Monday, July 18, 2011

தெய்வத் திருமகள் - அன்பின் அடையாளம்


"ஒரு தந்தை தன் மகனிடம் காட்டும் பாச உணர்வு" என்கிற ஒற்றை வரியை தனது இரண்டாம் படத்திலேயே கச்சிதமான திரைக்காவியமாக உருவாக்கிய இயக்குனர் விஜய்க்கும் & கோ-விற்கும் எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
பறவை தன் கூட்டிற்கு இரை சுமந்து கொண்டு பறந்தலைவதைப் போல கிருஷ்ணாவாக விக்ரம் "நிலா..நிலா"-வென்று சொல்லிக் கொண்டிருக்கும் காட்சிகளும்,
"கிருஷ்ணா வந்தாச்சு... நிலா வந்தாச்சு..." என கைகளை உயர்த்தி உயர்த்தி அவர் செய்யும் மேனரிஸங்களும் தமிழ் சினிமாவிற்கு புதிது. நாயகியின் இடுப்பை பிடித்து ஆடிக் கொண்டும், பத்து பேரை துரத்தி துரத்தி அடித்துக் கொண்டும் இருக்கும் தமிழ் சினிமா நாயகர்களுக்கு மத்தியில் தன் உடலை வருத்தி கொண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் நடிக்க முன்வந்த டாக்டர்.விக்ரம் அவர்களுக்கு சபாஷ்.
படத்தில் இவருக்கு போட்டியாக களத்தில் இருப்பது பேபி சாரா தான். நிலா என்கிற குழந்தைப் பாத்திரத்தில் இவரது இயல்பான நடிப்பு இதுவரை நாம் கண்டிராதது.
அப்பா... அம்மா எங்க?
சாமிக்கிட்ட...
ஏன்? சாமிக்கு அம்மா இல்லையா?
நல்லவங்கள சாமி தன் கூடவே வெச்சுக்கும்.
அப்போ நாம நல்லவங்க இல்லையாப்பா???
இரவு வேளையில் தான் வாழ்வின் விடியலுக்காக ஏங்கும் நிலாவின் இந்த வார்த்தைகளில் வெளிப்படும் ஆயிரமாயிரம் உணர்வலைகளை உள்வாங்கிக் கொள்ளும் பார்வையாளனின் கண்களில் கண்ணீர் வரத்தான் செய்யும்.
"அப்பா யான ஏம்பா அவ்வளவு பெருசா இருக்கு?
நெறய தீனி சாப்பிடுதே, அதான்..
இப்படி காட்சிகளுக்கும், கதாப்பாத்திரங்களுக்கும் பலமான பாலமாக வசனங்களை அமைத்து ஒரு அற்புதமான அனுபவத்தை நமக்கு கொடுக்கிறார்.
நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் படத்தின் ஹைலைட். எஸ்.பி.பி குரலில் ஒலிக்கும் "ஜகத்தோம்" பாடலின் இசையும், பின்னணி இசையும் கொட்டும் மழையின் சங்கீதமாக நம் மனதில் படிகிறது. நிலாவின் சித்தியாக வரும் அமலாபால், வக்கீலாக வரும் அனுஷ்கா, நாசர் உதவியாளர் எம்.எஸ்.பாஸ்கர் என கதைக்கு கச்சிதமாய் பொருந்திய பாத்திரங்கள். காட்சிக்கு காட்சி கண்ணீரில் நாம் கலங்கும் கணங்களில் சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகளில் நம் உள்ளங்கள் அழுதாலும், உதடுகள் சிரிக்கவே செய்கின்றன.

படம் பார்த்தவர்களும், சில விமர்சகர்களும் கூட "மனநலம் குன்றிய பாத்திரத்தில் நடிக்கும் எல்லோரையும் ஏன் இயக்குனர்கள் ஸ்வட்டரோடு அலைய விடுறாங்க'
என்கிறார்கள். ஆனால் நிஜமாகவே எங்கள் தெருவில் கூட மனநலம் குன்றிய இரண்டு பேர் எப்போதும் ஸ்வட்டரோடு தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இது பற்றி மனநல மருத்துவரிடம் விசாரித்த போது, அம்மாவின் கருவறையில் இருக்கும் கதகதப்பு பிறந்து வளர்ந்த பிறகும் தேவைப்படுவதால் தான் அவர்கள் ஸ்வட்டரோடு இருக்கிறார்கள் என்றார்.
படத்தின் முதல் ஒரு மணிநேரம் திரைக்கதையின் தொய்வு, படத்தின் இறுதி ஒரு மணி நேரக்காட்சியில் கதாப்பாத்திரத்தின் அழுத்தமான பதற்றம் சுயநலத்தின்
வெளிப்பாடாக இருப்பது, சிவாஜியின் அழுவாச்சி படங்களை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள், "ஐ யாம் சாம்" - படத்தின் மையக்கரு, அதே ஊட்டி, அதே மேனரிஸங்கள் (மூன்றாம் பிறை) என படத்தைப் பற்றிய
குறைகள் என்று சில பட்டியல்களும் இருக்கிறது. இயக்குவதற்கு முன்பு விஜய் அவர்கள் அமிதாப் நடித்த "பா" -படத்தை ஒரு முறை பார்த்திருக்கலாமோ?
என்ற ஏக்கம் தான் இப்போது தோன்றுகிறது. இருந்தாலும் "தெய்வத் திருமகளும் - தெய்வத் திருமகனும்" தமிழ் சினிமாவின் நிரந்தரமான அடையாளம் என்று
நிச்சயம் கூறிக் கொள்ளலாம்.

No comments: