Thursday, January 20, 2011

சாரு - அரைநூற்றாண்டு அற்புதம்சாருநிவேதிதா.... இவரை உயிரோடிருக்கும் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் முதன்மையானவர் என்பதை எந்த சந்தேகமும், யோசனையும் இல்லாமல் கூறுவேன்.
எழுத்தை மட்டுமே தன் உயிர்மூச்சாக கொண்டு வாழும் வெறியன். அந்த வெறித்தனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம் அறிவுஜீவிகளான தமிழர்களுக்கு இல்லாததால்
தான், தமிழகத்தின் கடைக்கோடி மனிதர்களில் ஒருவராக இண்டர்நெட் பிச்சைக்காரன் என்றும் செக்ஸ் எழுத்தாளன் என்றும் முத்திரை குத்தப்பட்டு முச்சந்தியில் இருந்து கொண்டு தன் கர்வத்தை இழக்காமல் வாழும் கலைஞன்.
அரசியல் நுணுக்கங்களின் அறிவுப் பெட்டகமாக ஆஸாதி...ஆஸாதி...ஆஸாதி, மூடு பனிச்சாலை மற்றும் இதர எழுத்துக்களில் தன் ஆழமான விமர்சனத்தின் மூலம் அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை உலகுக்கு உணர்த்தியவன்.
பின்நவினத்துவ இலக்கிய பரப்பில் தன் நாவல்களான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சிபனியனும், ஜிரோ டிகிரி, ராஸலீலா, காமரூப கதைகள், சமிபத்தில் தேகம் என தன் அனுபவ எழுத்துக்களின் மூலம் யாரும் தொடமுடியாத உயரத்திற்கு சென்றவன்.
வழக்கமான சினிமா விமர்சனங்களை உடைத்தெறிந்து தன் மனசாட்சியின் குரலாய் சினிமா சினிமா, அலைந்து திரிபவனின் அழகியல், நரகத்திலிருந்து ஒரு குரல் என்ற உன்னத படைப்புகளின் மூலம் குறைகுடங்களாய் இருந்த (கமல்ஹாசன், மணிரத்னம், இளையராஜா, ஷங்கர், ஜேசுதாஸ்) தமிழ்க் கலைஞர்களின் தவறுகளை நேர்மையான தன் எழுத்துக்களின் மூலம் சுட்டிக்காட்டி இன்றைக்கும் பலரது விரோதங்களை சம்பாதித்துக் கொண்டிருப்பவன்.
தூங்கும் போதும் கனவில் வரும் கனவுகளை சிறுகதையாக மொழிபெயர்த்து மதுமிதா சொன்ன பாம்பு கதைகள், ஊரின் மிக அழகான பெண், நேநோ முதலிய படைப்புகளின் மூலம் வாசகர்களின் குறிப்பாக என் தூக்கத்தை கெடுத்த புன்னியவான்.
வாழ்வின் எதிர்மறைகளை, இன்னல்களை, சந்தோஷங்களை, காழ்ப்புணர்ச்சிகளை என எல்லாவற்றையும் கொட்டித் தீர்க்கும் கட்டுரைத் தொகுதிகளாக வாழ்வது எப்படி?, எனக்கு குழந்தைகளை பிடிக்காது, கடவுளும் நானும், வரம்பு மீறிய பிரதிகள், திசை அறியும் பறவைகள், கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் என தன் வாழ்வின் வடிவத்தை எழுத்தால் தந்தவன்.
நீ கேள், நான் கூறுகிறேன் என்று இன்றளவும் தன் மனசாட்சியின் அரசாட்சியை வாசகனின் ஜனநாயகத்தில் ஒப்படைத்ததின் சான்றாக அருகில் வராதே என்கிற
நூலைக் கூறலாம்.
நாம் கொண்டாடும் இசைக்கு எதிரான நியாயமான கோரிக்கையை முன் வைத்து எழுதப்பட்ட இசைவிமர்சன கட்டுரையான கலகம் காதல் இசை என்ற தொகுப்பை எந்த இசை அமைப்பாளர்களோ, இசை விமர்சகர்களோ தட்டிக் கழித்து விட முடியாது. ஒவ்வொரு வார்த்தைகளும் கடலின் அடிஆழத்தை தொட்டுவிட்டு வந்தவை.
இவரை மனிதன் என்று கூறினால் உண்மையாக எனக்கு நம்புவது சற்று சிரமமாகத் தான் இருக்கிறது. மேற்கண்ட நூலின் பட்டியல் எல்லாம் நான் படித்தது மட்டுமே.
இன்னும் எண்ணிலடங்கா நூலும், அவரின் கனவோடு கரைந்த கையெழுத்து பிரதிகளும் அதிகம். அவரின் படைப்புகளை நான் FAST READING முறையில் படித்து விட்டேன். இந்த நிலையில் எனக்கு சில அடிப்படை கேள்விகள் எழுகின்றன, அதை அவருக்கு எழுதினால் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது வலைப்பதிவில் கேள்வி-பதில் பகுதியில் ஒரு வாசகரை ஓடஓட விரட்டியிருந்தார் அந்த நிலை தான் எனக்கும் ஏற்படும் என்கிற பயம். நவின இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவராக கருதப்படும் ஜெயமோகனையே நார்நாறாய் கிழித்து தோரணம் கட்டி தொங்கவிடும் போது நானெல்லாம் எம்மாத்திரம்...???
தமிழகத்தில் சாருவிற்கு பிரியமானவர்கள் என்று இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் மனுஷ்ய புத்திரன் இன்னொருவர் எஸ்.ராமகிருஷ்ணன்.
இவரின் மெட்டாஃபிக்சன் தொகுப்பான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சிபனியனும் நாவலை பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா குறிப்பிட்டது,
"இலக்கியம் என்பது கங்கை நதி போல; அதில் எல்லா சங்கதிகளும் மிதந்து போகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த நாவலும் பழுப்பாக மிதந்து செல்லும்ஒன்று"
இன்றும் நம் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களும், வாசகர்களும் இந்த மனநிலையிலேயே தான் இருக்கிறார்கள்.தமிழ் இலக்கிய உலகில் இன்றுவரை யாரும் தொடாத போர்னோ எழுத்துக்களை படைத்து (சாருவைக் கேட்டால் நான் போர்னோவை இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை என்பார்) சக படைப்பாளிகளின் முன்னோடியாக
இருப்பவர். சாருவின் இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழியில் அல்லாது வேற்று மொழியில் இடம்பெற்றிருந்தால் இன்று உலகின் தலைசிறந்த எழுத்தாளராகவும்,
மில்லினியர்களின் சொந்தக்காரராகவும் இருந்திருப்பார்.
ராஸலீலா, காமரூப கதைகள் இரண்டின் நாவல்களிலும் ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றியும் விரிவான மதிப்பீட்டை முன்வைக்க முடியும். அதற்கு சமகால இலக்கியவாதிகளான மனுஷ்ய புத்திரன், எஸ்.ரா, ஜெயமோகன், லா.சா.ரா, கி.ரா, எம்.யுவன், கலாப்பிரியா, தேவதச்சன், முகுந்த் நாகராஜன், யமுனா ராஜேந்திரன், ரவிக்குமார், விக்ரமாதித்யன், பழமழய் இன்னும் பல எழுத்தாளர்களின் படைப்புகளை எல்லாம் முழுமையாக படித்தால் தான் சமகால இலக்கிய போக்கின் பாதை பிடிபடும். அப்போது தான் சாருவின் எழுத்துப் பிரவேசத்தை ஓரளவிற்கு நான் உணர முடியும். இது நிறைவேறும் போது அவர் யோசிக்கும் படியான கேள்விகளை கேட்க என்னை தயார் செய்து கொண்டு நிச்சயம் அவரை ஒரு நாள் சந்திப்பேன், அவரது வலைத்தளத்தில்....