Monday, August 22, 2011

ஒரு கவிதையின் முகவரி

விடுதலையை கற்றுத் தர முடியாது,
அது உணர்தலே
- பௌஸ்யா

சமுக வலைதளங்களில் என்னை மிகவும் கவர்ந்தது ட்விட்டர் தான். அதில் கூட சிலசமயம் நம்மாட்கள் கண்டமேனிக்கு ஹேஸ்டேகை உருவாக்கி டைம்லைனை மொக்கையாக்கி விடுகின்றனர். ஆனாலும் ஆரோக்கியமான விவாதங்களும், பலதரப்ப்பட்ட துறைகளின் லேட்டஸ்ட் அப்டேட்களும், கவிதைகளும், நகைச்சுவைகளும் நீர்வீழ்ச்சியைப் போல கொட்டிக் கொண்டேயிருக்கின்றன. இப்போது மேழே உள்ள ஒற்றைவரிக் கவிதையை மறுபடியும் படித்து விட்டு தொடருங்கள். இந்தக் கவிதையின்
சாரத்தையும், அது தரும் அனுபவங்களையும் நான் விளக்கப் போவதில்லை. இதை எழுதியவர் ஒரு ஜென் துறவியோ, ஈழத்துக் கவிஞனோ அல்லது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழித்தவரோ அல்ல. என்னைப் போன்று உங்களைப் போன்று பொருளாதாரம் எனும் இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் சராசரி தான். அந்த சராசரியை படைப்பாளியாக்குவது எது? அந்த படைப்பிற்கான சக்தி அவனுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? அவன் சிந்தனைகளின் சிறைக்கூடம் எது? இதுபோன்ற கேள்விகள் இதுபோன்ற
வரிகளைப் படித்தால் எனக்குள் எழுகின்றன. யோசித்துப் பார்த்தால் ஒரு தீவிர படைப்பாளி தான் வாழ்க்கையை உயிர் மெய் எழுத்துக்களிலேயே கட்டமைத்துக்
கொள்கிறான். அவன் வாழும் ஒவ்வொரு வினாடியையும் எழுத்தைப் பற்றிக் கொண்டே கடக்கிறான்.

சமகால இலக்கிய உலகில் சந்திராவின் படைப்புகள் மிகவும் கவனத்திற்கு உரியவை. இவர் எழுதி "பூனைகள் இல்லாத வீடு" "காட்டின் பெருங்கனவு" என்கிற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், "நீங்கிச் செல்லும் பேரன்பு" என்ற கவிதைத் தொகுப்பும் வெளி வந்திருக்கிறது. ஆனால் இவரது எழுத்துக்கள் "பௌஸ்யா" எனும் பெயரில் இவர் எழுதும் ட்விட்டர் தளத்தில் தான் எனக்கு அறிமுகமானது. நான் படித்த பெண் கவிஞர்களில் இருந்து இவர் முற்றிலும் வேறுபடுகிறார். பொதுவாக பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் வெளிப்படும் ஆணாதிக்கமும், பாலியல் சிந்தனைகளும் எனக்கு பலமுறை ஆசுவாசத்தையே தந்திருக்கிறது. ஆனால் இவரின் எழுத்துக்கள் அப்படியில்லை.
சராசரி மனிதக் கண்ணோட்டத்தின் புள்ளியிலேயே பயணிக்கும் இயல்பு இவருக்கு வாய்த்திருக்கிறது.

" அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளை
விரைந்து கடக்கின்றன, பறவைகள் "

இந்த உலகில் மனிதன் மட்டுமல்ல எல்லா உயிர்களுக்குமே உள்ள பொதுவான குணம் சுயநலம். இந்தக் கவிதையில் அவர் குறிப்பிடும் பறவையும் சுயநலத்தின் அடையாளம் தான். தான் உண்ணும் உணவிற்காக விதைத்து அறுவடை செய்து தனக்கு மட்டுமே பயன்படுத்துக் கொண்ட அந்த மனித மனமும் சுயநலத்தின் அடையாளம் தான். உன்னளவிறகான சுயநலச் செயல் அதுவென்றால் அந்த வயல்வெளியை விரைந்து கடப்பது தான் அந்த பறவைக்கான சுயநலச் செயல். இது என்னளவிலான தாக்கம் மட்டுமே. உங்களின் ரசனைக்கும் வாசிப்பு அனுபத்திற்கும் ஏற்ப மாறுபடலாம். ஒரு கவிதையென்பது வாசகனிடம் வெறும் வார்த்தைகளாக மட்டும் வந்தடைவது அல்ல. படிக்கும் போது ஏதோவொரு வினாடியில் சொல்லில் அடங்காத ஒரு அனுபவத்தை அந்தக் கவிதை தரக்கூடியதாக இருக்க வேண்டும். அந்த அனுபத்தை பௌஸ்யாவின் கவிதைகள் பூர்த்தி செய்கின்றன.

வாழ்நாளில் நம் பெற்றோரிடமோ அல்லது நெருங்கிப் பழகும் நண்பர்களிடமோ கூட என் குறைகளை என்னிடம் கூறுங்கள். என் நிறைகளை என்னிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் என்று கூறியிருக்கிறோமா? ஆனால் பௌஸ்யா ஒரு கவிதையில்...

"என் எழுத்துக்கு தரும் மதிப்பீடுகளை
நான் வெறுக்கிறேன், விமர்சனங்களை வரவேற்கிறேன்" ---- குறிப்பிடுகிறார்.

ஆக இதுபோன்ற சிந்தனைகள் தான் ஒரு சராசரி மனிதனுக்கும், படைப்பாளிக்கும் வேறுபடும் வாழ்வனுபத்தை உணர முடியும். இன்னமும் இதுபோல் இவரின் எழுத்துக்களைப் பற்றி கூறிக்கொண்டே செல்லலாம். சுருக்கம் என்பது தான் இணைய எழுத்தில் இப்போதுள்ள விதி. ஆகவே அவரின் ஒருசில ட்விட்டுகள் மட்டும் உங்களின் வாசிப்பிற்கு...

உன் ஒப்பற்ற கருணையால் ஒன்றே ஒன்று செய். என்னை நிரந்தரமாக பிரிந்து செல்கையில்
நான் அழுகிறேனா என்று திரும்பி பார்த்துக் கொண்டு செல்லாதே.

பற..! இரை தேட பழகு, கூடு கட்ட பழகு,
பறவையாய் இருக்க பழகு.

உன் நினைவின் பாத்திரத்தில் நீயற்ற
எத்தனை கோடி அன்பை நிறைத்தாலும் அது வெற்றிடமே

ஆழியில் பெய்யும் மழை என்றும்
தீராத தாகத்தோடே இருக்கிறது.


Sunday, August 14, 2011

சுதந்திரம் பற்றிய நம் புரிதல்கள்


ஆங்கிலேயரிடம் இருந்து நம் முன்னோர்கள் (என் தாத்தா, பாட்டி இல்ல) வாங்கித் தந்த இந்த சுதந்திர நாட்டில் நான் தற்போது இருக்கும் நிலவரம் ஏன் ஏறக்குறைய நாம் எல்லோரும் இருக்கும் நிகழ்கால நிலை யாருக்காகவோ, எதற்காகவோ அடிமையாக இருக்க வேண்டிய நிலை தான். எதற்காக அடிமையாக இருக்றோம் என்றால் உணவிற்காகவோ, உடைக்காகவோ, உறவிடத்திற்காகவோ அல்ல, நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஆடம்பர வாழ்க்கைக்குத் தான். வாழ்க்கை தரும் எளிமையான அனுபவங்களையும், அற்புதங்களையும் பெறத் தவறி விட்டு எதற்கோ, எங்கோ திசைதெரியாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். வாழ்தலின் ருசியை இப்போதுள்ள தலைமுறைக்கு வேறுவடிவில் வேறுமுறையில் கொடுக்க பழகி விட்டோம். பெயருக்குத் தான் சுதந்திரம் பெற்றோமே தவிர நாம் ஏதாவது ஒன்றிற்கு அடிமையாகவும், பிறரை நமக்கு ஏதோவொரு விதத்தில் அடிமையாக்கியும் தான் இந்த வாழ்வை கடந்து கொண்டிருக்கிறோம். நம் சுதந்திரத்தை, நம் எளிய வாழ்க்கை முறையினை, நாம் சம்பாதிக்கும் பணத்திடம் அடகு வைத்து விட்டோம். அந்த குற்றவுணர்வு ஒவ்வொரு ஆண்டும் இந்த சுதந்திர தினத்தில் மட்டும் நம் நினைவிற்கு வந்து அடுத்த நாளிலேயே மறைந்தும் விடுகிறது.

தியாகி எனும் போர்வையில் அப்பாவி மக்களை தன் கவனத்திற்கு கொண்டு வந்து தன்னை பிரபலமாக்கி கொள்ளும் தந்திர மனிதர்கள் தான் நாம் பெற்ற இந்த
சுதந்திர இந்தியாவில் இப்போது இருக்கின்றனர். உண்மையான தியாகிகளும், நாட்டு நலன் மட்டுமே தன் நலனாக கொண்ட மனிதர்கள் எல்லாம் ஒரு வேலை
சோற்றுக்கே சிங்கியடித்து வறுமையோடு வழ்வை நகர்த்தி நகர்த்தி இன்று காற்றோடு காற்றாய் கரைந்து விட்டனர். இனி அவர்களை நினைத்துக் கொள்ள
நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்த வாழ்க்கையில் ஒருபோதும் சாத்தியமில்லை. இன்றைய சூழ்நிலையில் நமக்கு முதன்மையாகப்படுவது நம் பாதுகாப்பும், நம் குடும்பத்திற்கான வசதியான வாழ்க்கை அமைப்பும் தான். இந்தச் சேதிகளை எல்லாம் செவிடன் காதில் சங்கொலியாய் ஊதலாம் என்றால் அவனுக்கு கூட நேரமில்லை.
அந்த காரணத்திற்காகத் தான் இந்த விஷயங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் என் புலம்பல்களுக்கு வார்த்தைகள் வந்து விழுந்தாலும் மனம் ஏனோ அதை எழுத மறுக்கிறது. அடுத்த சுதந்திர தினத்திற்குள்ளாவது நமக்கான உண்மையான சுதந்திரம் கிடைக்குமா என்ற நம்பிக்கையோடு தான் நானும், இந்த பூமியோடு சுற்றிக் கொண்டிருக்கிறேன்.Tuesday, August 9, 2011

கையளவு கவிதை...


உயிர்மெய் எழுத்துக்களின் குவியலில் உறக்கம் பீடிக்காமல் தத்தளித்த என் இரவுகள் ஏராளம். முகுந்த் நாகராஜனின் "அகி - 139 கவிதைகள்" என்கிற கவிதைத் தொகுப்பை படித்தவுடன் அதுபோன்றதொரு பரவசமான இரவு நேற்றிரவு ஏற்பட்டது. சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், இலக்கிய கட்டுரைகள் என என் தாகம் தணிக்க இங்கே எத்தனை வகையான பானங்கள். ஒரு எழுத்தாளனின் வலிமையே தடுமாறும் வாசகனை தன் படைப்பின் வசம் இழுப்பது தான். நான் நானாக சென்று முகுந்த் நாகராஜன் கவிதைகள் வசம் என்னை ஒப்படைத்து விட்டேன். அவரின் கவிதைகளைப் பற்றி உலகம் பேசுமா தெரியவில்லை, ஒரு தமிழனாக அவரின் சில கவிதைகளை பதிவு செய்கிறேன். நீங்களும் உணருங்கள்....

நிலவைக் கவிதையாய் மாற்றிய போது

வானத்தில் பால் சிந்திவிட்டது.
சூரிய மாவில் சுட்ட தோசை.
வெட்டி எரிந்த சூரிய விரல் நகம்.
'அதை' ப்போல் 'இது' என்று
எழுதிப் பழகிவிட்டேன்.
'இதை' எழுதப் பழகவில்லை
வார்த்தை வந்து மறைக்கிறது நிலவை.

பைத்தியமாய் இருக்க சில குறிப்புகள்

திடுக்கிடும்படி சிந்திப்பது அவசியம்.
உபயோகித்த வார்த்தைகளை
உபயோகிக்காமல் தவிர்க்கவும்.
எல்லோரும் எதிர்பார்க்கும்படி இருக்க வேண்டாம்.
எதிர்பார்ப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகளே போதும்.
உன் அடுத்த வார்த்தை எனக்குத் தெரிந்தால்
நீ அதைச் சொல்லக் கூடாது.
வாக்கியம் முடியவில்லையே
என்று வருத்தப்படாதே.
வாக்கியம் முடிவது முக்கியமா?
நீ பைத்தியம் ஆவது முக்கியமா?

உனக்கு தெரிந்தால்

நீ எழுதிவிட்டுத் திருப்பித் தந்த பேனாவையும்,
ஃபோன் செய்ய என்று பொய் சொல்லி
உன்னிடமிருந்து நான் வாங்கிய
ஒரு ரூபாய் நாணயத்தையும்
இன்னும் வைத்திருக்கிறேன் பத்திரமாய்,
அவ்வப்போது
தொட்டுப் பார்த்துக்கொண்டும்
முத்தம் கொடுத்துக்கொண்டும்
இதெல்லாம்
கல்யாணம் ஆகிக் குழந்தைகள் பெற்று
அம்மாவாகிப் போன உனக்குத் தெரிந்தால்
சந்தோஷப்படுவாய்தான்.
ஆனால்...

நின்ற இடம்

பாதி தூக்கத்தில் பஸ் நிற்கும்.
உள்ளே விளக்கு எரியும்.
ஹை-வேயைக் கடந்து போய்
சிறுநீர் கழித்துவிட்டு வருவேன்.
ட்யூப்லைட் போட்டு
பெருசாய் பாட்டு போட்டிருப்பார்கள்.
மேலே நிலா.
நல்ல காற்று.
எதிரே முடிவில்லாத இருட்டுச் சாலை.
அநியாய விலைக்கு இளநீர் விற்கும் பையனிடம்
'இது என்ன இடம்' என்று கேட்பேன்,
சித்தூர் என்றோ, காஞ்சிபுரம் என்றோ,
விழுப்புரம் என்றோ, பலமனேரி என்றோ,
சொல்லுவான்.
மீண்டும் சாலையில் இணைந்து,
உள்ளே விளக்கணைத்த பிறகு
திரும்பிப் பார்ப்பேன் ஜன்னல் வழியாய்.
ஒரு முறை பஸ்ஸைத் தவறவிடப் போகிறேன்.