Thursday, June 2, 2011

கனவுகளின் வரைபடம்

ஒரு வழியாக ஒரளவிற்கு என் அறையின் கலை வேலைப்பாடுகள் முடிவடைந்து விட்டன. ஒரு பறவை எப்படி தனக்கென பாதுகாப்பான கூட்டை ஏற்படுத்திக் கொண்டு உயிர் வாழுமோ, அப்படித்தான் நானும் என் அறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அங்கு நான் மட்டுமல்ல, என் கனவுகளும், ஆசைகளும் உடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. யாவருக்கும் பிடித்த முதன்மையான நண்பன் அவர்களது அறையாகத் தானிருக்கும். காரணம், அங்கு தான் நாம் தினம் தினம் வெளிப்படுத்திடாத நம் உணர்வுகள் பாதுகாப்பாய் தேங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொருவரின் அறையும் நம் விருப்பங்களை பிரதிபலன் பாராது நிறைவேற்றிக் கொடுக்க வல்லது. எனது அறையும் எனக்கு அப்படித்தான். தெய்வீக சந்நிதியிலும் கிடைக்காத பல பரவசமிக்க அனுபவங்களும், புதிய புதிய எண்ணங்களும் அது தினம் தினம் தந்தபடியே இருக்கின்றன.
நகர்புறங்களில் வசிப்பவர்கள் இந்த வேலைப்பாடுகளை சுலபமாக பெற முடியும். ஆனால் என்னைப் போன்று ஏதேனும் ஒரு ஒன்றியத்தில் ஒன்றிக்
கொண்டிருப்பவர்களுக்கு சாத்தியப்படுவது கடினம். இங்குள்ள என் ஓவிய நண்பன் சிவா என்பவரை மட்டும் வைத்துக் கொண்டு பதினைந்து நாட்களில் முடிக்கப்பட்ட வேலை இது. எனது கூடு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்று பார்த்து விட்டு கருத்துக்களை பதிவிடுங்கள் அல்லது மெயிலுங்கள்.










நானும், எனது புத்தகங்களும்...

Monday, February 7, 2011

யுத்தம் செய் - நூற்றாண்டின் முதல் மழை


பொதுவாக சினிமா என்பது காட்சிகளால் நிரப்பப்படுவது. பார்வையாளளின் மனதில் தேங்கும் உள்ளுணர்வுகளை ஒரு படைப்பாளி தன் படைப்பின் மூலம்
வெளிப்படுத்தி விட்டால் அது சிறந்த சினிமாவாக அங்கிகரிக்கப்படுகிறது. தற்போது நிலவி வரும் தமிழ் சினிமா படைப்புகள் அத்தகைய மரபில் கவனம் கொள்ளாமல் நாயகனுக்கு கதை, குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள் என மீண்டு எழ முடியாத சூழலில் சிக்கிக் கொண்டுள்ளன. வருடத்தில் ஒன்றிரண்டு படங்கள் இந்த நியதியில் இருந்து விடுபட்டு படைப்பாளியின் தீவிரமான அணுகுமுறையால் இந்திய அளவில் கவனத்தை பெறுகின்றன. அந்த வரிசையில் சமிபத்தில் வெளியான "யுத்தம் செய்" படத்தை குறிப்பிடலாம். பழிக்குப் பழி அரதப் பழசான கதைக் கரு தான் இந்த படத்தின் கருவும். ஆனால் இயல்பான கதை மாந்தர்கள், நிஜத்திற்கு பொருத்தமான நடிப்பு, கதையோடு பேசும் வசனங்கள், நிதானமான தெள்ளிய திரைக்கதையின் மூலம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை லாவகமாக மிகவும் சாமர்த்தியமாக கையாண்டு தன் இயக்கத்தின் இருப்பை ஆரவாரமில்லாமல் நிருபித்துள்ளார் மிஷ்கின்.
சென்னையின் அந்த குறிப்பிட்ட சரகத்தில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் தொடர்ந்து வெட்டப்பட்ட மனிதக் கைகள் அட்டைப் பெட்டியில் போடப்பட்டிருக்க,
கை சுத்தம் (லஞ்சம் வாங்காத) காரணமாக காவல் துறையிலிருந்து புலனாய்வுத் துறைக்கு விருப்ப பணி மாற்றலாகி வரும் ஜே.கே. எனும் சிபிசிஐடி ஆபிசர் சேரனிடம் இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது. வெட்டப்பட்ட கைகளை வைத்துக் கொண்டு விசாரணையை ஆரம்பிக்க, ஏற்கனவே காணாமல் போன தன் தங்கையின் கேஸை மீண்டும் ஓப்பன் செய்து விசாரிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இறுதியில் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள்? கொலை செய்யப்படும் ஆட்களின்
பிண்ணனி என மிக விவரமாக, குழப்பமில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தங்கை தொலைந்த சோகமும், விசாரணை நேரங்களில் வெளிப்படும் இறுக்க முகமும் என சேரனின் திறமைக்கு இத்திரைப்படம் ஒரு மைல்கல். பிணவறையில் முகத்தை கோட் போட்டு மூடிக் கொண்டு படுத்திருக்கும் டாக்டர் ஜூடாஸின் அறிமுகக் காட்சிகள் தமிழ் சினிமா உலகிற்கு புதிது. சேரனின் உதவியாளராய் வரும் தீப்திஷா, டி.எஸ்.பி. நரேன், அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் திரிசங்கு, ஒய்.ஜி.மகேந்திரன், அவர் மனைவி லஷ்மி, அவர்கள் பையன் என ஒவ்வொரு கதாப்பாத்திரமும் செதுக்கிய சிற்பங்களாக திரையில் வெளிப்படுகின்றன. சவக்கிடங்கு காட்சிகளும், உறைந்த நிர்வாண
பிணங்களும் இவ்வளவு நுணுக்கமாக எந்தத் திரைப்படங்களிலும் பதிவு செய்யப் படவில்லை. படத்தின் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு காட்சியும் மிகத் தீவிரமான பரிசீலனைக்கும், திட்டமிடலுக்கும் பிறகே படமாக்கப்பட்டிருப்பதை படம் பார்க்கும் போது உணர முடிகிறது. வழக்கமான திரில்லர் படங்களில் படபடவென ஓடும் திரைக்கதையும், பார்வையாளனின் இமைகள் வலிக்க அலைபாயும் காமிரா கோணங்களும், குலைநடுங்க அதிர வைக்கும் இசையும், அலறல் ஒலிகளும் தான் பிரதானமாக இருக்கும். மாறாக இந்தப் படத்தில் காமிரா மெல்ல, நிதானித்து நம் ஆர்வத்தை அதிகமாக்கி கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. பலமான திரைக்கதைக்கு பக்கபலமாய் இருப்பது எடிட்டர் கெகின். பல இடங்களில் அந்த சூழ்நிலையின் சப்தங்களையே பின்னணி இசையாய் ஒலிக்க விட்டிருப்பதும், மௌனமாக நகரும் உன்னத காட்சிகளின் மூலமும் தனது தனித்தன்மையை இசையமைப்பாளர் கே சப்தம் போட்டு உணர்த்துகிறார். "கன்னித்தீவு பெண்ணா" பாடல் நதியில் துள்ளி விளையாடும் மீனைப் போல்
அமைதியான கதைக்கு ஆர்பாட்டமான பொழுதுபோக்கான நிமிடங்களாக அமைகிறது. புலனாய்வு இலாக்காவின் நிஜ விசாரனை எப்படி இருக்குமோ அப்படியே துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதது அதன் மையக்கரு தான். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை படமாக்கப்பட்ட காட்சி அமைப்புகள் வன்முறையை பிரதானப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒய்.ஜி.மகேந்திரன், மனைவி லஷ்மி, அவர்கள் பையன் என எல்லோரும் மொட்டை போட்டுக் கொண்டு பௌத்த துறவிகளை போல் எல்லாவற்றையும் துறந்து விட்டு கொலை வெறியோடு புறப்படுவது அதிகபட்ச வன்முறையை தூண்டுவதாகப் படுகிறது. டாக்டர் ஜூடாஸின் மரண வாக்குமூலமாக அமையும் அவரின் இறுதி வசனங்கள் வெளிப்படையான வன்முறைக்கு ஒரு வேண்டுகோளாக படமாக்கப்பட்டிருக்கிறது. இறுதிக் காட்சிகளில் சேரன் மௌனம் காப்பதும் அதீத வன்முறையின் குறியீடாகவே படுகிறது.
"யுத்தம் செய்" மிகப் பெரிய வெற்றிப் படமாக இடம் பிடிக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் வளரும் கலைஞர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம் என்பதில் சந்தேகமில்லை. அசலான நாம் ஒதுக்கி முடியாத மிகச் சிறந்த திரைப்படமாக இதனை என் வலைப்பதிவின் மூலம் உறுதி செய்கிறேன்....

Thursday, February 3, 2011

"ஆட்டிசம்" என்றொரு ஆபத்து...


தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் பழகும் திறன் குறைவாக இருப்பதும், அதிகமான கவனக் குறைவு போன்ற குறைபாடுகளை "ஆட்டிசம்" (AUTISM)என்கின்றனர்.
பெரும்பாலும் இந்த நோய் நான்கு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. பிறந்ததிலிருந்து பள்ளி செல்லும் வரை அம்மாவின் பராமரிப்பிலேயே வளரும் குழந்தைகளுக்கு நவின உலகின் மனிதர்களும், அவர்களைச் சார்ந்த பேரியக்கங்களும் சற்று அதிர்ச்சியைத் தரும். அவர்களுக்கு இந்த அவசரகதி உலகம் புரிபடாமல் அம்மாவின் உலகிலேயே சார்ந்து வாழும் எண்ணம் வலுக்கிறது. அதில் சில குழந்தைகள் தடுமாறி ஆட்டிசத்திற்கு ஆளாகின்றன. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் உடல் மெலிந்து , மனம் சிதறுண்டு உயிருக்கே ஆபத்தான நிலைக்கு சென்று விடும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டிசத்திற்கு ஒரு "ஸ்டெல்த் வைரஸ்" இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் இதயத்திலிருந்து வயிற்றுக்கு வந்து மூளையை பாதிக்கிறதாம்.
சமிபத்தில் கலிபோர்னியாவில் சுமார் 5லட்சம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு "ஆட்டிசம்" பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முதல் குழந்தை பிறந்து, குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிச பாதிப்பு அதிகம் இருப்பதாக நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர் பீட்டர் பியர்மான் கூறுகிறார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வகை குழந்தைகளுக்காக "தோஸ்த்" என்ற காப்பகம் சென்னை கெல்லிஸில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் காப்பகம் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறதா??? தெரியவில்லை.

--------------------------------------------------------------------------------------------


சமீபத்தில் நான் ரசித்த குறுஞ்செய்தி :
கருணாநிதி அந்தப் பள்ளிக்கு பார்வையிடுவதற்காக செல்கிறார்.
முதல்வர் :
மாணவர்களே, என்னிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்.
லிட்டில் கபீர்:
ஐயா, எனக்கு உங்களிடம் கேட்க இரண்டு கேள்விகள் இருக்கிறது.
1) ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களுக்கான பங்கு எவ்வளவு?
2) அந்தப் பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது?
முதல்வர் :
புத்திசாலி மாணவன். (சற்று யோசித்து விட்டு)
நாம் சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்போம்.
இடைவேளைக்குப் பின்பு...
முதல்வர் : சரி மாணவர்களே, நாம் எந்த இடத்தில் நிறுத்தினோம்?
ஆங்... மாணவர்களே என்னிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்.
லிட்டில் ஜானி:
ஐயா, எனக்கு உங்களிடம் கேட்க மூன்று கேள்விகள் இருக்கிறது.
1) ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களுக்கான பங்கு எவ்வளவு?
2) அந்தப் பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது?
3) எங்கே என் நண்பன் கபீர்?