Saturday, March 31, 2018



டாப்-அப் சிறுகதை :
ஈக்களும், கொசுக்களும் மொய்த்திருக்க என் சிறுநீரும், மலமும் அப்பியிருந்த படுக்கை துணியை மிகவும் கவனமாக, லாவகமாக எடுத்து வேறு மாற்றி, எனை கழுவி, துடைத்து பல மாதங்களாக எனைதாங்கும் அவள் பெயர் கூட சட்டென என் நினைவில் தங்குவதில்லை.
"எனக்கே அறுவருப்பா இருக்கு
என்ன கொண்ணுடேன்" என கேட்டவுடன்
வெறித்துப் பார்த்தவள்
"எனக்கு அறுவருப்பா எப்போ தோணுதோ அப்போ உங்கள கொண்ணுடறேன், சரியா என சிரித்தாள். இப்போதே இறந்து இப்படியே அவள் வயிற்றில் பிறந்திட வெளியேறிய கண்ணீர் துடித்தது.

Friday, March 30, 2018


                தனித்துவிடப்பட்ட மனம்


ஒரு சொல்லுக்கு பல விளக்கங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது,
நியாயம் கற்பிக்க வேண்டியிருக்கிறது,
சமாதானப்படுத்த வேண்டியிருக்கிறது,
தோல்வியுற வேண்டியிருக்கிறது
இவையனைத்தும் மனிதர்களிடம் மட்டுமல்ல, நான் வளர்க்கும் பழுப்புநிற நாய் குட்டியிடமும் கூட.
சட்டென வானில் தொங்கும் நட்சத்திரத்தின் கூட்டில் ஒளிந்து
கொள்ள வேண்டியிருக்கிறது.

Thursday, March 29, 2018


             மனிதம் பேசும் உயிர்கள்



 சக உயிர்களிடத்தில் நாம் கொள்ளும்
நேசமும், கருணையும் மட்டுமே
நமக்கான வாழ்வியலை அழகானதாக, அர்த்தமுள்ளதாக, நிறைவானதாக ஆக்கும்.
பசிக்கு உணவும், உறங்கும் போது பாதுகாப்பையும் நமக்கு அளிப்பவர்களே நமக்கான கடவுள்கள்.
அதை எப்போதும் பிறருக்கு அளித்து நாமும் கடவுளாக மாறுவோம்.

Wednesday, March 28, 2018


                             நதி உலகம்


சிறுவர்களுக்கு ஒரு பேனாவும், காகிதமும் கிடைத்தால் போதும்
ஒரு ஓடை அதில் ஓடும் நதி,
கரையோரத்தில் அடர்ந்த சிறு வனம்,
அருகிலேயே அவர்களுக்கான வீடு
என இயற்கையோடு இணைந்த வாழ்வின் சாராம்சத்தை சட்டென வரைந்து விடுகின்றனர்.
உலகின் சில மூலைகளில் இன்னமும் அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் சிலர் தான் உண்மையில் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Tuesday, March 27, 2018


        துடைத்தெறியப்பட்ட காலம்


யாவும் துடைத்தெறியப்பட்டன,
கடந்தகால பாவங்கள்,
ஏற்பட்ட தவறுகள்,
கொட்டிய கோபங்கள்,
வெடித்த வெறுப்புகள்,
பொங்கிய பொறாமைகள்,
ஆர்பரித்த ஆணவங்கள் என
யாவும் துடைத்தெறியப்பட்டன,
வானம் பார்த்து இறந்த அவன் கண்களை
இறுதியாய் நீ மூடும் வேளையில்...

Monday, March 26, 2018


                         உயிர் மொழி


உலகின் உயிர் அனைத்திற்கும் பொதுவான மொழி அரவணைப்பு தான்.
இருளின் ஒளியாய்,
கனவின் நினைவாய்,
தவிப்பின் துணையாய்,
தோல்வியின் ஆறுதலாய்,
என யாவற்றுக்கும் நமக்கும் நம் மனதிற்குமான அடைக்கலம்
அஃது ஒன்றே.
வீசும் காற்றுக்காய் பயந்து அரவணைப்பின் தீபத்தை பல சமயங்களில் நாம் தான் ஏந்திக் கொள்ள தயங்குகிறோம்.

Sunday, March 25, 2018


                   நினைவின் சுவடுகள்


 மகிழ்ச்சியின், சுதந்திரத்தின், ஆரவாரத்தின், ஆர்ப்பாட்டத்தின்,
சிரிப்பின், இயல்பின் என எல்லா
பக்கங்களையும் கவிதையாய் நிரப்பிட சிறுவர்களால் மட்டுமே சாத்தியம்.
கடக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் தேனின் தித்திப்பாய் திளைப்பார்கள். மனித வாழ்வின் மொத்த ஆயுளுக்குமான நீங்கா நினைவுகளாக எல்லோருக்கும் இருப்பது பால்யம் மட்டுமே.

Saturday, March 24, 2018


             அன்பின் பெருவெளியில்


 சிறுவர்களுக்கு யானைகள் எப்போதுமே இரண்டாவது தாய் போலத்தான். பெரும்பாலான கோவில்களில் கடவுளின் சிம்மாசனமாய் யானைகள் தான் இருக்கின்றன.
உருவம் பெரிதாக இருந்தாலும் அதன் மனம் நாம் தூக்கிப்போட்டு விளையாடும் விளையாட்டு பொம்மை போலத்தான்.
எப்போதும் அதன் கண்களின் ஓரத்தில் வழிந்திருக்கும் கண்ணீரில் தான் நமக்கான மனிதம் தேங்கியிருக்கிறது.

Friday, March 23, 2018


                வாழ்வின் கட்டமைப்பு

நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்வு கேலிகளாலும், தந்திரங்களாலும், ஏமாற்றங்களாலும், தோல்விகளாலும், பொய்களாலும், நிராசைகளாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
அது பார்வையற்ற குருடனைப் போல
அங்குமிங்கும் தன் இருப்பை, வாழ்வியலை தேடியலைகிறது.
காலம் கடவுளைப் போல நாம் இறக்கும் வரை சில கேள்விகளுக்கு பதில் அளிப்பதேயில்லை.

Thursday, March 22, 2018


               கடவுளின் எச்சங்கள்


உணர்வுகளும், அழகிய முகபாவனைகள் மொத்தமும் கைகூடுவது நம் குழந்தைப்பருவத்தில் மட்டுமே.
அந்தப் பருவத்தில் தான் மனம் எந்த விதிமுறைக்கும் கட்டுப்படாமல்
சுதந்திரமாக தனக்கான பிரியங்களில் வட்டமடித்து திரிகிறது.
குழந்தைகளின் குறும்பையும், விளையாட்டுத் தனத்தையும் நாம் அனுமதித்தால் மட்டுமே அவர்களுக்கான அந்த மகத்தான பருவம் நிறைவானதாக அமைந்திட முடியும்.

Wednesday, March 21, 2018

                   எல்லாமே இவர்களே



உழைப்பவர்களின் இணைபிரியாத உடன்பிறப்புகள் வியர்வையும்,
அழுக்கும் தான்.
ஆயுளுக்குமான அவர்களின் உழைப்பு
ஆடம்பர வாழ்க்கைக்காக என்றுமே இருந்ததில்லை.
இன்று நாம் தூக்கிவைத்து கொண்டாடும் அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம், விஞ்ஞானம் என எல்லாவற்றிற்க்குமான
மூலம் யாரோ படிக்கத் தெரியாத இதுபோன்ற உழைப்பாளிகளின் வியர்வைத் துளிகள் அதில் இருக்கும்.
புகைப்படம்: D. DHINESH KUMAR Photography 🙏🤝🙏

Tuesday, March 20, 2018


             வரலாற்றின் சாட்சியாய்


 பிரமாண்டத்தின், கலையின், காதலின், பேரமைதியின் என இந்திய கலாச்சாரத்தின் நெற்றிப் பொட்டு தான் தாஜ்மஹால் எனும் அழகியல்.
எழுதத் தொடங்கும் யாவரின் எழுத்தின் மடியிலும் அமர்ந்து கொள்ளும் குழந்தை.
ஒருபோதும் அதனை தோல்வியின் சின்னமாக அணுகமுடிவதில்லை.
வாசிக்காத கவிதையின்,
முடிக்கப்படாத ஓவியத்தின்,
ஓசையில்லா இசைக்குறிப்பின்
என உயிர் உணர்வுகளின் பிரதிபலிப்பாகத்தான் தாஜ்மஹால் இருக்கிறது.

Monday, March 19, 2018


          நினைவில் சில குறிப்புகள்


 "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்."
நம் தந்தை வள்ளுவன் வார்த்தைகள்
நினைவுகளில் வட்டமடிக்கிறது.
தாத்தாக்கள், பாட்டிகள்,
அப்பா, அம்மா,
பெரியப்பா, பெரியம்மா,
மாமா, அத்தை,
அண்ணா, அக்காக்கள்,
நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும்
உறவினர்கள் என அனைவரின் பாதங்களிலும் உங்கள் ஆசி வேண்டி என் வணக்கங்கள். 🙏👨‍🎓🙏


என்னடா இவ்ளோ பெரிய பில்டப்புனு யோசிக்கிறீங்களா(???!!!)
அதொன்னுமில்லீங்க அண்ணன் UKG -ல இருந்து 1'st Std போகப்போறேன்.
அதுக்குத்தான் நம்ம பாசக்கார உடன்பிறப்புக இந்த கவுன மாட்டி விட்டுட்டாங்க. 😆😉😆
                      🙏🙏👨‍🎓👨‍🎓👨‍🎓🙏🙏


தற்போது வளரும் பல பள்ளிகள் இதுபோன்று சிறுவர்களுக்கு பட்டமளிப்பு கொடுத்து அதை விழாவாக சிறப்பாக, சந்தோசமாக நடத்துகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள் நம் குழந்தைகளுக்கு கொடுக்கும் இதுபோன்ற பாராட்டுகளும், பரிசுகளும் நாம் நம் குழந்தைகளின் கல்வித்தரம் உயரும் போது அவர்களை எப்படி ஊக்கப்படுத்த, அணுக வேண்டும் என்பதை பாடமாக பெற்றோர்களாகிய நாம் படித்து, புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.


இதுபோன்ற சின்ன சின்ன விசயங்களில் கூட பெற்றோர்களுக்கும், படிக்கும் பிள்ளைகளுக்கும் பெரிதான பெருமையையும், சந்தோசத்தையும் ஏற்படுத்தித் தரும் பள்ளி நிர்வாகத்திற்கு என் அன்பு கலந்த நன்றிகள் பல. 🙏🙏🙏

Sunday, March 18, 2018


              கோபத்தின் கணங்கள்

 கோபங்கள் எப்போதும் இடைவிடாது
சொற்களால் நிரம்பி பிறகு ஆழ்கடலின்
அடியாழம் போல மெளனத்தால்
நிரம்பி வழிகிறது.
அது திரும்ப திரும்ப நமது இயலாமையின்
சொற்களையே அங்குமிங்கும் சுமந்து
அலைந்து திரிகிறது.
பெருங்கோபத்தின் அடர்கருப்பு நிறம்
நம் உணர்வுகளின், உறவுகளின், தீர்மானங்களின், தெளிவின் என எல்லா வாசல்களையும் மூடி விடுவதாலோ என்னமோ நம்மால் கோபத்தை மட்டும் அடக்கவே முடிவதில்லை.

Saturday, March 17, 2018


                      உயிரின் உருவம்


 நிழலின் கருணை எப்போதும் வெளிச்சத்திற்கு கிடைப்பதில்லை.
எக்காலமும் வெளிச்சத்தின் கைகள் பற்றி அலையும் நிழல் , ஒரு நாயின் நன்றியுணர்வை நினைவூட்டுகிறது.
நிழலின் கரும்பரப்பு , சுற்றும் பூமியில்
பரவும் நதியலை.
வெளிச்சம் இறந்தவுடன் தானும் சட்டென
இறந்து விடுவதால் தான் நமக்கு நிழலை
அவ்வளவு பிடிக்கிறது போல.

Thursday, March 15, 2018


                மிதக்கும் நிகழ்காலம்



 மனதை ஒருமுகப்படுத்தி ஆழ்ந்து சிந்திக்கிறாள்.
முதலில் அவள் உடலிலிருந்தும், உருவத்திலிருந்தும் தன்னை முழுமையாக விலக்கிக் கொள்கிறாள்.
இயற்கையின் பெருவெளியில் காற்றோடு காற்றாய் மிதந்தபடி எங்கோ பூமியை விட்டு தொலைதூரத்திற்கு மிதந்து செல்கிறாள். இறுதியில் அங்கே இருக்கும் அவள் குழந்தை உடல் உருவத்திற்குள் நுழைந்து கொள்கிறாள்.

Wednesday, March 14, 2018


               சித்தாந்தங்களின் சிற்பி


நம் தலைமுறையின் அறிவியல் ஆன்மா அமைதி பெற்று விட்டது. அண்டவியலும் (cosmology), குவாண்டம் ஈர்ப்பின் (quantum gravity) சக்கரமும், இவரின் சக்கர நாற்காலியும் இனி இவரில்லாமல் எப்படி சுழலும்???😌😔
அவரின் சிந்தனைகளும், கோட்பாடுகளும் தனிமனிதனால் ஒருபோதும் உருவாக்க முடியாத சித்திரங்கள். "காலம் யாருக்கும் கருணையே காட்டாது" எனும் சித்தாந்தம் நீ விட்ட உயிரால் உயிர்பெறுகிறது.

Tuesday, March 13, 2018


        இன்றைக்கும். நாளைக்குமாய்


                                     என் தோல்விகளை தாங்கிக் கொள்ள
நாளை என்றொரு நாளும் உண்டு,
என் வெறுமைகளை வென்றெடுக்க
நாளை என்றொரு நாளும் உண்டு,
என் கனவை கவிதையாக்கிக்கொள்ள
நாளை என்றொரு நாளும் உண்டு,
தனிமையின் துணை நின்று கொள்ள
நாளை என்றொரு நாளும் உண்டு,
நாளை என்றொரு நாளின்
தேவைக்காகவேணும்
இன்று நீ வேண்டும்.

Monday, March 12, 2018

 
                        யாவுமானவள்...



வயதான இவரின் பிராத்தனை என்னவாக இருந்துவிடப் போகிறது.
இறைவன் எனக்கு போதிக்க நினைக்கும்
அத்தனை தத்துவங்களும் அனுபவங்கள்
புதைந்திருக்கும் இவள் முகச்சுருக்கங்கள் எனக்கு கற்பிக்கின்றன.
மிதக்கும் பூமியில் கொக்கரிக்கும் உயிர்களுக்கிடையே இவளொரு மெல்லிய தேனின் ரீங்காரம்.
இறைவன் வாழ்ந்து கொண்டிருக்கிறார், இவளின் பிரார்த்தனையால்.

Sunday, March 11, 2018


              சக்கையான வாழ்க்கை


வரும் தலைமுறைக்களுக்கான வாழும் சூழல் இல்லாத உலகமாகத்தான் நாம் இந்த உலகை மாற்றி வைத்திருக்கிறோம்.
இயல்பாக, இயற்கையாக வாழும் வாழ்வு
மாறி இணையத்தால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அன்பின் ஆதரவுக் கரங்கள் துண்டிக்கப்பட்டு விட்டன.
உதவும் உள்ளங்கள் இங்கே
உருமாறி விட்டன.
இவ்வளவு மாறியும் இப்படி புலம்புவதற்கேனும் இந்த உலகில் சற்று இடமிருக்கிறது.

Thursday, March 8, 2018


    ஆண்களின் கடவுச்சொல்


அறிவியலோ, ஆண்டவனோ உயிர் உருவாவது ஒருபுறம் இருக்கட்டும்.
ஆனால் மொத்த உயிர்களின், ஏன் உலகம் முழுவதுமே பெண் என்ற ஒற்றை உறவால்தான் நிச்சயம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஆண்களின் சக்தியும், இயக்கமும்
பெண்களால் தான் தீர்மானிக்கப்படுகின்றன.
தினம் குளித்து அவள் ஏற்றும் விளக்கு
உலகம் முழுமைக்குமான எதிர்கால வெளிச்சம். அவர்களையே இறைவனாக காண்பதில் எனக்கு உடன்பாடே. பெண்களே உங்களை வாழ்த்துவதை விட வணங்குவதில் தான் ஆண் சமூகம் பெருமிதம் கொள்கிறது.

Wednesday, March 7, 2018

                   மிதக்கும் பறவை


ஒரு சிறு பறவை வானில் மிதக்கும்
உயரங்கள் அசாத்தியமானவை.
உயர உயர அது பறக்கும் போதும்
தாழ தாழ அது இறங்கும் போதும்
காற்றோடு அது கொள்ளும் காதல்
கவிஞன் தொடாத கவிதைப்பரப்பு.
வெயில் உதிரும் மதியப்பொழுதில்
பறக்க எத்தனிக்கும் ஒரு பறவைக்கும்
எனக்குமான அந்த மைக்ரோ செகண்ட் பார்வை இடைவெளியில் எங்கள் ஆகாயம்
பறந்து கொண்டிருந்தது.

Tuesday, March 6, 2018


                         உயிர் உறவு


தாய், சேய் உறவு என்பது உயிர் உறவுகளில் முதன்மையானதும், மகத்தானதும் கூட.
அந்த உறவுகளுக்கிடையேயான
புரிதலும், உரையாடலும் தனித்துவமானது.
அது அழகியலும், ஆனந்தமும் ஆர்பரித்துக்
கொட்டும் கவிதை நீரூற்று.
கசப்பான பல அனுபவங்களிலிருந்தும்,
தனிமையின் பல பொழுதுகளிலிருந்தும்
நம் யாவரையும் காக்கும் கடவுளாக
இந்த தாய்-சேய் உறவு இருக்கிறது.

Monday, March 5, 2018


                 வாழ்வின் வாய்ப்பாடு


மனித வாழ்வில் எக்காலமும் நிரம்பும் பல கேள்விகளுக்கு சில பதில்களை பணக்காரர்கள் இட்டு நிரப்புகிறார்கள்.
அவர்கள் மட்டுமே தனக்கு பிறகான தலைமுறைக்கு சில மதிப்பீடுகளை விட்டுச் செல்கிறார்கள்.
எதுவும் பணமிருந்தால் சாத்தியம் என்பதால் எப்போதும் அதற்காக போராட, தன்னை கரைத்துக் கொள்ள, வருத்திக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
நாளை சுழலும் இந்த பூமியும் பணக்காரர்களின் சொல் கேட்கலாம்...
யாரறிவார்???!!!!

Sunday, March 4, 2018

 
                    விடுமுறை உலகம்


வாழ்தலின் உண்மையான அர்த்தத்தை
விடுமுறை தினங்களில் சிறுவர்கள் இந்த
உலகிற்கே உணர்த்துகிறார்கள்.
அன்றைய தினங்களில் சுதந்திர ஒளிபடரும் அவர்கள் முகங்கள்
கடவுளின் உயிர்ப்பை சமன்படுத்துகின்றன.
மகிழ்ச்சி, தனித்திறமை, ஒற்றுமை, சகோதரத்துவம், விட்டுக்கொடுத்தல் என பெரியவர்களால் பணத்தால் வாங்க முடியாத, கற்றுக் கொடுக்க முடியாததை
இதுபோன்ற விடுமுறைகளில் தான் சிறுவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

Saturday, March 3, 2018


                    ஏழ்மையின் ருசி


ஏழ்மையின் அழகியலே எளிமை தான்.
பல ஏழைக்குடும்பங்கள் சிறிய வீட்டில்
கொஞ்சமாய், அழகாய், ஆனந்தமாய், ஆரோக்யமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்வியலின் ஆணிவேராக இருப்பவை ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும் தான்.
அவர்கள் எதிர்காலம் என்பதே அடுத்தவேளை பசிக்கும், இரவு உறக்கத்திற்குமான தேடலிலேயே வாழ்வு மொத்தமும் கரைந்து விடுகிறது.
ஆதலால் தான் கடவுளின் ஆன்மாவாக ஏழைகள் இருக்கிறார்கள்.

Thursday, March 1, 2018


                        நகரம் என்பது


நகரம் நம் கவலைகளையும், அழுக்குகளையும், பாசாங்கையும்,
சுமக்கும் மெளனத்தின் பிம்பம்.
ஒவ்வொரு நகரத்திற்கும் இயல்பிலேயே
தனித்துவமான ஒரு வாசனை இருக்கிறது.
நம் இதயத்துடிப்பைப் போல அது எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது.
அனுபவத்தின் அழியா சாட்சியாக,
நிராசைகளின் நீரூற்றாக,
துரோகத்தின் தூணாக,
வாழ்தலின் வழிகாட்டியாக,
வீழ்தலின் விஷ்வரூபமாக
என நகரம் நம் ஆயுளுக்குமான ஆசான்.