Saturday, July 23, 2011

கரைந்திடும் கவலைகள்...

இந்தப் பதிவை படிக்கும் உங்களின் ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனை எத்தனை போராட்டங்களும், பிரச்சனைகளும் இருக்கும் என்பதை நானறிவேன்.
இதற்கு ஆறுதலாகத் தான் நாம் எதையாவது பற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இலக்கியம், கலை, சினிமா என்று விதவிதமான வேடிக்கை பொருட்கள் நம் கண்முன்னே ஏராளம். நம் பெரும் துயரங்களும், கசப்பான அனுபவங்களும் இந்த வேடிக்கை பொருட்களில் கொஞ்சம் கரைந்து விடுவது தான் அந்த படைப்பின் உன்னதம்.
சமிபத்தில் நான் ரசித்த ஒரு கவிதையையும், ஒரு கேள்வி-பதில் பகுதியையும் பதிவிட்டுள்ளேன். உங்கள் கவலைகளும் சற்று கரைகிறதா என்று படித்து
உணருங்கள்.

வாழ்வின் எதார்த்தங்களை தன் எளிய வார்த்தைகளில் பதிவு செய்யும் கவிஞர் தேவதச்சனின் கவிதைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவரின் "யாருமற்ற நிழல்" கவிதைத் தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதை.

நான் மழையாக இருந்தால்

நான்
மழையாக இருந்தால்
ஒரு நிமிடம் நின்றுவிட்டுப் பெய்வேன்
கைக்குழந்தையை ஏந்திச் செல்லும்
மூதாட்டி
பாதுகாப்பான இடத்திற்குப்
போகட்டும் என்று
குடையாக இல்லாதது எல்லாம்
குடையாக மாறுவதை
குழந்தை பார்க்கட்டும் என்று
இருநிறத் தலைக்காரி வேகமாய்
நடந்து
மூச்சு வாங்குகிறாள்
நான் மழையாக இல்லாததால்
ஒரு நிமிடம் நின்றெல்லாம் பெய்யவில்லை
பார்த்து பார்த்து, என்று மட்டும்
சொன்னேன்,
அவள் ஏன்
தற்காலிகமாக இளமையோடு
இருந்தாள்?


பலகாலமாக வாசகனுக்கும், ஏன் ஒரு சில படைப்பாளிகளுக்கே கூட இந்தக் கேள்விக்கான பதிலை புரிந்து கொள்வதில் சிக்கலும், சங்கடங்களும் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட கேள்விக்கான பதிலை தன் தீர்க்கமான புரிதலில் எளிமையாய் விளக்கி இருக்கிறார் எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்.

நவீனத்துவம், பின்நவீனத்துவம், யதார்த்தவாதம், மேஜிக்கல் ரியலிசம்... என்பன போன்ற வார்த்தைகளும்... அவை சொல்ல வரும் விஷயங்களும் என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்குச் சுத்தமாகப் புரிவது இல்லையே. விளக்க முடியுமா?

நவீனத்துவம் என்பது வாழ்வை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்வது. 19-ம் நூற்றாண்டில் தொழில் புரட்சிக்குப் பிறகு உருவான சிந்தனை. உதாரணத்துக்கு, முந்தைய காலங்களில் கடவுள் கண் முன்னே தோன்றினால், பக்தன் உருகி தன்னை ஒரு கடையேனாகக் கருதி காலில் விழுந்து வணங்குவான். அது மரபுப் பார்வை. அதே கடவுளை, புதுமைப்பித்தன் தனது 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ சிறுகதையில், காபி வாங்கிக் கொடுக்க ஹோட்டலுக்கு அழைத்துப் போவதுடன், உமது லீலைகளை எல்லாம் பில்லுக்குப் பணம் கொடுப்பதற்குக் காட்டும் என்று பகடி பேசுகிறார். இதுதான் நவீனத்துவம். வாழ்வின் சிக்கல்களை விஞ்ஞானபூர்வமாகப் பேசியது நவீனத்துவம்!

பின்நவீனத்துவம்... 20-ம் நூற்றாண்டின் சிந்தனைத் தளம். இலக்கியம், சினிமா, இசை, கட்டடக் கலை என எல்லாத் துறைகளிலும் பின்நவீனத்துவம் உண்டு. நவீனத்துவம் போதவில்லை என்று இந்தக்
கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஒரு வார்த்தை யில் சொல்வதாயின், சிதறடிப்பது என்பது தான் அதன் ஒரே நோக்கம். ஒரே கதைக்குள் நாலைந்து கதைகள் சொல்வது, ஒரே சினிமாவில் வேறுபட்ட நாலைந்து கதைப்போக்குகளைச் சரடுகளாக உருவாக்கி, கதையின் மையத்தைச் சிதறடிப்பது (Babel - Alejandro González Iñárritu), புதிர்மையை உருவாக்குவது (Inception - Christopher Nolan), நகல் உண்மைகளை அடையாளம் காண்பது, பாலியல் சிக்கல்களை நுணுகி ஆய்வது என அதற்குப் பல தளங்கள் உண்டு. பின்நவீனத்துவம், வாசகனை எழுத்தாள னுக்கு இணையாக்கியதுடன் கதையை விருத்தி செய்வதே வாசகனின் வேலை என்கிறது!

யதார்த்தவாதம்... 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான கோட்பாடு. அன்றாட வாழ்க்கையை அதன் உட்புதைந்திருக்கும் உண்மைகள் புலப்படுமாறு எடுத்துச் சொல்வது யதார்த்தவாதம். மனிதனின் மேம்பாட்டுக்கும் கீழ்நிலைகளுக்கும் அவனது செயல்களே காரணம் என்கிறது யதார்த்தவாதம். கு.அழகிரிசாமியின் கதைகளைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.

மேஜிக்கல் ரியலிசம்... உள்ளதை உள்ளபடியே காட்டும் மாயக் கண்ணாடி முன்பாக நின்று, அரக்கனின் உயிர் எங்கே இருக் கிறது என்று கேட்க, அது பாதாள லோகத்தில் உள்ள கிளியின் உடலுக்குள் ஒளிந்து இருக்கிறது என்று அடையாளம் காட்டிக் கொடுக்கிற கதையைக் கேட்கையில், ஏன்... எப்படி என்று லாஜிக் கேட்காமல், அந்த விந்தையில் மயங்கிப்போயிருந்தோம் இல்லையா? அதுதான் மேஜிக்கல் ரியலிசம்! வாழ்வில் நாம் இழந்துபோன விந்தைகளை, மாயத்தைக் கதையில் மறுபடி உருவாக்குவதே மேஜிக்கல் ரியலிசம்!

- எஸ். ரா

நன்றி விகடன்

4 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

நன்று....

அம்பாளடியாள் said...

அழகான விளக்கம் .விளக்கம் அளித்தவருக்கு வாழ்த்துக்கள் .
இதைப் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

மாலதி said...

அழகான விளக்கம் .

மாய உலகம் said...

கவிதையில் கரைந்தது கனநேர கவலைகள்..... பதிவுக்கு பாராட்டுக்கள்