Sunday, March 4, 2018

 
                    விடுமுறை உலகம்


வாழ்தலின் உண்மையான அர்த்தத்தை
விடுமுறை தினங்களில் சிறுவர்கள் இந்த
உலகிற்கே உணர்த்துகிறார்கள்.
அன்றைய தினங்களில் சுதந்திர ஒளிபடரும் அவர்கள் முகங்கள்
கடவுளின் உயிர்ப்பை சமன்படுத்துகின்றன.
மகிழ்ச்சி, தனித்திறமை, ஒற்றுமை, சகோதரத்துவம், விட்டுக்கொடுத்தல் என பெரியவர்களால் பணத்தால் வாங்க முடியாத, கற்றுக் கொடுக்க முடியாததை
இதுபோன்ற விடுமுறைகளில் தான் சிறுவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

Saturday, March 3, 2018


                    ஏழ்மையின் ருசி


ஏழ்மையின் அழகியலே எளிமை தான்.
பல ஏழைக்குடும்பங்கள் சிறிய வீட்டில்
கொஞ்சமாய், அழகாய், ஆனந்தமாய், ஆரோக்யமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்வியலின் ஆணிவேராக இருப்பவை ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும் தான்.
அவர்கள் எதிர்காலம் என்பதே அடுத்தவேளை பசிக்கும், இரவு உறக்கத்திற்குமான தேடலிலேயே வாழ்வு மொத்தமும் கரைந்து விடுகிறது.
ஆதலால் தான் கடவுளின் ஆன்மாவாக ஏழைகள் இருக்கிறார்கள்.

Thursday, March 1, 2018


                        நகரம் என்பது


நகரம் நம் கவலைகளையும், அழுக்குகளையும், பாசாங்கையும்,
சுமக்கும் மெளனத்தின் பிம்பம்.
ஒவ்வொரு நகரத்திற்கும் இயல்பிலேயே
தனித்துவமான ஒரு வாசனை இருக்கிறது.
நம் இதயத்துடிப்பைப் போல அது எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது.
அனுபவத்தின் அழியா சாட்சியாக,
நிராசைகளின் நீரூற்றாக,
துரோகத்தின் தூணாக,
வாழ்தலின் வழிகாட்டியாக,
வீழ்தலின் விஷ்வரூபமாக
என நகரம் நம் ஆயுளுக்குமான ஆசான்.