Sunday, September 30, 2018


நீர் உலகம்...


 
" டாடி இந்தா " என மகன் நீட்டிய ஒரு சொம்பு தண்ணீரில் என் முகம் பார்த்தேன். அலையலையாய், கலங்கலாய் பாதியழிந்த உருவமாய் என் முகம் அதில் காட்சியளித்தது.
எதிர்படும் யாவையும் அவன் சேமிக்கும் அன்பைப் போல அது சேகரித்துக் கொண்டே இருந்தது. அந்தக் கணம் அன்பைப் பெறுவதும், கொடுப்பதுமான பாடத்தை உலகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.

Wednesday, September 26, 2018


                கட்டளைப் பருவம்....



வீட்டில் :
சீக்கிரம் எழு,
சட்டுனு குளி,
பட்டுனு சாப்பிடு,
வேகமா நட,
பத்திரமா பஸ் ஏறு,
பள்ளியில் :
விளையாடாம படி,
மனப்பாடம் பண்ணு,
அழகா எழுது,
மறுபடியும் வீட்டில் :
பட்டுனு சாப்பிடு,
சீக்கிரம் தூங்கு
வளரும் குழந்தைகளின் நிகழ்காலங்கள்
நம் கட்டளைகளால் கட்டமைக்கப்படுகின்றன 😌😢😫🤯

Monday, September 24, 2018


          உலகம் தரும் உன்னதம்....



வாழ்வே வெறுப்பாய்,
வாழ்தலே அசிங்கமாய்,
மனிதர்களே மிருகங்களாய்,
எதிலும் பற்றற்று,
எங்கும் சலிப்புற்று,
எப்போதும் விவேகமற்று,
மனமே கணமாய்,
ஆசையே பாரமாய்,
தோல்வியே துணையாய்
என பசியோடு தனித்திருக்கையில் இந்த உலகம் யாவையும் கொடுத்து
விடுகிறது.

Thursday, September 20, 2018


   
                   சுழலும் உலகம்...



இந்த உலகம் முழுமையும் இருளில் நிறைந்து இருக்கும் வர்ணங்களைப் போல நம் எண்ணங்களில் அடங்காதவையாகவும், நம் புரிதலில் இருந்து விலகியதாகவும் தான் இருக்கிறது. இயற்கை சுற்றிவிட்ட பம்பரம் போல் நாம் இன்னமும் இங்கு சுழன்று கொண்டேயிருப்பது இன்னும் இன்னும் ஆச்சரியம்.

Tuesday, September 11, 2018


              கற்றது வாழ்க்கை....



முதல் ஐந்து நாட்கள் அழுது கொண்டே செல்லும் குழந்தை அவளுக்கான பால்யத்தை மீட்டுத் தருகிறான்.
வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேருந்தில் அவன் கையசைக்கையில் அவளுக்கான பிரியத்தை மீட்டுத் தருகிறான்.
மாலை வீடு திரும்பும் வரை மீதம் சுமந்து வரும் மதிய சாப்பாட்டில் அவளுக்கான இயலாமையை மீட்டுத் தருகிறான்.
அவன் கற்கும் பாடப்புத்தகத்தில் மட்டும் அவள் கற்றுக் கொள்ள எப்போதும் விரும்பியதேயில்லை.

Saturday, September 8, 2018


      செம்மொழியாம் தமிழ்மொழி...



What is your mother tongue?
My mother tongue is tamil.

"என் தாய்மொழி தமிழ்" என்பதைக்கூட ஆங்கிலத்தில் தான் அறிந்து கொள்கிறார்கள்.

Tuesday, September 4, 2018


              புதையுண்ட ஒரு ஆறு....



ஆறு வற்றிக் கொண்டிருந்த சமயம் பஞ்சம் பிழைக்க வெளிநாடு சென்றேன்,
சில வருடங்கள் கழித்து வந்து பார்த்தபோது மரங்களும், முட்புதர்களும் மண்டிக் கிடந்தது.
பிறகு சில வருடங்கள் கழித்து வந்து பார்த்தபோது விற்பனைக்கு வீட்டுமனைகளாக மாறி இருந்தது.
இப்போது நான் நின்று நெஸ்காஃபே சன்ரைஸ் குடித்துக் கொண்டிருக்கும் இந்த
14-வது மாடியின் அடித் தளத்தில்தான் அந்த ஆற்றின் வரலாறு புதைந்து கிடக்கிறது.