Friday, December 31, 2010

முதல் எழுத்து

சிறு வயதில் எங்கள் குடும்பத்தினருடன் ஏதாவது வெளியூரில் நடக்கும் பொருட்காட்சிக்கோ, திருவிழாக்களுக்கோ செல்லும் போது குடும்ப நபர்களில் யாராவது ஒருவர் நான் வழிதவறி விடுவேன் என்கிற காரணத்தால் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டே இருப்பார்கள். அப்படி இருந்தும் சில நேரங்களில் அந்த சுவாரஸ்யமான கூட்ட நெரிசலில் காணாமல் போய் விடுவேன். இப்போதும் அப்படித்தான் விதவிதமான எழுத்துக்களில் என்னை கரைத்துக் கொண்டு காணாமல் போவதற்கே இந்த வலைப்பதிவு.
வார்த்தைகளை வகைப்படுத்தும் போது மட்டுமே புனைவுகளை தேடி நம் கற்பனையின் எல்லாக் கதவுகளும் திறக்கின்றன. உணர்வுகள் மேலோங்கி இருக்கும் தருணங்களில் எழுத்தின் முடிவுறா பயணத்தில் என் மனம் சிக்கிக் கொள்கிறது.
இணையதள எழுத்திற்கு அடிப்படை, சுருக்கம். பல பக்கங்கள் எழுத நினைக்கும் எண்ணங்களை சில பத்திகளில் எழுத வேண்டும்.இந்தப் பதிவேற்றங்கள் ஒரு எழுத்தாளளின் எழுத்து அல்ல, வாழ்வை அதன் அந்தரங்கத்தை உற்று நோக்கும் ஒரு பார்வையாளளின் குறிப்பு மட்டுமே. என் எழுத்து உங்கள் நெருங்கிய நண்பனை போல இருக்க வேண்டும் என்பதே என் மேலான பிரியம்.
இன்று எனக்கு பிடித்த இரண்டு கவிதையோடு என் இணைய பயணத்தை தொடர்கின்றேன்.
வெகுஜனப் பத்திரிக்கையிலும் நவின இலக்கியத்தின் முயற்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு கீழே உள்ள கவிதைகளை குறிப்பிடலாம்.

சேமிப்பு
.............
கிரை விற்ற கிழவியிடம்
பேரம் பேசி சேமித்தேன்
ஒரு ரூபாய் பணமும்
ஒரு மூட்டை பாவமும்!
-சபிதா இப்ராஹிம்
ஆ.விகடன்
24-11-10
---------------------------------------------------------------
துண்டுப் பிரசுரம்
...........................
சாலை ஓரமாக நின்றிருக்கும்
மரமொன்று
அவ்வழி செல்வோர் தலையில்
துண்டு பிரசுரங்களாய் தன்
இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தது
வீட்டுக்கொரு மரம் வளர்போம் என
அதில் எழுதியிருப்பதாய்
உணர்கிறேன்!
-கட்டளை ஜெயா
ஆ.விகடன்
8-02-2010.

அடுத்த பதிவில் சந்திப்போம்......

1 comment: