Tuesday, August 9, 2011

கையளவு கவிதை...


உயிர்மெய் எழுத்துக்களின் குவியலில் உறக்கம் பீடிக்காமல் தத்தளித்த என் இரவுகள் ஏராளம். முகுந்த் நாகராஜனின் "அகி - 139 கவிதைகள்" என்கிற கவிதைத் தொகுப்பை படித்தவுடன் அதுபோன்றதொரு பரவசமான இரவு நேற்றிரவு ஏற்பட்டது. சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், இலக்கிய கட்டுரைகள் என என் தாகம் தணிக்க இங்கே எத்தனை வகையான பானங்கள். ஒரு எழுத்தாளனின் வலிமையே தடுமாறும் வாசகனை தன் படைப்பின் வசம் இழுப்பது தான். நான் நானாக சென்று முகுந்த் நாகராஜன் கவிதைகள் வசம் என்னை ஒப்படைத்து விட்டேன். அவரின் கவிதைகளைப் பற்றி உலகம் பேசுமா தெரியவில்லை, ஒரு தமிழனாக அவரின் சில கவிதைகளை பதிவு செய்கிறேன். நீங்களும் உணருங்கள்....

நிலவைக் கவிதையாய் மாற்றிய போது

வானத்தில் பால் சிந்திவிட்டது.
சூரிய மாவில் சுட்ட தோசை.
வெட்டி எரிந்த சூரிய விரல் நகம்.
'அதை' ப்போல் 'இது' என்று
எழுதிப் பழகிவிட்டேன்.
'இதை' எழுதப் பழகவில்லை
வார்த்தை வந்து மறைக்கிறது நிலவை.

பைத்தியமாய் இருக்க சில குறிப்புகள்

திடுக்கிடும்படி சிந்திப்பது அவசியம்.
உபயோகித்த வார்த்தைகளை
உபயோகிக்காமல் தவிர்க்கவும்.
எல்லோரும் எதிர்பார்க்கும்படி இருக்க வேண்டாம்.
எதிர்பார்ப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகளே போதும்.
உன் அடுத்த வார்த்தை எனக்குத் தெரிந்தால்
நீ அதைச் சொல்லக் கூடாது.
வாக்கியம் முடியவில்லையே
என்று வருத்தப்படாதே.
வாக்கியம் முடிவது முக்கியமா?
நீ பைத்தியம் ஆவது முக்கியமா?

உனக்கு தெரிந்தால்

நீ எழுதிவிட்டுத் திருப்பித் தந்த பேனாவையும்,
ஃபோன் செய்ய என்று பொய் சொல்லி
உன்னிடமிருந்து நான் வாங்கிய
ஒரு ரூபாய் நாணயத்தையும்
இன்னும் வைத்திருக்கிறேன் பத்திரமாய்,
அவ்வப்போது
தொட்டுப் பார்த்துக்கொண்டும்
முத்தம் கொடுத்துக்கொண்டும்
இதெல்லாம்
கல்யாணம் ஆகிக் குழந்தைகள் பெற்று
அம்மாவாகிப் போன உனக்குத் தெரிந்தால்
சந்தோஷப்படுவாய்தான்.
ஆனால்...

நின்ற இடம்

பாதி தூக்கத்தில் பஸ் நிற்கும்.
உள்ளே விளக்கு எரியும்.
ஹை-வேயைக் கடந்து போய்
சிறுநீர் கழித்துவிட்டு வருவேன்.
ட்யூப்லைட் போட்டு
பெருசாய் பாட்டு போட்டிருப்பார்கள்.
மேலே நிலா.
நல்ல காற்று.
எதிரே முடிவில்லாத இருட்டுச் சாலை.
அநியாய விலைக்கு இளநீர் விற்கும் பையனிடம்
'இது என்ன இடம்' என்று கேட்பேன்,
சித்தூர் என்றோ, காஞ்சிபுரம் என்றோ,
விழுப்புரம் என்றோ, பலமனேரி என்றோ,
சொல்லுவான்.
மீண்டும் சாலையில் இணைந்து,
உள்ளே விளக்கணைத்த பிறகு
திரும்பிப் பார்ப்பேன் ஜன்னல் வழியாய்.
ஒரு முறை பஸ்ஸைத் தவறவிடப் போகிறேன்.
11 comments:

மாய உலகம் said...

கையளவு கவிதை... கலக்கலான கவிதை

மாய உலகம் said...

பைத்தியம் ஆவது தான் முக்கியம் ஹி ஹி ஹி

மாய உலகம் said...
This comment has been removed by the author.
மாய உலகம் said...

மாய உலகம் said...
நின்ற இடம்.. நிறைய முறை மனதில் தரும் ஒரு வித முடிவில்லா சிந்தனை , பேருந்து பயணத்தின் இடை நிருத்தம் சொல்லிய விதம் நச் நண்பா

மாய உலகம் said...

திரு முகுந்த் நாகராஜனுக்கும், தாங்களுக்கும் வாழ்த்துக்கள்

கோகுல் said...

'இதை' எழுதப் பழகவில்லை
வார்த்தை வந்து மறைக்கிறது நிலவை.


நச்!

கோகுல் said...

கல்யாணம் ஆகிக் குழந்தைகள் பெற்று
அம்மாவாகிப் போன உனக்குத் தெரிந்தால்
சந்தோஷப்படுவாய்தான்.
ஆனால்...
//

முடியும் இடத்தில தொடங்குகிறது ஒரு கவிதை பலே!

கோகுல் said...

எழுதிய முகுந்த் நாகராஜனுக்கும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

சமுத்ரா said...

nalla kavidhaigal

தமிழ்வாசி - Prakash said...

கலக்கல் கவிதை

அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல அறிமுகம்..

அருமை..