Thursday, April 26, 2018


                   கனவின் வரைபடம்





        இந்த வரைபடங்கள் இன்றைய தலைமுறை சிறுவர்களுக்கானதாக இருந்தாலும் பார்க்கும் ஒவ்வொருவரின் பால்யத்தை மீட்டெடுக்கும் பிம்பமாகத்தான் நான் பார்க்கிறேன்.
விதவிதமான வர்ணங்கள் யாவும் நேற்றைய இறந்தகாலத்தையும், இன்றைய நிகழ்காலத்தையும், நாளைய எதிர்காலத்தையும் ஏந்திய வண்ணம் நம் மனதில் படிந்து விடுகிறது. சுவரில் ஓவியமாகவும், மனதில் நினைவாகவும் உருவாக்கிய ஓவிய நண்பர் சிவாவிற்கு நன்றிகள் பல.

Wednesday, April 25, 2018


               நேற்றின் நினைவுகள்


நீயே தான் அழைத்தாய் பேச வேண்டும் போல இருக்கிறது என்று,
பெரிய சந்தோசமோ, எதிர்பார்ப்போ எதுவுமே மனம் அடையவில்லை.
எந்த ஒத்திகையும் இல்லை,
நீ பேசுவதை நான் கேட்க வேண்டும் அவ்வளவே.
மனம் என்ன சமாதானம் அடைந்தாலும் ஓய்ந்த பாடில்லை, யாருமே வாசிக்காத கவிதையின் காகிதத்தைப் போல நமக்கான இறந்தகாலம் காற்றில் பறந்து கொண்டிருந்தது.

Monday, April 23, 2018


        ஒரு நாள் எனப்படுவது


     காலைக்கடன்கள்,
தின அலுவல்கள்,
பழகிய வழி பயணங்கள்,
வேலை நெருக்கடிகள்,
சின்ன சின்ன சமரசங்கள்,
வெட்டி வியாக்கியானங்கள்,
விவாதங்கள், விமர்சனங்கள்,
கோபங்கள், அழுகைகள்,
மன்னிப்புகள், பிரியங்கள்,
இன்னும் இன்னும் எத்தனை எத்தனைகள்
இன்று என்ற ஒரு நாளை கடப்பதற்கு.

Saturday, April 21, 2018


           இறைவனுக்கானவர்கள்
 
 

குழந்தைகளின், சிறுவர்களின் பிரார்த்தனை என்பது தன் சுயநலத்திற்கானது அல்ல. அது என்றுமே காற்றில் பறக்கும் பஞ்சாக வேண்டுகோள் இல்லாத வெள்ளை மனதோடு தான் இறைவனை சென்றடைகிறது. கட்டுபாடுகள், விதிகள் அற்ற அவர்களின் வருகை ஒன்றே இறைவனுக்கான மகிழ்சியும், ஆனந்தமும்.

Friday, April 20, 2018


             நமக்கான படிப்பினைகள்


நம் அடுத்த தலைமுறைக்கான அவசியத் தேவைகளில் முதலில் இருப்பது தண்ணீரும், நம் பிள்ளைகளுக்கான கல்வியைத் தாண்டிய சில பொழுதுபோக்கு விளையாட்டுகளும் தான். வாழ்வின் நெருக்கடியில் இருந்து நம்மை புதுப்பித்துக் கொள்வதற்கும், நினைவுகளை மீட்டெடுப்பதற்கும் சிறந்த தீர்வாக அவையே இருக்கின்றன.

Thursday, April 19, 2018

     
               தனிமையின் தடயஙகள்


உலகில் மிகவும் பாவப்பட்டவர்கள்,
நோயுண்டு படுத்த படுக்கையாகிப் போன வயதானவர்கள் தான்.
அவர்கள் பகல் நேரங்கள் எங்கோ
கண்ணுக்கு எட்டா தூரம் வரை சென்று கொண்டிருக்கும் ரயில் தண்டாவளத்தைப் போல் மிக நீண்டதாகவும்,
இரவு நேரங்கள் தனிமையிலும், நிராகரிப்பிலும், வலியிலும், ஆதரவற்றும், அழுகையோடும், புலம்பலோடும் கரைந்து கொண்டிருக்கும்.
அந்தச் சமயம் தான் உணர முடிகிறது, தனக்கான உலகின் எல்லா திசைகளும்
துண்டிக்கப்பட்டு விட்டதை.
           

Wednesday, April 18, 2018


          தனிமையின் தனித்துவம்


விலகி இருப்பதில் தான் நிறைய சுதந்திரம் இருக்கிறது.
எப்போது வேண்டுமானலும்
நினைத்துக் கொள்ளலாம்,
கோபித்துக் கொள்ளலாம்,
சண்டையிட்டுக் கொள்ளலாம்,
சமாதானமாகிக் கொள்ளலாம்,
நிறைய பேசிக் கொள்ளலாம்,
சட்டென பிழையாய் எழுதிய கவிதையின்
காகிதத்தைப் போல கசக்கி எறிந்து விட்டுச் செல்லலாம்.

Tuesday, April 17, 2018


      டாப்-அப் சிறுகதை :
நான் படித்த பள்ளியில் தான் நேற்றுவரை கடந்த 32 வருடமாக உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நல்ல உடற்கட்டுடன், வலிமையாக இருப்பார். சிறுவயதிலிருந்தே அவர் தன் உடம்பை கவனத்துடன் தான் காத்து வந்தாராம். அடிக்கடி எங்களிடம் சொல்வார். அவரின் உடற்பயிற்சி, உணவு, தூக்கம், பொழுதுபோக்கு என யாவும் அட்டவணைப்படுத்தப்பட்டு ராணுவ ஒழுங்குடன் கடைபிடிப்பார். வெளியில் எங்கும் அவர் ஏதும் சாப்பிட்டத்தாக என்னளவில் இல்லை. சற்றே பெருமை கலந்த வருத்தத்துடன் என் குடும்ப மருத்துவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவரும் பதிலுக்கு ஆமாங்க அப்படி இருந்தாத்தான் இப்போ இருக்க லைஃப் ஸ்டைலுக்கு சரியா இருக்கும் என்று ஆமோதித்தார். "நேத்து ராத்திரி படுத்தவர் தாங்க படுத்தவர் மாதிரியே போயிட்டாருங்க" என நான் அடுத்ததாக கூறிய வார்த்தைகளை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
               
                                                        ✍️சத்யா✍️

Monday, April 16, 2018

                    நமக்கான கடவுள்


வாழ்வின் பாதைகள் விசித்திரங்களாலும், புதுமைகளாலும், புதிர்களாலும் நிறைந்தது. அதில் கடவுள் எனும் பிம்பம் நமக்கான வழிகாட்டியாகவும், ஆதர்சமாகவும் இருக்கிறது.
நாம் வளர வளர கடவுளும் நம் தேவைகளுக்கானவராக மாறி விடுகிறார் அல்லது நம் தேவைக்கான கடவுளை நாம் தேடிச் செல்கிறோம்.

Sunday, April 15, 2018


                            உயிர் கணம்


வழக்கமான அதிகாலைப் பொழுது தான்
அதற்கென பிரத்யேகமாய் உருமாறிப் போன வாகனத்தில் மெளனம் கிழிக்கும் அலறல்களுடன் ஏற்றப்படுகிறது.
தலைகள் எண்ணப்பட்டு ஆங்காங்கே கடைகளின் கூண்டிற்குள் அடைக்கப்படுகிறது. மிகவும் இயல்பாய் வரும் ஒருவன் அதில் ஒன்றை பிடித்து கைகால்களை இறுக்கமாய் கட்டி ஒரு வினாடிக்கும் குறைவான தருணத்தில் கூறியமுனையில் சிறு கோடாய் அதன் கழுத்தில் கீற, அவ்வளவே ரத்தம் பீய்ச்சிட, அலறல் அதிற மெல்ல மெல்ல அந்த ஆட்டுக்குட்டியின் உயிர் உறைந்து காற்றில் கரைகிறது. அதன் கனவு, ஆசை, வாழ்வு என எல்லாவற்றையும் அதன் கழுத்தில் இருந்து வெளியேறும் ரத்தம் அழித்துக் கொண்டிருந்தது.

                        

Friday, April 13, 2018

 
                    சுதந்திரம் என்பது


உங்களுக்கான சுதந்திரம் என்னவென்று?
தாத்தாவிடம் கேட்டேன்,
எழுந்து நடமாடும் தெம்பிருந்தால்
போதும் என்றார்.
பாட்டியிடம் கேட்டேன்,
நோய் நொடியில்லாமல் இருந்தால்
போதும் என்றாள்.
அப்பா, அம்மா, அண்ணன், தங்கை எல்லாரிடமும் கேட்டேன்,
அவரவர் அவரவர் விரும்பியபடியே இருந்தால் போதும் என்றனர்.
இறுதியாய் ரோட்டில் நடந்து சென்ற சிறுமியிடம் கேட்டேன், அண்ணா லீவ் நாள்ல ஸ்பெசல் கிளாஸ் வெக்காம இருந்தா போதும் என்றாள்.
நமக்கான சுதந்திரம் இப்படித்தான் சுருங்கிக் கிடக்கிறது.

Wednesday, April 11, 2018

 
                    மிதக்கும் சொற்கள்


பெரிதான பிரிவுகள் எப்போதும்
பெரிதான சண்டையில் உருவாவதில்லை.
அதன் இயக்கங்கள் மெளனத்தின் ஆழத்தை அடைந்துவிட எப்போதும் சொற்களை துணைக்கு அழைத்துக் கொண்டேயிருக்கும்.
வேண்டாத சொற்களால் வேண்டியவர்கள், வேண்டாதவர்களாக ஆகி விடுவதால் யாருமே தீண்டாத என் ஊனமான கோபமே எனக்கெப்போதும் போதும்.

Tuesday, April 10, 2018

 

                        மிதக்கும் உலகம்

நான் அவசர அவசரமாக குளிப்பதை,
நான் அவசர அவசரமாக உடையணிவதை
நான் அவசர அவசரமாக சாப்பிடுவதை,
நான் அவசர அவசரமாக துவைப்பதை,
நான் அவசர அவசரமாக பெருக்குவதை,
என யாவற்றையும் பொறுமையாக கவனிக்கிறது தொட்டிலில் படுத்தபடியே குழந்தை.

Sunday, April 8, 2018


                          மிதக்கும் உடல்


முதலில் நமக்கான இருப்பிடத்தை தொலைத்து விடலாம்,
அடுத்தது பசியை, உறவுகளை, உணர்வுகளை, ஆசைகளை, கனவுகளை,
நிகழ்காலத்தை, எதிர்காலத்தை என யாவற்றையும் தொலைத்து விடுவோம். அடுத்தது படிபடியாக உடலின் மொத்தத்தையும் தொலைத்து விடுவோம்.
பிறகு பஞ்சைப் போல இந்த உலகின் காற்றில் நடனமாடித் திரிவோம்.

Saturday, April 7, 2018


                  கனவின் சித்திரங்கள்


எண்ணங்கள் முழுதும் எழுத எவருக்கும் வாய்ப்பதேயில்லை.
அது நினைவின் அடுக்குகளில் கடலலையைப் போல சுழன்று கொண்டேயிருக்கிறது.
மொழியை ஒருபுறமும்,
மெளனத்தை எதிர்புறமும்
நிற்கவைத்து வாதிட வைக்கும்.
ஆழ்ந்த தூக்கத்தில் கனவுலகில் மனதோடு அதன் நடனத்தை என்றாவது நீங்கள் ரசித்ததுண்டா???!!!

Friday, April 6, 2018


                             உயிர்நீர்


நவீனம், விஞ்ஞானம், அறிவியல் என எத்தனை வளர்ந்தாலும், வாதிட்டாலும் நம் ஒட்டுமொத்த உயிர்வாழ்தலின் அடிப்படைத் தேவையாக இருப்பது தண்ணீர் மட்டுமே.
அதுதான் நம் வாழ்வின் முதல் வாசலை திறந்து விடுகிறது.
அத்தியாவசியத்தின் அவசியம் உணராமல் அநாவசிய அரசியல் செய்து அற்புதமான நீர் ஆதாரங்கள் அத்தனையையும் இழந்து இப்போது கையேந்திக் கொண்டிருக்கிறோம்.
இயற்கை மணியடித்து விட்டது இனி அவரவர்களுக்கான தண்டனையை அவரவர் பெற்றிட தயாராய் இருப்போம்.

Thursday, April 5, 2018



       வண்ணத்துப்பூச்சியை சுமப்பவன்



வண்ணத்துப் பூச்சிகள் எப்படி காற்றின் கயிற்றைப் பிடித்து சட்டென வானத்தில் மிதந்து செல்கிறதோ அப்படி சட்டென எல்லோருக்கும் எந்நேரத்திலும் கிடைத்து விடுகின்றன, அடுத்தவர்களுக்கான கோபத்தின் வார்த்தைகள்.
அந்த வார்த்தைகளின் உயரம் இன்னும் இன்னுமென இரண்டு மலை அடுக்கின் உயரத்திற்கு எரிமலையாய் சென்று நம் இயலாமையின், தனிமையின், ஆறுதலின் கண்ணீரால் மெல்ல அணைக்கப்பட்டு நினைவின் வடுக்களாக மனதில் சில நிலைத்து விடுகின்றன.

Wednesday, April 4, 2018


                     

டாப்-அப் சிறுகதை :
அந்த நெடுஞ்சாலை கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த வளைவும் இல்லாமல் நேர்க்கோட்டில் இருந்தது. செம்மஞ்சள் நிற சூரிய அஸ்தமன வெளிச்சத்தில் மெல்லிய தூரலில் யாவும் நனைந்து கொண்டிருக்க எனக்கு மிக அருகிலேயே கிரிக்கெட் கமெண்ட்ரி இசையாய் அந்த இடத்தின் மெளனத்தை தாலாட்டிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாய் அமைந்து தூங்க கண்ணயறும் சமயத்தில் "சார் டிக்கெட் எடுத்துக்கோங்க" என்ற நடத்துனரின் அதிகார தோரணை அத்தனை சந்தர்ப்பங்களையும் கலைத்து போட்டது.

Tuesday, April 3, 2018


                          இது நானல்ல



இது என் எழுத்தல்ல,
இது என் சிந்தனையல்ல,
இது என் மொழியல்ல,
இது என் சிறகல்ல,
இது என்வானமல்ல,
இது என் பூமியல்ல,
இது என் சுவாசமல்ல,
இது என் உணர்வல்ல,
இது என் உயிரல்ல,
என் உடலில் இந்த உலகம்
வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Sunday, April 1, 2018


                  நமக்கான தூதுவன்


 மதம், அறிவியல் என எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கும், நம் வாழ்வியலுக்கும் மிக நெருக்கமான சக்தியாக இருப்பது இயேசுவே. அசைவில்லாமல் நம்மை பார்க்கும் அந்த கண்களின் வழியே தான் உயிர் மொத்தத்திற்குமான மனிதத்தையும், சமாதானத்தையும், வழிகாட்டலையும் நமக்குள் கடத்துகிறார். மனிதனாக பிறந்து, இறந்து மீண்டும் மனிதனாகவே இன்றுவரை வாழும் நம் கடவுள் இவர் மட்டுமே. அவரை வாழ்த்துவது, வணங்குவதை விட அவர் போதனைகள் சிலவற்றையாவது இந்த உலகம் கடைபிடிப்பதே இன்றைய அவசியமும், அவர் விரும்புவதும் கூட.