Tuesday, February 1, 2011

மனுஷ்யபுத்திரன் கவிதை...

நாம் அதிகம் கவனித்திராத வாழ்வின் மென்சோகங்களையும், பகிர்ந்திட முடியாத கணங்களையும் கவிதைகளாக பதிவு செய்யும் அசாத்திய திறமை தமிழில் ஒரு சிலருக்கே வாய்க்கிறது. அதில் முதன்மையானவராக கவிஞர் மனுஷ்யபுத்திரனைக் குறிப்பிடலாம். கவிதையின் ஒவ்வொரு படிமங்களிலும் வாசிப்பவனின் இதயத்தில்
உணர்வடுக்குகளை அடுக்கிக் கொண்டே சென்று, கவிதையின் இறுதி வரிகளில் அதனை முற்றிலும் கலைத்து விட்டு வாசிப்பின் அனுபவத்தை நம் மனதில் நிரப்பி விடுகிறார். உங்களின் மனதையும் சலனப்படுத்துகிறதா ??? படித்துப் பாருங்கள்...

நல்வாழ்த்துக்கள்
------------------------------------

நல்வாழ்த்துக்கள்
கடற்கரையில்
யாரோ கைவிட்ட நாயை
வீட்டுக்கு அழைத்து வரும்
யாரோ ஒருவனுக்கு

அழகு சாதன விற்பனை நிலையத்தில்
ஒரு ஒப்பனைப் பொருளை
ஒரு இளம்பெண்ணிடம்
'இது உங்களுக்கு தேவையில்லை' என
புன்னகையுடன் மறுக்கும் கடைப்பெண்ணுக்கு

பராமரிக்க முடியாத அன்னையை
மனநோய் விடுதியில் விட்டுவிட்டு
அந்தக் கட்டிடத்தை ஒரு கணம்
திரும்பிப் பார்க்கும் மகனுக்கு

இறுதிச் சடங்கில்
இறந்தவர்களின் காலைத்
தொட்டு வணங்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
நிராதரவான சாலையில்
யாரோ ஒருவரின் கையசைப்பிற்கு
வாகனத்தை நிறுத்தும்
யாரோ ஒருவனுக்கு

ஒரு உடைந்த பொம்மைக் காரின்
சக்கரத்தைப் பொருத்த
நீண்ட நேரமாகப் போராடும்
சின்னஞ்சிறு குழந்தைக்கு

ஏதேனும் ஒரு வரிசையில்
எப்போதும்
நின்று கொண்டிருக்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாருமற்ற வீட்டிற்குத்
தனியே திரும்பி வரும்
யாரோ ஒருவருக்கு

உத்தரத்தில் மாட்டிய புடவையை
நன்றாக இழுத்துப் பார்த்துவிட்டு
ஒரு கணம் தயங்கி யோசிப்பவருக்கு

வீடு திரும்பும் வழியை மறந்துவிட்ட
குடிகாரர்கள் ஒவ்வொருவருக்கும்

பழைய காதலரைத் தேடிச் செல்லும்
பழைய காதலர்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவரிடம்
தன்னை நிரபராதி என நிரூபிக்க முற்படும்
யாரோ ஒருவருக்கு

எதற்காவது பயன்படும் என்று
எதற்கும் பயன்படாதவற்றையும்
பாதுகாத்து வைப்பவருக்கு

ஒழுங்குபடுத்தவே முடியாத ஒன்றை
எப்படியும் ஒழுங்குபடுத்தி விடலாம்
என்று நம்பும் ஒவ்வொருவருக்கும்

கைமறந்து வைத்த பொருளைத்
தேடிக்கொண்டிருக்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவனின் ஆடையை
வேறு வழியில்லாமல்
அணியவேண்டியிருக்கும்
யாரோ ஒருவருக்கு

எப்படியும் இந்த நாள்
முடிந்துவிடும் என்று
வெறுமனே காத்திருக்கும் ஒருவருக்கு

ஏதோ ஒரு அவமானத்திற்காக
எப்போதும் ஆயத்தமாக இருக்கும்
ஒவ்வொருவருக்கும்

மருத்துவமனையில்
பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவர் அளிக்கும் விருந்தில்
சம்பந்தமில்லாமல் அமர்ந்திருக்கும்
யாரோ ஒருவருக்கு

எதிர்பாராத சந்தர்ப்பத்தில்
தன்னை இழக்க நேரும் ஒருவருக்கு

மகளின் அந்தரங்கக் கடிதங்களைப்
பிரித்துப் படிக்காத தந்தையர்
ஒவ்வொருவருக்கும்

எதற்கும் சரியாகக்
கணக்கு வைத்துக்கொள்ளத் தெரியாத
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவரின் வரிகளைக்
கண்ணீர் மல்க வாசிக்கும்
யாரோ ஒருவருக்கு

வேசியை முத்தமிடும்போது
அவளது பெயரைக் கேட்காத ஒருவருக்கு

முதன் முதலாக
இன்னொரு உடலைத் துய்க்கும்
ஒவ்வொருவருக்கும்

விசாரணைக்காக
அழைத்துச் செல்லப்படும் எவருக்கும்

நல்வாத்துக்கள்
சவக்கிடங்கினில்
யாரோ ஒருவரைத் தேடும்
யாரோ ஒருவருக்கு

தன்னுடைய ஒன்றை
தன்னுடையதல்ல என்று
மறுத்துவிடும் ஒருவருக்கு

விடுமுறை நாட்களுக்காகக்
காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும்

அப்போதுதான் பிறந்து
கண் விழிக்கும் சிசுக்கள்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவரிடம்
நான் அழகாக இருக்கிறேனா என்று கேட்கும்
யாரோ ஒருவருக்கு

பாதி வழியில்
முடிவை மாற்றிக்கொண்டு
வீடு திரும்பிவிடும் ஒருவருக்கு

நாற்பது வயதுக்கு மேல்
ஒவ்வொரு பிறந்த நாளையும்
கண்டு அஞ்சும்
ஒவ்வொருவருக்கும்

எல்லாவற்றையும்
இன்னொரு முறை புதிதாகத் தொடங்கலாம்
என நம்பும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒருவரை
மன்னிக்கும் வாய்ப்புக் கிடைத்த
யாரோ ஒருவருக்கு

வாதையைத் தாங்கிக்கொள்ள
புதுப் புது வழிகள் கண்டுபிடிக்கும் ஒருவருக்கு

பசியைப் பொறுக்க முடியாது
என கூச்சலிடும்
ஒவ்வொருவருக்கும்


இந்தக் கவிதைக்கு
வெளியே இருக்கும்
எவருக்கும்.

No comments:

Post a Comment