Thursday, March 31, 2011

பயணம்

காலை வெயில் கண்ணாடி ஜன்னல்களின் வழியே உறங்கிக் கொண்டிருந்த அசோக்கின் முகத்தில் சுளீரென்று அறைய திடுக்கிட்டு மெத்தையிலிருந்து எழுந்தான். கழுத்தை தன் கைகளால் தொட்டுப் பார்த்தான். நேற்று இரவை விட இப்போது காய்ச்சல் அதிகமாகியிருப்பதை உணர்ந்தான். தலைபாரமும் விடவில்லை. தளர்ந்த நடையுடன் பல்தேய்த்து, முகம்கழுவி, உடைகளை மாற்றிக் கொண்டான். உடலும், மனமும் தன்னை ஒருசேர அலைக்கழிப்பதாக எண்ணிக் கொண்டான். சாப்பிட விருப்பமின்றி இரண்டு டம்ளர் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டான்.
"அசோக் உன்னோட செக்சனுக்கு வரும் போது மட்டும் தான் ப்ராஜக்ட் ஒர்க் ஸ்லோ ஆயிடுது. அதால தான் நம்மால சொன்ன தேதியில வொர்க்க ஃபினிஷ் பண்ண முடியறது இல்ல. சிரமமா இருந்தா உனக்கு கீழ யாரையாவது அசிஸ்டெண்ட்டா சேத்துக்க." கம்பெனி எம்.டி-யின் வார்த்தைகள் அவனது இயலாமையை வெளிச்சம் போட்டு காட்டின. சற்று யோசித்துவிட்டு "வேண்டாம் சார், இனிமேல் சிரமப்பட்டாவது என் வேலையை நானே டைமுக்கு செஞ்சுடறேன்" என்று கூறியதற்கு விருப்பமில்லாமல் தான் தலையசைத்தார். நேற்று நடந்த நிகழ்ச்சி திரும்ப திரும்ப அசோக்கின் நினைவிற்கு வந்து மேலும் தலைபாரத்தை அதிகப்படுத்தியது. அவர் கூறியது போல் என்னால் மட்டும் ஏன் மற்றவர்களைப் போல் செயல்பட முடியவில்லை. ஏதோ சில காரணங்களுக்காகவும், என் மேல் பரிதாபப்பட்டும் தான் எம்.டி தன்னை அவர் அலுவலகத்தில் பணியாற்ற விட்டிருக்கிறாரா? என ஏதேதோ எண்ணங்கள்
அவன் மூளைக்குள் அலைபாய்ந்த படியே இருந்தது. தான் வழக்கமாய் செல்லும் சார்லஸ் டாக்டரிடம் சென்று வரலாம் என்ற எண்ணத்தோடு அறைக்கதவை பூட்டிக் கொண்டு வெளியேறினான். வெயிலின் உக்கிரம் இன்னும் அதிகமாக இருந்தது. கால்கள் கடனுக்காக நடந்து கொண்டிருந்தது.அந்த முதல் சந்தை கடக்கும் போதே அவன் தோல்பட்டை மேல் யாரோ கைவைத்து நிறுத்தினர்.
"ஹலோ சார் ஐம் பரந்தாமன். உங்க வீட்டுக்கு எதிர்த்தாப்ல இருக்க வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கேன். உங்க பேரு?" சினேகமான குரல் அசோக்கை சற்று ஆசுவாசப்படுத்தியது. "ஐம் அசோக்" என்றான்.
"சார் ஒரு சின்ன ஹெல்ப், எனக்கு "மைக்ரைன்" (ஒற்றை தலைவலி) பிராப்ளம். அதான் பக்கமா இருக்குற ஆஸ்பிட்டல் தகவல் கொடுத்தா சௌகரியமா இருக்கும்."
"நானும் டாக்டர்கிட்ட தான் போறேன் வாங்களேன். அவர்ட்டயே உங்களுக்கும் கன்சல்ட் பண்ணிக்கலாம்." என்று அசோக் கூறியவுடன் பரந்தாமனின் தேகமெங்கும் குளிர்ச்சி.
குறுகல் குறுகலான தெருக்களாக இருந்தாலும் ஆள்நடமாட்டம் சற்று குறைவாகத்தான் இருந்தது. பேசிக்கொண்டே இருவரும் மருத்துவமணைக்குள் நுழைந்தனர்.
"வாங்க, அசோக் சார்" வரவேற்பு அறைப் பெண்மனி அவர்களை வரவேற்றாள். "என்னங்க, ரெகுலர் கஸ்டமரா" சிறிய எள்ளலுடன் பரந்தாமன் வினவினார்.
"இல்லீங்க, ஆபிஸ் வேல முடிஞ்சா நான் தினமும் டைம்பாஸ் பண்ற இடம் இதுதான்."
இருவரும் வெயிட்டிங் ஹாலில் அமர்ந்தனர். அசோக் ஏதோ யோசனையோடு அமர்ந்திருந்தார். சற்று நேரத்திலேயே பரந்தாமன் உட்கார பொறுக்க முடியாமல்
வரவேற்பு அறைப் பெண்ணிடம் பேச சென்று விட்டார். பனிப்பெண்ணும், பரந்தாமனும் நீண்ட நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். எனக்கு காதில் விழுந்தது,
பணிப்பெண் பேசிய இந்த கடைசி வார்த்தைகள் மட்டும் தான், "அச்சச்சோ, உங்களுக்கு தெரியாதா... அசோக்குக்கு கண்ணு தெரியாதுங்க..."
வைத்த கண் வாங்காமல் பரந்தாமன் அங்கு தனிமையில் அமர்ந்திருந்த அசோக்கையே பார்த்துக் கொண்டிருந்தார்.

Sunday, March 27, 2011

நரகமாகி விட்ட நகரம்...

நகரம் என்றாவது உறங்கி நாம் பார்த்திருக்கிறோமா? அது விதை தேடி அலையும் பறவையைப் போல பரந்த வானில் தன் சிறகுகளை விரித்துப் பறந்தபடியே
இருக்கிறது. வரைபடத்தின் கோடுகளால் வடிவம் கொடுக்க முடியுமே தவிர நகரத்திற்கென்று உருவம் என்பது அதனை சுற்றியுள்ள மனிதர்களின் அந்தரங்கங்கள் சார்ந்தே கட்டமைக்கப்படுகின்றன. உழைப்பவனுக்கான அட்சயப் பாத்திரமாக இருக்க நகரம் என்றும் தயங்கியதே இல்லை. நம் எல்லையற்ற கற்பனைகளையும், கனவுகளையும் பயிரிட ஏற்ற விளைநிலம் தான் நகரம். ஒரு தேர்ந்த ஆசானைப் போல் நமக்கு தினம் தினம் புதுப்புது அனுபவங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு தெளிந்த குளமாய் இருந்த நகரை நாம் நமது பொருளாதார வசதிக்காக இன்று பயனற்ற சாக்கடையாய் மாற்றி விட்டோம்.
குழந்தைக்கு கூட ஐஸ்கிரிம் வாங்கிக் கொடுத்தால் தான் அது நம்மைப் பார்த்து சிரிக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை பணம் தான் நம் வாழ்விற்கும், கலாச்சாரத்திற்கும் முதன்மையாகப் படுகிறது.
சென்னை நகரில் தற்போது நிலவி வரும் கலாச்சார சூழ்நிலை இதுதான்,
இரயில் நிலையத்தில் இறங்கும் போதே வெளியூர் முகம் அறிந்து ஆட்டோக்காரர்கள் ஈயைப் போல மொய்த்துக் கொள்கின்றனர். எல்லோரும் ஆங்கிலம் கலந்த தமிழிலேயே பேசுகின்றனர். படித்தவனுக்கும், பாமரனுக்கும் வித்தியாசமே தெரியவில்லை. ப்ளுடூத் ஹெட்செட் மாட்டிக் கொண்டு காதல் கதைக்கின்றனர். இரண்டு குழந்தைகளை பெற்று பெருத்து விட்ட அம்மாக்கள் ஞாயிறு மாலையில் கணவனுடன் பிம்பாம் சப்பிக் கொண்டிருக்கும் தங்கள் குழந்தைகளை தூக்கிப் போட்டுக் கொண்டு மாயாஜாலுக்கோ, தீம்பார்க்குக்கோ தங்களை அடைத்துக் கொள்கின்றனர். அரசு சம்மந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் மஞ்சள் சால்வை அணிந்து கருணாநிதி சிரித்தபடி இருக்கிறார். போஸ்டர்களிலும், வினைல் பேனர்களிலும் இடம் பிடித்திருக்கும் ரெட்ஜெயண்ட், கிளவுட்நைன் பிம்மங்கள் திரைத்துறையின் ஆளும் சக்திகளாக தங்களை முன்னிறுத்திக் கொண்டுள்ளனர். இரண்டு ரூபாய் கொடுத்து மெரினாவில் சுண்டலும் வாங்குகிறார்கள், இருபது லட்சம் கொடுத்து தனிஷ்கில் பிளாட்டின
மோதிரமும் வாங்குகிறார்கள். சோஷியலிசத்தின் எதிர்மறையான நகர பொருளாதாரத்தை உணர முடிகிறது. இளைஞர்கள் நிறைய பேசுகிறார்கள், ஊர் சுற்றுகிறார்கள். தமிழை அவசர கதியிலும் ஆங்கிலத்தை நிதானமாகவும் பேசுகிறார்கள். இலக்கியம், அறிவுரை என்றால் முகம் சுளிக்கிறார்கள். சிக்னல் இருக்கும் எல்லா இடங்களிலும் சிறுவர்களும், ஊனமுற்றவர்களும் மிரட்டும் தொனியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இங்கே கொஞ்சம் வேகமாக ஓடிவிட்டு மூச்சிரைக்கவும் பணம் தேவைப்படுகிறது.
மதியம் தயிர்சாதம் சாப்பிட்டு விட்டு சற்று நேரம் கயிற்றுக் கட்டிலில் தலைசாயும் ஜீவன்களுக்கு நகரம் நிச்சயம் நரகம் தான்.

கவிஞர் எம்.யுவனின் நகரம் பற்றிய கவிதை...

நகருக்குள் வந்த மான்போல
பராக்குப் பார்க்கிறாள்
கிட்டத்தட்ட பொருந்தும்
முகமொன்று கிடைக்கும் தறுவாயில்
வந்து
நின்று
கவர்ந்து செல்கிறது
பேருந்து.

Thursday, March 24, 2011

தேளாய் கொட்டும் தேர்தல் கமிஷன்

ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக
வாகன சோதனை எனும் பெயரில் இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வியாபாரிகளையும், பொதுமக்களையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன.
நிகழ்வுகள் :
1. கடந்த வாரம் சேலத்தில் மட்டும் அப்பாவி மக்களிடமும், வியாபாரிகளிடமும் இருந்து ரூ. 2 1/4 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.
2. சேலம் அரிசிப்பாளையத்தில் உள்ள கோபாலன் எண்டர்பிரைசஸ் என்ற சிகரெட் மொத்த வியாபார நிருவனத்தின் ஊழியர்களிடம் இருந்து 3லட்சத்து 78ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சிகரெட் சப்ளை செய்து வசூலான பணத்தை எடுத்து வருவதாக தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணத்தை காண்பித்த பின்பே பணம் தரமுடியும் என கூறிவிட்டனர்.
3. ஓமலூர் சுங்கசாவடியில் தனியார் வங்கியின் உதவி மேலாளர் ஷெரிதாமசிடமிருந்து ரூ. 90லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் தர்மபுரியில் ஒரு தனியார் வங்கி கிளையில் இருந்து கோவையில் உள்ள அதே வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்படுவதற்கான எல்லா ஆவணங்களையும் காண்பித்து, பல மணி நேர அவஸ்தைகளுக்குப் பிறகே அதிகாரிகள் அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
4. புத்தூர் வாட்டர்டேங்க் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் காரை சோதனையிடும் போது ரூ. 16லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரமேஷ் கிரானைட் தொழில் செய்வதால் சித்தூரில் ஒருவருக்கு கொடுக்க எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். முறையான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் பல இடங்களில் அப்பாவி மக்கள் பணத்தை பறிகொடுத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கின்றனர். நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள், சிறுசிறு நகை வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்கள் தங்கள் பிழைப்பிற்காக பணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம். தேர்தல் கமிஷனின் அர்த்தமற்ற இந்த கெடுபிடிகளால் யாரும், எங்கும், எதற்கும் பணத்தை கொண்டு செல்ல முடியவில்லை. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை அருகில் உள்ள பெரிய ஊர்களில் உள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்துவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு வரமுடியாத சூழ்நிலை. வாகன சோதனை என்கிற பெயரில் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து விடுகின்றனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் பணத்திற்கான முறையான ஆவணத்தை அந்த கருவூல அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே பணத்தை
திரும்ப பெற முடியும். இந்த நடைமுறைகளை எல்லாம் படிக்காத கிராம மக்களுக்கு தெரியப்படுத்த அதிகாரிகளோ, அரசோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
பொதுமக்கள் இப்படி அவதிப்பட நம் அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா... தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறை வாகனத்திலேயே கருப்பு பணத்தை பாதுகாப்பாக எடுத்து செல்கின்றனர்.

முன்பெல்லாம் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பது வழக்கம். ஆனால் இம்முறை தேர்தல் கமிஷனின் அதீத நெருக்குதலால் சிறுவியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வாடகை கார்களை வைத்திருப்பவர்கள், ட்யுப்லைட், சீரியல்செட் வாடகைக்கு விடுபவர்கள், சுவரில் எழுதுபவர்கள், பிளக்ஸ் பேனர் எழுதுபவர்கள், பட்டாசு வைத்திருப்பவர்கள், ஒலிபெருக்கி வைத்திருப்பவர்கள், அச்சகம் நடத்துபவர்கள் என எல்லோரின் பிழைப்பிலும் இந்த தேர்தல் கமிஷன் மண்ணை வாரியிறைத்து விட்டது.
இந்த நடவடிக்கைகளால் மட்டுமே நம் அரசியல் தலைவர்களிடம் நியாயமான ஜனநாயகத்தை இந்த தேர்தல் கமிஷன் எதிர்பார்த்தால் அதை விட முட்டாள்தனம் வேறில்லை.

Saturday, March 19, 2011

கனவிலிருந்து விழித்தவை

உன் குரல் தான்
என் காதலின் கடவுள் வாழ்த்து

பிரியங்கள் சுமந்தலையும் எனது மூச்சுக்காற்றில்
வாழ்கிறது, அவள் அன்பின் அடையாளங்கள்

அவள் பேரழகி அல்ல... ஆனால்
பெருநேசத்திற்கு சொந்தக்காரி

எனக்கு எல்லாம் வேண்டாம், நீ மட்டும் போதும்
நான் உன்னிலிருந்து எல்லாம் பெற்றுக் கொள்வேன்

உன் வெட்கம் தான்
என் வெயிலுக்கான நிழற்கூடை

என் தாகம் தீர்க்கும் பெருநதி
உன் ஒற்றை வியர்வைத் துளி

என்னை உண்மையாக வெறுத்து விடு,
ஆனால் பொய்யாக மட்டும் நேசிக்காதே

உன் மருதாணி விரல் பிடித்து
நான் காதல் நடை பழகுகிறேன்.

Thursday, March 17, 2011

என் கிணற்றிலிருந்து ஒரு கூழாங்கல்

இந்திய அளவில் பரிச்சயமான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் அமரர் சுஜாதா. தன் கற்பனையையும், அனுபவத்தையும் எழுத்தாய் வடிக்கும் எவரும் இவரது நிழலைத் தாண்டித் தான் படைப்பாளி எனும் பாதையிலேயே பயணிக்க முடியும். அந்தளவிற்கு எல்லாத் துறைகளிலும் தன் கவர்ந்திழுக்கும் எழுத்தின் மூலம் இன்றளவும் யாரும் தொட முடியாத உயரத்தைத் தொட்டவர். அதற்கு ஆதாரமாக அவரின் ஒவ்வொரு எழுத்தையும் உதாரணத்திற்கு குறிப்பிடலாம்.
சமிபத்தில் சுஜாதா எழுதிய "இன்னும் சில சிந்தனைகள்" (உயிர்மை பதிப்பகம்) என்கிற கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். அதில் குறிப்பாக
"திரைக்கதையும் சிறுகதையும்" என்கிற கட்டுரை இயக்குனர்களும், திரைக்கதை ஆசிரியர்களும், ஒவ்வொரு எழுத்தாளரும் அவசியம் படிக்க வேண்டிய
பயனுள்ள கட்டுரை. இதை விட எளிமையாக சிறுகதையையும், திரைக்கதையையும் வேறுபடுத்திக் காட்டிவிட முடியுமா என்பது சந்தேகமே.
படித்துப் பாருங்கள்.

சிறுகதையில் உள்ளங்களையும் உணர்வுகளையும் சொல்ல வேண்டும். திரைக்கதையில் காட்சிகள், குறைவான உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்த வேண்டும்.
சிறுகதைகளில் விவரமான வர்ணனைகள் உண்டு. அவைகளில் வெளிப்புறமும் உள்புறமும் கலந்திருக்கும். திரைக்கதையில் வெளிப்புற வர்ணனைகள் மூலம்
உள்புறத்தை வெளிப்படுத்த வேண்டும். உதாரணம் பார்ப்போம்.
சிறுவன் வைத்யநாதன், நாராயணசுவாமி ஐயரிடம் வயலின் கற்றுக் கொண்டிருக்கிறான். இதை சிறுகதை வடிவத்தில் சொல்லும் போது, "வைத்திக்கு கிளாசுக்கு நேரமாகி விட்டது. அய்யோ உதைக்கப் போறார். இன்னிக்காவது 'எந்தரோ' சிரஜதி முழுக்க வாசிச்சுக் காட்டிரணும்" என்று சைக்கிளில் வயலின் பெட்டியை ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொண்டு சென்றான். நாளைக்கு அம்மா டூர்லருந்து வந்துவிட்டால் உற்சாகமாக வாசிக்கலாம். கடவுளே! அப்பா நாளைக்கு குடிக்காமல் வர வேண்டும். இது கதைக்கான வடிவம். திரைக்கதையில் இப்படி வராது.
உள்புறம் - மைலாப்பூரில் ஒரு வீடு. அதன் நடுக்கூடத்தில் பாய் போட்டு வைத்யநாதன் (11) வயலினில் 'எந்தரோ மகானுபாவுலு' வாசித்து முடிக்கிறான். எதிரே நாராயணசுவாமி வயது 65, தாளம் போட்டு கவனித்துக் கொண்டிருக்கிறார்.
நாராயணசுவாமி - சரியா வாசிக்கிறே. சுரைஜதியெல்லாம் சரிதான். ஆனா ஜீவன் இல்லே. சங்கீதம்ங்கறது (வயிற்றைக் காட்டி) இங்கருந்து புறப்பட்டு (இதயத்தைக்
காட்டி) இங்க வந்து விரலுக்கு போய் சேரணும். நான் சொல்றது புரியறதா?
வைத்யநாதன் ( புரிந்தும் புரியாமலும் தலையாட்டுகிறான்)
நாராயணசுவாமி - உங்கம்மா நாளைக்கு கச்சேரிக்கு வருவாளா?
வைத்யநாதன் - தெரியலை சார். டூர் போயிருக்கா, வந்துருவேன்னு சொல்லிருக்கா.
நாராயணசுவாமி - உங்கப்பா?
வைத்யநாதன் - ம்... வருவார்.
நாராயணசுவாமி - இன்னும் குடிச்சுண்டுதான் இருக்கானா?
வைத்யநாதன் பதில் சொல்லாமல் சோகையாகச் சிரிக்கிறான். வயலினை பெட்டிக்குள் வைக்கிறான். இது திரைக்கதை வடிவத்துக்கு உதாரணம்.
இதைப் படிக்கும் போது இதனுள் பொதிந்திருக்கும் கதையம்சமும், உறவுகளும், ஏன் பிரச்சனைகளும் எளிதில் வெளிப்பட்டு விடும்.
திரைக்கதைக்கு வசனம் எழுதும் போது பெயர்ச்சொற்களும், வினைச்சொற்களும் பிரதானமாகப் பயன்படுத்த வேண்டும். உரிச்சொற்களும், வினையெச்சங்களும்
அதிகம் வரக் கூடாது. 'அப்பா! வெயில் பட்டை உரியறது' என்பது திரை வடிவமல்ல. கதை வடிவம். 'முகத்தில் வியர்வை அரும்ப மின்விசிறியைப் போடுகிறான்' என்பது திரை வடிவம்.
வளரும் இயக்குனர்களுக்கும், திரைக்கதை எழுத விரும்புபவர்களும் இவர் எழுதிய "திரைக்கதை எழுதுவது எப்படி?" (உயிர்மை பதிப்பகம்) அவசியம் படிக்க
வேண்டிய புத்தகம்.

Sunday, March 13, 2011

நடமாடும் நட்சத்திரங்கள்

நிஜம் தான்
பெண்களின் உலகம்
தனித்துவங்களால் நிரம்பியது.

பேரண்டத்தையே சுத்தப்படுத்தி விடும்
அவளது கூச்சப் பார்வை
இதழோரம் வடியும் இனிய சிரிப்பில் தான்
பலரின் இதயங்கள் விட்டுவிட்டு
துடித்துக் கொண்டிருக்கின்றன.
குடைசாயும் வெட்கத்தில் தான்
ஆண்களின் மனவானில் கருமேகங்கள்
சூழ்ந்து கொள்கின்றன.
தனது அழுகையால் இந்த உலகையே
ஸ்தம்பிக்கச் செய்யும் சக்தி படைத்தவள்.
அழகிற்கு திருஷ்டிப்பொட்டாய்
அவ்வப்போது எட்டிப் பார்க்கும் கர்வம்.
அச்சம், மடம், ஞானம் என
கருவறையிலேயே பல பாடங்கள்
கற்றுத் தேர்ந்தவள்.

சொப்பு பொம்மை விளையாடிக் கொண்டிருப்பவளை
பெரியவளாக்கி பார்க்கிறது இந்த
அவசர உலகம்
விண்மீனாய் நீந்திக் கொண்டிருப்பவளை
தாவனியில் சிறை பிடிக்கிறது இந்த
முரட்டு சமூகம்
சரியாய்க் கிடக்கும் மாராப்பையும்
அனிச்சையாய் சரிசெய்கிறது அவளது
கூச்சத்தின் கைகள்
ஏற்றாத அகல் விளக்காய் இருப்பவள், புகுந்த வீட்டில்
தன்னை தினம்தினம் எரித்துக் கொள்கிறாள்
கணவனின் காதலையும், காமத்தையும்
இரவு பகல் பாராமல் தாங்கிக் கொள்ளும்
சுயநலமற்ற சித்திரம்
இப்போது,
இன்னொரு உயிரை உற்பத்தி செய்யும்
கடவுளாக பதவி உயர்வு பெற்று விட்டாள்

நிஜம் தான்
பெண்களின் உலகம்
தனித்துவங்களால் நிரம்பியது.

Friday, March 11, 2011

அன்பைத் தேடி ஓடும் எழுத்துக்கள்

முகுந்த் நாகராஜன் அவர்களின் "K அலைவரிசை" என்கிற கவிதைத் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. 51 கவிதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு
எதார்த்தத்தின், எளிய தருணங்களின் சித்திரம் என்றே கூறலாம். இது இவரது நான்காவது கவிதைத் தொகுப்பு. தற்போது பெங்களூரில் தகவல் தொழில் நுட்பத் துறையில்பணியாற்றி வருகிறார்.
அத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்:

அற்றைத் திங்கள்
------------------------------------
இரவு 8 மணிக்கு
நிலா பார்க்கச் சொல்லி
குறுஞ்செய்தி அனுப்பினாய்.
பூமிக்கு மிக அருகில்
வருமாம் நிலா அப்போது.
'பார்க்கிறாயா?' என்று
ஒரு செய்தி அனுப்பினாய்.
நமக்கு மிக அருகில்
வந்து போனது நிலா.

இயற்கையான எழுத்தின் மூலம் அனுபவத்தின் அடர்த்தியையும், ஏக்கங்களையும் கொண்டு மனதின் ஆழத்தைத் தொடும் எழுத்துக்கள் தான் கவிதைகளாக அறியப் படுகின்றன. அந்தப் பணியை மேற்கண்ட வரிகள் நிறைவேற்றுகின்றன. நம்மில் எத்தனை பேர் எத்தனை பிரியமானவர்களிடம் எத்தனை குறுஞ்செய்திகள் அனுப்புகிறோம். ஆனால் இந்த வரிகளைப் போல் யோசித்ததுண்டா? நமக்கு தெரிந்தது எல்லாம் "செல்லம் சாப்பிட்டாயா? தூங்குகிறாயா?" என்பது தான்.
ஒரு கவிதைக்கும், அதனை உருவாக்கும் கவிஞனுக்கும் தனித்த அடையாளம் இது மட்டுமே.

ஒரே நாளில்
---------------------------
நீ என் காதலை மறுத்த
அதே நாள் மாலை
எங்கள் தெரு சலவைக்கடை
இடம் மாறி
வெகு தொலைவிற்கு சென்றது.
இப்படி
ஒரே நாளில்
எல்லோரும் என்னைக்
கைவிட்டால் எப்படி?

இந்தக் கவிதையை வாசித்து விட்டு ஏன் இங்கு சலவைக்கடை என்கிற படிமம் குறிப்பாக இடம் பெற்றிருக்கிறது என்று யோசித்தேன். இதுநாள் வரை தன் உடலைச் சுத்தப்படுத்திய காதலியும், தன் உடையைச் சுத்தப்படுத்திய சலவைக்கடையும் தன்னைக் கைவிட்டதின் உச்சத்தில் உருகி எழுதப்பட்ட இந்தக் கவிதை நம் வாழ்வின் அனுபவங்களோடு சிறகடித்துப் பறக்கிறது.

என்னிடம் பெரிதாக
-------------------------------------
'வாழ்க்கை எப்படி போகிறது'
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம்
சரவணபவனில்
பெரிய தோசை வேண்டும்
என்று அடம் பிடித்து வாங்கிச்
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றி சொன்னேன்.
'அப்புறம் பார்க்கலாம்' என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.

நம் வாழ்வின் வானத்தில் நட்சத்திரங்களைப் போல விரவிக் கிடக்கும் சிறுசிறு அன்பையும், நேசிப்பையும் எவருமே பொருட்படுத்தாமல் பொருளைத் தேடி ஓடும் மனிதனின் இயந்திர இயக்கத்திற்கு கவிஞன் தரும் சவுக்கடி தான் இந்தக் கவிதையின் வரிகள். முழுக்க முழுக்க நிகழ்கால இயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு துறவியின் தேடலைப் போல அன்பைத் தேடி ஓடும் எழுத்துக்கள்.
கீழே உள்ள இரண்டு கவிதைகளைப் பற்றி நான் கூறப்போவதில்லை. உங்களின் அனுபவத்திற்கே விட்டு விடுகிறேன்.

மழை நிலா
-------------------------
மழையில்
நிலா பார்த்த
இரவில்
நிலவில்
மழை பெய்யும்
கனவொன்று
கண்டேன்.

தனிமையின் விளிம்பு
-------------------------------
கிண்ணத்தில் அளந்து
தட்டில் கவிழ்க்கப்பட்ட
அளவுச் சாப்பாட்டின்
வட்ட விளிம்பில்
பிரதிபலிக்கிறது
என் தனிமை.

Tuesday, March 8, 2011

செல்லமான செல்போன்

செல்போன்- இந்த ஒற்றைச் சொல்தான் இன்றைய உலகின் இயக்கத்திற்கான ஆக்சிஜன். எண்ணிக்கையற்று பெருகும் நம் ஆசைகளையும், கனவுகளையும் எளிதாய் இதில் மறைத்து வைத்துக் கொள்ள முடிகிறது. என்னதான் சமுகச் சீரழிவுகளும், குற்றங்களும் நிழலாய் படர்ந்தாலும் அதன் தேவைகள் நமக்கு நிஜமாகி விடுகிறது. நிர்வாணமாய்த் திரியும் நமது ரகசியங்களுக்கு சொற்கள் எனும் ஆடை உடுத்தி எங்கும், எப்போதும் நமக்கு விருப்பமானவர்களிடம் சேர்த்து விடுகிறோம். உள்ளங்ங்கையில் நம் உயிரோடு உறவாடும் ஜீவன். மௌனத்தின், பிரியத்தின், ஏக்கத்தின் என ஒட்டுமொத்த மனித உயிர்களின் உயிரற்ற குறியீடு.
ஒரு வளர்ப்பு நாயைப் போல் மூலையில் கிடக்கும் என் செல்போனைப் பார்க்கிறேன். தினம் தினம் என் மனதில் பெய்யும் மழையின் வானவில், என் ஒற்றைத் தொடுதலுக்காக காத்திருக்கிறது. அடுத்தவர் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே தன் தேவையாகக் கருதும் செல்போனைப் போல் ஏன் ஒரு நிமிடம் கூட இந்த மனித மனம் மாற மறுக்கிறது, என்கிற ஏக்கமே பெருமூச்சாக வெளிப்படுகிறது.
நம் ஜீவனாகி விட்ட இந்த செல்போனின் எஜமானர்களே அதன் நிறுவனங்கள் தான். உலக பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களை முடிவு செய்யும் மிகப் பெரிய காரணிகளாக இந்த செல்போன் நிறுவனங்கள் இருக்கின்றன.
அந்த நிறுவனங்களைப் பற்றி நான் சேகரித்த சில தகவல்கள் :
இந்தியாவில் மட்டும் சுமார் 60 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. சராசரியாக ஒருவர் குறைந்தது 5 ரூபாவிற்கு பேசினால் கூட மாதத்திற்கு
5*30=150 ரூபாய். மாத மொபைல் போன் வருமானம் 60கோடி*150=9000 கோடி ரூபாய். ஆண்டு மொத்த வருமானம் 12*9000=1,08,000 கோடி ரூபாய்.
இந்த கணக்குகள் எல்லாம் வெறும் அவுட்கோயிங் கால்களுக்கு மட்டுமே. அது தவிர ரோமிங், காலர் ட்யுன்ஸ், இன்டர்நெட் பிரௌசிங், டவுன்லோடிங் என்று இன்னபிற வருமானங்களை எல்லாம் சேர்க்காமல் தோராய மதிப்பீடு.
கூகுளில் கிடைத்த 2009-10 ஆண்டிற்கான மொபைல்போன் நிறுவங்களின் இலாப நஷ்ட கணக்கு பட்டியல். இந்த வருடத்தின் முதன்மை செல்போன் நிறுவனமாக ஏர்டெல் இருக்கிறது. இதன் மொத்த ஆண்டு வருமானம் ரூ.41,800 கோடி. ஆல்கால்ஸ், பிராட்பேண்ட், விசாட் என எல்லாம் இதில் அடங்கும். இதில் வரிகட்டியது, விளம்பர, வேலையாட்கள் செலவு போக அதன் நிகர லாபம் ரூ.9187கோடி. அதாவது ஐந்து பேரில் ஒருவர் ஏர்டெல்லின்
சேவையை பெற்று வருகின்றனர்.
ஐடியா செல்லுலரின் ஆண்டு வருமானம் ரூ. 11,890 கோடி. அனைத்து செலவு போக நிகர லாபம் ரூ.1,100 கோடி.
ரிலையன்ஸின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.12,510 கோடி. அதன் நிகர லாபம் ரூ.479 கோடி.
வோடபோனின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.22,510 கோடி. இந்த ஆண்டு அவர்களுக்கு நஷ்டம் மட்டும் ரூ.260 கோடி. ஹட்ச்-லிருந்து வோடபோனுக்கு கை மாறியதால் ஏற்பட்ட நஷ்டம் என காரணம் கூறப்படுகிறது. சரி விடுவோம். இறுதியாய் நம் அரசின் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கு வருவோம்.
பி.எஸ்.என்.எல் மொத்த ஆண்டு வருமானம் ரூ.32,045 கோடி. அது சந்தித்த நஷ்டம் ரூ.1,820 கோடி.
எம்.டி.என்.எல் மொத்த ஆண்டு வருமானம் ரூ.3,780 கோடி. அது சந்தித்த நஷ்டம் ரூ.4,694 கோடி. இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு மட்டும் ரூ.4,900 கோடி சம்பளம்
கொடுத்ததாக கணக்கு காண்பிக்கிறது.
இவ்வளவிற்கும் புதியதாக டவர்கள் ஏதும் போடாமல் இருக்கும் டவர்களிலேயே ஆப்பரேட் செய்து கொண்டு வந்தும் இந்த நிலை. இந்த நஷ்டத்திற்கு முழுக்க முழுக்க காரணம் நம் நம்பிக்கைகளுக்கு உரிய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தான். இவர்கள் செய்த காரியங்களை பட்டியலிட்டால் என் வாழ்நாள் முழுவதும் என் வலைப்பதிவில் இவர்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

Friday, March 4, 2011

அச்சுறுத்தும் அவலங்கள்

மார்ச்-4 தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம். தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது இந்த தினத்தில் தான். மும்பையை தலைமையகமாக கொண்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. அரசியல்சாரா தொண்டு நிறுவனமாக தேசிய பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு பிரிவு செயல்படுகிறது. தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல் நலனும், சுற்றுச்சூழலும் பாதிக்காத வகையில் பணி செய்திடவும் அனைத்து தொழிற்சாலைகளிலும் கொண்டாடப்படுவதற்காகத்தான் இந்த தேசிய பாதுகாப்பு தினம்.
தொழில்துறையின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். தொழில்துறையின் வளர்ச்சியினால் மட்டுமே நாட்டின் வேலைவாய்ப்பு பிரச்சினையை முற்றிலும் அகற்றி விடும் சக்தி உள்ளது. இதனை மனதிற்கொண்டு தேசிய பாதுகாப்பு குழுமம் சில தகவல்களை இன்று வெளியிட்டுள்ளது.
தொழில்வளர்ச்சியின் காரணமாக வேலைவாய்ப்பு அதிகரிக்கும் சூழலில் பணிபுரியும் தொழிலாளர்கள் எத்தகைய தொழில் நுட்பம் வாய்ந்த பணியாயினும் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவித்திடும் செயல்முறைகளைத் தவிர்த்து, பாதுகாப்புடன் சிறப்பாக பணிபுரிந்திட வேண்டியுள்ளது. பாதுகாப்புடன் கூடிய உற்பத்தியை பெருக்குவதும், தொழிலாளர்களின் பாதுகாப்பு உணர்வினை வளர்ப்பதும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் நிர்வாகிகளின் தலையாய கடமையாகும் என்பதனை இந்நாளில் தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ளோம். பல்வேறு தரப்பினரும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மேம்பாட்டில் சிறப்பான கவனம் செலுத்தி தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் வண்ணம் இது குறித்த தொழில்நுட்ப கருத்துக்களை அவர்கள் நடத்தும் பயிற்சிகள் மூலமாகவும், கருத்தரங்குகள் மூலமாகவும் எடுத்துக் கூறி வருகிறார்கள். அவர்களின் ஆய்வுகளில் பாதுகாப்பான வேலைசூழலை அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திட வேண்டுமென்று செயல்பட்டு வருகிறார்கள்.
தேசிய பாதுகாப்புக் குழுமம் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்திய தொழிற்சாலைகளுக்கு விருதுகள் வழங்குகின்றது. மேலும் தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு பாதுகாப்பு மேம்பாட்டு விருதுகளை ஒவ்வொரு வருடமும் வழங்குகின்றது. இந்த சீரிய முயற்சிகளின் மூலமாக தமிழகம் தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலம் என்பதனை இந்திய நாட்டிற்கு மட்டுமின்றி உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கும் நாம் நிருபித்துக் கொண்டிருக்கிறோம். இப்பணி செவ்வனே தொடர பணிபுரியும் அனைவரையும் மனதார வாழ்த்துகிறோம்.
------------------------------------------------------------------------------------------
உழைப்பாளர் தினம், தொழிலாளர் பாதுகாப்பு தினம் என்று வருடம் முழுவதும் ஒவ்வொரு தினத்தை உருவாக்கி எந்தப் பலனும் இல்லை. இந்தத் தினங்கள்
எல்லாம் வெற்றுச் சடங்குகளாகவும், வெறும் பெட்டிச் செய்தியாகவும் மட்டுமே இருக்கின்றன. தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும், பாதுகாப்பிற்கும் நிலையான நிரந்தரமான எந்தவொரு தெளிவான கொள்கைகளும் இங்கே வரையறுக்கப்படவில்லை. தினம் 300ரூபாய் கூலி பெறும் அவனால் தன் குடும்பத்தை நடத்துவதே சிரமமாக உள்ளது. கல்லடி பட்ட நாயைப் போல் தினம் தினம் இந்த வாழ்வோடு போராட ஓடிக்கொண்டிருக்கிறான். அவனின் சுமைகளும், துக்கங்களும் அதிகார வர்கங்களின் அதட்டுக் குரல்களில் அடங்கிக் கிடக்கின்றன. பதவி சுகம் பெற்று பாதுகாப்பாய் இருப்பவர்களுக்கு இவர்களின் மனிதமும், மகத்துவமும் என்றுமே தெரியப் போவதில்லை.
கீழே நான் எழுதியிருக்கும் கவிதையில் உள்ள தொழிலாளியின் வாழ்வை சற்று யோசித்துப் பாருங்கள்.

சுமையின் சித்திரம்
--------------------------
பசியையும் பளுவையும் பழகிய
கைகள் நரம்பின் வரைபடம்
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்த
திரேகம் கரிசல் காட்டு உலர்ந்த நிலம்
கூலாங்கற்களாய் புடைத்த நரம்பு முடிச்சுகளின்
உள்ளங்கால்கள் உழைப்பின் உதாரணம்
50 கிலோ மூட்டை, 75 நடை, 100 ரூவா தினக்கூலி
உழைப்பில் உருண்டோடுகிறது வாழ்க்கை
அசதியின் அடியாழத்தில் அன்று கிடந்த அவனின்
தோலில் தொங்கியபடி குழந்தை கேட்கிறது
"அப்பா என்ன உப்பு மூட்ட தூக்கிக்க"

Wednesday, March 2, 2011

வெளிச்சத்தைத் தேடும் நிழல்

ஜெமினி சிவா என்கிற சிவக்குமார், ஓவியக் கலைஞன். இன்றைய தேதியில் மாநிலத்தில் பரவலாக அறியப்பட வேண்டிய முகமாக இருக்க வேண்டியவன். ஆனால் எங்கள் ஊரிலேயே பலருக்கு அவனைத் தெரியாது. தன் திறமையின் சிறகை விரித்துப் பறக்கத் திராணியில்லாமல் சிற்றெறும்பாக சிறுவாழ்விற்கே போராடிக் கொண்டிருக்கிறான். காரணம் அவன் சமுகச் சூழலும், அவன் சார்ந்து இயங்கும் சக மனிதர்களும் தான்.
எனக்கு நவின ஓவியங்கள் மீதான ஆர்வமும், பரிட்சியமும்
அவன் நட்பு கிடைத்த பிறகே அறிமுகமானது. ரிவர்ஸ் ஒர்க் என்கிற ஒரு கலை வடிவில் அவன் வரைந்த ஓவியங்கள் எனக்கு மற்ற ஓவியர்களிலிருந்து அவனை வித்தியாசப்படுத்திக் காட்டியது. ஹூசைன் மற்றும் பல பிரபலமான கலைஞர்களின் ஓவியங்களை சேகரித்து ஆயிரம் இரண்டாயிரம் என செலவு செய்து வரைந்து அழகு பார்ப்பான். அவன் கடையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் நவின ஓவியங்களை இங்கிருப்பவர்கள் ஏதோ முடிக்கப்படாத ஓவியமாகவே பார்த்து விட்டுச் செல்வார்கள். பாரட்டுக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்து காத்திருப்பவனுக்கு வருத்தம் கலந்த சிரிப்பு மட்டுமே மிஞ்சும்.
புகைப்படம் எடுப்பதிலும் அவன் கைதேர்ந்த கலைஞன். அவனெடுக்கும் ஒவ்வொரு புகைப்படத்திலும் அவனின் லைட்டிங் சென்ஸை உணர முடியும். அதுமட்டுமல்லாமல் கவிதை எழுதுவது, குறும்பட சிந்தனைகள் என தன் சூழ்நிலைகளிலிருந்து முற்றாக விலகி அவர்களின் பாதையில் பயணிக்காமல் தனித்து இயங்கவே இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் இது போன்ற கலைஞர்களிடம் இந்தச் சமுகம் எதிர்பார்ப்பது அவனின் வானளாவிய திறமையையும், கட்டுக்கடங்காத கனவுகளையும்
அல்ல, சீக்கிரம் சம்பாதித்து பொருளைச் சேர்த்துக் கொண்டு தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதைத்தான். பணம் ஒன்று தான் இப்போது இந்தச் சமூகத்திற்கு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. அவன் மனைவி, இரண்டு குழந்தைகள் அவர்களின் குடும்ப செலவு, படிப்புச் செலவு என மாதம் பதினைந்தாயிரம் ரூபாய். அந்தப் பணத்திற்கு அவன் இந்த சமூகத்தோடு ஓடத்தான் வேண்டும். அந்தப் பணத்திற்கு அவன் வேஷம் கட்டித் தான் ஆக வேண்டும். இன்று அவன் தினத்தொழில் என்ன தெரியுமா? சுவரில் பெயிண்ட் அடிப்பதும், ஸ்டுடியோவிற்கு பேக்ரவுண்ட் ஒர்க் செய்வதும் தான். தன் கனவுகளை நனவாக்க போராடும் கலைஞன் இன்று தினக் கூலியாக
வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். பிக்காஸோ தொடங்கி இவன் வரை இந்த உலகம் உயிரோடிருக்கும் கலைஞர்களை பயன்படுத்திக் கொண்டதேயில்லை.
ஆனான் தொடர்ச்சியாக அவனால் இந்தச் சமுகப் பரப்பில் இயங்க முடியவில்லை. நவின ஓவியங்களின் வளர்ச்சி அவனை முற்றாக பாதித்தது. தனக்கான இடம் தேடியும், முறையான பயிற்சிக் களம் தேடியும் அலைந்து திரிந்தான். நாட்கள் செல்லச் செல்ல அவன் மனக்கசப்பிலும், குற்ற உணர்விலும் முழுமையாக பீடிக்கப்பட்டான். இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்து சில நண்பர்களால் மீட்கப்பட்டான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று அவன் என்னை சந்தித்தான், பெங்களூரில் இருப்பதாகவும் சில ஸ்டுடியோக்களுக்கு பேக்ரவுண்ட் ஒர்க் செய்வதாகவும் கூறினான். அவன் கண்களில் ஏதோ ஒன்றை அடையும் லட்சியம் தரையில் துள்ளும் மீனைப் போல் தத்தளித்துக் கொண்டேயிருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்றான்.
சரியான வழிகாட்டலும், முறையான பயிற்சியும் இல்லாத ஒரு உன்னத அனுபவக் கலைஞன் ஒற்றைப் புள்ளியாய் தூரத்தில் மறைந்து கொண்டிருந்தான்.
கடவுள் இருக்கிறாரோ? இல்லையோ? இது போன்ற மனிதர்களுக்காக மனம் அனிச்சையாகவே பிரார்திக்கத் தொடங்கி விடுகிறது.

எல்லாவற்றையும் சரி செய்யலாம்
-------------------------------------------
எல்லாவற்றையும்
சரி செய்யலாம்

இந்தப் பிரபஞ்சத்தில்
இன்னும் ஒரு நாள்
நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது

இந்தச் சூரியோதயத்தை
அதன்
இவ்வளவு வெளிச்சத்தை
யாரும் நம்மிடம் இருந்து
பறித்துக்கொள்ள முடியாது

கவனித்தாயா
இன்றைய காலை உணவு
நமக்கு மறுக்கப்படவில்லை

எல்லாவற்றையும்
சரி செய்யலாம்

நாம் பயமுறுத்தப்படும்போது
ஒரு கணம் நம் கண்கள்
பார்வை இழக்கின்றன

நாம் தாழ்வுணர்ச்சி கொள்ளும்போது
நமது ஒரு கரம்
செயலற்றுப் போகிறது

நாம் அவமதிக்கப்படும்போது
அதை உண்மை என்று
சற்றே நம்பிவிடுகிறோம்

எல்லாவற்றையும்
சரி செய்யலாம்

கசங்குவது உன் இயல்பெனில்
நீ மேலும் கசக்கப்படுவாய்

மண்டியிடுதல் உன் தேர்வு எனில்
நீ ஒருபோதும் கருணைகாட்டப்பட மாட்டாய்

கண்ணீர் சிந்துதல் உன் வழிமுறை எனில்
பிறகு அது ஒரு பழக்கம் மட்டுமே

எல்லாவற்றையும்
சரி செய்யலாம்

இனி பார்ப்பதற்கு ஒன்றுமில்லை
என்றபோதும்
இன்னும் ஒரு அழைப்பு ஏற்கப்படவேண்டியிருக்கிறது

இனி கேட்பதற்கு ஒன்றுமில்லை
என்றபோதும்
ஒரு காலடியோசை கேட்கத்தான் செய்கிறது

இனி வெல்வதற்கு ஒன்றுமில்லை
என்றபோதும்
இன்னும் எய்யப்படாத
ஒரு அம்பு மிஞ்சியிருக்கிறது

எல்லாவற்றையும்
சரி செய்யலாம்

எதற்கு என்று தெரியாமல்தானே
எங்கேயோ தொடங்கி
எங்கேயோ வந்து சேர்ந்திருக்கிறோம்

எதற்கு என்று தெரியாமல்தானே
அத்தனை விலையுயர்ந்ததை
சூதாட்டத்தில் வைத்தோம்

எதற்கு என்று தெரியாமல்தானே
வீடு திரும்ப மனமில்லாமல்
இந்தப் பாதி இருளில் நின்றுகொண்டிருக்கிறோம்

எல்லாவற்றையும்
சரி செய்யலாம்.
-மனுஷ்ய புத்திரன்
17-02-2010.