Tuesday, July 5, 2011

ஒரு கனவை நனவாக்கினால்...

வாசகத்தால் அதற்கு மேல் நடக்க முடியவில்லை. உயிரோடிருக்கும் போது இதுபோன்றதொரு வலியை அவன் ஒருநாளும் கண்டதில்லை. சொற்களால் விவரிக்க முடியாத வலி. ஏழு மலை, ஏழு கடல் தாண்டியும் சேருமிடம் காணாது சோர்ந்தே போனான். செல்லும் வழியெல்லாம் உயிர்களே இல்லாத வெற்றிடங்கள் அவனை வரவேற்றுக் கொண்டிருந்தன. ஆனால் உடன் வந்த நரகத்தின் சீடர்களில் ஒருவனான தீக்குண்டம் சிறிதளவும் சோர்வின்றி தெம்பாகவே இருந்தான்.
"ஏம்பா, தீக்குண்டம் அதான் ஏழு மலை, ஏழு கடல் தாண்டிட்டோமே இப்பவாவது நரகம் வரைக்கும் போக ஏதாவது வண்டி வசதி ஏற்பாடு பண்ணிக் கொடுக்கக்கூடாதா?" என ஏக்கத்தோடு வினவினான்.
"வாழ்ந்த போது செஞ்ச பாவத்துக்கான முதல்படி தான் இது. இன்னும் 74மைல் தான் பேசாம நடந்து வா" என வாசகத்தை ஏளனப் பார்வையோடு பார்த்தான்.
இனி திரும்ப முடியாத தூரத்திற்கு வந்துவிட்டதையும், அடைய வேண்டிய இடம் வரை நடந்தே தான் சேர வேண்டும் என்பதையும் தீக்குண்டம் பேச்சின் பின்குறிப்பாக வாசகம் அறிந்து கொண்டான்.
பெருத்த பேரண்டத்தில் உயிர்களின் குரல்களாக அவ்விருவரின் உரையாடல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

வாசகம் : பூமிக்கும், நாம போற இடத்துக்கும் என்ன வித்தியாசம்?

தீக்குண்டம் : எல்லாமே பூமிக்குள்ள தான் இருக்கு. முழு உயிரோடு உடலும் ஒன்னா இருந்த இதுநாள் வரைக்கும் நீயிருந்த இடமும், உடலோடு சிறுஉயிருமாக இனிமேல் நீயிருக்க போற இடமும் தான் உன்னோட முழுமையான வாழ்க்கை வரலாறு.

வாசகம் : அய்யோ... எனக்கு எதுவுமே புரியல. ஒரு மனுஷன் செத்த பின்னாடி என்ன தான் நடக்குது?

தீக்குண்டம் : பிறந்த பின்பு இறந்து போகிற எல்லா உயிருக்குமே எஞ்சிய இன்னொரு வாழ்க்கையும் இருக்கு. அதாவது செத்த பின்னாடி உன்ன எரிச்சாலும் சரி, புதைச்சாலும் சரி உன்னோட வெற்றுடல் இங்க வந்திடும். வெற்றுடல் என்பது என்னன்னா? மூளை, இதயம், இரத்தம் மத்த உடலுக்குள் இருக்குற எந்த உறுப்புமே இருக்காது. வெற்றுடல்ல, நீ நடக்கலாம், பேசலாம், இன்ப, துன்பங்களை அனுபவிக்கலாம் அவ்வளவு தான். பசியெடுக்காது, தாகமெடுக்காது, அழமுடியாது, கனவு காண முடியாது, காதலிக்க முடியாது, படிக்க எழுத முடியாது இப்படி ஏராளமா இருக்கு.

வாசகம் : சரி, இப்படி வெற்றுடலோடு எத்தன நாளைக்கு?

தீக்குண்டம் : இறந்த பின்னாடி உன்னோட இந்த வெற்றுடலோட நீ வாழ்ந்த காலத்துல செலவிட்ட சக்த்தியோட தீவிரத்த பொறுத்து உன்னோட உயிர் மீறும். அந்த உயிர் இந்த வெற்றுடலோடு இங்க சேரும். அதுக்கப்புறம் நரகத்திலும், சொர்கத்திலும் உன்னோட எஞ்சிய வாழ்க்கையை கழித்து விட்டு காற்றோடு காற்றாக கரைந்துவிட வேண்டியது தான்.

வாசகம் : சொர்க்கம், நரகம்னா என்ன? என்ன வழிநடத்தும் நீயெல்லாம் யாரு? இந்த விதிமுறைகளையெல்லாம் ஏற்படுத்தி செயல்படுத்தும் காரணகர்த்தா யார்?

தீக்குண்டம் : உன்னால எத்தன உயிர்களுக்கு நன்மை தரமுடிஞ்சது? தீங்கு தரமுடிஞ்சது? என்ற நடவடிக்கைகளை வெச்சு தான் உனக்கு சொர்க்க காலமும், நரக காலமும் தீர்மானிக்கப்படுது. சொர்கத்துல உன்னால பலனடைந்த உயிர்கள் எல்லாம் உனக்கு சேவை செய்து தங்களோட எஞ்சிய வாழ்க்கையை கழிக்கும். நரகத்துல உன்னால பாதிக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் உனக்கு தண்டனை கொடுத்து தங்களோட எஞ்சிய வாழ்க்கையை கழிக்கும். ஒவ்வொரு உயிரும் இறந்த பின்பு தனக்கு கிட்டும் எஞ்சிய வாழ்க்கையை இரண்டு பகுதிகளாக வாழ வகுக்கப்பட்துள்ளது. முதலில் எல்லா உயிரும் தான் செய்த பாவத்தின் அளவைப் பொறுத்து நரகத்தில் தண்டனை பெற வேண்டும்.
இரண்டாவது தான் செய்த நற்செயலின் அளவைப் பொறுத்து சொர்கத்தில் பலனை பெற வேண்டும். இறுதியில் தனித்திருந்து மீதமிருக்கும் உயிரும், உடலும் காற்றோடு காற்றாக கரைந்து விடும்.
நான் யார்? என் தலைவன் யார்? என்று கேட்கும் உனக்கு சில கேள்விகள்
நீ வசிக்கும் பூமியின் சுழற்சிக்கு யார் காரணம்? உனக்கு விதிக்கப்பட்ட இறப்பு, பிறப்பு இதன் காரணகர்த்தா யார்?

வாசகம் : எல்லாமே இயற்கையால தான்.

தீக்குண்டம் : அந்த இயற்கை தான் எங்கள இயந்திரங்களாக இங்க இயங்க வெச்சிட்டிருக்கு.

வாசகம் : சற்று யோசித்து விட்டு.... அது சரி தீக்குண்டம். உங்க நரகத்தோட தலைவன் பேரென்ன?

தீக்குண்டம் : முன்ன பின்லேடன்னு பேர் வெச்சிட்டிருந்தாரு. இப்ப பின்லேடன் நரகத்துக்கு வந்துட்டு பேர் குழப்பம் ஆனதால கொஞ்ச நாளைக்கு முன்ன தான் மஹிந்தா ராஜபக்ஷேனு பேர் மாத்திக்கிட்டாரு.

திடுக்கென்று படுக்கையில் இருந்து விழித்த வாசகம் கடிகாரத்தைப் பார்த்தான். அதிகாலை 5மணி ஆகியிருந்தது. மீண்டும் தீக்குண்டத்தோடு உரையாடும் நோக்கில் படுக்கையில் சாய்ந்தான்.

3 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஐ.. பின்லேடனனை இன்னு விடலையா...

சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப சீரியஸ்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குடந்தை அன்புமணி said...

ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html