Friday, February 15, 2019


               காட்சிப் பொருள்...


அது விசித்திரமான சந்தை...
ஒரு அழகான பறவை கூடை நிறைய
அதன் இளமையான குரலை சேகரித்து
விற்றுக் கொண்டிருந்தது.
ஒரு அழகான சிங்கம் கூடை நிறைய
அதன் கனமான கம்பீரத்தை சேகரித்து
விற்றுக் கொண்டிருந்தது.
இப்படியாக யானை, புலி, கிளி, கரடி
என யாவும் அதனதன் உயிர் மூலங்கள்
அந்த சர்க்கஸ் கூண்டிற்குள் மனித அதிகாரத்தால் அடைக்கப்பட்டு காட்சிப் பொருளாக மாறிக் கொண்டிருந்தன...

Thursday, February 14, 2019


            அன்பெனப்படுவது....

உயிர்களின் சுயசரிதையில் மிகமிக அந்தரங்கமான, அற்புதமான, மனதுக்கு நெருக்கமான வாழ்வுப் பகுதி காதல் பாகம் தான்.
ஒரு ஆணுக்கு பெண் மீதும்,
ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஏற்படும்
ஈர்ப்பு மட்டுமே காதல் அல்ல.
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,புத்தகம், இசை, நாய்க்குட்டி என நம் மனதின் அடியாளத்தில் பாதுகாப்பாய் இருப்பவர்களும் நம் காதலுக்கு உரியவர்கள் தான்.
வாருங்கள்... காதலெனும் அன்பின் விதையை விதைப்போம்....

Wednesday, February 13, 2019

 

                     புத்தக வாசம்...


வரவேற்பு தோட்டத்தில் தொங்கும்
ஒற்றை ரோஜா...
வருக... வருக... என வரவேற்கும்
மொசுமொசு வரவேற்பு மிதி துணி...
கொஞ்சம் ஒட்டடையும், அழுக்கும்
மிதந்திருக்கும் அறைகள்...
இவையெல்லாம் போக அறை முழுக்க
சிதறிக் கிடக்கும் பலபுத்தகங்கள் இருக்கும் யாவரின் வீட்டையும்
அவரின் வீடாக நினைக்க தோன்றுவதேயில்லை...

Tuesday, February 12, 2019


                      இம்மானுடம்....



ஒரு மலரைப் போல நம்மால்
வாசத்தை தர முடிவதில்லை,
ஒரு எறும்பைப் போல நம்மால்
ஓயாமல் உழைக்க முடிவதில்லை,
ஒரு பறவையைப் போல நம்மால்
சுயமாக இருக்க முடிவதில்லை,
ஒரு நதியைப் போல நம்மால்
பயணம் செய்ய முடிவதில்லை,
ஆனால் மனிதன் என்ற கர்வத்திற்கு
மட்டும் குறைச்சலில்லை.....

Friday, February 8, 2019


       எல்லோருக்குமான உலகம்...



எதற்குமே தகுதியில்லாதவனின்
வெற்றி எனக்கு பிடித்திருக்கிறது,
அன்பைக் ஆராதிப்பவனின்
இழப்பு எனக்கு பிடித்திருக்கிறது,
கர்வம் கற்று தேர்ந்தவனின்
கலகம் எனக்கு பிடித்திருக்கிறது,
கோபம் கொண்டாடுபவனின்
கண்ணீர் எனக்கு பிடித்திருக்கிறது.
எல்லோருக்குமானதாக இருக்கும் இந்த
உலகம் எனக்கு பிடித்திருக்கிறது.

Thursday, February 7, 2019


                  மிதக்கும் கவிதை...


 உயிர் மெய் எழுத்துக்கள் எறும்பாய்
உடலில் ஊர்ந்து கொண்டிருக்க,
ஒவ்வொன்றையும் லாவகமாக பிடித்து
மலர் தொடுப்பதைப் போல
அழகாய் கவிதை செய்து விடுகிறாய்.
கவிதை தீராது,வார்த்தைகள் தீர்ந்து போக இரவு வரை காத்திருந்து நட்சத்திரங்களை
பிடிக்கத் தொடங்கியிருந்தாய்....