் மழை பெய்தது.

“என்ன பெருமாளு, பலமான யோசனை?” என்றார் கோவிந்தசாமி.

“இந்த வருசம் அழகர் ஆத்துல இறங்கும்போது, கண்டிப்பா மழை பெய்யணும்டா கோயிந்து.
நான் மனசுல நினைச்சு வச்சிருக்கேன்!”

“அண்ணே, அதுக்கு நீ நினைச்சாப் பத்தாது. அழகர்சாமியில்ல மனசு வைக்கணும்..!”

”இந்த எகடாசிப் பேச்செல்லாம் வேணாம். போன தடவை மழை பெய்யலன்னதும், நாங்க
கமிட்டி கூடிப் பேசி சாமிகிட்ட குறி கேட்டோம். ‘வர்ற வருசம் திருவிழாவைச் சுத்த
பத்தமா, விமரிசையா பண்ணனும்’னு வாக்கு வந்துச்சு. ‘குதிரையைச் செப்பனிடணும்.
வரி வசூலைக் கூட்டிப் போட்டு, ஜாம் ஜாம்னு கொண்டாடணும்’னு முடிவு
பண்ணியிருக்கோம்!”

”அப்படியே… வருசா வருசம் கூட்டிட்டு வர்ற அந்த கரகாட்டக்காரியையும், வள்ளித்
திருமணம் நாடகசெட்டையும் மாத்திருங்க. போன வருசம் வந்திருந்த முருகனுக்கு வயது
அம்பத்தஞ்சு. வள்ளிக்கு நாப்பத்தேழு!” என்றார் வாத்தியார்.

“ப்ச்…! நக்கல் பண்ணாத வாத்யாரே… எனக்கு சமயத்துல எம்புட்டுச் சங்கடமா
இருக்கு, தெரியுமா? இப்புடியே போயிட்டு இருந்தா, ஊரு என்னத்துக்கு ஆகும்?
தோட்டத்துல தண்ணி சுத்தமா கீழ போயிருச்சு!”

வாத்தியாருக்கும் அது தெரியும். பருவநிலைகள் மாறித்தான் வருகின்றன.
புதுசுபுதுசாகக் காரணங்கள் சொல்கிறார்கள். ஒருமுறை டவுனில் ஒரு வேன் வைத்து,
மழை பெய்யாததற்குக் காரணம் மரங்களை வெட்டுவதுதான்’ என்று சொன்னார்கள். அதை
வந்து இங்கே சரியாக எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. இவர்களிடம் கேலிப் பேச்சு
வாங்கியதுதான் மிச்சம்.

இவர்கள் பேச்சு தொடர்கையில் பெருமாளின் மகன் ராமகிருஷ்ணன் தன் கூட்டாளி
கனகுவோடு வந்தான். இரண்டு பயல்களும் பெருசுகளை சட்டை பண்ணாமல் வந்து
மண்டபத்தின் வயர், சுவிட்சுபோர்டு மீட்டர்களைப் பார்வையிட்டனர்.

”ஏய்… இத்தினி பெரிய மனுசங்க இருக்கோம்… செருப்புக்காலோட அங்கியும்
இங்கியும் போறியா?”

“மன்னிச்சுக்குங்க நைனா!” என்று செருப்பை அவிழ்த்தான் கனகு.

“என்னடா பண்ணப் போறீங்க?”

“நாளைக்கு இங்கன ஒரு நாடகம் போடலாமின்னு இருக்கோம்!”

பெரியவர்கள் முகம் கறுத்தது. பெருமாளின் மகன் ராமகிருஷ்ணன் இரணியனுக்குப்
பிறந்த பிரகலாதன் மாதிரி… ஆனால், நேர் எதிர்! கருடனைக் கண்டால் விரட்டி
விரட்டிக் கும்பிடுகிறவர் பெருமாள். சாமியே கும்பிடாத தறுதலைப் பயல்
ராமகிருஷ்ணன். கூடச் சேர்ந்திருக்கிற கனகு பற்றிப் பேசவே வேண்டாம். சரியான
அரைக் கிறுக்கன். ரெண்டு பயல்களும் இப்போதுதான் காலேஜ் முடித்து கைலி கட்டி,
ஊருக்குள் வெட்டிப் பொழுது ஓட்டித் திரிகிறார்கள்.

“ஏண்டா… போன தடவை நாடகம் போடுறோம்னு சொல்லி எங்களை எல்லாம் நக்கல் பண்ணீங்க.
இப்ப மறுபடியும் ஆரம்பிக்கிறீங்களா? உதை வேணுமா ரெண்டு பேருக்கும்?”

”இல்ல பெரியப்பா… இது விஞ்ஞான விளக்க நாடகம்!”

“அடேங்கப்பா… எங்களுக்குத் தெரியாம என்னடா விளக்கம்?”

”பூமி எப்படி உருவாச்சுன்னு கதையும் பாட்டுமா சொல்லப் போறோம்!”

சின்னச்சாமி மெதுவாகக் கண்காட்டினார். கோவிந்தசாமி காதைக் கடித்தார்.
வாத்தியாரையும் கூப்பிட்டார். “இந்தப் பயலுக சிக்கல் புடிச்சவனுக. எதையாவது
சின்னப் புள்ளைத்தனமா இழுத்து விவகாரமாச்சுன்னா வம்பு. பெருமாள்கிட்ட சொல்லிப்
பயலைத் தட்டி வைக்கணும்!”

“அதாஞ்சரி” என்று தீர்மானம் நிறைவேறியது. மூவரும் அறிவித்தார்கள்….. “ஏலே
இரண்டு பேரும் ஆளுக்குப் பத்து ரூபா வாங்கிட்டு டவுனுக்குப் போய் சினிமா
பாருங்க. அதை விட்டுட்டு இந்தச் சில்லறைச் சோலி பார்த்துக்கிட்டுத் திரிஞ்சா
நல்லது கிடையாது!”

“என்ன இப்படிச் சொல்றீங்க?”

“மேல பேசாதீங்கடா! ஓடிப்போங்க!”

அவர்கள் இருவரும் தொங்கிப்போன முகத்துடன் தமக்குள் குசுகுசு என்று பேசியபடியே,
இவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போனார்கள்.

“என்ன, பயலுகளை ரொம்பக் கடுசாப் பேசிப்புட்டீங்க,” என்றார் பெருமாள்.

“பின்ன என்னண்ணே… வயசுப் பசக.. என்னமாச்சும் ஏழரையைக் கூட்டிப்புட்டா
நமக்குத்தானே பிரச்சனை? சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க.. இந்தப் பய நீங்க பெத்த
புள்ளை மாதிரியா இருக்கான்? ஒரு மட்டு மரியாதை கிடையாது. எதற்கெடுத்தாலும்
பதிலுக்குப் பதில் பேசிக்கிட்டு…”

“ப்ச்! என்ன பண்றது கோயிந்து! எனக்குப் புத்திர பாவத்துல சனீஸ்வரன்
இருக்கானாம். அடங்காத புள்ளைதான் பொறக்கும்னு எழுதியிருக்கு…”

அவர்களது பேச்சு, தகப்பன்களுக்கு அடங்காத தறுதலைப் பிள்ளைகள் பற்றி வெகுநேரம்
நடந்தது.

மூணு மணி வாக்கில், பெருமாள் எழுந்தார். வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்.
“திருவிழாவை நல்லா நடத்தணும். குதிரைக்கு பெயிண்ட் அடிக்கணுமில்ல? வாங்க, நாலு
பேருமாப் போயி கதவைத் திறந்து குதிரைய துடைச்சிட்டு, அப்படியே என்ன செலவாகும்னு
வெளில விசாரிச்சிட்டு வந்துடலாம்.”

பெருமாள், சின்னச்சாமி, கோவிந்தசாமி, காளமேகம் நால்வரும் இரண்டு மொபெட்களில்
கிளம்பினார்கள். வாத்தியாரது மொபெட்டின் பின்னால் பெருமாள் இருந்தார். போகையில்
வாத்தியார் கேட்டார்… “எதுக்குப் பெருமாள் திடுதிப்புன்னு கிளம்பினீங்க..
குதிரையைப் பாக்கறதுக்கு?”

பெருமாள் கனமான குரலில் சொன்னார்… “கொஞ்ச நாளா மனசே சரியில்லை… வாத்யாரே!
சாமிக்கும் பூமிக்கும் நம்ம மேல கோவம் வந்திருச்சுடானு நாலு நாள் முன்னாடி எங்க
அம்மா சொல்லுச்சு. நூறு வயசு ஆச்சு அதுக்கு! அது சொன்னது என் மனசில சாமி வாக்கு
மாதிரி பட்டுச்சு. எப்படியாச்சும் இந்த வருசம் நல்லவிதமா ஊர் கூடி, அந்த அழகர்
கால்ல விழுந்து, ‘எங்க தப்பையெல்லாம் மன்னிச்சிரு ஆண்டவா!’ன்னு சொல்லணும். மழை
பிச்சிக்கிட்டுப் பெய்யணும். அதுவரைக்கும் நான் திங்கிறது சோறு கிடையாது
வாத்யாரே!”

மலையடிவாரத்தை அடைந்தார்கள். மாலை நாலு மணி இருக்கும். சாயங்கால வெயில்
கண்களைக் கூசியது. மலையடிவாரம் ஆதலால் குளிர்ந்த காற்றும், லேசான பச்சிலை
வாசனையும் அடித்தன. பெருமாள் சட்டென்று தோள் துண்டை எடுத்து, இடுப்பில்
அனிச்சையாகக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் போட்டபடி மண்டபத்தை நோக்கி நடந்தார்.

மண்டபத்தைப் பார்த்த அனைவரும் அதிர்ந்தனர். துருப்பிடித்த பூட்டு சங்கிலி
ஓரமாகக் கிடக்க, பீடம் காலியாக இருந்தது. ஏழெட்டு பீடித் துண்டுகள் ஓரமாகக்
கிடந்தன. கடவுள் இன்னும் சில தினங்களில் ஏறி வரும் வாகனம் இருந்த இடம்
வெறுமையாக இருந்தது.

அழகர்சாமியின் குதிரையைக் காணவில்லை!

No comments: