Wednesday, June 22, 2011

அவன்-இவன் - அசிங்கத்தின் அரசாட்சி


அவன்-இவன் படம் வெளியாகி இன்றோடு ஏழு நாட்கள் ஆகிறது. வெளிவந்த நாளில் இருந்து இன்று வரை ட்விட்டரிலும், வலைதளங்களிலும் படத்தைப் பற்றி
எதிர்மறையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. இதனாலேயே அப்படத்தைப் பார்ப்பதை தவிர்த்து விடலாம் என்கிற முடிவிற்கு வந்த பிறகு எல்லாவற்றையும் மீறி பாலா என்கிற ஆளுமையின் கவர்சியால் நேற்று படத்தைப் பார்த்தேன்.

வழக்கமாக நன்றாக இல்லாத படத்தை குப்பை என்று ஒதுக்கிவிடுவதும், முடிந்த அளவிற்கு என் வலைப்பதிவில் அப்படத்தைப் பற்றி எந்த விமர்சனத்தையும்
முன்வைக்காமல் இருப்பதும் என் வழக்கம். அப்படி குப்பைக்கு போகக் கூடிய அளவிற்கு இந்த ஆண்டில் வெளிவந்த படங்கள் ஏராளம். இந்தப் படம் குப்பையிலும் அழுகிய குப்பையாகத் தான் எனக்குப் படுகிறது. உடனே நீங்கள் கேட்கலாம் குப்பைக்கே விமர்சனம் எழுதாதவன் அழுகிய குப்பைக்கு எதற்கு விமர்சனம் எழுத வேண்டுமென்று. காரணம், பாதிப்பு. ஆம், ஒரு குழந்தையின் வாயில் சோற்றுக்குள் மலத்தை மறைத்து ஊட்டி விட்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் பாலா என்பவனை நம்பி படம் பார்க்கச் சென்றால், ஆபாச வார்த்தைகளாலும், வக்கிரமான காட்சிகளாலும் படம் முழுக்க நம்மை அழைத்துச் செல்கிறார். தான் இயக்கிய ஒவ்வொரு படத்திற்கும் தேசிய விருதுகளை அள்ளிக் குவித்த ஒரு படைப்பாளியால் எப்படி இப்படி ஒரு இழிவான படத்தைக் கொடுக்க முடிகிறது. அதற்கு நீங்கள் உங்கள் இயல்பிலேயே இரண்டு வருடத்திற்கு ஒரு படத்தைக் கொடுத்தால் கூட போதுமே.
எதார்த்தம் என்ற பெயரில் இத் திரைப்படம் கட்டமைத்துள்ள வக்கிரமான காட்சிகளும், வசனங்களும் ஏராளம்.
விஷாலின் அம்மாவாக நடித்திருக்கும் அம்பிகாவிற்கும்,
ஆர்யாவின் அம்மாவிற்கும் வரும் வார்த்தை தகராறில் அம்பிகா ஒரு இடத்தில் ஆர்யாவைப் பார்த்துக் கூறுகிறார், "அவனுக்கு அவன் குஞ்சு மணிய புடிச்சு ஒழுங்கா ஒன்னுக்கு கூட போகத் தெரியாது."
பிரிதொரு காட்சியில், "எல்லாத்தையும் நீயே தீத்துடாத அம்மாவுக்கும் ஒரு கட்டிங் வை. வரவர சரக்கடிக்காம தூக்கம் வரமாட்டேங்குது."
என்கிறார். "காலைத் தென்றல் பாடி வரும்" என கதிரவனோடு கபடி ஆடிய அதே அம்பிகா இன்று உங்களின் கீழ்த்தரமான இயக்கத்தால் பீடி பிடித்துக் கொண்டு வக்கிரமான வசனங்களை பேசிக் கொண்டிருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக இன்று கருதப்படும் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தப் படத்திற்கு எழுதியுள்ள சில காலத்தால் அழியாத வசனங்களை படித்துப் பாருங்கள். இப்படத்தை பார்க்கலாமா? வேண்டாமா? என்று இதனை படித்து விட்டு தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

1. ஏண்டி, நான் தெரியாமத் தான் கேட்கிறேன் ஆம்பளைங்க பேண்ட்ல ஜிப் இருக்கறது ஓக்கே... பொம்பள புள்ளைங்க உங்க பேண்ட்ல எதுக்குடி ஜிப்பு???

2. டேய்... என் கண்ணுல இருந்து கண்ணீர் வர வெச்சுட்டீங்கடா... டி.எஸ்.பி சார் கண்ல இருந்து கண்ணீர் வராம பின்னே மூத்திரமா வரும்???

3. என்ன இது சலூன் பக்கம் பொம்பள புள்ள? ஏம்மா... கட்டிங்கா? சேவிங்கா?

4. அவளுக்கு ரெண்டு புருஷன். அதுவும் இல்லாம அவ வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே பல கை பட்டவ.
இது போன்ற இரட்டை அர்த்த வசனங்களை பாய்ஸ் படத்தில் எழுதியதால் சுஜாதாவையே விரட்டியடித்த ரசிகர்களுக்கு நீங்கள் எம்மாத்திரம்? கவனம் தேவை திரு.எஸ்.ரா.
குறைகுடமாக வீராப்பு காட்டி அலையும் ஜமின்தாராக வரும் ஜி.எம்.குமாரும், அவரின் நிர்வாணக் கொலையும், ஆர்யா ஜோடியாக வரும் மதுஷாலினியின் மனதில் பதியாத நடிப்பும், பரட்டைத் தலையும், வெறிக்கும் விழிகளுமாக வில்லன் ஆர்.கே-வும் என வழுவில்லாத திரைக்கதைக்குள் இவர்களின் தடுமாற்றம் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது.
விஷாலின் அபாரமான நடிப்பும், யுவனின் மிரட்டும் பிண்ணனி இசையும் மட்டுமே திரை அணைந்த பின்பும் நம் மனதில் தீபங்களாக ஒளிர்கிறது.

பாலாவும் அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் ஒருசேர படத்தைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அது ஒன்றே அவன்-இவன் படத்தின் இயக்குனருக்கு என்னைப் போன்ற ரசிகர்கள் கொடுக்கும் தண்டனை.

2 comments:

தம்பி கூர்மதியன் said...

வோர்டு வெரிஃபிகேஷனை எடுத்து விடுங்க..

உங்க கோபம் புரியுது..

அதனால தான் நான் படமே பாக்கல ஹி ஹி..

சத்யா said...

தங்கள் கருத்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி