Thursday, July 14, 2011
மந்திரக்காரன்...
"சுஜாதா" இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை பாரதிக்குப் பிறகு என்னை பாதித்த எழுத்தாளர்களில் முதன்மையானவர் அமரர் சுஜாதா. அவரை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறந்ததைப் போலவே உணர்கிறேன். அந்த எழுத்து நடையும், அதன் வசிகரமும் என் மனதிற்குள் எப்போதும் பெய்யும் மழைச்சாரல் தான். நாம் ஒரு நாவலுக்கோ, சிறுகதைக்கோ அல்லது ஒரு கவிதைக்கோ கூட அடிமையாகி விடக்கூடிய அபாயம் இருக்கிறது. அது போன்ற படைப்புகளும், படைப்பாளிகளும் நம் எண்ண அலைகளில் நிரந்தரமாக தங்கி விடுவார்கள். அதற்கான சாத்தியங்கள் நாவலுக்கும், சிறுகதைக்கும், கவிதைக்கும் உண்டு. மாறாக சுஜாதா தனது 'சுஜாதா பதில்கள்" எனும் கேள்வி-பதில் தொகுதியில் அதற்கான சாத்தியங்களை நமக்கு தருகிறார். நான் வாசித்த பல கேள்வி-பதில் தொகுதிகளில் கிடைக்காத பரவசம் இந்தத் தொகுதியில் கிடைத்தது. வாசிப்பனுக்கு அதிகபட்ச அனுபவத்தையும், வாசிப்பின் சுகத்தையும் தன் மாய வார்த்தைகளால் நமக்கு தருகிறார்.
உயிர்மை பதிப்பக வெளியீட்டில் மனுஷ்ய புத்திரனின் இதயம் கனக்கும் பதிப்புரையோடு தொடங்கும் தொகுதியில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மீகம், பொழுதுபோக்கு என அத்தனை துறைகளிலும் அவர் பெற்றிருக்கும் அறிவுஞானம் தனிவொரு மனிதனுக்கு சத்தியமாக சாத்தியமில்லை. இவர் அளித்திருக்கும் பதில்கள் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அந்தக் கேள்விக்கான மாற்று பதிலை முன்வைக்க முடியாது. இனி.............................
பதிப்புரை
-----------------------
சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதிகளில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும், கூர்மையும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. மருத்துவமனையில் தனது இறுதி தினங்களில் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த சந்தர்பத்தில் கூட தன் பதில்களை அனுப்பி வைத்தார். எந்த நிலையிலும் எழுத்தை மட்டுமே பற்றி நின்ற நம்முடைய காலத்தின் மாபெரும் கலைஞனின் ஆளுமையின் இயல்பு அது.
அவர் எழுதிய புத்தகத்தை அவருடைய முன்னுரையில்லாமல் கொண்டு வருவதை விட இதயத்தைக் கனக்கச் செய்வது வேறெதுவும் இல்லை. தன்னுடைய நூல்களை பதிப்பிப்பது தொடர்பாக எத்தனையோ இனிய நினைவுகளை தந்த சுஜாதா தான் எனக்கு இத்தகைய சந்தர்ப்பத்தையும் கொடுத்திருக்கிறார்.
மனுஷ்ய புத்திரன்
28-12-2009
உங்கள் எழுத்துக்களுக்கு ஆதர்சமாய் யாரைச் சொல்லலாம்?
எனக்கு முன் எழுதிய அனைவரையும்!
என் செல்போன் கேமரா 3.3 மெகா பிக்ஸெல்; என் கண்கள் எத்தனை மெகா பிக்ஸெல்?
மெகா என்பது பத்து லட்சம்; பிக்ஸெல் என்பது "பிக்சர் எலிமெண்ட்" என்பதின் சுருக்கம். இந்த பிக்ஸெல் ஸ்கேலை வைத்து கண்னை அளந்து 81 மெகா பிக்ஸெல்
என்று கணக்கு போட்டிருக்கிறார்கள். ஆனால், டிஜிட்டல் கேமரா போன்ற சாதனங்களோடு ஒப்பிடும் போது கண்களுக்கு பரந்த பகுதிகளை பார்க்கும் துல்லியம்
இல்லை. கேமரா வியூ ஃபைண்டரில் பார்ப்பதை விட கண்கள் அதிக பரப்பை பார்க்கிற மாதிரி தெரியும். அது, மூளை செய்கிற மாயா ஜாலம்.
சந்தேகமிருந்தால் சத்யாவின் இந்தப் பதிவில் (நானே போட்டுக்கிட்டது) ஒரு ஏரியாவை நோக்கி சுண்டுவிரலைக் காட்டி, விரலில் உங்கள் கண்களைப் பதித்தபடி ஒரு வரியாவது படிக்க முயன்று பாருங்கள்....
அம்பேல்!
"ஜெனரேஷன் கேப்" என்றால் என்னங்க?
ஒரு வயதானவரும், இளைஞனும் பஸ் பிடிக்க ஓடுவதைக் கவனியுங்கள். புரியும்.
இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் என்ன ஆகிறது?
போர்டு மெம்பர்கள் லண்டன் போய் ஷாப்பிங் செய்வதற்குப் பயன்படுகிறது. எப்போதாவது கிரிக்கெட் எனும் விளையாட்டின் மேம்பாட்டுக்குக் கொஞ்சம் தரப்படுகிறது.
பள்ளிகளில் செக்ஸ் கல்வி நடத்தும் பக்குவத்தை நாம் அடைந்து விட்டோமா?
சில பணக்காரப் பள்ளிகளில், அடைந்திருக்கிறோம். மற்றப் பள்ளிகளுக்கு தமிழ்த் திரைப்படங்கள் இருக்கவே இருக்கின்றன.
நிலா, வானம், அருவி, தென்றல், கடல்- இவை இடம்பெறாத காதல் கவிதை படித்ததுண்டா?
உண்டே... பாக்கியம் சங்கரின் இந்தக் கவிதையைப் படியுங்கள்.
பேருந்துப் பயணத்தின்
கசங்கிய வியர்வையுடன்
உன் மல்லிகை வாசம்
சசியை மறக்கடித்தது
உன்னில் மூழ்குகிறேன்
நசுங்கிய டப்பாவைப் போல
கிடக்கிறது காதலெனும் சொல்.
இன்னமும் தங்கள் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த திரைப்படம் எது? ஏன்?
சத்யஜித் ராயின் பதேர்பாஞ்சாலி தான். வினோத மொழியில் ஆங்கில சப்டைட்டில்களுடன் ஓடிக் கொண்டிருந்தது. எழுந்து வந்துவிட இருந்தேன். ஒரு நிமிஷத்தில் என்னைக் கட்டிப் போட்டு உட்கார வைத்த மறக்க முடியாத சித்திரம்.
கடவுள், அறிவியல் - வித்தியாசப்படுத்துங்கள்...
கடவுள், அறிவியலின் கடைசிக் கேள்வியில் ஒளிந்து கொண்டிருக்கிறார்.
எந்த வட்டாரத்து பேச்சுத் தமிழ் தங்களைக் கவர்ந்திருக்கிறது?
திருநெல்வேலித் தமிழ் தான். "என்னடே" என்பதே மரியாதைச் சொல். புலியை அங்க வச்சுப் பார்த்தேன்" போன்ற வசிகரமான பிரயோகங்கள். எளிய ஜனங்களின் எளிய மனங்களின் வெளிப்பாடு.
நீங்கள் சமிபத்தில் ரசித்த சைவ ஜோக்?
"குற்றாலத்தில் குளிக்கச் சென்ற போது என்ன ஆச்சு தெரியுமோ? வேஷ்டி அவிழ்ந்து விட்டது."
"அய்யய்யோ! அப்புறம்?"
"நல்லவேளை, உள்ள டிராயர் போட்டிருந்தேன்"- சைவமாக ஜோக் சொல்ல வேண்டுமென்றால் இந்த மாதிரிதான் மொக்கையாக இருக்கும்.
தமிழகத்தின் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க நீங்கள் கூறும் யோசனைகள் என்ன?
1. காற்றையும், கடலையும் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது.
2. மின்சாரம் கடத்துவதில் இழப்பைக் (Transmission loss) குறைப்பது.
3. Captive power சொந்த செலவில் சிறிய மின்சார உற்பத்தியை ஆதரிப்பது.
4. அறையில் யாரும் இல்லை என்றால் தானாக மின்சாரம் அணைவது.
Subscribe to:
Post Comments (Atom)
செம போஸ்ட். பை சுஜாதா ரசிகன்
ReplyDelete