Tuesday, July 31, 2018


          ஒப்பனை வார்த்தைகள்....



மிகவும் சாதாரண சொற்கள் தான்
நாம் அவற்றை கடன் கேட்க ஒரு மாதிரியும்,
கடன் வசூலிக்க ஒரு மாதிரியும்,
அன்பு காட்ட ஒரு மாதிரியும்,
கோபம் காட்ட ஒரு மாதிரியும்,
கொஞ்ச ஒரு மாதிரியும், இன்னும் பல வகையிலும் அவற்றை அலங்காரம்
செய்து அடுத்தவர்களிடம் அளிக்கிறோம்.

Monday, July 30, 2018


               வாழ்விலக்கியம்.....


யாரிடமும் சமாதானம் அடைந்து கொள்பவர்களையும்,
யாரிடமும் தோற்றுக் கொண்டே
இருப்பவர்களையும்,
யாரிடமும் எதையும் எதிர்பாரமல்
இருப்பவர்களையும்,
எதற்கும், எப்போதும் ஆசைப்படாமல்
இருப்பவர்களையும்,
வெறுப்பவர்களிடமும் அன்பு காட்டிக்
கொண்டிருப்பவர்களையும்,
தான் இந்த உலகம் மடிமேல் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறது, நான் படித்த இலக்கியம் எனக்கு கற்றுத் தராதது.

Thursday, July 26, 2018


               நசுங்கும் வாழ்வு....



இந்த உலகம் பதில் தரமுடியாத பல
கேள்விகளின் குவியல்களாக இருக்கிறது.
அதனால் தானோ என்னவோ நம் வாழ்வை
வாழ்வதற்கே சில சமயம் அலுப்பாகவும், வெறுப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. நேற்று வாழ்வில் ஜெயித்தவர்கள்
இன்று எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. காலம் வேகம் எடுக்க நல்லவை, கெட்டவை என யாவும் மிதிபட்டு ஒன்றாகி விடுகின்றன.

Wednesday, July 25, 2018

 
                      அற்ப வாழ்வு.....



நம் கண்கள் அளவே இருந்த அந்த வண்ணத்துப்பூச்சி, அன்பின் இருக்கை தேடி அலைந்து கொண்டிருந்தது.
பல வனங்கள், பல காடுகள்,
பல ஆறுகள், பல நதிகள்,
பல மலைகள், பல பள்ளத்தாக்குகள்,
பல நகரங்கள், பல கிராமங்கள்,
பல குடும்பங்கள், இறுதியாய் ஒரே ஒரு ஒற்றை மனது என பார்த்து ஏங்கி தோல்வியுற்று உயர உயர பறந்த அந்த வண்ணத்துப் பூச்சி பற்றியெரியும் சூரியனிடம் சென்று சாம்பலாகிப்போனது.

Tuesday, July 24, 2018


                     நாள் மாற்றம்.....



இன்றைக்கு போலல்லாமல்
என்றைக்கும் உங்களுக்கு பிடித்தவனாகவே இருக்க விரும்புகிறேன்,
ஆனால் என்றைக்கும் இன்றைக்கு
போலல்லாமல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு என்னை பிடிக்கும்.
என்றைக்குமான நாட்களை முதலில் தக்கவைத்துக் கொள்வோம். இன்றைக்கான நாளை பிறகு என்றைக்காவது நாம் விரும்பும்படி மாற்றிக் கொள்வோம்.

Monday, July 23, 2018


          சொற்களின் வாழ்க்கை....



எங்கோ இருந்து பெருமழையாய்
பொழியும் சொற்களை நீங்கள்,
அழகூட்டி, நிறம் சேர்த்து, பாவனைகள் பழகி என யாவும் சேர்த்து இந்த
உலகில் உலவ விடுகிறீர்கள்,
இந்த உலகிற்கு என் சொற்கள் எப்போதும் தேவைப்படுவதில்லை, அது யார் சொற்களையும் கேட்காமல் நான் வளர்க்கும் கள்ளிச் செடிகளுக்கே உரமாகிறது.

Thursday, July 19, 2018


  ஆசைகளின் பிறப்பிடங்கள்....


நாம் நேசித்து இழந்ததை,
நாம் கற்க நினைத்து கற்காததை,
நாம் பெற நினைத்து பெறாததை,
நாம் செய்ய நினைத்து செய்யாததை,
என நம் நிறைவேறாத ஒரு வாழ்வை
நம் பிள்ளைகளின் மீது திணிப்பது
நம் வன்முறையே.....

Tuesday, July 17, 2018


             என்றைக்குமானவன்.....


தினம் சந்திக்கும் ஏமாற்றங்கள்,
தினம் தழுவும் தோல்விகள்,
தினம் படரும் கோபங்கள்,
தினம் வருடும் வருத்தங்கள்,
தினம் பெருகும் பொறாமைகள்
என யாவும் மொத்தமாய் அமிழ்ந்து விடுகின்றன,
உன் அன்பின் பெருமழையில்...

Monday, July 16, 2018


         நினைவின் சுவடுகளில்....


அனுபவத்தின் பெருவெளிகள் நமக்கு பால்யத்தில் மட்டுமே கிடைக்கின்றன.
சந்தோசம், ஏக்கம், படபடப்பு, அழுகை, சிரிப்பு, போட்டி, பொறாமை என சராசரி மனித இயல்புகள் யாவும் அப்பருவத்தில் தான் நம்மிடம் வந்தடைகின்றன.
பெரியவர்களின் மனதில் என்றைக்குமான புதுக்கவிதையாக எல்லோருக்கும் தங்கள் சிறார்பருவம் நிச்சயம் இருக்கும்.

Friday, July 13, 2018


                எனக்கானவை....


பசியோடு இரவெல்லாம் பயணம்,
கை, கால்கள் உணர்விழந்த நிலை,
லட்சத்திற்கும் மேற்பட்ட தலைகளோடு
கலந்து விடுகிறது, எங்கள் தலைகளும்.
ஊர்ந்து, தடுக்கி, தவழ்ந்து, காத்திருந்து
இறுதியாய் கண்டடைந்தோம்
உனக்கான கடவுளையும், அதில்
எனக்கான கலையையும்.
நீ கடவுளிடம் யாசித்துக் கொள்,
நான் கலையை ரசித்துக் கொள்கிறேன்.

Thursday, July 12, 2018


                வாழ்வின் அழகியல்



     காலை எழுந்து குளித்து முடித்து எல்லா ஒழுக்குகளுடனும் இந்த உலகிற்கு
நம் முகத்தை அறிமுகம் செய்து வைத்துக் கொள்கிறோம்.
ஏமாற்றுபவர்களை ஏமாற்றி,
பாராட்டுபவர்களை பாராட்டி,
சிரிப்பவர்களிடம் சிரித்து,
அழுபவர்களிடம் அழுது,
வேண்டுபவர்களிடம் வேண்டி
என நமக்கான காரியத்தை முடித்து
தற்காலிக இறப்பு எனும் இரவிற்குள்
அடைந்து கொள்கிறோம்.
தூய அன்பு தினம் பூத்து உதிரும் மலரைப்
போல எப்போதும் இருக்கிறது.

Tuesday, July 10, 2018


      உன் நினைவின் துளியாக....


யார் யாரோ,எப்பொழுதோ
வேண்டாமென்று வானத்தில்
வீசியெறிந்தவைகள் தான் இன்று
வானில் நட்சத்திரங்களாக ஒளிவீசிக்
கொண்டிருக்கின்றன.
எண்ணிலடங்கா அந்தப் புள்ளிகளில்
ஒரு புள்ளியாக நானும்
ஒளிர்விட்டுக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவின் சிறு துளியாக....

Monday, July 9, 2018


               சுயத்தை இழத்தல்....



இயல்பான கோபத்தை,
வெறுப்பை, நிராகரிப்பை, வேண்டுதலை, உரிமைகளை, மாற்றத்தை
என சராசரியான ஒருவனின் உணர்வுகளை இந்த சமூகம் சார்ந்து வாழ்பவர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை. அதிகாரத்தாலும், அறிவுரைகளாலும், அவர்களை அவர்களாக இருக்க அனுமதிப்பதேயில்லை.
நம் இனத்தின் பெருஞ்சாபமும், பின்னடைவும் அதுவே.

Saturday, July 7, 2018

 
                      காட்சி உலகம்....



வேடிக்கை பார்ப்பவர்களின் உலகம்
விசித்திரங்களால் நிரம்பியது.
அவர்களின் மனம் முழுவதுமே அனுபவங்களால் நிரம்பிய அற்புதக் குவியல்.
விபத்து, அழுகை, சிரிப்பு, திருட்டு என அவர்கள் கண்முன்னே நடக்கும் அத்தனை சம்பவங்களும் அவர்களுக்கு வெறும் காட்சியே.
கடவுளுக்கும் அது பிடித்ததாலோ என்னவோ எப்போதும் இந்த உலகை
வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Thursday, July 5, 2018


                 மிதக்கும் உலகம்.....



திரும்ப திரும்ப தோல்விகளை சந்திக்க
நேரிடும் நேரத்தில்,
மிதக்கும் மேகம் வரை கோபம்
கொப்பளிக்கும் கணத்தில்,
விளக்கங்கள் கொடுக்காமல் விலகிச்
செல்லும் விரக்தியான வினாடிகளில்,
எப்போதாவது வழியும் கண்ணீரை தானே துடைத்துக் கொள்ளும் தருணத்தில்,
"டாடி விளையாடலாமா"??? என மகன்
கேட்கும் பொழுது எனக்கான உலகத்தை சற்று வேறு பக்கம் திருப்பி விடுகிறான்.

Wednesday, July 4, 2018


                      இருள் தீபம்.....



இந்த இருளே போதுமானது,
நீ தந்த கருணையை,
நீ தந்த அன்பை,
நீ தந்த நேசத்தை,
நீ தந்த பரிகாசத்தை,
நீ தந்த வெறுப்பை,
நீ தந்த நிராகரிப்பை,
இறுதியாய்
நீ தந்த இந்த என் இறப்பை
மறைத்து வைக்க
இந்த இருளே போதுமானது.

Tuesday, July 3, 2018


   ஒரு வீடும் அதன் விருந்தாளிகளும்...



அவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள்
வீட்டிற்கு வருகிறார்கள்,
அக்கணம் அவர்கள் அவர்களாக அல்லாமல் அந்த பிடித்தவர்களைப் போலவே மாறி வீட்டையும் மாற்ற
நினைக்கிறார்கள். பிறகு....
அவர்களுக்கு மிகவும் பிடிக்காதவர்கள்
வீட்டிற்கு வருகிறார்கள்,
அக்கணமும் அவர்கள் அவர்களாக
அல்லாமல் அந்த பிடிக்காதவர்களுக்கான
வீடாய் மாற்ற நினைக்கிறார்கள்.
எல்லாம் முடிந்த பிறகு இறுதியில்....
வீடு என்றும் வீடாய் மட்டுமே இருக்கிறது.

Monday, July 2, 2018


                          தவ வாழ்வு.....



முப்பது நாட்கள் தவ விரதமிருந்து,
தினம் இருவேளை குளித்து,
கோவிலா?, வீடா? என பார்க்கும் கண்கள்
திகைக்கும் அளவிற்கு ஆத்திகமாய் மாறி,
எல்லாம் நிறைவேறி மலையேறி இறைவனை தரிசிக்கும் சமயம் நெஞ்சை பிடித்தவர் தான், இன்று பத்திரமாய் சொர்கத்தில் சேர்ந்து விட்டார்.

Sunday, July 1, 2018


                 வெந்து தணிந்தது....



எத்தனையோ முறை அடிக்க முயற்சித்து நொடிப்பொழுதில் பறந்து சென்றிருக்கின்றன,
என்னை கடித்த கொசுக்கள்.
ஆனால் அன்று அப்படியொன்றும் அதை அடிக்க முயற்சிக்கவேயில்லை,
கைகள் மீது அமர்ந்த சில வினாடிகளில்
லேசாய் தட்டிய மறுகணம் பாதி உயிர் பிரிந்தது, பின்பு சிறுக சிறுக. ஆனால்
இறக்கும் வரை அதன் கோபமும், பசியும் அடங்கவேயில்லை.