Wednesday, February 28, 2018

 
               மனிதம் தேடும் கடவுள்


கைகள் நீட்டியவுடன் கருணையை
யார் பரிசளிக்கிறார்களோ?!
பார்வை பட்டவுடன் அன்பை அள்ளி
யார் தருகிறார்களோ?!
மனதுக்குள் புகுந்து மனிதத்தை
யார் விதைக்கிறார்களோ?!
கண்ணிர் சிந்தும் கண்களை கண்டதும்
யார் துடைக்கிறார்களோ?!
நோயின் தருணங்களில் நேசத்தை
யார் அளிக்கிறார்களோ?!
அவர்களே நமக்கான
வாழ்வின் நீட்சியும்,
கடவுளின் இன்றைய பிம்பங்களும்.

Tuesday, February 27, 2018


                    உதிரும் உயிர்கள்


நாம் யார் எதற்காக பிறந்தோம் என
நினைக்கும் வயது வருவதற்குள்ளாகவே
கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள்.
உடலை துளைக்கும் தோட்டா அளவிற்கு தான் இந்த பூமியில் சிரியா எனும் இப்படுகொலைகள் நிகழும் நகரமாய் ஒரு நரகம் இருக்கிறது.
கொலை செய்ய பணிக்கப்படுகிறவனும்,
கொலை உண்டு இறப்பவனும் என எல்லோரும் பசியோடும், பயத்தோடும் தன் உறவுகளையும், எதிர்கால வாழ்வையும் தேடி ஏழு வருடங்களாக அலைகிறார்கள்.
மனிதம், அன்பு, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் என யாவும் இதுபோன்ற தருணங்களில் நம்முன்னே கேள்விக்குறிகளாய் இருக்கின்றன.

Monday, February 26, 2018


               பிரியங்களில் வாழ்தல்


பூமியில் இருக்கும் சொர்க்கமாக இதுபோன்று இருக்கும் எவ்விடத்தையும் யோசிக்காமல் குறிப்பிடுவேன்.
வாசிப்பும், குழந்தைகளோடு பொழுதைக் கழிப்பதும் நாவிற்கு அடியில் இருக்கும் பனங்கற்கண்டைப் போல எப்போதும் தித்திக்கும்.
உண்மையில் இந்த உலகம் முழுதும் எழுத்துக்களாலும், எண்களாலுமே
நிரம்பி வழிகிறது.
உயிரை அர்த்தமுள்ள அனுபவமாக, கவிதையாக, உணர்வாக, மாற்றவல்லது
புத்தகம் சுமக்கும் எழுத்துக்கள் மட்டுமே.

Sunday, February 25, 2018


                        உயிர் அதிசயம்


கைக்குழந்தைகளை குளிப்பாட்டுவது
தான் என்னைப் பொறுத்தவரை தாய்மையின், உலகின் முதல் அழகியல்.
இளமஞ்சள் நிற காலை வெயிலில்
இளஞ்சூடான தண்ணிரில் குளிக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயல்பின் பேரழகு.
உலகம் முழுமைக்குமான மனிதத்தின் பொதுப்பிம்பமாய் நம் குழந்தைப்பருவம்
மட்டுமே இருக்கிறது.

Saturday, February 24, 2018


         கலைகளில் வாழும் கடவுள்கள்


மதங்களின் வழியே நாம் மீட்டெடுத்த, உருவாக்கிய கலைகளும், சிற்பங்களும்
உன்னதம் நிறைந்தவை.
கடவுள்களின் வழியே தான் மனித உணர்வுகளின் மொத்த பிரதிபலிப்பையும் கோவில்களில் காணமுடிகிறது.
கோவில்களுக்குள் கடவுள் இருக்கிறாரோ இல்லையோ நம் முன்னோர்களின் உழைப்பையும், உயிரையும் கொடுத்து உருவாக்கிய இதுபோன்ற கலைகளின் வழியே தான் எனக்கான கடவுளை நான் கண்டெடுக்கிறேன்.

Friday, February 23, 2018


                  வாழ்வின் எச்சங்கள்


நீங்கள் எவ்வளவு முயன்றும் பதிலளிக்க
முடியாத கேள்விகள் அனைத்தும் புதைந்திருக்கும் கண்கள்.
பணம், புகழ், இன, மத அடையாளங்கள்
என எல்லாம் மொத்தமும் இறுதியாய் இதுபோன்ற முக வரைபடத்திற்குள்
தான் அடைந்து விடும்.
வாழ்வின் இறுதிக்கணங்களில் நமைநோக்கி நீட்டும் அன்பின் கரங்கள் மட்டுமே நமக்கான ஆறுதலும், செல்வமும், நம்பிக்கையும்.

Thursday, February 22, 2018


                அன்பின் அடையாளம்

சக உயிர்களிடம் சிறுவர்கள்
கொள்ளும் அன்பானது,
கடவுளின் உயிர்ப்பை விட
அழகானது, அற்புதமானது.
அவர்கள் நீட்டும் நேசத்தின் கரங்கள்
உலகின் எல்லா திசைகளிலும்
காற்றைப் போல பரவியிருக்கின்றன.
அன்பை, சகோதரத்துவத்தை, விட்டுக் கொடுத்தலை, கருணையை என உயிர் உணர்வுகள் யாவற்றையும் போதிக்கும் சிறுவர்கள் உண்மையில் கடவுளின், இயற்கையின் பிரதிநிதிகள் தான்.

Wednesday, February 21, 2018


            வாழ்தலின் கற்பிதங்கள்


நான் நானாக இருக்க
இந்த உலகில் மிகவும் பிரயத்தனப்பட
வேண்டியிருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
முகபாவனைகளை கொடுக்கும்
கற்பிதங்கள் எனக்கு வேண்டாம்.
எப்போதோ, எக்கணமோ நிகழும்
ஒரு சிறுபிரிவின் போது ஏக்கங்கள் படரும் உன் முகத்தின் சிறுசாயலை எனக்களித்தாலே போதும்.

Tuesday, February 20, 2018


                     பிடிக்கும் மரணம்


பெரும் கூட்டத்திற்குள் புதைந்திருக்கும்
தனிமை பிடித்திருக்கிறது,
ஓடும் நதியலையில் மெல்லிசையாய்
வருடும் சப்தம் பிடித்திருக்கிறது,
நகரத்தை சுற்றிக் கொண்டிருக்கும்
வியாபாரக் குரல் பிடித்திருக்கிறது,
பதினாறைப் பெறும் பெண்ணின்
தாய்மை பிடித்திருக்கிறது,
அறிமுகமில்லாத இடத்தில் கிடைக்கும்
ஒருபிடி சோறு பிடித்திருக்கிறது.
சட்டென முடிந்துவிடும் வள்ளுவனின் திருக்குறளைப் போன்ற
மரணம் பிடித்திருக்கிறது.

Monday, February 19, 2018


கேள்விகளால் ஆன விடுமுறை


ஆறு வயது சிறுவன்
அதிகாரத்தோரணையில் பணிந்து
பள்ளிக்கு சென்று விட்டான்.
நேற்றைய விடுமுறையில்
அவனோடு பொழுதைக் கழித்த
அவன் பொம்மைகளும்,
விளையாட்டு பொருட்களும்,
அறை முழுதும் நிரம்பிக் கிடக்கின்றன.
பிரிவின் பொருளை இங்கு இவைகளும்,
அங்கு அவனும் அறிந்திருப்பார்களோ?!
இல்லை அறியாமலிருப்பார்களோ?!

Sunday, February 18, 2018


           கடவுளும் இன்னும் பலரும்


நாம் யாருக்கும் அறிமுகமில்லாத
ஒருவர் வந்தார்,
கணக்கற்ற உயிர்களை இந்த உலகில்
தோற்றுவித்துக் கொண்டேயிருந்தார்
பின்பு எல்லோருக்கும் அறிமுகமானார்.
நாம் யாருக்கும் அறிமுகமில்லாத
இன்னொருவர் வந்தார்,
கணக்கற்ற உயிர்களை இந்த உலகில்
அழித்துக் கொண்டேயிருந்தார்
பின்பு எல்லோருக்கும் அறிமுகமானார்.
இடையில் புகுந்த ஒருவர் பிறக்கும்
சில உயிர்களை பிறவிக் குறைபாடாக
உருவாக்கிக் கொண்டேயிருந்தார்.
கடவுளும், அறிவியலும், நாமும் இதை
வேடிக்கை பார்த்தவாறு இந்த வாழ்வை கடந்து கொண்டிருக்கிறோம்.

Saturday, February 17, 2018


         கேள்விகளுக்கான பரிசாய்


எதுவுமே நமக்கு போதவில்லை,
நமக்கான உறவுகள்,
நமக்கான உறைவிடங்கள்,
நமக்கான உணவுகள்,
நமக்கான உடைகள்,
இன்னும் எவ்வளவோ நமக்கே
நமக்கானது
எதுவுமே நமக்கு போதவில்லை.
ஏன் இப்படியெல்லாம் இருக்கிறது?
எனும் கேள்வியை நான் உங்களிடம்
வைக்கும் பட்சத்தில் ஒரு புன்னகையை
பூங்கொத்தாய் என்னிடம் கொடுத்து
விட்டு செல்கிறீர்கள்.

Friday, February 16, 2018


                அன்பின் வடிவங்கள்


கட்டற்ற சுதந்திரமும், தன் இயல்பில் மிதக்கும் உடல்மொழியும் பால்யத்தில் மட்டுமே நமக்கு கைகூடுகிறது.
சகோதரத்துவத்தை தாங்கும்,
அன்பை ஏந்தி நிற்கும்,
ஒற்றுமையை பறைசாற்றும்,
உண்மையை உரக்க சொல்லும்,
ஆத்திகத்தை அடைகாக்கும்,
நாத்திகத்தை நகர்த்திச் செல்லும்
என எல்லாருக்கும் தேவையான, விருப்பமான பருவமாக பால்யம் இருக்கிறது.

Thursday, February 15, 2018


                 மதம் என்பதை தாண்டி


எனக்கும் அவருக்கும் என்றைக்கும் விவாதங்களே எழுந்ததில்லை.
உள்ளத்தின் உணர்வுகளை குரானின்
பக்கங்களை போல அனுபவ அலைகளால் எனக்குள் நிரப்புகிறார்.
என்னுள் எனை தேடும் பயணத்தை தொடங்கி வைத்தவர்.
நான் காணும், விரும்பும் எவ்விடத்திலும், யார்சாயலிலும் அவர் இருக்கிறார் என்ற ஒரு காரணம் போதாதா இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் நான் கடவுளாக கொண்டாட(???!!!)

Wednesday, February 14, 2018


         காலை எழுந்தவுடன் காதல்...


இளமையின் ஒட்டுமொத்த அன்பும்
அடைக்கலம் ஆவது காதலெனும் கருவறைக்குள் தான்.
கவிதையோ, கல்லறையோ அன்பின்
பேரடையாளங்கள் எல்லாம் காதலின்
பெயரால் தான் இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றன.
வாழ்தலின் ஒட்டுமொத்த பரிமாணங்களும், அடர்த்தியும் காதலின் வழி தான் கற்பிக்கப்படுகின்றன.
எப்போதும் பெருமழையாய் பெய்து கொண்டிருக்கும் காதலில் நனைவதற்கு
நாம் தான் அச்சமும், வெட்கமும் படுகிறோம்.

Tuesday, February 13, 2018


              பக்தனை தேடும் கடவுள்


சுயநலனே கொள்ளாத,
சிந்தனையை தொலைக்காத,
தன்னலனை கைவிடாத,
பகுத்தறிவை பாடமாக,
உழைப்பையே உன்னதமாக,
பொறுமை பொங்க,
பொறாமை மங்க,
ஒரு உயிராவது தனக்கு பக்தனாக
கிடைக்கமாட்டாரா என கடவுள் இன்றளவும் தன் நம்பிக்கையை கைவிடாமல் தேடிக்கொண்டேயிருக்கிறார்.

Monday, February 12, 2018



கேள்விகளால் நிரம்பிய விடுமுறை


 ஆறு வயது சிறுவன்
அதிகாரத்தோரணையில் பணிந்து
பள்ளிக்கு சென்று விட்டான்.
நேற்றைய விடுமுறையில்
அவனோடு பொழுதைக் கழித்த
அவன் பொம்மைகளும்,
விளையாட்டு பொருட்களும்,
அறை முழுதும் நிரம்பிக் கிடக்கின்றன.
பிரிவின் பொருளை இங்கு இவைகளும்,
அங்கு அவனும் அறிந்திருப்பார்களோ?!
இல்லை அறியாமலிருப்பார்களோ?!

                வாழ மறுக்கும் மானுடம்


ஒரு பெரும் சூறாவளி சுழலில் சிக்கிக் கொண்டதைப் போலத்தான் இங்கு யாவரும் வாழ்வை சிக்கலாக்கிக் கொண்டு சுழன்று கொண்டிருக்கிறோம்.
அன்பின் படிமங்களை இங்கு யாரும்
யாசித்து நிற்பதில்லை.
குழந்தையின் மரணம், சாலையோரத்தில் அடிபட்டு இருப்பவனின் வலி, முதியவர்களின், அநாதைகளின் தனிமையான பகற்பொழுதுகள் என அனைத்தும் அவசர வாழ்வின் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகின்றன.

Sunday, February 11, 2018


                    ஞானத்தந்தை


அனுபவத்தின் அத்தனை வாசல்களையும் திறந்து வைத்த அற்புதம் புத்தகம் எனும் பேசாத பேருயிருக்கு உண்டு.
கொண்டாட்டம், கலகம், அனுபவம், கலை, சினிமா என எத்தனை எத்தனை விதமான எல்லா எழுத்துக்களையும் தாங்கி நிற்கும் மெளன அரசன்.
எத்தனையோ தருணங்களில் கண்ணீரை துடைக்கும் கைகளாகவும், மனதின் இருளில் ஒளிதீபமாகவும் புத்தகங்கள் இருந்திருக்கின்றன.

Saturday, February 10, 2018

               
                      மானுட பாரம்

 தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே
இல்லாத மீனின் வாழ்க்கை எனக்கு
மிகவும் பிடித்திருக்கிறது.
எத்தனை தோல்விகளுக்குப் பிறகும்
மீண்டும் மீண்டும் கூடுகட்டும் சிலந்தியின் வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கிறது.
பயணம் செய்யவே இயற்கை படைத்த
அந்த எறும்புகளின் வாழ்க்கை எனக்கு
மிகவும் பிடித்திருக்கிறது.
பேருடம்பை சுமந்து பொறுமையிழந்து,
பொறாமை பொங்கி வழியும் இந்த மானுட
வாழ்வைத் தான் என்ன செய்ய????!!!!!

Friday, February 9, 2018


      ஆசிர்வதிக்கப்பட்ட நாள்

Thursday, February 8, 2018


                           தாயுமானவள்


பெண்கள் என்றாலே பெருமைக்குரியவர்கள் தான், அதிலும் மனைவி என்பவள் கடவுளின் இரண்டாம் அவதாரம்.
இன்னொரு தாயாக, ஆசானாக, மருத்துவச்சியாக, கலகக்காரியாக, ஏமாளியாக, என ஆண் எனும் தன் கணவனுக்காக அவள் தினம் ஒரு அரிதாரம் பூசிக்கொள்கிறாள்.
என் மனைவிக்காக என்னிடம் நிலையாய் இருப்பவை பேரன்பும், பெருங்கோபமும், ததும்பாத காதலும் தான்.
இன்றைக்கு என்றைக்கும் விட இன்னும் இன்னும் அதிகமாய் அவள் மனதிற்குள் பிறந்தநாள் மடலாய் என் மெளனங்கள்.

Wednesday, February 7, 2018


       ஒன்றிலிருந்து மற்றொன்றாக


பதில்களில் இருந்து கேள்விகளை உருவாக்கிக் கொள்ளவும்,
தவறுகளில் இருந்து சரியானவைகளை
உருவாக்கிக் கொள்ளவும்,
நிராகரிப்பில் இருந்து அரவணைப்பை
உருவாக்கிக் கொள்ளவும்,
ஒரு இறப்பில் இருந்து ஒரு பிறப்பை
உருவாக்கிக் கொள்ளவும், குழந்தைகளாலும், கடவுள்களாலும் மட்டுமே சாத்தியப்படுகிறது.

Tuesday, February 6, 2018


             கடவுளாக மாறிய காந்தி


யாரோ கற்றுக் கொடுத்த வாழ்வை
நாமும் மனப்பாடம் செய்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அதன் இயல்பின் ருசியை மறந்தும், மறைத்தும் விட்டு களைத்துச் சேர்த்த பணத்தில் ஆசுவாசம் அடைந்து கொள்கிறோம்.
இங்கே ஒருவனை அழித்து தான் ஒருவன் வாழ வேண்டும் எனும் தவறான இலக்கணத்தை சரியாய், விரைவாய் கற்றுக் கொண்டோம்.
இத்தனைக்குப் பிறகும் நம் பாக்கெட்டிற்குள் நுழையும் பணம் முழுதிலும் இருக்கும் காந்தி, கடவுளைப் போல புன்னகைத்தபடியே தான் இருக்கிறார்.

Monday, February 5, 2018

         
           "அ" எனும் எழுத்துடையவள்

எல்லாக் குழந்தைகளுக்கும் அடிப்படையான, அத்தியாவசிய தேவையாக எப்போதும் அம்மாக்களே இருக்கிறார்கள். குழந்தையை உறங்க வைக்கும் அம்மாக்கள் ஒரு குழந்தையை மட்டும் உறங்க வைக்கவில்லை, மாறாக ஒரு உலகத்தையே தன்னோடு உறங்க வைத்துக் கொள்கிறார்கள்.
ஆதலால் தான் அவர்கள் உயிரெழுத்தின் முதலெழுத்தாகவும், உயிர்கள் யாவற்றின் மூலமாகவும் இருக்கிறார்கள்.

Sunday, February 4, 2018

மெளனமே கேள்வியாய்...


எந்தக் கைகள் ஏந்திக் கொள்ளும்
இந்த மெளனத்தை?
எந்தக் கண்கள் எதிர்நோக்கும்
இந்த இயலாமையை?
எந்தக் கால்கள் கடந்து செல்லும்
இந்த பரிதவிப்பை?
எந்தக் காலங்களில் அமர வைக்கலாம்
இந்த கணங்களை?
எந்த பதில்களில் சிறை பிடிக்கலாம்
இந்தக் கேள்விகளை?

Saturday, February 3, 2018


               அன்பின் வழித்தடங்கள்


பாவங்களை தெய்வங்களின் காலடியில்
மன்னிப்பாய் குவித்து விட்டு வருவதல்ல.
உன் நிழல் படிந்த தனியறையில் ஆத்மார்த்தமாக வருந்தி,
தீர்க்கமான ஒரு துளி கண்ணீரில் துடைத்தெரிதல்.
பிரியங்கள் காற்றைப் போல இந்த பூமியிலேயே பரவித்தானிருக்கிறது,
அன்பின் விதையை மனதில் விதைத்தவர்கள் தான் உலகம் முழுதும் இறைவனாக இருக்கிறார்கள்.

Friday, February 2, 2018


            அந்தரத்தில் சில கணங்கள்


கைகள் கழுவாமல் அவள் என்றைக்கும்
சாப்பிட்டதாக நினைவில்லை,
அந்த நொடிக்கான அவள் மெனக்கெடலில்
உடன் சாப்பிட அமருபவன் பசியில் இறப்பதற்க்கான சாத்தியமே அதிகம்.
அவள் தேக்கரண்டியில் படும் சாதம் இதழ்தொடாமல் நாவிற்குள் சென்றுவிடும்.
அவள் சாப்பிடத் தொடங்குவதற்கான நேரமும், அவன் சாப்பிட்டு முடித்தற்கான நேரமும் கடிகாரத்தின் கால இடைவெளியில் தொங்கிக் கொண்டிருந்தது.

Thursday, February 1, 2018


             அற்புதங்களின் ஆன்மா


உயிர் உணர்வுகள் மொத்தத்தையும் அழகாய் மடித்து தன்னுள்ளே பொத்தி வைத்துக் கொள்பவள் அம்மாக்கள் தான். அன்பின் அடையாளமாய் ஓர் ஒளி அவள்
கண்களுக்குள் எப்போதும் ஒளிர்விட்டுக்
கொண்டேயிருக்கும்.
அப்பாக்களின் கனவுகள்,
பிள்ளைகளின் ஆசைகள்,
உறவுகளின் உரசல்கள்
என எல்லாவற்றையும் நிவர்திக்கும் தெரசாவாகவும், நவின கடவுள்களாகவும் தான் நம் அம்மாக்கள் எப்போதும் இருக்கிறார்கள்.