Friday, December 28, 2018


                        அன்பினால்....



வார்த்தைகள் மெளனம் காக்கும்,
உணர்ச்சிகள் உயிரற்று போகும்,
உணர்வுகள் பெருக்கெடுத்து ஓடும்,
காலங்கள் கசப்பானவை ஆகும்,
கணங்கள் கண்ணீராக கரையும்,
பிரியங்கள் பிண்ணிப் பிணையும்,
அன்பின் ஆறுதலையும், அவசியத்தையும்
உணரவாவது வேண்டும்
உனக்கும், எனக்குமான பிரிவென்பது....

Sunday, December 23, 2018


             முதன்மையானவன்....


எக்காலத்திற்கும், எப்போதும் இவன் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். மனிதமும், நேசமும், தன் உழைப்புமே தன்மானம், வாழ்வின் அடையாளம், அர்த்தம் என போதித்த ஆசானுக்கு வீரவணக்கம் 🙏🙏🙏

Saturday, December 22, 2018


               நமக்கானவைகள்....



என்னைப் பற்றிய உண்மைகள் உங்களுக்கு எப்போதும் கசப்பையே ஏற்படுத்துகின்றன.
திசைகள் என்ற ஒற்றைப் புள்ளியில் இருந்து நான்காய் பிரிபவர்கள் நாம்,
இயற்கையில் நீங்கள் வேண்டுமானால் மாமழையாய் பொழியலாம்.
நமக்கான உடைந்த வார்த்தைகளை
உங்கள் பெருமழையோடு ஏற்கும் பூமியாய்
நமக்கான நல் இறந்த காலங்கள்.

Friday, December 21, 2018



               வேண்டிக்கிடப்பது....



மருத்துவர் கண்களில் அடிக்கும் டார்ச் ஒளியைப் போல சுளீரென்று கண்களில் வந்திறங்கும் அதிகாலை சூரிய ஒளி,
பிடிவாதம் பிடிக்கும் சோம்பலோடு
கூட்டு சேரும் பனித்துளிகளும், போர்வையும்,
சேவல்களின், தென்னங் குருவிகளின், கட்டிய கன்றுகளின் என தினத்திற்கான அதிகாலை அலாரங்கள்,
இதற்காகவேணும் எனக்கு வேண்டும்....
நான் பிறந்த இந்த வீடு....

Thursday, December 20, 2018


   நாடோடிக் குறிப்புகள்...



அதிகாலைக் குளிர் மெல்ல விலகிக்
கொண்டிருந்தது,
ஆறு வயதுப் பையன் விளையாடிக் களைத்த உறக்கத்தில் அழகாய் தெரிந்தான்,
அம்மாவும், அப்பாவும் காலத்தையும், கடவுளையும் மனதில் வசை பாடிக் கொண்டுந்தனர்,
அடையாள அட்டைகள், துணிமணிகள்,
தண்ணீர் பாட்டில் என யாவும் கூட சில கண்ணீர் துளிகளையும் தந்தனுப்பினாள் மனைவி,
பிழைப்பு தேடி பிழைக்க செல்பவர்களின் சுயசரிதைகள் என்றும் மாறுவதேயில்லை. 

Wednesday, December 19, 2018


       கேள்விகளால் ஆன உலகம்...



பத்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் கேட்கும் கேள்விகள் சுவாரஸ்யமும், புதிர்களும், அழகும், அர்த்தமும் நிறைந்தவைகள்.
வானில் தினம் உயிர்பெறும் நட்சத்திரங்களைப் போலவே குழந்தைகள் மனதிலும் தினம் தினம் கணக்கற்ற கேள்விகள் பிறந்து கொண்டேயிருக்கின்றன. குழந்தைகளாய் இருக்கும் போது வளரும் கேள்விகள் தான் நாம் பெரியவர்கள் ஆனவுடன் அதுவும் ஆசைகளாக வளர்ந்து விடுகிறதோ என்னவோ???!!!

Tuesday, December 18, 2018


              சாப்ளின் உலகம்...



தினக்கவலையில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள நகைச்சுவை என்பது நமக்கு தேவையாக இருக்கிறது.
கோபம், வெறுப்பு, அழுகை, துரோகம் என யாவற்றிலிருந்தும் விடுபட்டு ஒளிந்து கொள்ள நம்மை சிரிக்க வைப்பவர்கள்
நமக்கு தேவையாய் இருக்கிறார்கள்.
அதனால் தானோ என்னவோ கடவுளைப் போல சிரிக்க வைப்பவர்களை நாம் தினம் தினம் தேடிச் செல்கிறோம் போல 😌😌😌

Saturday, December 1, 2018


                   உயிர் உலகம்....



நான் பார்த்த வரையில் நிறைய பேர் அப்படித்தான், தன்னை கடித்துக் கொண்டிருக்கும் கொசுவை கொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்து அடிப்பதில்லை. சுளீறென்று வலிக்கும் போது சட்டென அந்த இடத்தில் அடிக்கிறோம். அன்றும் அப்படித்தான் அடித்தேன். மெல்ல மெல்ல அதன் உயிர் பிரிந்தது. என்றும் போல் அன்றும் உலகம் பரபரப்பாகவே இருந்தது.