Thursday, August 30, 2018


   
           காலத்தை புதுப்பிப்பவள்....




ஒரு அழுக்கு துணியை எடுப்பதுபோல்
நம் இறந்த காலங்களை எடுக்கிறாய்,
அதில் படிந்திருக்கும் அழுக்கைப் போல்
நம் மனக் கசப்புகளை பார்க்கிறாய்,
சோப்பு நீரில் ஊறும் துணியைப் போல்
அக் கசப்பை கண்ணீரில் நனைக்கிறாய்,
குமுக்கி, அடித்து துவைப்பது போல்
மன்னிப்பால் கசப்புகளை போக்குகிறாய்,
பளிச்சென்று காயும் துணியைப் போல்
நம் காலங்களை புதிதாக்குகிறாய்.

Tuesday, August 28, 2018


         அன்பின் வழித்தடங்கள்...


போதுமென்று எப்போதும் எனக்கு தோன்றியதேயில்லை,
நீ கொடுத்த அன்பு,
நீ கொடுத்த பரிவு,
நீ கொடுத்த தூய்மை,
நீ கொடுத்த நேசம், என
நீ கொடுத்த யாவும்
போதுமென்று எப்போதும் எனக்கு
தோன்றியதேயில்லை,
கொடுக்கும் உன் கரங்களும்
வாங்கும் என் கரங்களும் சோர்ந்திடுமா?
யானறியேன், ஆனால் நம் மனமிரண்டும்
சோர்ந்திடாது.


                 கனவின் மொழி....


பேரமைதியின் உள்ளே தாண்டவமாடிக்
கொண்டிருக்கும் உன் கனவுகளைக் கேள்,
அதன் மொழியைப் புரிந்து கொள்,
அதன் உணர்வைப் புரிந்து கொள்,
அதன் கட்டளையைப் புரிந்து கொள்,
அதன் கட்டமைப்பை புரிந்து கொள்,
அதை ஒருபோதும் உன்னிடம் இருந்து
துண்டித்துக் கொள்ளாதே,
அஃது ஒன்றே நம் வாழ்வியல்.

Saturday, August 25, 2018


                  நமக்கானவர்கள்.....



நட்போ, உறவோ
நமக்கான இயலாமையை, வருத்தத்தை, கோபத்தை, ஆற்றாமையை, ஏமாற்றத்தை யாரிடம் பரிகாசத்தோடு பதிவு செய்கிறோமோ, அவர்களே நம் உன்னதமானவர்கள். நாம் அவர்களிடம் எதிர்பார்ப்பது நம் பிரச்சனையின் புதிருக்கான விடையை மாத்திரமல்ல, அவர்கள் மட்டுமே நம் சொற்களை என்றைக்கும் சேகரித்து தாங்கிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். வானம் பொழியும் மழையை பூமி தாங்குவது போல....

Friday, August 24, 2018


         நிறம் மாறிய வாழ்க்கை....


உழைத்து உறங்குபவனின் உறக்கம்,
ஆடு மேய்ப்பவனின் சுதந்திரம்,
வாசிப்பில் கரையும் முதுமையின் நாட்கள்,
அடுத்தவருக்கு பிரார்திக்கும் மனித மனம்,
சாலையோரம் வாழ்பவர்களின் வாழ்க்கை,
என நம் அடிப்படை தேவைகளின் மேல் ஆசையெனும் குப்பைகள்தான் நிரம்பியிருக்கின்றன.

Thursday, August 23, 2018


           பிரியத்துக்குரிவர்கள்....



மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!!!
நீங்கள் யார் மீதும் எப்போதும் கோபம் கொள்வதில்லை, யார்மீதும் எந்தச் சூழ்நிலையிலும் வெறுப்பு கொள்வதில்லை. சபையோ, தனிமையோ ஒரு துளி கண்ணீரை சிந்துவதற்கு தயங்குவதேயில்லை. கிளையில் இருந்து உதிரும் இலையைப் போல, இறுதிவரை யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!!!

Tuesday, August 21, 2018


                  பிரயத்தனங்கள்....



சமீபகாலமாக நான் தினமும் கவனிக்கிறேன், அந்தப் பெரியவரை.
கிழிந்த உடுப்பும், அந்தக் கிழிந்த உடையும்
அழுக்குகள் நிறைந்தும்,
கருணையும், கவலையும், நிராகரிப்பு மிதக்கும் கண்களும் தான் அவருக்கான அடையாளங்கள்.
இந்த உலகிடம் அவருக்கான கோரிக்கைகள் ஏதுமில்லை.
இயந்திர இரைச்சலோடு அவரின் இடைவிடாத முணுமுணுப்பு இறந்து கொண்டிருந்தது.

Saturday, August 18, 2018


   இயற்கையெனும் கைக்குழந்தை....


 மனிதனெனும் அற்ப உயிர்களான நாம் தோளில் இருக்கும் துண்டை உதறுவது போல், இயற்கை கோபித்துக் கொண்டு தன்னுடலை சற்று குழுக்கினால் நம் வாழ்வியல் மொத்தமும் நிலைகுழைந்து விடுகின்றன. புதுமையின் எத்தனை உயரம் தொட்டாலும் இயற்கையெனும் குழந்தையை நம்மால் சமாதானப்படுத்த முடியவில்லை 😔😔😔

Tuesday, August 14, 2018


                     நிரம்பும் வாழ்வு....


இந்த வாழ்வை மிகவும் கடினமாக்கிக் கொள்கிறோம். ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், உறவுகள், நட்புகள், சமாதானங்கள், சச்சரவுகள், கேலிகள், கொண்டாட்டங்கள் என கிடைக்கும் மொத்தத்தையும் போட்டு அதில் அடைத்துக் கொள்கிறோம்.
வாழ்வை வெற்றிடமாக வைத்துக் கொள்ள பலரும் ( நானும் தான் ) தவறி விட்டோம். அதனால் தானோ என்னவோ இங்கு நம்மால் காற்றைப் போல, பஞ்சைப் போல சுதந்திரமாக இருக்கவும், பறக்கவும் முடியாமல் தோற்று விடுகிறோம்.

Monday, August 13, 2018

காத்திருக்கும் மலர்கள்...



பேருந்து நிலையமாக இல்லாவிட்டாலும்
அது முக்கிய பேருந்து நிறுத்தம் தான்.
ரோட்டின் ஓரத்தில் அவர் சுடும் பச்சி, போண்டா சுற்றியுள்ள நாலு மைல்களுக்கு பிரசித்தம். சுவையின் நீர்வீழ்ச்சி.
ஐந்து ரூபாய்க்கு என்ன மாதிரி பொடிபசங்களுக்கு மூணு கட்டி கொடுப்பார். கடலைமாவு அப்பிய பனியனோடும், எண்ணையும், வேர்வையும் வழியும் உடலோடு தான் எப்போதும் இருப்பார்.
நேற்றைக்கு முன்தினம் படுத்த படுக்கையாக சவப்பெட்டிற்குள் வைத்திருந்தார்கள். இன்றைக்கு அவரின் கடையருகே அவர் சவ ஊர்வலத்தின் காய்ந்த பூக்கள் மட்டுமே அவருக்காக காத்திருந்தன.

Saturday, August 11, 2018


             மிதக்கும் சொற்கள்....



என் பிரியங்களை,
என் பேரன்பை,
என் பெருங்கோபத்தை,
என் பரிதவிப்பை,
என் இயலாமையை, என
என் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு
பதிலுக்கு நீ கொடுத்த வார்த்தைகளை வைத்துக் கொண்டு தான் இந்த உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

Friday, August 10, 2018


              நம் கதைசொல்லிகள்.....



இன்றளவும் நம் தாத்தா, பாட்டிகளைப் போல் நினைத்த மாத்திரத்தில் ஒரு கதையை நேர்த்தியான திரைக்கதை ஒழுங்கோடு சொன்ன திரைக்கதை ஆசிரியர்கள் யாருமில்லை.
அவர்கள் நினைவு மொத்தமும் கடந்த காலக்கதைகள் நிரம்பி வழியும் ஊரூற்று.
ஒரு சொல்லை அல்லது நிகழ்வை பிடித்து குழந்தைகளை ஈர்க்கும் அந்த அடையாளங்கள் நமக்கு பிறகான தலைமுறைக்கு என்றுமே கிடைக்கப்பெறாது.

Tuesday, August 7, 2018


          பேரன்பின் விகிதஙகள்....


அன்பின் மிக மிக மிக அருகாமையிலும், நெருக்கத்திலும் இருப்பவர்களால் மட்டுமே நமக்கான இழப்புகளையும், ஏமாற்றங்களையும், வலியையும் ஏற்றுக் கொள்ள முடியும்.
எல்லாம் கழிந்து இறுதியில் மனிதம் எனும் ஆன்மாவிடம் எஞ்சி நிற்பது அன்பு மட்டுமே.

Friday, August 3, 2018


                  அம்மா உலகம்......



"பக்கமா இருக்கு தொட்டுடலாம்" என
நினைத்து வானில் தெரியும் நட்சத்திரங்களை பார்த்து குழந்தை
கைகளை தூக்கி ஏமாற்ந்த கணம்,
தனக்கான வானமாய் இருக்கும்
தன் அன்னை மடியில் வந்து அமர்ந்து கொண்டது.

Wednesday, August 1, 2018