Thursday, June 13, 2019


                     நம் சுதந்திரம்....



காலைல விடாப்பிடியா வரும் தூக்கம் நம் மிரட்டலாலும், கெஞ்சலாலும் கலைக்க வைத்து, அனிச்சையாய் பல் துலக்கி, குளிக்க வைத்து, வேண்டா வெறுப்பாய்
சாப்பிட வைத்து, சீருடை அணிய வைத்து,
பள்ளிப் பேருந்தில் ஏற்றி வைத்து விட்டு அப்பாடா..... என பெற்றோர்களின் சுதந்திரங்கள் சிறுவர்களின் அடிமைத்தனங்களால் நிரப்பப்படுகின்றன....

              மாற்றத்திற்குட்பட்டது....


இந்த உலகம் அழகாக இருக்க வேண்டும்,
இந்த உறவுகள் அழகாக இருக்க வேண்டும்,
இந்த வானம்,
அந்த நதி,
பெய்யும் மழை,
வீசும் காற்று
தகிக்கும் வெப்பம்
என யாவும் நாமெடுக்கும் ஒற்றை
புகைப்படத்திற்காகவாவது.....
அழகாக இருக்க வேண்டும்.

Monday, June 3, 2019


  பள்ளியெனும் அதிகார மையம்...


கடந்த 45 நாட்களின் மொத்த சோர்வும்,
இன்றைய காலைப்பொழுதில் தான் தூக்கமாக கண்ணில் வந்தமரும் 😴🛌😴
அவசர குளியல், பிடிக்காமலே சாப்பிடுவது, கட்டளைகளில் கழிவது
என பள்ளியெனும் ஒரு அதிகார மையத்திற்குள் நுழைந்து தான்
வாழ்கையெனும் பாடத்தை கற்க வேண்டியுள்ளது....😌😌

Monday, May 20, 2019


                   நம் கடவுள்கள்...


பேங்க்ல சலான் எழுதி தரும் சிறுவன்,
சைடு ஸ்டேண்டை எடுக்க ஞாபகப்படுத்தும் ரோட்டோர கிழவன்,
கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு முலம் பூ
எக்ஸ்ட்ராவாக கொடுக்கும் பூக்காரி ,
முடியாமல் கிடப்பவர்களுக்கு சட்டென
தன்னிருக்கையை அளிக்கும் சகபயணி,
இன்னுமின்னும் எத்தனையோ நடமாடும்
கடவுள்கள் இங்கிருப்பது நம் பக்தர்களுக்கு(!?) தெரியவில்லை போல...

Tuesday, April 16, 2019


             இன்னொரு உலகம்...


இந்த வெக்கையிலும்,
இந்த அனல்காற்றிலும்
எங்கோ தூரத்தில் கேட்கும்
குருவிகளின் ஓசை,
தாகத்திற்கு தண்ணீராய் மனம்
உன் நினைவுகளை அள்ளி பருகுகிறது.
கிளைகளிலிருந்து உதிரும் இலைகள்
போல மனம் உதிர்ந்து வட்டமடிக்கிறது.
உலகம் எத்திசையிலோ இயங்க,
மெளனத்தில் மேழெழும்புகிறது
நமக்கான உலகம்.

         கடவுளெனும் வேட்பாளர்...



தினம் தினம் புதுப்புது அவதாரங்களில்
கடவுளைப் போலவே வேட்பாளர்களும்
எங்களிடம் வந்தபடியே தான் இருக்கிறார்கள்,,,,
எங்கள் கோரிக்கைகளையும், வேண்டுகோள்களையும் பிரார்த்தகைகளைப் போலவே அவர்களிடம் முன்வைத்தோம்,,,,
முடிவில் கடவுளைப் போலவே அவர்களும்
மிகவும் இன்முகத்துடன் விடை பெற்றனர்...

Friday, February 15, 2019


               காட்சிப் பொருள்...


அது விசித்திரமான சந்தை...
ஒரு அழகான பறவை கூடை நிறைய
அதன் இளமையான குரலை சேகரித்து
விற்றுக் கொண்டிருந்தது.
ஒரு அழகான சிங்கம் கூடை நிறைய
அதன் கனமான கம்பீரத்தை சேகரித்து
விற்றுக் கொண்டிருந்தது.
இப்படியாக யானை, புலி, கிளி, கரடி
என யாவும் அதனதன் உயிர் மூலங்கள்
அந்த சர்க்கஸ் கூண்டிற்குள் மனித அதிகாரத்தால் அடைக்கப்பட்டு காட்சிப் பொருளாக மாறிக் கொண்டிருந்தன...

Thursday, February 14, 2019


            அன்பெனப்படுவது....

உயிர்களின் சுயசரிதையில் மிகமிக அந்தரங்கமான, அற்புதமான, மனதுக்கு நெருக்கமான வாழ்வுப் பகுதி காதல் பாகம் தான்.
ஒரு ஆணுக்கு பெண் மீதும்,
ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஏற்படும்
ஈர்ப்பு மட்டுமே காதல் அல்ல.
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,புத்தகம், இசை, நாய்க்குட்டி என நம் மனதின் அடியாளத்தில் பாதுகாப்பாய் இருப்பவர்களும் நம் காதலுக்கு உரியவர்கள் தான்.
வாருங்கள்... காதலெனும் அன்பின் விதையை விதைப்போம்....

Wednesday, February 13, 2019

 

                     புத்தக வாசம்...


வரவேற்பு தோட்டத்தில் தொங்கும்
ஒற்றை ரோஜா...
வருக... வருக... என வரவேற்கும்
மொசுமொசு வரவேற்பு மிதி துணி...
கொஞ்சம் ஒட்டடையும், அழுக்கும்
மிதந்திருக்கும் அறைகள்...
இவையெல்லாம் போக அறை முழுக்க
சிதறிக் கிடக்கும் பலபுத்தகங்கள் இருக்கும் யாவரின் வீட்டையும்
அவரின் வீடாக நினைக்க தோன்றுவதேயில்லை...

Tuesday, February 12, 2019


                      இம்மானுடம்....



ஒரு மலரைப் போல நம்மால்
வாசத்தை தர முடிவதில்லை,
ஒரு எறும்பைப் போல நம்மால்
ஓயாமல் உழைக்க முடிவதில்லை,
ஒரு பறவையைப் போல நம்மால்
சுயமாக இருக்க முடிவதில்லை,
ஒரு நதியைப் போல நம்மால்
பயணம் செய்ய முடிவதில்லை,
ஆனால் மனிதன் என்ற கர்வத்திற்கு
மட்டும் குறைச்சலில்லை.....

Friday, February 8, 2019


       எல்லோருக்குமான உலகம்...



எதற்குமே தகுதியில்லாதவனின்
வெற்றி எனக்கு பிடித்திருக்கிறது,
அன்பைக் ஆராதிப்பவனின்
இழப்பு எனக்கு பிடித்திருக்கிறது,
கர்வம் கற்று தேர்ந்தவனின்
கலகம் எனக்கு பிடித்திருக்கிறது,
கோபம் கொண்டாடுபவனின்
கண்ணீர் எனக்கு பிடித்திருக்கிறது.
எல்லோருக்குமானதாக இருக்கும் இந்த
உலகம் எனக்கு பிடித்திருக்கிறது.

Thursday, February 7, 2019


                  மிதக்கும் கவிதை...


 உயிர் மெய் எழுத்துக்கள் எறும்பாய்
உடலில் ஊர்ந்து கொண்டிருக்க,
ஒவ்வொன்றையும் லாவகமாக பிடித்து
மலர் தொடுப்பதைப் போல
அழகாய் கவிதை செய்து விடுகிறாய்.
கவிதை தீராது,வார்த்தைகள் தீர்ந்து போக இரவு வரை காத்திருந்து நட்சத்திரங்களை
பிடிக்கத் தொடங்கியிருந்தாய்....

Tuesday, January 8, 2019


            என்றைக்குமானவர்கள்...



சிறுவர்களின் உலகம் தான்
இந்த பூமிக்கான சொர்க்கம் என்பேன்.
போட்டியோ, பொறாமையோ,
சண்டையோ, சச்சரவோ,
அழுகையோ, ஆர்ப்பாட்டமோ என யாவும்
வினாடியில் கரைந்து விடுகிறது அவர்கள் பறிமாறிக் கொள்ளும் சிரிப்பினில்.
பெரியவர்களை சட்டென அவர்கள் உலகிலிருந்து வெளியேற்றி விடும் அரசியலும் அறிந்தவர்கள்.