Monday, August 22, 2011

ஒரு கவிதையின் முகவரி

விடுதலையை கற்றுத் தர முடியாது,
அது உணர்தலே
- பௌஸ்யா

சமுக வலைதளங்களில் என்னை மிகவும் கவர்ந்தது ட்விட்டர் தான். அதில் கூட சிலசமயம் நம்மாட்கள் கண்டமேனிக்கு ஹேஸ்டேகை உருவாக்கி டைம்லைனை மொக்கையாக்கி விடுகின்றனர். ஆனாலும் ஆரோக்கியமான விவாதங்களும், பலதரப்ப்பட்ட துறைகளின் லேட்டஸ்ட் அப்டேட்களும், கவிதைகளும், நகைச்சுவைகளும் நீர்வீழ்ச்சியைப் போல கொட்டிக் கொண்டேயிருக்கின்றன. இப்போது மேழே உள்ள ஒற்றைவரிக் கவிதையை மறுபடியும் படித்து விட்டு தொடருங்கள். இந்தக் கவிதையின்
சாரத்தையும், அது தரும் அனுபவங்களையும் நான் விளக்கப் போவதில்லை. இதை எழுதியவர் ஒரு ஜென் துறவியோ, ஈழத்துக் கவிஞனோ அல்லது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழித்தவரோ அல்ல. என்னைப் போன்று உங்களைப் போன்று பொருளாதாரம் எனும் இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் சராசரி தான். அந்த சராசரியை படைப்பாளியாக்குவது எது? அந்த படைப்பிற்கான சக்தி அவனுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? அவன் சிந்தனைகளின் சிறைக்கூடம் எது? இதுபோன்ற கேள்விகள் இதுபோன்ற
வரிகளைப் படித்தால் எனக்குள் எழுகின்றன. யோசித்துப் பார்த்தால் ஒரு தீவிர படைப்பாளி தான் வாழ்க்கையை உயிர் மெய் எழுத்துக்களிலேயே கட்டமைத்துக்
கொள்கிறான். அவன் வாழும் ஒவ்வொரு வினாடியையும் எழுத்தைப் பற்றிக் கொண்டே கடக்கிறான்.

சமகால இலக்கிய உலகில் சந்திராவின் படைப்புகள் மிகவும் கவனத்திற்கு உரியவை. இவர் எழுதி "பூனைகள் இல்லாத வீடு" "காட்டின் பெருங்கனவு" என்கிற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், "நீங்கிச் செல்லும் பேரன்பு" என்ற கவிதைத் தொகுப்பும் வெளி வந்திருக்கிறது. ஆனால் இவரது எழுத்துக்கள் "பௌஸ்யா" எனும் பெயரில் இவர் எழுதும் ட்விட்டர் தளத்தில் தான் எனக்கு அறிமுகமானது. நான் படித்த பெண் கவிஞர்களில் இருந்து இவர் முற்றிலும் வேறுபடுகிறார். பொதுவாக பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் வெளிப்படும் ஆணாதிக்கமும், பாலியல் சிந்தனைகளும் எனக்கு பலமுறை ஆசுவாசத்தையே தந்திருக்கிறது. ஆனால் இவரின் எழுத்துக்கள் அப்படியில்லை.
சராசரி மனிதக் கண்ணோட்டத்தின் புள்ளியிலேயே பயணிக்கும் இயல்பு இவருக்கு வாய்த்திருக்கிறது.

" அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளை
விரைந்து கடக்கின்றன, பறவைகள் "

இந்த உலகில் மனிதன் மட்டுமல்ல எல்லா உயிர்களுக்குமே உள்ள பொதுவான குணம் சுயநலம். இந்தக் கவிதையில் அவர் குறிப்பிடும் பறவையும் சுயநலத்தின் அடையாளம் தான். தான் உண்ணும் உணவிற்காக விதைத்து அறுவடை செய்து தனக்கு மட்டுமே பயன்படுத்துக் கொண்ட அந்த மனித மனமும் சுயநலத்தின் அடையாளம் தான். உன்னளவிறகான சுயநலச் செயல் அதுவென்றால் அந்த வயல்வெளியை விரைந்து கடப்பது தான் அந்த பறவைக்கான சுயநலச் செயல். இது என்னளவிலான தாக்கம் மட்டுமே. உங்களின் ரசனைக்கும் வாசிப்பு அனுபத்திற்கும் ஏற்ப மாறுபடலாம். ஒரு கவிதையென்பது வாசகனிடம் வெறும் வார்த்தைகளாக மட்டும் வந்தடைவது அல்ல. படிக்கும் போது ஏதோவொரு வினாடியில் சொல்லில் அடங்காத ஒரு அனுபவத்தை அந்தக் கவிதை தரக்கூடியதாக இருக்க வேண்டும். அந்த அனுபத்தை பௌஸ்யாவின் கவிதைகள் பூர்த்தி செய்கின்றன.

வாழ்நாளில் நம் பெற்றோரிடமோ அல்லது நெருங்கிப் பழகும் நண்பர்களிடமோ கூட என் குறைகளை என்னிடம் கூறுங்கள். என் நிறைகளை என்னிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் என்று கூறியிருக்கிறோமா? ஆனால் பௌஸ்யா ஒரு கவிதையில்...

"என் எழுத்துக்கு தரும் மதிப்பீடுகளை
நான் வெறுக்கிறேன், விமர்சனங்களை வரவேற்கிறேன்" ---- குறிப்பிடுகிறார்.

ஆக இதுபோன்ற சிந்தனைகள் தான் ஒரு சராசரி மனிதனுக்கும், படைப்பாளிக்கும் வேறுபடும் வாழ்வனுபத்தை உணர முடியும். இன்னமும் இதுபோல் இவரின் எழுத்துக்களைப் பற்றி கூறிக்கொண்டே செல்லலாம். சுருக்கம் என்பது தான் இணைய எழுத்தில் இப்போதுள்ள விதி. ஆகவே அவரின் ஒருசில ட்விட்டுகள் மட்டும் உங்களின் வாசிப்பிற்கு...

உன் ஒப்பற்ற கருணையால் ஒன்றே ஒன்று செய். என்னை நிரந்தரமாக பிரிந்து செல்கையில்
நான் அழுகிறேனா என்று திரும்பி பார்த்துக் கொண்டு செல்லாதே.

பற..! இரை தேட பழகு, கூடு கட்ட பழகு,
பறவையாய் இருக்க பழகு.

உன் நினைவின் பாத்திரத்தில் நீயற்ற
எத்தனை கோடி அன்பை நிறைத்தாலும் அது வெற்றிடமே

ஆழியில் பெய்யும் மழை என்றும்
தீராத தாகத்தோடே இருக்கிறது.


6 comments:

settaikaaran said...

நன்றி தோழர் !

Siraju said...

படைப்பாளிக்கும், பகிர்ந்தவர்களுக்கும் வாழ்த்துகள்

ஆமினா said...

//ஒரு தீவிர படைப்பாளி தான் வாழ்க்கையை உயிர் மெய் எழுத்துக்களிலேயே கட்டமைத்துக்
கொள்கிறான்.//

உண்மை.........

ரசிக்க கூடிவர்களால் மட்டுமே தன் எண்ணங்களை/உணர்வுகளை எழுத்துக்களில் பூட்ட முடியும்

அ.முத்து பிரகாஷ் said...

முன்பொரு முறை இவ்வாறு கீச்சியிருந்தேன் தோழர்:

"சுடிதார் பெண்களின் துப்பட்டா மீது எனக்கேன் அத்தனை மோகம் என்பது இப்போது தான் புரிகிறது. அது பறவையின் சிறகை ஞாபகப்படுத்துகிறது."

பறவையின் இயல்பென சில விடயங்களை கற்பனை செய்துகொண்டிருந்த மனதை பௌஷ்யாவின் பல கீச்சுகள் பக்குவப் படுத்தியிருக்கின்றன ; புரிதலை மேம்படுத்தி இருக்கின்றன (யோசித்துப் பார்க்கையில் புரிதலேயின்றி இருந்தேனென புரிகிறது) ...அறுவடை செய்யப்பட்ட வயல்களையே விரைந்து கடப்பவை தரிசு நிலங்களில் என்ன செய்ய வேண்டுமென யார் தான் எதிர்பார்க்க இயலும் ?

என்னையையும் பறவையாக பல முறை உணர முயன்றதுண்டு.. பறவைக்கென பலர் நினைத்திருக்கும் மதிப்பீடுகளை உடைத்து கூடு கட்டப் பழகு எனவும் சொல்லும் யதார்த்த நவீன பார்வையும் அவருக்கு வாய்த்திருக்கிறது..

என்றோ ஒரு கணம் விடுதலையை உணர்ந்த மனம் அதை முழுக்க முழுக்க முழுமையாய் அடைந்து விடும் நோக்கில் ஊசல் குண்டாய் அலைவுறுகிறது..ஆனால் ஊசல் குண்டுகளும் பயணிக்கின்றன என்ற மயக்கத்திலேயே முழுவதும் தீர்ந்து விடுமோ பயண வேட்கை என்ற பயத்தையும் மறைப்பதற்கில்லை தான்.

ஆழித் தீயில் பெய்யும் குறு மழையாய் அழகிய பகிர்வு..

நிபந்தனைக்குட்படாது போவதில் எதை இழக்கிறோம் எதை பெறுகிறோம் அபத்தமான இவ் வாழ்க்கையில் ..?

சத்யா said...

பொறுமையாக படித்து நான் உணர்ந்ததை விட அதிக அனுபவங்களைப் பெற்று பதில் பதிவை இட்டுள்ள தோழர் முத்து பிரகாஷ் அவர்களுக்கு என் நன்றிகள்.

தனிமரம் said...

படைப்பாளியை அறிமுகம் செய்ததற்கு நன்றி!