Friday, July 29, 2011

ஒரு வானமும் அதன் நட்சத்திரங்களும்

இணையத்தில் நிறைய சமுக வலைதளங்கள் இருந்தாலும் எனக்கு முதன்மையாக படுவது www.twitter.com தான். அலைபேசியில் குறுஞ்செய்தியைப் போலத்தான் கணிணியில் ட்விட்டர். நமக்கு பிடித்தமானவர்களை உடனுக்குடன் தொடர்புகொள்ளவும் நம் எண்ணங்களை, ஆசைகளை, உணர்வுகளை தொடர்சியாக பதிவிட்டு உலகத்தின் பார்வைக்கு வைக்க முடியும். உலகின் எந்த மூலையில் நடக்கும் எந்தவொரு செய்திகளை அறிந்து கொள்ளவும், பலதரப்பு வகையில் நம் ஆறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளவும் ட்விட்டர் மிகப் பெரிய அளவில் நமக்கு பயன்படுகிறது. அரசியல், சினிமா, இசை, வர்த்தகம், நகைச்சுவை, நடனம், விமர்சனம் என அனைத்து துறைகளைப் பற்றிய தகவல்களையும் அலசி ஆராய்ந்திட முடியும், பெறவும் முடியும். நம் தமிழை உலக அரங்கில் நிலைநிறுத்தவும், நம் குரல்கள் எட்டுத் திக்கும் ஒலித்திடவும், உங்களை புதுப்பித்துக் கொள்ளவும் ட்விட்டர் தளம் அவசியமானது.
தமிழ் ட்விட்டரை பலரும் பலவகையில் முன்னேற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நண்பர் அர்ஜூன் அவர்கள் ட்விட்டரில் #TTA எனும் பட்டியை உருவாக்கி ட்விட்டரிலும், தன் வலைதளத்திலும் தேர்தல் நடத்துகிறார். இது புதிதாக வரும் ட்விட்டர்களுக்கும், திறமையானவர்களுக்கும் மிகப்பெரிய அங்கிகாரம். இந்த மாதம் என் ட்விட்டர் முகவரி கூட இடம்பிடித்துள்ளது. இந்த முவரியில் அதனை காணலாம் http://sriarjunan.blogspot.com/2011/07/11-tta.html

எனக்கு பிடித்த ட்விட்டர்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்.
இது எனக்கு பிடித்தவர்களின் பட்டியலே தவிர தரவரிசைப் பட்டியல் அல்ல.

scanman
iamkarki
ncchokkan
iparisal
rajanleaks
Mayavarathaan
TBCD
thoatta
thirumarant
minimeens
powshya
jilli_online
settikaaran
vedhalam
arataigirl
navi_n
selvu
4sowmi
pokkiris
geethuTwits

Thursday, July 28, 2011

கலப்படக் கருவறை

என்னால் ஒருபோதும் புரிந்து கொள்ளவே
முடியவில்லை, இந்த
மக்கிப் போன மனிதர்களின் மனங்களை

அதன் தோற்றம் குறித்த யோசனையிலும்
அதன் நிகழ்நிலை குறித்த யோசனையிலும்
எனக்கு மிஞ்சுவது ஏமாற்றமே

கடும் போராட்டத்தில் தோல்விக்கான
முதற்பரிசை எனக்களிக்கிறாரகள்
செம்புக் கிரிடங்கள் அணிந்த அரசர்கள்

குறைகூறி வாழும் குமாரர்களும்
குற்றம்சுமந்து வாழும் குமார்த்திகளும் தான்
இந்த உலகில் தொண்ணூறு விழுக்காடு

மனிதமும், பாசமும், நேசமும் மிக்கவர்கள்
எறும்பாக மாறி ஒருகுழுவாக
அந்த அரசமரத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள்

ஒரு மகிழ்ச்சியான செய்தி
நானும் கூடிய விரைவில் எறும்பாக
அந்தக் குழுவில் இணைய இருக்கிறேன்

மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கிறேன்
மக்கிப் போன இந்த மனிதர்களின்
மனங்களை புரிந்துகொள்ள முடிகிறதா என்று!!!

Saturday, July 23, 2011

கரைந்திடும் கவலைகள்...

இந்தப் பதிவை படிக்கும் உங்களின் ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனை எத்தனை போராட்டங்களும், பிரச்சனைகளும் இருக்கும் என்பதை நானறிவேன்.
இதற்கு ஆறுதலாகத் தான் நாம் எதையாவது பற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இலக்கியம், கலை, சினிமா என்று விதவிதமான வேடிக்கை பொருட்கள் நம் கண்முன்னே ஏராளம். நம் பெரும் துயரங்களும், கசப்பான அனுபவங்களும் இந்த வேடிக்கை பொருட்களில் கொஞ்சம் கரைந்து விடுவது தான் அந்த படைப்பின் உன்னதம்.
சமிபத்தில் நான் ரசித்த ஒரு கவிதையையும், ஒரு கேள்வி-பதில் பகுதியையும் பதிவிட்டுள்ளேன். உங்கள் கவலைகளும் சற்று கரைகிறதா என்று படித்து
உணருங்கள்.

வாழ்வின் எதார்த்தங்களை தன் எளிய வார்த்தைகளில் பதிவு செய்யும் கவிஞர் தேவதச்சனின் கவிதைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவரின் "யாருமற்ற நிழல்" கவிதைத் தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதை.

நான் மழையாக இருந்தால்

நான்
மழையாக இருந்தால்
ஒரு நிமிடம் நின்றுவிட்டுப் பெய்வேன்
கைக்குழந்தையை ஏந்திச் செல்லும்
மூதாட்டி
பாதுகாப்பான இடத்திற்குப்
போகட்டும் என்று
குடையாக இல்லாதது எல்லாம்
குடையாக மாறுவதை
குழந்தை பார்க்கட்டும் என்று
இருநிறத் தலைக்காரி வேகமாய்
நடந்து
மூச்சு வாங்குகிறாள்
நான் மழையாக இல்லாததால்
ஒரு நிமிடம் நின்றெல்லாம் பெய்யவில்லை
பார்த்து பார்த்து, என்று மட்டும்
சொன்னேன்,
அவள் ஏன்
தற்காலிகமாக இளமையோடு
இருந்தாள்?


பலகாலமாக வாசகனுக்கும், ஏன் ஒரு சில படைப்பாளிகளுக்கே கூட இந்தக் கேள்விக்கான பதிலை புரிந்து கொள்வதில் சிக்கலும், சங்கடங்களும் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட கேள்விக்கான பதிலை தன் தீர்க்கமான புரிதலில் எளிமையாய் விளக்கி இருக்கிறார் எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்.

நவீனத்துவம், பின்நவீனத்துவம், யதார்த்தவாதம், மேஜிக்கல் ரியலிசம்... என்பன போன்ற வார்த்தைகளும்... அவை சொல்ல வரும் விஷயங்களும் என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்குச் சுத்தமாகப் புரிவது இல்லையே. விளக்க முடியுமா?

நவீனத்துவம் என்பது வாழ்வை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்வது. 19-ம் நூற்றாண்டில் தொழில் புரட்சிக்குப் பிறகு உருவான சிந்தனை. உதாரணத்துக்கு, முந்தைய காலங்களில் கடவுள் கண் முன்னே தோன்றினால், பக்தன் உருகி தன்னை ஒரு கடையேனாகக் கருதி காலில் விழுந்து வணங்குவான். அது மரபுப் பார்வை. அதே கடவுளை, புதுமைப்பித்தன் தனது 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ சிறுகதையில், காபி வாங்கிக் கொடுக்க ஹோட்டலுக்கு அழைத்துப் போவதுடன், உமது லீலைகளை எல்லாம் பில்லுக்குப் பணம் கொடுப்பதற்குக் காட்டும் என்று பகடி பேசுகிறார். இதுதான் நவீனத்துவம். வாழ்வின் சிக்கல்களை விஞ்ஞானபூர்வமாகப் பேசியது நவீனத்துவம்!

பின்நவீனத்துவம்... 20-ம் நூற்றாண்டின் சிந்தனைத் தளம். இலக்கியம், சினிமா, இசை, கட்டடக் கலை என எல்லாத் துறைகளிலும் பின்நவீனத்துவம் உண்டு. நவீனத்துவம் போதவில்லை என்று இந்தக்
கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஒரு வார்த்தை யில் சொல்வதாயின், சிதறடிப்பது என்பது தான் அதன் ஒரே நோக்கம். ஒரே கதைக்குள் நாலைந்து கதைகள் சொல்வது, ஒரே சினிமாவில் வேறுபட்ட நாலைந்து கதைப்போக்குகளைச் சரடுகளாக உருவாக்கி, கதையின் மையத்தைச் சிதறடிப்பது (Babel - Alejandro González Iñárritu), புதிர்மையை உருவாக்குவது (Inception - Christopher Nolan), நகல் உண்மைகளை அடையாளம் காண்பது, பாலியல் சிக்கல்களை நுணுகி ஆய்வது என அதற்குப் பல தளங்கள் உண்டு. பின்நவீனத்துவம், வாசகனை எழுத்தாள னுக்கு இணையாக்கியதுடன் கதையை விருத்தி செய்வதே வாசகனின் வேலை என்கிறது!

யதார்த்தவாதம்... 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான கோட்பாடு. அன்றாட வாழ்க்கையை அதன் உட்புதைந்திருக்கும் உண்மைகள் புலப்படுமாறு எடுத்துச் சொல்வது யதார்த்தவாதம். மனிதனின் மேம்பாட்டுக்கும் கீழ்நிலைகளுக்கும் அவனது செயல்களே காரணம் என்கிறது யதார்த்தவாதம். கு.அழகிரிசாமியின் கதைகளைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.

மேஜிக்கல் ரியலிசம்... உள்ளதை உள்ளபடியே காட்டும் மாயக் கண்ணாடி முன்பாக நின்று, அரக்கனின் உயிர் எங்கே இருக் கிறது என்று கேட்க, அது பாதாள லோகத்தில் உள்ள கிளியின் உடலுக்குள் ஒளிந்து இருக்கிறது என்று அடையாளம் காட்டிக் கொடுக்கிற கதையைக் கேட்கையில், ஏன்... எப்படி என்று லாஜிக் கேட்காமல், அந்த விந்தையில் மயங்கிப்போயிருந்தோம் இல்லையா? அதுதான் மேஜிக்கல் ரியலிசம்! வாழ்வில் நாம் இழந்துபோன விந்தைகளை, மாயத்தைக் கதையில் மறுபடி உருவாக்குவதே மேஜிக்கல் ரியலிசம்!

- எஸ். ரா

நன்றி விகடன்

Monday, July 18, 2011

தெய்வத் திருமகள் - அன்பின் அடையாளம்


"ஒரு தந்தை தன் மகனிடம் காட்டும் பாச உணர்வு" என்கிற ஒற்றை வரியை தனது இரண்டாம் படத்திலேயே கச்சிதமான திரைக்காவியமாக உருவாக்கிய இயக்குனர் விஜய்க்கும் & கோ-விற்கும் எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
பறவை தன் கூட்டிற்கு இரை சுமந்து கொண்டு பறந்தலைவதைப் போல கிருஷ்ணாவாக விக்ரம் "நிலா..நிலா"-வென்று சொல்லிக் கொண்டிருக்கும் காட்சிகளும்,
"கிருஷ்ணா வந்தாச்சு... நிலா வந்தாச்சு..." என கைகளை உயர்த்தி உயர்த்தி அவர் செய்யும் மேனரிஸங்களும் தமிழ் சினிமாவிற்கு புதிது. நாயகியின் இடுப்பை பிடித்து ஆடிக் கொண்டும், பத்து பேரை துரத்தி துரத்தி அடித்துக் கொண்டும் இருக்கும் தமிழ் சினிமா நாயகர்களுக்கு மத்தியில் தன் உடலை வருத்தி கொண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் நடிக்க முன்வந்த டாக்டர்.விக்ரம் அவர்களுக்கு சபாஷ்.
படத்தில் இவருக்கு போட்டியாக களத்தில் இருப்பது பேபி சாரா தான். நிலா என்கிற குழந்தைப் பாத்திரத்தில் இவரது இயல்பான நடிப்பு இதுவரை நாம் கண்டிராதது.
அப்பா... அம்மா எங்க?
சாமிக்கிட்ட...
ஏன்? சாமிக்கு அம்மா இல்லையா?
நல்லவங்கள சாமி தன் கூடவே வெச்சுக்கும்.
அப்போ நாம நல்லவங்க இல்லையாப்பா???
இரவு வேளையில் தான் வாழ்வின் விடியலுக்காக ஏங்கும் நிலாவின் இந்த வார்த்தைகளில் வெளிப்படும் ஆயிரமாயிரம் உணர்வலைகளை உள்வாங்கிக் கொள்ளும் பார்வையாளனின் கண்களில் கண்ணீர் வரத்தான் செய்யும்.
"அப்பா யான ஏம்பா அவ்வளவு பெருசா இருக்கு?
நெறய தீனி சாப்பிடுதே, அதான்..
இப்படி காட்சிகளுக்கும், கதாப்பாத்திரங்களுக்கும் பலமான பாலமாக வசனங்களை அமைத்து ஒரு அற்புதமான அனுபவத்தை நமக்கு கொடுக்கிறார்.
நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் படத்தின் ஹைலைட். எஸ்.பி.பி குரலில் ஒலிக்கும் "ஜகத்தோம்" பாடலின் இசையும், பின்னணி இசையும் கொட்டும் மழையின் சங்கீதமாக நம் மனதில் படிகிறது. நிலாவின் சித்தியாக வரும் அமலாபால், வக்கீலாக வரும் அனுஷ்கா, நாசர் உதவியாளர் எம்.எஸ்.பாஸ்கர் என கதைக்கு கச்சிதமாய் பொருந்திய பாத்திரங்கள். காட்சிக்கு காட்சி கண்ணீரில் நாம் கலங்கும் கணங்களில் சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகளில் நம் உள்ளங்கள் அழுதாலும், உதடுகள் சிரிக்கவே செய்கின்றன.

படம் பார்த்தவர்களும், சில விமர்சகர்களும் கூட "மனநலம் குன்றிய பாத்திரத்தில் நடிக்கும் எல்லோரையும் ஏன் இயக்குனர்கள் ஸ்வட்டரோடு அலைய விடுறாங்க'
என்கிறார்கள். ஆனால் நிஜமாகவே எங்கள் தெருவில் கூட மனநலம் குன்றிய இரண்டு பேர் எப்போதும் ஸ்வட்டரோடு தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இது பற்றி மனநல மருத்துவரிடம் விசாரித்த போது, அம்மாவின் கருவறையில் இருக்கும் கதகதப்பு பிறந்து வளர்ந்த பிறகும் தேவைப்படுவதால் தான் அவர்கள் ஸ்வட்டரோடு இருக்கிறார்கள் என்றார்.
படத்தின் முதல் ஒரு மணிநேரம் திரைக்கதையின் தொய்வு, படத்தின் இறுதி ஒரு மணி நேரக்காட்சியில் கதாப்பாத்திரத்தின் அழுத்தமான பதற்றம் சுயநலத்தின்
வெளிப்பாடாக இருப்பது, சிவாஜியின் அழுவாச்சி படங்களை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள், "ஐ யாம் சாம்" - படத்தின் மையக்கரு, அதே ஊட்டி, அதே மேனரிஸங்கள் (மூன்றாம் பிறை) என படத்தைப் பற்றிய
குறைகள் என்று சில பட்டியல்களும் இருக்கிறது. இயக்குவதற்கு முன்பு விஜய் அவர்கள் அமிதாப் நடித்த "பா" -படத்தை ஒரு முறை பார்த்திருக்கலாமோ?
என்ற ஏக்கம் தான் இப்போது தோன்றுகிறது. இருந்தாலும் "தெய்வத் திருமகளும் - தெய்வத் திருமகனும்" தமிழ் சினிமாவின் நிரந்தரமான அடையாளம் என்று
நிச்சயம் கூறிக் கொள்ளலாம்.

Wednesday, July 13, 2011

மந்திரக்காரன்...
"சுஜாதா" இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை பாரதிக்குப் பிறகு என்னை பாதித்த எழுத்தாளர்களில் முதன்மையானவர் அமரர் சுஜாதா. அவரை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறந்ததைப் போலவே உணர்கிறேன். அந்த எழுத்து நடையும், அதன் வசிகரமும் என் மனதிற்குள் எப்போதும் பெய்யும் மழைச்சாரல் தான். நாம் ஒரு நாவலுக்கோ, சிறுகதைக்கோ அல்லது ஒரு கவிதைக்கோ கூட அடிமையாகி விடக்கூடிய அபாயம் இருக்கிறது. அது போன்ற படைப்புகளும், படைப்பாளிகளும் நம் எண்ண அலைகளில் நிரந்தரமாக தங்கி விடுவார்கள். அதற்கான சாத்தியங்கள் நாவலுக்கும், சிறுகதைக்கும், கவிதைக்கும் உண்டு. மாறாக சுஜாதா தனது 'சுஜாதா பதில்கள்" எனும் கேள்வி-பதில் தொகுதியில் அதற்கான சாத்தியங்களை நமக்கு தருகிறார். நான் வாசித்த பல கேள்வி-பதில் தொகுதிகளில் கிடைக்காத பரவசம் இந்தத் தொகுதியில் கிடைத்தது. வாசிப்பனுக்கு அதிகபட்ச அனுபவத்தையும், வாசிப்பின் சுகத்தையும் தன் மாய வார்த்தைகளால் நமக்கு தருகிறார்.
உயிர்மை பதிப்பக வெளியீட்டில் மனுஷ்ய புத்திரனின் இதயம் கனக்கும் பதிப்புரையோடு தொடங்கும் தொகுதியில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மீகம், பொழுதுபோக்கு என அத்தனை துறைகளிலும் அவர் பெற்றிருக்கும் அறிவுஞானம் தனிவொரு மனிதனுக்கு சத்தியமாக சாத்தியமில்லை. இவர் அளித்திருக்கும் பதில்கள் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அந்தக் கேள்விக்கான மாற்று பதிலை முன்வைக்க முடியாது. இனி.............................

பதிப்புரை
-----------------------

சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதிகளில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும், கூர்மையும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. மருத்துவமனையில் தனது இறுதி தினங்களில் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த சந்தர்பத்தில் கூட தன் பதில்களை அனுப்பி வைத்தார். எந்த நிலையிலும் எழுத்தை மட்டுமே பற்றி நின்ற நம்முடைய காலத்தின் மாபெரும் கலைஞனின் ஆளுமையின் இயல்பு அது.
அவர் எழுதிய புத்தகத்தை அவருடைய முன்னுரையில்லாமல் கொண்டு வருவதை விட இதயத்தைக் கனக்கச் செய்வது வேறெதுவும் இல்லை. தன்னுடைய நூல்களை பதிப்பிப்பது தொடர்பாக எத்தனையோ இனிய நினைவுகளை தந்த சுஜாதா தான் எனக்கு இத்தகைய சந்தர்ப்பத்தையும் கொடுத்திருக்கிறார்.

மனுஷ்ய புத்திரன்
28-12-2009

உங்கள் எழுத்துக்களுக்கு ஆதர்சமாய் யாரைச் சொல்லலாம்?
எனக்கு முன் எழுதிய அனைவரையும்!

என் செல்போன் கேமரா 3.3 மெகா பிக்ஸெல்; என் கண்கள் எத்தனை மெகா பிக்ஸெல்?
மெகா என்பது பத்து லட்சம்; பிக்ஸெல் என்பது "பிக்சர் எலிமெண்ட்" என்பதின் சுருக்கம். இந்த பிக்ஸெல் ஸ்கேலை வைத்து கண்னை அளந்து 81 மெகா பிக்ஸெல்
என்று கணக்கு போட்டிருக்கிறார்கள். ஆனால், டிஜிட்டல் கேமரா போன்ற சாதனங்களோடு ஒப்பிடும் போது கண்களுக்கு பரந்த பகுதிகளை பார்க்கும் துல்லியம்
இல்லை. கேமரா வியூ ஃபைண்டரில் பார்ப்பதை விட கண்கள் அதிக பரப்பை பார்க்கிற மாதிரி தெரியும். அது, மூளை செய்கிற மாயா ஜாலம்.
சந்தேகமிருந்தால் சத்யாவின் இந்தப் பதிவில் (நானே போட்டுக்கிட்டது) ஒரு ஏரியாவை நோக்கி சுண்டுவிரலைக் காட்டி, விரலில் உங்கள் கண்களைப் பதித்தபடி ஒரு வரியாவது படிக்க முயன்று பாருங்கள்....
அம்பேல்!

"ஜெனரேஷன் கேப்" என்றால் என்னங்க?
ஒரு வயதானவரும், இளைஞனும் பஸ் பிடிக்க ஓடுவதைக் கவனியுங்கள். புரியும்.

இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் என்ன ஆகிறது?
போர்டு மெம்பர்கள் லண்டன் போய் ஷாப்பிங் செய்வதற்குப் பயன்படுகிறது. எப்போதாவது கிரிக்கெட் எனும் விளையாட்டின் மேம்பாட்டுக்குக் கொஞ்சம் தரப்படுகிறது.

பள்ளிகளில் செக்ஸ் கல்வி நடத்தும் பக்குவத்தை நாம் அடைந்து விட்டோமா?
சில பணக்காரப் பள்ளிகளில், அடைந்திருக்கிறோம். மற்றப் பள்ளிகளுக்கு தமிழ்த் திரைப்படங்கள் இருக்கவே இருக்கின்றன.

நிலா, வானம், அருவி, தென்றல், கடல்- இவை இடம்பெறாத காதல் கவிதை படித்ததுண்டா?
உண்டே... பாக்கியம் சங்கரின் இந்தக் கவிதையைப் படியுங்கள்.
பேருந்துப் பயணத்தின்
கசங்கிய வியர்வையுடன்
உன் மல்லிகை வாசம்
சசியை மறக்கடித்தது
உன்னில் மூழ்குகிறேன்
நசுங்கிய டப்பாவைப் போல
கிடக்கிறது காதலெனும் சொல்.

இன்னமும் தங்கள் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த திரைப்படம் எது? ஏன்?
சத்யஜித் ராயின் பதேர்பாஞ்சாலி தான். வினோத மொழியில் ஆங்கில சப்டைட்டில்களுடன் ஓடிக் கொண்டிருந்தது. எழுந்து வந்துவிட இருந்தேன். ஒரு நிமிஷத்தில் என்னைக் கட்டிப் போட்டு உட்கார வைத்த மறக்க முடியாத சித்திரம்.

கடவுள், அறிவியல் - வித்தியாசப்படுத்துங்கள்...
கடவுள், அறிவியலின் கடைசிக் கேள்வியில் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

எந்த வட்டாரத்து பேச்சுத் தமிழ் தங்களைக் கவர்ந்திருக்கிறது?
திருநெல்வேலித் தமிழ் தான். "என்னடே" என்பதே மரியாதைச் சொல். புலியை அங்க வச்சுப் பார்த்தேன்" போன்ற வசிகரமான பிரயோகங்கள். எளிய ஜனங்களின் எளிய மனங்களின் வெளிப்பாடு.

நீங்கள் சமிபத்தில் ரசித்த சைவ ஜோக்?
"குற்றாலத்தில் குளிக்கச் சென்ற போது என்ன ஆச்சு தெரியுமோ? வேஷ்டி அவிழ்ந்து விட்டது."
"அய்யய்யோ! அப்புறம்?"
"நல்லவேளை, உள்ள டிராயர் போட்டிருந்தேன்"- சைவமாக ஜோக் சொல்ல வேண்டுமென்றால் இந்த மாதிரிதான் மொக்கையாக இருக்கும்.

தமிழகத்தின் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க நீங்கள் கூறும் யோசனைகள் என்ன?
1. காற்றையும், கடலையும் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது.
2. மின்சாரம் கடத்துவதில் இழப்பைக் (Transmission loss) குறைப்பது.
3. Captive power சொந்த செலவில் சிறிய மின்சார உற்பத்தியை ஆதரிப்பது.
4. அறையில் யாரும் இல்லை என்றால் தானாக மின்சாரம் அணைவது.

Friday, July 8, 2011

மனதில் கிடந்தவை...


தவறின் ருசி
-----------------------
ஒரு குற்றவாளிக்குக் கூட
சில விதிமுறைகளை விட்டுத் தருகிறோம்

சில பொய்களைக் கூட
லாவகமாக நிஜமாக்கி விடுகிறோம்

சில தவறுகளைக் கூட
அநீதியாய் சரிசெய்து விடுகிறோம்

சில ஏமாற்றங்களைக் கூட
சகிப்போடு ஏற்றுக் கொள்கிறோம்


சில ஆறுதலைக் கூட
முழுமனதோடு பெற்றுக் கொள்கிறோம்

சில ஆசைகளைக் கூட
கண்ணியத்தோடு நிராகரித்து விடுகிறோம்

சில இம்சைகளைக் கூட
அஹிம்சையோடு தாங்கிக் கொள்கிறோம்

ஆனால் நாம்,
நல்ல மனிதர்களாக இருக்க
எப்போதும் தவறிக் கொண்டேயிருக்கிறோம்.

------------------------------------------------------------------------------------

பாட்டிக்கான படையல்
---------------------------------

தலைவாழை நிறைய
கூட்டு, பொறியல், சுடு சோறு
பலகாரம், அப்பளம்
ஒரு கட்டு வெற்றிலை, பாக்கு
புகையிலை, சுண்ணாம்பு
கலர் சோடா பாட்டில்
சொம்பு நிறைய சுடுநீர்

எல்லாம்
பாட்டிக்கு பறிமாறப்பட்டது
அவளின் இறுதிச் சடங்கில்.

Tuesday, July 5, 2011

ஒரு கனவை நனவாக்கினால்...

வாசகத்தால் அதற்கு மேல் நடக்க முடியவில்லை. உயிரோடிருக்கும் போது இதுபோன்றதொரு வலியை அவன் ஒருநாளும் கண்டதில்லை. சொற்களால் விவரிக்க முடியாத வலி. ஏழு மலை, ஏழு கடல் தாண்டியும் சேருமிடம் காணாது சோர்ந்தே போனான். செல்லும் வழியெல்லாம் உயிர்களே இல்லாத வெற்றிடங்கள் அவனை வரவேற்றுக் கொண்டிருந்தன. ஆனால் உடன் வந்த நரகத்தின் சீடர்களில் ஒருவனான தீக்குண்டம் சிறிதளவும் சோர்வின்றி தெம்பாகவே இருந்தான்.
"ஏம்பா, தீக்குண்டம் அதான் ஏழு மலை, ஏழு கடல் தாண்டிட்டோமே இப்பவாவது நரகம் வரைக்கும் போக ஏதாவது வண்டி வசதி ஏற்பாடு பண்ணிக் கொடுக்கக்கூடாதா?" என ஏக்கத்தோடு வினவினான்.
"வாழ்ந்த போது செஞ்ச பாவத்துக்கான முதல்படி தான் இது. இன்னும் 74மைல் தான் பேசாம நடந்து வா" என வாசகத்தை ஏளனப் பார்வையோடு பார்த்தான்.
இனி திரும்ப முடியாத தூரத்திற்கு வந்துவிட்டதையும், அடைய வேண்டிய இடம் வரை நடந்தே தான் சேர வேண்டும் என்பதையும் தீக்குண்டம் பேச்சின் பின்குறிப்பாக வாசகம் அறிந்து கொண்டான்.
பெருத்த பேரண்டத்தில் உயிர்களின் குரல்களாக அவ்விருவரின் உரையாடல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

வாசகம் : பூமிக்கும், நாம போற இடத்துக்கும் என்ன வித்தியாசம்?

தீக்குண்டம் : எல்லாமே பூமிக்குள்ள தான் இருக்கு. முழு உயிரோடு உடலும் ஒன்னா இருந்த இதுநாள் வரைக்கும் நீயிருந்த இடமும், உடலோடு சிறுஉயிருமாக இனிமேல் நீயிருக்க போற இடமும் தான் உன்னோட முழுமையான வாழ்க்கை வரலாறு.

வாசகம் : அய்யோ... எனக்கு எதுவுமே புரியல. ஒரு மனுஷன் செத்த பின்னாடி என்ன தான் நடக்குது?

தீக்குண்டம் : பிறந்த பின்பு இறந்து போகிற எல்லா உயிருக்குமே எஞ்சிய இன்னொரு வாழ்க்கையும் இருக்கு. அதாவது செத்த பின்னாடி உன்ன எரிச்சாலும் சரி, புதைச்சாலும் சரி உன்னோட வெற்றுடல் இங்க வந்திடும். வெற்றுடல் என்பது என்னன்னா? மூளை, இதயம், இரத்தம் மத்த உடலுக்குள் இருக்குற எந்த உறுப்புமே இருக்காது. வெற்றுடல்ல, நீ நடக்கலாம், பேசலாம், இன்ப, துன்பங்களை அனுபவிக்கலாம் அவ்வளவு தான். பசியெடுக்காது, தாகமெடுக்காது, அழமுடியாது, கனவு காண முடியாது, காதலிக்க முடியாது, படிக்க எழுத முடியாது இப்படி ஏராளமா இருக்கு.

வாசகம் : சரி, இப்படி வெற்றுடலோடு எத்தன நாளைக்கு?

தீக்குண்டம் : இறந்த பின்னாடி உன்னோட இந்த வெற்றுடலோட நீ வாழ்ந்த காலத்துல செலவிட்ட சக்த்தியோட தீவிரத்த பொறுத்து உன்னோட உயிர் மீறும். அந்த உயிர் இந்த வெற்றுடலோடு இங்க சேரும். அதுக்கப்புறம் நரகத்திலும், சொர்கத்திலும் உன்னோட எஞ்சிய வாழ்க்கையை கழித்து விட்டு காற்றோடு காற்றாக கரைந்துவிட வேண்டியது தான்.

வாசகம் : சொர்க்கம், நரகம்னா என்ன? என்ன வழிநடத்தும் நீயெல்லாம் யாரு? இந்த விதிமுறைகளையெல்லாம் ஏற்படுத்தி செயல்படுத்தும் காரணகர்த்தா யார்?

தீக்குண்டம் : உன்னால எத்தன உயிர்களுக்கு நன்மை தரமுடிஞ்சது? தீங்கு தரமுடிஞ்சது? என்ற நடவடிக்கைகளை வெச்சு தான் உனக்கு சொர்க்க காலமும், நரக காலமும் தீர்மானிக்கப்படுது. சொர்கத்துல உன்னால பலனடைந்த உயிர்கள் எல்லாம் உனக்கு சேவை செய்து தங்களோட எஞ்சிய வாழ்க்கையை கழிக்கும். நரகத்துல உன்னால பாதிக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் உனக்கு தண்டனை கொடுத்து தங்களோட எஞ்சிய வாழ்க்கையை கழிக்கும். ஒவ்வொரு உயிரும் இறந்த பின்பு தனக்கு கிட்டும் எஞ்சிய வாழ்க்கையை இரண்டு பகுதிகளாக வாழ வகுக்கப்பட்துள்ளது. முதலில் எல்லா உயிரும் தான் செய்த பாவத்தின் அளவைப் பொறுத்து நரகத்தில் தண்டனை பெற வேண்டும்.
இரண்டாவது தான் செய்த நற்செயலின் அளவைப் பொறுத்து சொர்கத்தில் பலனை பெற வேண்டும். இறுதியில் தனித்திருந்து மீதமிருக்கும் உயிரும், உடலும் காற்றோடு காற்றாக கரைந்து விடும்.
நான் யார்? என் தலைவன் யார்? என்று கேட்கும் உனக்கு சில கேள்விகள்
நீ வசிக்கும் பூமியின் சுழற்சிக்கு யார் காரணம்? உனக்கு விதிக்கப்பட்ட இறப்பு, பிறப்பு இதன் காரணகர்த்தா யார்?

வாசகம் : எல்லாமே இயற்கையால தான்.

தீக்குண்டம் : அந்த இயற்கை தான் எங்கள இயந்திரங்களாக இங்க இயங்க வெச்சிட்டிருக்கு.

வாசகம் : சற்று யோசித்து விட்டு.... அது சரி தீக்குண்டம். உங்க நரகத்தோட தலைவன் பேரென்ன?

தீக்குண்டம் : முன்ன பின்லேடன்னு பேர் வெச்சிட்டிருந்தாரு. இப்ப பின்லேடன் நரகத்துக்கு வந்துட்டு பேர் குழப்பம் ஆனதால கொஞ்ச நாளைக்கு முன்ன தான் மஹிந்தா ராஜபக்ஷேனு பேர் மாத்திக்கிட்டாரு.

திடுக்கென்று படுக்கையில் இருந்து விழித்த வாசகம் கடிகாரத்தைப் பார்த்தான். அதிகாலை 5மணி ஆகியிருந்தது. மீண்டும் தீக்குண்டத்தோடு உரையாடும் நோக்கில் படுக்கையில் சாய்ந்தான்.