Wednesday, February 28, 2018

 
               மனிதம் தேடும் கடவுள்


கைகள் நீட்டியவுடன் கருணையை
யார் பரிசளிக்கிறார்களோ?!
பார்வை பட்டவுடன் அன்பை அள்ளி
யார் தருகிறார்களோ?!
மனதுக்குள் புகுந்து மனிதத்தை
யார் விதைக்கிறார்களோ?!
கண்ணிர் சிந்தும் கண்களை கண்டதும்
யார் துடைக்கிறார்களோ?!
நோயின் தருணங்களில் நேசத்தை
யார் அளிக்கிறார்களோ?!
அவர்களே நமக்கான
வாழ்வின் நீட்சியும்,
கடவுளின் இன்றைய பிம்பங்களும்.

Tuesday, February 27, 2018


                    உதிரும் உயிர்கள்


நாம் யார் எதற்காக பிறந்தோம் என
நினைக்கும் வயது வருவதற்குள்ளாகவே
கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள்.
உடலை துளைக்கும் தோட்டா அளவிற்கு தான் இந்த பூமியில் சிரியா எனும் இப்படுகொலைகள் நிகழும் நகரமாய் ஒரு நரகம் இருக்கிறது.
கொலை செய்ய பணிக்கப்படுகிறவனும்,
கொலை உண்டு இறப்பவனும் என எல்லோரும் பசியோடும், பயத்தோடும் தன் உறவுகளையும், எதிர்கால வாழ்வையும் தேடி ஏழு வருடங்களாக அலைகிறார்கள்.
மனிதம், அன்பு, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் என யாவும் இதுபோன்ற தருணங்களில் நம்முன்னே கேள்விக்குறிகளாய் இருக்கின்றன.

Monday, February 26, 2018


               பிரியங்களில் வாழ்தல்


பூமியில் இருக்கும் சொர்க்கமாக இதுபோன்று இருக்கும் எவ்விடத்தையும் யோசிக்காமல் குறிப்பிடுவேன்.
வாசிப்பும், குழந்தைகளோடு பொழுதைக் கழிப்பதும் நாவிற்கு அடியில் இருக்கும் பனங்கற்கண்டைப் போல எப்போதும் தித்திக்கும்.
உண்மையில் இந்த உலகம் முழுதும் எழுத்துக்களாலும், எண்களாலுமே
நிரம்பி வழிகிறது.
உயிரை அர்த்தமுள்ள அனுபவமாக, கவிதையாக, உணர்வாக, மாற்றவல்லது
புத்தகம் சுமக்கும் எழுத்துக்கள் மட்டுமே.