Wednesday, June 29, 2011

ஞாயிறு எனப்படுவது


சனி இரவு சரக்கடித்தால்
அலுப்பின் அழைப்பில்
ஞாயிறு காலை எழுவதே
ஒன்பது மணிக்குத் தான்...

முதல் வேலையாக
துணிகளை துவைத்தெடுக்க வேண்டும்.

அறையின் சேதாரங்களை செய்கூலியிலாமல்
சீர்செய்து செப்பனிட வேண்டும்.

தோழிக்கு வாக்குக் கொடுத்தது போல்
தி.நகர் உடன் சென்று வரவேண்டும்.

ஆசையாய் அம்மாஞ்சி கையேந்தி பவனில்
சுடச்சுட குஷ்பு இட்லி ருசிக்க வேண்டும்.

இளைப்பாற வேண்டிய இரவு நேரத்திலும்
இலக்கிய கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

என்னடா வாழ்க்கையிது என எண்ணும் போது
விழுந்து எழும் எதிர்வீட்டு குழந்தை கண்ணில் படுகிறது.

இவ்வளவு வேளையிருந்தும் ஒவ்வொரு
ஞாயிற்றுக் கிழமைகளையும்
நாம் தான் விடுமுறை தினமென்று அறிவித்துக் கொண்டிருக்கிறோம்.

Friday, June 24, 2011

தமிழனுக்கு ஒளியேந்துவோம்சிங்கள இனவெறி அரசால் ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளையும், கொலைகளையும், கொள்ளைகளையும் பற்றி நான் விவரிக்கத் தேவையில்லை. இதுவரை சுமார் 1,75,000 பேர் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 80,000 பெண்களை சிறை பிடித்து வைத்துள்ளனர். நமக்கும், நம் குடும்பத்திற்கும் எந்தத் தீங்கும் ஏற்படா வண்ணம் இங்கு அவர்கள் படும் அவலங்களை செய்தித்தாள்களிலும், ஊடங்கங்களிலும் பார்த்து "ஐயோ, பாவம்" என்கிற அனுதாபத்தோடு நாம் அதை மறந்து விடுகிறோம்.
இன்று வரை நாமும், நம் மத்திய, மாநில அரசுகளும் இதைத்தான் செய்து வருகிறோம். மாறாக சில நல்லெண்ணம் கொண்டோரின்
முயற்சிகளால் ஜூன்-26-ம் தேதி ஐ.நா-வால் "அங்கிகரிக்கப்பட்ட சித்திரவதைக்குள்ளானவர்களின் ஆதரவுக்கான சர்வதேச தினமாக" அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிங்கள அரசின் ஆட்சிப் பிடியில் அடக்குமுறைகளுக்கு உள்ளான மக்களை விடுவிக்கவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் மே-18 அன்று மெரினா கடற்கரையில் நடந்த மெழுகுவர்த்தி அஞ்சலி ஒரளவிற்கு நமக்கு சாதகமான வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.
அதனை போல் இம்முறையும் ஐ.நா அறிவித்துள்ள ஜூன்-26 ம் தேதி அதாவது வருகிற ஞாயிறு மாலை 5:30 மணியளவில் மெரினா கடற்கரை கண்ணகி சிலையருகில் சாதி, மத, அரசியல் அடையாளங்களைத் தாண்டி
தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இனப்படுகொலைக்கு ஆளாகி உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில்
மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

Twitter-ல் இதற்கான Hash tag-ஆக #June26Candle வாசகத்தை உருவாக்கி தங்களின் ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர்.
சென்னையில் இருக்கும் அனைவரும் தங்கள் குடும்பத்தோடு தயவுசெய்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் கையில் ஏந்தும் ஒவ்வொரு தீபமும் ஈழத்தில் ஒரு தமிழனின் பிணத்திற்கு வைக்கப்படும்
தீ தடுக்கப்படும்.
ஒன்று கூடுவோம், ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.

Wednesday, June 22, 2011

அவன்-இவன் - அசிங்கத்தின் அரசாட்சி


அவன்-இவன் படம் வெளியாகி இன்றோடு ஏழு நாட்கள் ஆகிறது. வெளிவந்த நாளில் இருந்து இன்று வரை ட்விட்டரிலும், வலைதளங்களிலும் படத்தைப் பற்றி
எதிர்மறையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. இதனாலேயே அப்படத்தைப் பார்ப்பதை தவிர்த்து விடலாம் என்கிற முடிவிற்கு வந்த பிறகு எல்லாவற்றையும் மீறி பாலா என்கிற ஆளுமையின் கவர்சியால் நேற்று படத்தைப் பார்த்தேன்.

வழக்கமாக நன்றாக இல்லாத படத்தை குப்பை என்று ஒதுக்கிவிடுவதும், முடிந்த அளவிற்கு என் வலைப்பதிவில் அப்படத்தைப் பற்றி எந்த விமர்சனத்தையும்
முன்வைக்காமல் இருப்பதும் என் வழக்கம். அப்படி குப்பைக்கு போகக் கூடிய அளவிற்கு இந்த ஆண்டில் வெளிவந்த படங்கள் ஏராளம். இந்தப் படம் குப்பையிலும் அழுகிய குப்பையாகத் தான் எனக்குப் படுகிறது. உடனே நீங்கள் கேட்கலாம் குப்பைக்கே விமர்சனம் எழுதாதவன் அழுகிய குப்பைக்கு எதற்கு விமர்சனம் எழுத வேண்டுமென்று. காரணம், பாதிப்பு. ஆம், ஒரு குழந்தையின் வாயில் சோற்றுக்குள் மலத்தை மறைத்து ஊட்டி விட்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் பாலா என்பவனை நம்பி படம் பார்க்கச் சென்றால், ஆபாச வார்த்தைகளாலும், வக்கிரமான காட்சிகளாலும் படம் முழுக்க நம்மை அழைத்துச் செல்கிறார். தான் இயக்கிய ஒவ்வொரு படத்திற்கும் தேசிய விருதுகளை அள்ளிக் குவித்த ஒரு படைப்பாளியால் எப்படி இப்படி ஒரு இழிவான படத்தைக் கொடுக்க முடிகிறது. அதற்கு நீங்கள் உங்கள் இயல்பிலேயே இரண்டு வருடத்திற்கு ஒரு படத்தைக் கொடுத்தால் கூட போதுமே.
எதார்த்தம் என்ற பெயரில் இத் திரைப்படம் கட்டமைத்துள்ள வக்கிரமான காட்சிகளும், வசனங்களும் ஏராளம்.
விஷாலின் அம்மாவாக நடித்திருக்கும் அம்பிகாவிற்கும்,
ஆர்யாவின் அம்மாவிற்கும் வரும் வார்த்தை தகராறில் அம்பிகா ஒரு இடத்தில் ஆர்யாவைப் பார்த்துக் கூறுகிறார், "அவனுக்கு அவன் குஞ்சு மணிய புடிச்சு ஒழுங்கா ஒன்னுக்கு கூட போகத் தெரியாது."
பிரிதொரு காட்சியில், "எல்லாத்தையும் நீயே தீத்துடாத அம்மாவுக்கும் ஒரு கட்டிங் வை. வரவர சரக்கடிக்காம தூக்கம் வரமாட்டேங்குது."
என்கிறார். "காலைத் தென்றல் பாடி வரும்" என கதிரவனோடு கபடி ஆடிய அதே அம்பிகா இன்று உங்களின் கீழ்த்தரமான இயக்கத்தால் பீடி பிடித்துக் கொண்டு வக்கிரமான வசனங்களை பேசிக் கொண்டிருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக இன்று கருதப்படும் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தப் படத்திற்கு எழுதியுள்ள சில காலத்தால் அழியாத வசனங்களை படித்துப் பாருங்கள். இப்படத்தை பார்க்கலாமா? வேண்டாமா? என்று இதனை படித்து விட்டு தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

1. ஏண்டி, நான் தெரியாமத் தான் கேட்கிறேன் ஆம்பளைங்க பேண்ட்ல ஜிப் இருக்கறது ஓக்கே... பொம்பள புள்ளைங்க உங்க பேண்ட்ல எதுக்குடி ஜிப்பு???

2. டேய்... என் கண்ணுல இருந்து கண்ணீர் வர வெச்சுட்டீங்கடா... டி.எஸ்.பி சார் கண்ல இருந்து கண்ணீர் வராம பின்னே மூத்திரமா வரும்???

3. என்ன இது சலூன் பக்கம் பொம்பள புள்ள? ஏம்மா... கட்டிங்கா? சேவிங்கா?

4. அவளுக்கு ரெண்டு புருஷன். அதுவும் இல்லாம அவ வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே பல கை பட்டவ.
இது போன்ற இரட்டை அர்த்த வசனங்களை பாய்ஸ் படத்தில் எழுதியதால் சுஜாதாவையே விரட்டியடித்த ரசிகர்களுக்கு நீங்கள் எம்மாத்திரம்? கவனம் தேவை திரு.எஸ்.ரா.
குறைகுடமாக வீராப்பு காட்டி அலையும் ஜமின்தாராக வரும் ஜி.எம்.குமாரும், அவரின் நிர்வாணக் கொலையும், ஆர்யா ஜோடியாக வரும் மதுஷாலினியின் மனதில் பதியாத நடிப்பும், பரட்டைத் தலையும், வெறிக்கும் விழிகளுமாக வில்லன் ஆர்.கே-வும் என வழுவில்லாத திரைக்கதைக்குள் இவர்களின் தடுமாற்றம் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது.
விஷாலின் அபாரமான நடிப்பும், யுவனின் மிரட்டும் பிண்ணனி இசையும் மட்டுமே திரை அணைந்த பின்பும் நம் மனதில் தீபங்களாக ஒளிர்கிறது.

பாலாவும் அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் ஒருசேர படத்தைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அது ஒன்றே அவன்-இவன் படத்தின் இயக்குனருக்கு என்னைப் போன்ற ரசிகர்கள் கொடுக்கும் தண்டனை.

Monday, June 13, 2011

நம்பிக்கையின் ஒரு துளி

இந்த ஆண்டு "சிறந்த குறும்பட ஒளிப்பதிவாளர்"- களுக்கான தேசிய விருது முரளி என்பவருக்கு கிடைத்துள்ளது. இதனைப் பற்றிய செய்தியோ, வாழ்த்துரைகளோ எந்தப் பத்திரிக்கையிலும் இல்லை. ஆனந்த விகடன் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அதில் மட்டும் தான் முரளிக்கு கிடைத்த தேசிய விருதைப் பற்றி குறிப்பிட்டு பாராட்டி இருந்தார்கள். வார இதழ்கள் வெறும் சினிமா துணுக்குகளையும், கிசுகிசுக்களையும், அலுப்பான தொடர்கதைகளையும் குறைத்துக் கொண்டு இது போன்ற செய்திகளை வெளியிட்டால் அந்தக் கலைஞனின் திறமையும், புகழும் பரவலாக மக்களிடம் சென்றடையும். அப்போது தான் வளரும் கலைஞர்களின் வாழ்க்கைத் தரமும், திறமையும்
மேலும் வளரும். எப்போது தான் கடைப்பிடிப்பார்களோ தெரியவில்லை.

ஒளிப்பதிவாளர் திரு.முரளி அவர்கள் நான் பிறந்தும், வளர்ந்து வரும் ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர். +2 முடித்த பிறகு திருவண்ணாமலை "அரும்புக் கலைகுழு"-வில் வீதி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. இந்திய இசை பயிலச் சென்று பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டார். அடுத்த ஐந்தாண்டுகளில் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பி.எஃ.ஏ முடித்தார். இவரின் "அசைவுரு ஓவியங்கள்" புராஜெக்ட் பலரது பாராட்டைப்
பெறவே, பாலுமகேந்திரா அவர்கள் நம்பிக்கை வார்த்தைகளோடு பூனே இன்ஸ்டியூட்டில் ஒளிப்பதிவாளர் படிப்பை முடித்தார். இவரின் இறுதி ஆண்டு புராஜக்ட் தான் "ஷியாம் ராத் ஷிகர்" என்கிற குறும்படம். 23- நிமிடங்களில் ஓடக்கூடிய இந்தப் படத்தின் இயக்குனரான அருணிமா ஷர்மாவுக்கும், ஒளிப்பதிவாளரான முரளிக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.

"தேர்வுகளில் தோல்வி அடைந்த எத்தனையோ பேர் வாழ்க்கையில் வெல்வதையும், தேர்வுகளில் வென்ற எததனையோ பேர் வாழ்க்கையில் தோற்பதையும் பார்த்திருக்கிறோம். போட்டிகளுக்குள் உள்ள விதிகளுக்குள் என்னால் வேலை செய்ய முடியாது. நான் தொடர்ந்து தேர்வுகளுக்கு எதிரான ஆளாகவே இருக்கிறேன். மதிப்பெண்களை வைத்து ஒருவனை அளவிடுவதில் எனக்கு விருப்பமில்லை. இந்த விருது கூட தானாக அமைந்தது தான்"- என்று சிரித்தபடி பேசும் முரளியின் வார்த்தைகளில் தெரிவது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான்.
எங்கள் ஊர் மண்ணும் மாணிக்கம் தான், என்பதை முரளி அமைதியாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

Friday, June 10, 2011

தமிழ்நாடு அரசாக மாறிய ஆத்திமூக்காவாக்களித்து விட்டோம், பொறுத்திருந்து பார்ப்போம் என்கிற எண்ணம் தான் தற்போதுள்ள நிலையில் தமிழக மக்களின் எண்ணம். இனி தொடரும் வார்த்தைகளுக்கு சுருக்கம் தான் மேற்கண்ட வரிகள்.
முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் விடுத்த அறிக்கையில் 2001-2006-ல் நடந்த ஆட்சியைப் போல் மீண்டும் வேண்டும் என்கிற ஆவலோடு தான்
தற்போது தமிழக மக்கள் என்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்கிறார். இது முழுக்க முழுக்க தவறு. கடந்த தி.மு.க ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பே உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. அ.தி.மு.க-வைத் தவிர வலுவான வேறெந்தக் கட்சியாவது இருந்திருந்தால் அதன் தலைவர் தான் நிச்சயமாக இன்றைய தமிழகத்தின் முதலமைச்சர்.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 7 திட்டங்களுக்கு முதல் கையெழுத்திட்டதும், அதனை
ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டுவதும் பாராட்டத்தக்கது தான். ஆனால் இலவசங்களை அள்ளிக் கொடுத்தால் மாநிலத்தின் வளர்ச்சியை எப்படி எதிர்பார்க்க முடியும். உங்களின் தேர்தல் வாக்குறுதிகளிலும், முதல் கையெழுத்திட்ட 7 திட்டங்களிலும் என்ன இருக்கிறது? இலவசங்கள் மட்டும் தான். ஆனால் மக்கள் எதிர்பார்ப்பது தாலிக்கு தங்கமும், லேப்டாப் கம்ப்யூட்டரும் அல்ல. தங்களுக்கென உறுதியான வேலைவாய்ப்பையும், முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதையும் தான். அதேபோல் ஆரம்பம் முதலே உங்கள் நடவடிக்கைகளிலும், திட்டத்தை ஒருங்கிணைக்கும் விதத்திலும் பல குழப்பங்களே எஞ்சுகின்றன. சமச்சீர் கல்வித் திட்டத்தை முதலில் மறுத்ததும், பிறகு மாற்றியமைக்கப்படும் என்று கூறியதும், தலைமைச் செயலகத்தை பழைய இடத்திற்கே மாற்றியதும், மெட்ரோ ரயில் திட்டத்தை மோனோ ரயில் திட்டமாக மாற்றியதும், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றியதும் என அறிவித்த திட்டங்கள் அனைத்திலும் குழப்பங்களும், தி.மு.க ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட திட்டங்களை நிராகரிப்பதுமாக இருக்கின்றன.

கொடநாட்டிலும், போயஸ் கார்டனிலும் ஓய்வெடுத்துக் கொண்டு உங்கள் நலனை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு ஒரு வேலை சோற்றுக்கே இலவசங்களை நம்பி சிங்கியடித்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இருக்கும் அனைவருக்கும் உழைப்பையும், அதற்கேற்ற ஊதியத்தையும் அளிப்பதிலேயே தனிமனித வளர்ச்சியும், மாநிலத்தின் வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது. அதற்கு முதலில் பொதுமக்களுக்கும், உங்களுக்கும் மாதம் ஒரு முறையாவது நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் நிலையும், தமிழக மக்களின் நிலையும் உங்களுக்கு புரியும். பிறகு பாருங்கள், இன்று
பயத்தோடு உங்கள் கால்களில் விழும் அமைச்சர்கள் கூட முழுமரியாதையோடு காலில் விழுவார்கள். இப்போதுள்ள நிலையில் ஆயிரமாயிரம் அவலக் குரல்களே உங்களை எட்டாத போது இந்தப் பதிவு மட்டும் என்ன எட்டி விடவா போகிறது.

Sunday, June 5, 2011

மனதிற்குள் சில மழைச்சாரல்கள்

"கனவுகளின் வரைபடம்" பதிவிற்கு சில நண்பர்களின் பின்னூட்டங்கள் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
திருமதி. இராஜராஜேஸ்வரியின்,
"நிர்மாணித்த சாம்ராஜ்ஜியத்திற்கு வாழ்த்துக்கள்"
திரு. சௌந்தரின்,
"இந்த அறை தங்களின் போதிமரம்" போன்ற வார்த்தைகளும்,
மெயிலில் திரு. கதிரவன் அவர்கள் குறிப்பிட்ட,
"உங்கள் அறை எங்கள் ஊரில் ஸ்டுடியோக்களை பார்ப்பது போல் இருக்கிறது" என்கிற வார்த்தைகளும் எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

இது போன்ற வார்த்தைகளை வாசிக்கும் போதே மனதிற்குள் மழை பெய்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

தம்பி கூர்மதியன் அவர்கள் வலைசரத்தில்,

விசித்திர பேர் கொண்ட பதிவர் இவர்
என்ன பெயரெண்டு போய் காணும்..
தேசிய விருது பற்றிய பதிவொன்று
அதில்,
அவரது பட்டியல் சிலவுண்டு.!!

என்று நான் எழுதிய "விருதுகளும் குழப்பங்களும்" பதிவை குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

எப்போதும் என் விருப்பத்திற்குரிய கவிஞரான மனுஷ்யபுத்திரனின் கீழே குறிப்பிட்டுள்ள கவிதையை மிகவும் ரசித்தேன். தன் வாழ்வில் பெறும் அனுபவங்கள் அனைத்தையும் சட்டென கடந்து விடாமல் நின்று நிதானித்து வார்த்தைகளில் வகைப்படுத்தி கவிதையாக்கி விடுவதில் வல்லவர். இலக்கிய உலகில் ஒரு கவிஞனாக இவரது உயரம் யாரும் எட்டிப் பிடிக்க முடியாது. கவிதையை படித்தால் உங்களுக்கே புரியும்.

இருந்துகொண்டிருப்பது தொடர்பாக
-----------------------------------------------

இதையெல்லாம் நாங்கள்
அப்படி ஒன்றும் வெறுக்கவில்லை

இது எவ்வளவு கடினமாக இருந்தபோதும்
நாங்கள் வேண்டாம் என்று
நிராகரிக்கவேயில்லை

அப்படி மூச்சு முட்டியபோது கூட
நாங்கள் ஒருவரிடமும்
முறையிடவில்லை

உண்மையில் நாங்கள்
ஒன்றிலிருந்தும்
ஒரு விடுதலையையும் கேட்கவில்லை

இதெல்லாம் மோசமாக இருப்பதல்ல
எங்கள் பிரச்சனை
எல்லாம்
இவ்வளவு நீளமாக இருந்திருக்க வேண்டுமா
என்றுதான் நாங்கள் கேட்கிறோம்
அதன் மறுமுனை எங்காவது இருக்கிறதா
என்றுதான் நாங்கள் கேட்கிறோம்

எங்களால்
காத்திருக்க முடியவில்லை என்று
அதற்கு அர்த்தமில்லை

அலுப்பாக இருக்கிறது
கால்கள் மரத்துப்போகிறது
தூங்கிவிட வேண்டும்போல் இருக்கிறது

இன்னும் இவ்வளவு வாழ்க்கை
மிச்சமிருக்கையில்
தூக்கமும் அவ்வளவு சீக்கிரம்
வருவதாகவே இல்லை.

இந்தக் கவிதையை குறைந்தது நூறு முறையாவது படித்திருப்பேன். காரணம், கவிதையின் ஒவ்வொரு வரிகளும் இயலாமையின் கதவுகளை திறந்து கொண்டு
சென்றவாறு இருக்கின்றன. அஹிம்சையை பற்றிக் கொண்டு தன் கொள்கைகளோடு அர்த்தமற்ற இந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனின் நிகழ்காலப் பதிவாய் இந்தக் கவிதை என் மனதில் பதிகிறது. தன் இருப்பின் பலவீனத்தையும், வெளிப்படுத்த இயலா கோரிக்கைகளையும் கவிதை முன் வைக்கிறது.

Thursday, June 2, 2011

கனவுகளின் வரைபடம்

ஒரு வழியாக ஒரளவிற்கு என் அறையின் கலை வேலைப்பாடுகள் முடிவடைந்து விட்டன. ஒரு பறவை எப்படி தனக்கென பாதுகாப்பான கூட்டை ஏற்படுத்திக் கொண்டு உயிர் வாழுமோ, அப்படித்தான் நானும் என் அறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அங்கு நான் மட்டுமல்ல, என் கனவுகளும், ஆசைகளும் உடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. யாவருக்கும் பிடித்த முதன்மையான நண்பன் அவர்களது அறையாகத் தானிருக்கும். காரணம், அங்கு தான் நாம் தினம் தினம் வெளிப்படுத்திடாத நம் உணர்வுகள் பாதுகாப்பாய் தேங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொருவரின் அறையும் நம் விருப்பங்களை பிரதிபலன் பாராது நிறைவேற்றிக் கொடுக்க வல்லது. எனது அறையும் எனக்கு அப்படித்தான். தெய்வீக சந்நிதியிலும் கிடைக்காத பல பரவசமிக்க அனுபவங்களும், புதிய புதிய எண்ணங்களும் அது தினம் தினம் தந்தபடியே இருக்கின்றன.
நகர்புறங்களில் வசிப்பவர்கள் இந்த வேலைப்பாடுகளை சுலபமாக பெற முடியும். ஆனால் என்னைப் போன்று ஏதேனும் ஒரு ஒன்றியத்தில் ஒன்றிக்
கொண்டிருப்பவர்களுக்கு சாத்தியப்படுவது கடினம். இங்குள்ள என் ஓவிய நண்பன் சிவா என்பவரை மட்டும் வைத்துக் கொண்டு பதினைந்து நாட்களில் முடிக்கப்பட்ட வேலை இது. எனது கூடு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்று பார்த்து விட்டு கருத்துக்களை பதிவிடுங்கள் அல்லது மெயிலுங்கள்.


நானும், எனது புத்தகங்களும்...