Wednesday, January 31, 2018

கலைந்து விடும் வாழ்வு


ஒரு கனவு சட்டென கலைந்து விடுவது
போலத்தான்,
யாவரின் ஆசைகளும்,
யாவரின் முயற்சிகளும்,
யாவரின் வெற்றிகளும்,
யாவரின் தேடல்களும்,
யாவரின் பிரார்தனைகளும்,
கலைந்து விடுகிறது. எனினும் இந்த
சிக்கலான வாழ்க்கையை எல்லோரும்
இன்னும் இன்னுமென வாழத்தான் விரும்புகிறோம்.

Tuesday, January 30, 2018

நினைவுகளின் உடன்படிக்கைகள்


நினைவுகள் யாவற்றையும்
நிதானமாக பறித்துச் செல்கிறாய்.
ஒரு மலரை பறிப்பது போல் வெகு மென்மையாய் பறித்துச் செல்கிறாய்.
உயிர் வேர் வரை வந்து செல்கிறது
உன் வாசம்.
உன் அன்பின் ஈரத்திலும், கதகதப்பிலும்
கருவறையில் உனை சுமக்கவாவது
இந்த இறப்பின் இழப்பிற்குள் அந்த
வரத்தை எனக்களித்து விட்டுப் போ.
பிறகு பிரிந்து செல்லலாம்
நான் நீயாகவும்,
நீ நானாகவும்.

Monday, January 29, 2018

                 
                     இப்படிக்கு, எழுத்து
                 

எதற்காக என் எழுத்து?
நான் எழுதும் மூலப்பொருளுக்கான
ஒரு சதவிகிதத்தைக் கூட இந்த எழுத்தால்
எனக்கு தர இயலாது. பிறகு எதற்காக
இந்த எழுத்து? என் எழுத்து?
இருந்தும் தேவையாயிருக்கிறது,
சில கனவுகளை வரையறுக்க,
சில நிபந்தனைகளை மேற்கொள்ள,
சில ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ள,
சில காயங்களை சரிசெய்து கொள்ள,
நான் இறந்த பின்பும் உயிர்வாழ
என என் எழுத்து எனக்கு தேவையாய் இருக்கிறது.

Sunday, January 28, 2018


               மறுக்கப்படும் வாழ்க்கை


மென்சோகம் படர்ந்த முகங்களும்,
உழைத்துக் களைத்த கண்களும்,
பசியில் தேங்கிய தேகமும்,
அழுக்கும், அடர்ந்த கேசமும்,
வறட்சியான வாழ்வாதாரமும்,
நாளைய நம்பிக்கைகளை உழைப்பின்
மூலம் மட்டுமே அடைந்துவிடத் துடிக்கும்
இதுபோன்றவர்களின் முகவரிகள் தான்
டிஜிட்டல் இந்தியாவால் மெல்ல மெல்ல
அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

Saturday, January 27, 2018


உயரே ஒரு வானம் மிதந்து கொண்டிருப்பதாகத் தான் சுருங்காத அந்த தோலுக்கு தெரியும்.
இல்லாமல் இருப்பவர்களின் உலகமும், நீங்கா நினைவுகளின் பரந்த தொகுப்புகளாகத் தான் சுருங்கிய
அந்த தோலுக்கு தெரியும்.
ஆனால் வானம் எப்போதும் வானமாக
மட்டுமே இருப்பது இயற்கைக்கு
மட்டுமே தெரியும்.

Friday, January 26, 2018

            இன்றைய நாளைப் போல
                அன்றொரு நாளில்...

சில வருடங்களுக்கு முன்னர் இன்றைய நாளில் தான் நம் குடும்பத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் முதல் விழாவும், திருவிழாவும் ஆகும். திருமணம் எனும் புது உறவின் அடர்த்தியை உணர்ந்த தினம். உறவுமுறை அறிந்திடாத உறவினர்கள், அறிமுகமில்லாத ஆயிரம் முகங்கள், பொதுக்கூட்டத்திற்கு கூட வராத மந்திரிகள், MLAக்கள் என மண்டபமே அதிரிபுதிரியானது. அங்கிருந்த மொத்த கூட்டமும் தேவராசன்-கெளசல்யா எனும் தம்பதியின் ஒற்றை பரிமாணத்திற்க்கான கூட்டம். ஹாய் ஹீய் என்று பந்தியில் முதல் ஆளாக பரிமாற நின்று கொண்டிருந்த நானெல்லாம் கூட்டம் வரிசை கட்டியவுடன் சாம்பார் வாளியோடு ஓர் ஓரமாக ஒதுங்கி விட்டேன். முதலில் மண்டபத்தோடு இருந்த கூட்டம் பிறகு வாசல், வராண்டா இறுதியில் சாலை வரை சென்று விட்டது. இன்று எவ்வளவோ விழாக்களுக்கு எவ்வளவோ கூட்டம் சேர்ந்தாலும் உண்மையில் அப்போது ஒரு கல்யாணத்திற்கு அவ்வளவு கூட்டத்தை முதல் முறையாக அங்கிருந்த மொத்த கூட்டமும் பார்த்தது. தென்படும் எல்லார் கண்களிலும் பரபரப்பும், ஆனந்தமும். இன்னும் இன்னும் எத்தனை எத்தனை நினைவுகள் இன்றைய நாளைப் போல ஒரு தினத்தில் தான் அன்றொரு நாள் நடந்தது. வாழ்க்கையை எதற்காக அடுத்தவர்களுக்காக கொஞ்சம் வாழ வேண்டும் என்பதை அங்கு வந்த கூட்டமும், வாழ்த்திய மனங்களும் இன்றுவரை ஒரு இசையாக மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. மறக்காத நினைவின் சிறகுகள் இப்படித்தான் வானம் வரை பறக்கும் போல. அடிக்கரும்பைப் போல தித்திக்கும் இந்த நினைவுகளின் வாழ்த்துக்கு உரியவர்களான மகிக்கும், மாமாவிற்கும் ஒட்டுமொத்த "Our Family "-ன் வாழ்த்துக்கள்.

Thursday, January 25, 2018


வாழ்வின் துயரங்கள், கவலைகள், வெறுப்புகள், கண்ணீர் துளிகள்,
விரோதங்கள், ஏமாற்றங்கள், வலிகள்,
அவமானங்கள், நிராகரிப்புகள்,
தனிமைகள், பயங்கள், பரிதாபங்கள்,
பாவங்கள், அக்கறையின்மைகள்,
என யாவற்றையும் நீங்கள் ஒருவேளை
பசியில் கூட சந்திக்க நேரிடும்.

Wednesday, January 24, 2018

             
                வாழும் நதியலைகள்


நாளைக்கென்று இவர்களிடம் இருப்பது வெறும் நம்பிக்கை மட்டுமே.
எங்கும் தனக்கான வாழ்வை அழகாக்கி கொள்ளவும், அற்புதமாக்கிக் கொள்ளவும் எளிதில் இந்த எளியவர்களால் இயலும்.
அன்பும், அரவணைப்புமே இனம், மதம், மொழி, கலாச்சாரம் என எல்லாவற்றுக்கும் மேலாக நம் வாழ்வை இயக்கும் இதயங்கள்.

Tuesday, January 23, 2018

                      அன்பின் முகவரி



பசி நேரத்தில் சுடச்சுச ரசம் சோற்றை
பரிமாறும் கைகள்,
தீராத நம் தனிமையை கொல்ல
வரும் காலிங்பெல் சப்தம்,
தொலைதூர பயணத்தில் சகபயணி
கொடுக்கும் கவிதைத் தொகுப்புகள்,
நம் பாவங்களை துடைத்தெறிய முயலும்
புண்ணிய கைகள்,
தூக்கத்தில் புரண்டு படுக்கும் போது
தலையணை நீட்டும் கைகள்,

என மன்னிப்பிற்க்கான மருந்துகள்
இப்படியும் தரப்படலாம்.

Monday, January 22, 2018

   
                   அவளுக்கானது...


நான் பிறக்கும் முன்பே உன் நேசத்தின் அறிமுகம் கிடைத்திருந்தால் நான் கடவுளாக இருந்திருப்பேன்.

பிரிந்த எல்லோரின் காதலுக்காக
நீ அழுகிறாய்,
நான் எழுதுகிறேன்.

நீ வாசிக்காமலே போனாலும் இது உனக்கான கவிதையும், எனக்கான காதலும் தான்.

Sunday, January 21, 2018


            கடவுளுக்கான கவலைகள்


கவலைகளுக்குத் தான் சட்டென எத்தனை கால்களும், சிறகுகளும் முளைத்து விடுகின்றன.
காலத்தின் வெள்ளை வெளியில் எண்ணற்ற கருப்பு படலமாக யாவரின்
கவலைகளும் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
உயிர்கள் எல்லாவற்றின் கவலைகளைத் தாங்கும் பெரும் பிம்பங்களாகத்தான் இன்றைய கடவுள்கள் இருக்கிறார்கள்.

Friday, January 19, 2018


                         வாழ்தலின் ருசி


இந்த உலகம் எதையோ தேடி சதா ஓடியலைந்து கொண்டிருக்க, சலனமற்று
வெகு இயல்பாய் யாவற்றையும் வேடிக்கை பார்ப்பவர்களின் மனதை படித்து விடத்தான் மனம் எத்தனிக்கிறது.
அவர்கள் தான் வாழ்வை வாழ்வதற்க்காக
மட்டுமே வாழ்கிறார்கள்.
உலகத்தின் எல்லா அன்பும், ஆசிர்வாதங்களும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.

Thursday, January 18, 2018


                   பிரியத்தின் ஒரு துளி


அவள் கோலங்கள் அவளைப் போல் அவ்வளவு அற்புதமானது.
கோலக் கோட்டிற்கு மேகக்கூட்டங்களையும்,
புள்ளிகளுக்கு
நட்சத்திரங்களையும்
பறித்துத்தான் அவள் வழக்கமாய்
கோலமிடுவாள்.
மழையின் சப்தம்,
பிரசவத்தாயின் அழறல்,
புல்லாங்குழலின் ஓசை,
பாலைவன கானல் காற்று
போல அவ்வளவு துல்லியமாய்
இருக்கும் அவள் கோலங்களும்.
நேற்று அவள் வரைந்த அந்த கடவுள்
உருவ கோலம் இன்று அவளோடு மருத்துவமனையில் உடனிருக்கிறது.
       -நினைவில் உமா பின்னி 🙏😌🙏

Wednesday, January 17, 2018

             
              சிறகொடிந்த பறவைகள்


வளர முயற்சிக்கும் சிறகுகளையும் பிய்த்து எரிந்து விட்டு சிறுவர்களை அடைத்து வைக்கும் சிறைச்சாலைகளாக மாறி விட்டன இன்றைய பள்ளிகள்.
வீட்டிலிருப்பதை விட அதிக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பள்ளிகள் பல இருந்தாலும் அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. காரணம் சிறுவர்களுக்கான அடிப்படை சுதந்திரம் மொத்தமும் பறிக்கப்படுவதால். பள்ளி விட்டு வீடு திரும்பும் சிறுவர்களைப் பாருங்கள், நாம் நேற்று தேடி அலைந்த ஏக்கம் மொத்தமும் அவர்கள் கண்களில் தேங்கி இருப்பதை.

Tuesday, January 16, 2018

                 வீரத்தின் அடையாளம்


இந்த நூற்றாண்டில் நாம் பெற்ற நமக்கான இன்னுமொரு சுதந்திரம் தான்
ஜல்லிக்கட்டு
நம் வீரத்தை, போராட்ட குணத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிக் களமாகத்தான் எல்லா ஜல்லிக்கட்டு மைதானங்களும் இருக்கின்றன.
புழுதி மண் பறக்க, நிலப்பரப்பு அதிர திமிரி வரும் நம் காளைகள் தான் தமிழனின் ஆகச்சிறந்த அடையாளம்.
குடலுறிவி உயிரையே பறித்தாலும் அது
நம்மை காக்கும் தெய்வமாகத்தான் காண்கிறோம்.

Monday, January 15, 2018

 
              இன்னுமொரு உலகம்


இது பண்டிகைக் காலம் என்றெல்லாம் இல்லை, விடுமுறை என்றாலே இந்த உலகம் முழுமையும் குழந்தைகளுக்கானதாக மாறி விடுகின்றன. போகிற, பார்க்கிற இடங்கள் யாவும் சந்தோசமும், குறும்பும், கொண்டாட்டமும் நிரம்பி இருக்கின்றன.
பகை, வெறுப்பு, பொறாமை, கோபம் என யாவற்றையும் போக்கிவிடும் புனித தலமாக குழந்தைகள் உலகம் இருக்கிறது.

Sunday, January 14, 2018

                       
                          இந்நன்நாளில்...


வாழ்வின் இத்தனை நெருக்கடியிலும் நம் மக்கள் சில கலாச்சாரங்களை பிடிவாதமாக பற்றிக் கொண்டிருப்பது சில சமயம் ஆசுவாசத்தையும், ஆச்சரியத்தையும் ஒருசேர தருகிறது.
விழிகள் பெருமழையாய் குளிர்ச்சி பொங்கிட, கரும்பாய் மனம் தித்தித்திட எனக்கான பொங்கல் எங்கள் வீட்டு கோலத்துடன் தொடங்கியிருப்பது ஆனந்தமே.

Saturday, January 13, 2018

                  இது யாருக்கானது????


மாடு, கன்றுக்குட்டி, விவசாய நிலம், அதற்கு சில விவாசியிகள், கிணறு, டிராக்டர், களப்பை என எல்லாம் பொங்கல் பண்டிகை வரும் இந்த வாரத்திற்கு மட்டுமே நம் தேவையாய் இருக்கிறது.
உழுது விளைந்த நிலமும், வியர்வை சிந்திய விவசாயியும் ஊனமாய், ஊமையாய் நமை ஏறிட்டு பார்த்தபடி இருக்கின்றனர்.
என்னதான் நெருப்பில் சுட்டாலும் வானம் தன் சூரியனை என்றும் தாங்கியபடி தான் இருக்கிறது.

Friday, January 12, 2018

                                   மா...


நீங்கள் உலகம் முழுதும் தேடிச்சென்று அன்பிற்க்கான வார்த்தைகளை சேகரித்தால் இறுதியில் அது "அம்மா" என்ற வார்த்தையில் தான் தொடங்கும்.
இன்றைக்கும் பல அம்மாக்களின் உலகமும், உணர்வுகளும் சமையற்கட்டிலேயே தொடங்கி அங்கேயே முடிந்து விடுகிறது. வானம் வரை கலாச்சார ஏணி வளர்ந்து விட்டாலும் அதை தாங்கும் பூமியாக அம்மாக்கள் தான் இருக்கிறார்கள்.
கடவுளோ, பிச்சைக்காரனோ யாவரும் அவரின் அம்மா கருவறையில் இருந்து தானே உருவாகியிருப்பார்(??!!)
                   
                         இவ்வாழ்வு


பெரும் கோபத்திற்கு பிறகான
சமயத்தில் மனம் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வது,
பெரும் ஆனந்தத்திற்கு பிறகான சமயத்தில் நம் கண்களின் ஓரத்தில்
எட்டிப் பார்க்கும் கண்ணீர் துளி,
பெரும் சமாதானத்திற்கு பிறகான சமயத்தில் இயல்பை மீறி இதயம்
இடம் மாறிக் கொள்வது என
வாழ்தலின் ருசி இந்த உணர்வுகளில்
தான் புதைந்திருக்கிறது.

          பெண் எனப்படுபவள்


ஒரு வினாடியில் ஓராயிரம் கோடி திரைக்கதைகளை ஒளிபரப்பும் இந்த உலகம் உண்மையில் நாமெல்லாம் நடித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய நாடகமேடை தான்.
அவரவர் கதாப்பாத்திரங்களை கச்சிதமாய் நடித்து முடிக்க போராடுகிறோம்.
திரைப்படத்தில் எப்படியோ ஆனால் நிஜத்தில் ஒரு பெண் தான் நம் இயக்குனர், தயாரிப்பாளர் என எல்லாம்.

கடைசி அத்தியாயம்


வாழ்வின் இறுதி அத்தியாயங்களில் காற்றில் பறக்கும் இலவம்பஞ்சைப் போல் மிதந்து கொண்டிருக்கும் பருவம் தான் முதுமைப் பருவம்.
இந்த உலகையும், உயிரினங்களையும் நேசிக்கும் இறுதி வாய்ப்பைத் தான் இயற்க்கை அளிக்கிறது.
முதியவர்கள் வெறும் முதியவர்கள் மட்டுமல்ல, அவர்கள் நடமாடும் அனுபவப் புதையல். இன்னுமும் அவர்களை வாழ்வின் நெருக்கடியில் சிக்கவைக்காமல் பாதுகாப்பது நம் கடமை.

Thursday, January 11, 2018

                 
                     திகட்டாத பால்யம்

எளிமையான அன்பைக் கொடுப்பது,
யாவரின் எச்சில் சோற்றையும் உண்பது,
கனவே இல்லாமல் உறங்கி எழுவது,
சுதந்திர ருசியை முழுதாய் உணர்வது,
பொம்மைகளுக்கு கதை சொல்வது,
விருப்பதுடன் விட்டுக் கொடுப்பது,
தோல்வியில் அழுது ஆறுதல் அடைவது
என எல்லா நேரங்களிலும் வாழ்தலின்
அர்த்தத்தை சிறுவர்கள் தான் கற்பிக்கிறார்கள்.

தமிழின் அடையாளம்


அதிகம் பேசாமல் அளவாய் எழுதிய ஒட்டுமொத்த தமிழ் எழுத்தின் முதல் அடையாளம் வள்ளுவன்.
நேற்றைய, இன்றைய, நாளைய என
என்நாளுக்குமான வாழ்விற்க்கான வார்த்தைகள் இவன் திருக்குறள் எனும்
டைரிக் குறிப்பில் அடங்கியிருக்கிறது.
நாத்திகனும் வணங்கும் தெய்வமாக இவணும், இவன் எழுத்துக்களும் என்றைக்கும் உலகின் மடியிலிருக்கும்.


              அன்பை யாசிப்பவன்...


புறந்தள்ளும் போதும்,
விமர்சிக்கப்படும் போதும்,
ஏளனப்படுத்தப்படும் போதும்,
நிராகரிக்கப்படும் போதும்,
புரிந்து கொள்ளப்படாத போதும்,
கவனிக்கப்படாத போதும்
நிழல் போல தொடரும் அன்பு எளிதில்
கருணைக் கொலை செய்யப்படுகிறது.

Wednesday, January 10, 2018

           கொஞ்சம் முகநூல்...

1: முதல் பரிசு,
இரண்டாம் பரிசு,
மூன்றாம் பரிசு,
பிறகு ஆறுதல் பரிசு
என்பதிலேயே ஆரம்பமாகிறது எங்களுக்கான (குழந்தைகளுக்கான)
அரசியல் அரிச்சுவடி.

2: அன்பிற்கான அடக்குமுறைகள் அம்மாக்களிடமிருந்து எப்போதும் முத்தங்களாகவே பெறப்படுகின்றன.

3: அறிவுஜீவியாகிய பெரியவர்களுக்கும், அறிமுகமில்லாத அனைவருக்கும் இந்த சிறியவனின் சிறிய விளக்கம் என்னவென்றால்,
முதலில் நீங்கள் கேட்கும் கேள்விக்கே சிறியவர்களாகிய நாங்கள் பதில் சொல்லாததற்கு காரணம் அந்த கேள்விக்கு பதில் தெரியாமல் அல்ல, நீங்கள் அதற்கு, அதற்கடுத்து என வரிசையாய் கேள்விகளை கேட்க தயாராய் இருப்பதால் தான்.

நீதி : எங்களை கொஞ்ச நேரம் விளையாட விடுங்க.

4 : தனி மெஜாரிட்டியில் ஆட்சி செய்கிறது, வீட்டிற்குள் வளரும் ஒரு குழந்தை.
பிரிவின் சந்தர்ப்பங்கள்...


தள்ளி விட்டு அடிபட்ட காயத்திற்கு
மருந்திடுவதைப் போல உன் காதலின்
நிராகரிப்பை தெரிவித்தாய்,
என் கைகளை இறுகப் பற்றி
இனி இணைவதற்க்கான அத்தனை
அடையாளங்களையும் அழித்தாய்,
ஓவென அழுது கொண்டிருக்கும் என் இயலாமைக்கு நான் என்றுமே பாராத
உன் சிதைந்த சிரிப்பை பரிசளித்தாய்,
நெடுஞ்சாலை வெயிலில் மெல்ல இறந்து கொண்டிருந்தது, நம் காதலின்
நிறைவேறாத உடன்படிக்கைகள்.
சுவர்கள் பேசும் அரசியல்

சுவர் எழுத்துக்கள் பேசும் அரசியல்
மிகவும் காத்திரமானவை.
பல நாடுகளில், பல சமயங்களில்
பல புரட்சிகளும், போராட்டங்களும்
சுவரெழுத்துக்களால் தான் துவங்கப்பட்டன என்பதை நம் வரலாறு சொல்லும்.
இன்றும் கருத்துச் சுதந்திரத்தின் மிகப்பெரும் மேடைகளாக படைப்பாளிக்கு கிடைப்பவை அவன் கண்ணெதிரே காட்சியளிக்கும் எதோவொரு சுவர் தான்.

தனித்தவர்களின் உலகம்


எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கும் இந்த வாழ்வை யாவரும் சமாதானமாக கடந்து விடவே முயல்கிறோம்.
ஒரு கோபத்தை,
ஒரு நிராகரிப்பை,
ஒரு அழுகையை,
ஒரு மெளனத்தை,
ஒரு இயலாமையை,
என நம் உணர்வுகள் எல்லாவற்றையும் மெளனம் எனும் அடைப்புக்குறிக்குள்
நம்மால் அடைத்து வைக்க முடிகிறது.

Tuesday, January 9, 2018

குழந்தையாக மாறிய கடவுள்...


நம் பாசம்,
நம் கோபம்,
நம் அழுகை,
நம் சந்தோசம்,
நம் வெறுப்பு,
நம் சிரிப்பு
என யாவற்றையும் ஏற்றுக்
கொள்வதால் தான் அவர்கள்
நம் எல்லாமுமாகவும்,
எல்லோருக்கும் குழந்தையாகவும் இருக்கிறார்கள்.
உங்கள் பிரார்த்தனையால் கடவுளுக்கு
உருவம் கொடுத்துப் பாருங்கள், அவர் உங்கள் குழந்தையாகத்தான் இருப்பார்.
  புத்தாண்டு அன்று எழுதியது...


வருடத்தின் உச்சியில் ஏறி மீதமுள்ள இரண்டு படிகட்டில் நின்று கொண்டு பாதுகாப்பாய் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, மாமா, தங்கை, மனைவி என யாவரையும் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாய் கீழுள்ள இறந்தகால உலகத்தை பார்த்தால் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும், அழகாகவும் இருக்கிறது. இந்த உலகிற்கு நான் ஏதும் தராதபோதிலும் எனக்கு பிடித்த யாவற்றையும் கொடுத்த அறிவியலுக்கும், ஆண்டவனிற்கும், அனைவருக்கும் நன்றிகள் பல.
நீண்ட வருடங்களுக்கு பிறகு என் ஆரம்ப கூட்டிற்குள் நுழைகிறேன். முன்னதற்கு மன்னிப்பும், பின்னதற்கு மகிழ்ச்சியும் மனம் அடைகிறது.
இணையம் கடந்த சில வருடங்களாக Twitter, Facebook, Watsapp, Instagram என பல கதவுகளை எனக்கு திறந்து விட்டிருக்கிறது. இனி எங்கு என் எழுத்து பதியப்படுகிறதோ அதன் நகல் பிரதி இங்கே பதியப்படும். என் எழுத்தின் மொத்த மழைத்துளிகளும் இந்த வலைப்பதிவு முகவரியின் குடைக்குள் கூடாக அடைகாக்கப்படும். வானம் எப்படி சூரியனை தாங்கி அணைத்து கொள்கிறதோ, அப்படி என் எழுத்தை கைபிடித்து அழைத்து வருகிறேன் இனி அது தினம் உங்கள் மனதின் குரலாக எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.