Saturday, June 30, 2018


                    இவ்வாழ்க்கை...



 ஓவியன் வானத்தை தன் நினைவின்
வர்ணத்தால் வரைகிறான்,
அதை இது நிஜமல்ல, பொய் என்கிறீர்கள்.
கவிஞன் கவிதையை தன் கற்பனையின்
கலையால் காவியமாக்குகிறான்,
அதை இது நிஜமல்ல, பொய் என்கிறீர்கள்.
நீங்கள் விரும்பாத, பழகாத, பிடிக்காத, பிரியாத, வேண்டாத எல்லாவற்றையும்
இது நிஜமல்ல, பொய் என்கிறீர்கள்
போலியான இந்த வாழ்வை
வாழ்ந்து கொண்டு.......

Friday, June 29, 2018


                இப்படிக்கு நகரம்....


இன்றைய நகரம் ஆசைகளாலும், அபத்தங்களாலும், பொறாமையாலும், ஏமாற்றங்களாலும், திறமைகளாலும், போட்டிகளாலும் அலங்கரிக்கப்பட்ட மிகவும் நெருக்கடியான தொழிற்சாலைக் கூடம்.
மனிதம், கருணை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை என ஒளிதீபங்கள் யாவும் நியான் விளக்குகள் வெளிச்சத்தில் எங்கோ முகவரியில்லாமல் தொலைந்து விட்டன. 😌😌😌

Thursday, June 28, 2018

   
                         இவ்வுலகம்....



வாழ்வில் நம்மை ஒரு தளத்திலிருந்து
அடுத்த தளத்திற்க்கோ,
அனுபவத்தின் ஒரு புள்ளியிலிருந்து
அடுத்த நகர்விற்கோ,
சட்டென மூடும் ஒரு வாசலிலிருந்து
திறக்கும் இன்னொரு வாசலிற்கோ
தோல்வியிலிருந்து வெற்றிக்கோ,
நம்பிக்கையிலிருந்து துரோகத்திற்கோ,
நம்மை இழுக்கும் அபூர்வ விசை தான்
இந்த உலகமும் அதிலிருக்கும் உயிர்களும்.

Wednesday, June 27, 2018


         அன்பின் பெருவெளியில்...


உலகம் முழுமைக்குமான
அன்பின், பரிதவிப்பின், கருணையின்,
நேசத்தின், ஆறுதலின் என எல்லாவற்றையும் ஒளிதீபமாய்
ஏந்திக் கொண்டிருக்கும் அந்தக் கண்கள்.
சக உயிர்களுக்கு நாம் கொடுக்கும் அன்பும், அரவணைப்பும் மட்டுமே அவர்கள் ஆயுளுக்குமான செல்வமும், அவர்கள் வாழ்ந்ததின் பயனும் ஆகும்.

Tuesday, June 26, 2018


                       மானுட வாழ்வு



யாரோ ஒருவருக்காக,
மிகவும் தன் சுயநலத்திற்காக,
சில தியாகங்களுக்காக,
நிறைய நேசத்திற்காக,
கொஞ்சம் பொறாமைக்காக,
ஆழமான வெறுப்பிற்காக,
அளவற்ற ஆசைக்காக,
வெடிக்கும் கோபத்திற்காக,
இன்னும் பலப்பலவாறு
வாழ்ந்து தான் கொண்டிருக்கிறோம்,
இந்த ஒற்றை வாழ்வை.

Monday, June 25, 2018


           தொழிலே மூச்சாய்....



எவ்வளவு வார்த்தைகள்,
எவ்வளவு மெனக்கெடல்கள்,
எவ்வளவு யோசனைகள்
ஒரு பத்தி கவிதைக்காக.
ஆனால் அவரோ....
அநிச்சையாய் அத்துணியில் அளவெடுக்கும் அவர் பார்வை,
கைகளும், கால்களும் ஒருசேர
இயங்க, அவருக்கு பின்னணியாய்
தையல் இயந்திரம் சுழல
பிழையேதுமில்லாமல் உருவாக்கி விடுகிறார், சட்டையெனும் ஒரு புதுக்கவிதையை.

Sunday, June 24, 2018


              செல்(லும்) வாழ்க்கை


கூவும் சேவல்களுக்கு பதிலாய்
அலாரமும், ஸ்னூஸும்.
தினக் காலண்டருக்கு பதிலாய்
ரிமைண்டரும், டு-டூ வும்.
வெஸ்டர்ன்னில் அமர்ந்து கொண்டு லாகின் செய்தால் போதும்,
உலகம் நம் கழிவறைக்குள்.
ஸ்டுடியோ கடை நடத்திக் கொண்டிருப்பவனோடும்
செல்ஃபியும், போர்ட்ராய்டும் சட்டென எடுத்துக் கொள்கிறோம்.
5இன்ச் டிஸ்பிளேவில் மெல்ல மெல்ல
மனிதமும், அவன் கலாச்சாரமும் புதைந்து கொண்டிருக்கிறது.

Saturday, June 23, 2018


                 வேண்டும் தனிமை


அடர்ந்த இருளும், அதில் மிதக்கும் நட்சத்திரங்களும், சட்டென வெட்டும் மின்னலும்,
ஊஞ்சலும், துணைக்கு நம் வளர்ப்பு பிராணியும் போதாதா???!!!!
நமக்கான தனிமையை கவித்துவமாக்கிட.
என்றைக்கும் நமக்கான நினைவுகளை மீட்டெடுக்கும் பிம்பமாகத்தான் இதுபோன்ற தருணங்கள் இருக்கின்றன.

Friday, June 22, 2018


                  வாழ்விற்கான ருசி


நமக்கான தின உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் ஒரு டம்ளருக்குள் நிரப்பித் தரும் அற்புதக்காரர்கள் நம் டீக்கடைக்காரர்கள்.
ஒவ்வொரு டீக்கடையும் அரசியல், சினிமா, கலகம், காதல் என மொத்தமும் கொட்டும் நீர்வீழ்ச்சி. மனதை சமாதானப்படுத்திக் கொள்ள பெண்களுக்கு எப்படி கோவில்களோ, பல ஆண்களுக்கு அப்படி டீக்கடை தான்.

Thursday, June 21, 2018


                     நம் பிரம்மாக்கள்


உண்மையில் விவசாயிகளின் உழைப்பால் மட்டுமே இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கிறது.
விவசாயமும், இயற்கை வளங்களும் மெல்ல அழிய அழிய மனித இனமும் மெல்ல மெல்ல அழியும் என்பதே நிதர்சன உண்மை. வாழ்வை நீட்டிக்கும் நம் மண்ணையும், விவசாயத்தையும் பாதுகாக்காமல் மருத்துவத்தையும், விஞ்ஞானத்தையும் தூக்கி வைத்து கொண்டாடிய நாள் முதலே நமக்கான துக்க நாட்கள் ஆரம்பமாகி விட்டன.

Tuesday, June 19, 2018


                       இரவின் துளி



எத்தனை புரட்சிகள்,
எத்தனை சித்தாந்தங்கள்,
எத்தனை சிந்தனைகள்,
எத்தனை கவிதைகள்,
எத்தனை காதல்கள்,
எத்தனை உறவுகள்,
எத்தனை பிரிவுகள்
என மனித உறவுகளின் எத்தனையோ சந்தர்பங்களில் நம் சென்ற தலைமுறையின் உன்னதமாக, கருவியாக இந்த விளக்குகள் தான் இருந்திருக்கின்றன.

Saturday, June 16, 2018


             புனிதத்தை நோக்கி....



மனிதத்தின், சகோதரத்துவத்தின், கட்டுப்பாட்டின் பெரும் குறியீடாகத்தான் இஸ்லாம் மதம் இருக்கிறது. அதன் சித்தாந்தங்களும், போதனைகளும் மற்ற மதங்களைப் போல உருவத்தோடு நின்று விடாமல் நாம் சுவாசிக்கும் காற்றோடு கலந்து இருக்கிறது. இஸ்லாமை நான் நேசிக்கும் முதற்காரணம் அஃது ஒன்றே. மதங்களைத் தாண்டி இந்நாளை கொண்டாடும் அன்பு உறவுகள் அனைவருக்கும்
ரமலான் வாழ்த்துக்கள். 🕌 🕌 ☪ 🕌 🕌

Wednesday, June 13, 2018


                  நமக்கான நகரம்....


எவ்வளவு உயரம் முடியுமோ அவ்வளவு உயரம் சென்று நாம் வாழும் நகரத்தை பாருங்கள்.
அழுக்குகளாலும், ஆசைகளாலும்,
நிரம்பி வழியும் காண்கிரிட் பாத்திரம்.
பணம் என்ற ஒற்றை தேவைக்காக
நாம் எவ்வளவு இழந்து நிற்கிறோம் என்பதை அந்த வினாடியில் தான் உணர முடிகிறது.

Tuesday, June 12, 2018

 
        கூட்டாஞ்சோறு....


எத்தனை நூற்றாண்டுகாலம் உலகம் எவ்வளவு மாறினாலும், ஓடினாலும், குடும்பத்துடன் சாப்பிடும் அந்த ஒற்றைப் பொழுது என்றைக்குமே தித்திப்பானதும், திகட்டாததுமாகும். நாம் என்றைக்கும் ஏங்கித் தவிக்கும் பசுமையான நினைவுகளும், அன்பும் அதுபோன்ற பொழுதுகளில் மட்டுமே கிடைக்கும்.

Monday, June 11, 2018


                          உயிர் துளிர்



உலகின் முதல் புனிதமும், ஆச்சரியமும் ஓர் உயிர் உருவாவது தான். ஒவ்வொரு உயிரும் பிறப்பெடுக்கும் போதும் இந்த பூமியில் ஒரு கடவுள் உருவாகிறார். துரோகம், வெறுப்பு, ஆற்றாமை, கவலை, ஏமாற்றம் என எந்த சந்தர்பத்திலும் ஒரு குழந்தையை தூக்கிப் பாருங்கள், உங்கள் மனம் அக்கணம் மிதப்பதை உணர்வீர்கள்.

Sunday, June 10, 2018


                    இருளை சுமப்பவள்



அழுக்கும், கருப்புமே நமக்கான வாழ்வும், வர்ணமும். அவர்களை மட்டுமே இந்த இயற்கையும், பூமியும் அள்ளி அணைத்துக் கொள்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின், இயலாதவர்களின், பரிதாபத்துக்குரியவர்களின் நிறமாக கருப்பு நிறம் மாறிவிட்டது வருத்தமே.

Saturday, June 9, 2018


        இதயஙகளை இணைப்பவன்



பூமிப்பந்தின், இயற்கையின் நெற்றிப்பொட்டு நெடுஞ்சாலைகள் தான்.
நம் நெடுந்தூர பயணம் நீங்கா அனுபவமாகவும், ஆனந்தமாகவும் அமைந்திட தரமான நெடுஞ்சாலைகள் தான் அவசியம். உலகின் உயிர் உணர்வுகள் மொத்தமும் நெடுஞ்சாலைகளில் தான் நதியாய் ஓடிக் கொண்டிருக்கின்றன.

Friday, June 8, 2018



                   நமக்கானவர்கள்.....



பாசத்தின், அன்பின், கலாச்சாரத்தின் என குடும்ப உறவுகளில் வாடாத பூக்களாக என்றைக்கும் இருப்பது
தாத்தா-பாட்டி-பேரன் உறவுமுறை தான்.
எதையும் எதிர்பார்க்காத எளிமையான தன்னியல்பில் மாறாத, சில நூற்றாண்டுகளின் கதைசொல்லிகள் அவர்களே. 

Thursday, June 7, 2018


                    மிதக்கும் தனிமை



தனிமை என்பதும் அதனைத் தொடர்ந்த பயணம் என்பதும் உயிர் உணர்வுகளில் கவித்துவமானது. நம் மனதின் ஓசையை, ஒலியை நாம் நமக்கான தனிமையில் மட்டுமே கேட்டுணர முடியும். தொலைத்த நிம்மதியை, இழந்த இன்பத்தை என எல்லாவற்றையும் மீட்டெடுக்கும் பெரும் சக்தியாக நமக்கு தனிமை இருக்கிறது.

Wednesday, June 6, 2018

வாசிப்பவன் வாழ்வு


பறவை போல பறத்தலின் சுதந்திரத்தை வாசிப்பு மட்டுமே நமக்கு பல சமயங்களில் கொடுக்கிறது. எறும்பைப் போல ஊர்ந்து கொண்டே செல்லும் அந்த வார்த்தைகளின் வழியே பலர் வாழ்வை நம் ஓர் வாழ்வில் வாழ முடியும். கசப்பான நினைவுகளில் இருந்தும், மீளாத் துயரங்களில் இருந்தும் வாசிப்பின் மூலம் நம் மனதை புதுப்பித்துக் கொள்ள முடியும்

Tuesday, June 5, 2018


                  என்றைக்குமானவள்...


           உலகின் முதல் நெருப்பு அல்லது வெளிச்சம் உருவான போது உள்ளே சென்றவள், இத்தனை நூற்றாண்டுகள் கடந்த பின்பும் தாய்மார்களின் உலகம் சமையற்கட்டிலேயே தான் சுழன்று கொண்டிருக்கிறது. உயிர் இயக்கத்திற்கான பசியைப் போக்கும் அவர்களே என்றைக்குமான கடவுள்கள்.

              சுதந்திரத்தின் பெருவழி



குழந்தைகளின் விடுமுறை தினங்கள் அழகானவை. பால்யத்தின் நினைவலைகளை நம் ஆயுளுக்கும் மனதில் ஓயாத அலைகளாக அத்தினங்கள் மட்டுமே மாற்றக்கூடியவை. வரும் வேலை நாட்களுக்கான சக்தியையும், அனுபவத்தையும் நமக்களிக்கும் நண்பனாகவும் விடுமுறை தினங்கள் இருக்கின்றன.